நேர்

திருவாசகம் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். ஆனால் உட்கார்ந்த இடத்தில் முள் குத்துவது போல உறுத்தியது.நெஞ்சில் பதிந்து கிடக்கும் முள்தான் அது என்று நினைத்தார்.
நேர்

திருவாசகம் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். ஆனால் உட்கார்ந்த இடத்தில் முள் குத்துவது போல உறுத்தியது.நெஞ்சில் பதிந்து கிடக்கும் முள்தான் அது என்று நினைத்தார். இன்னும் ஸ்கூல் ஆரம்பிக்கவில்லை. ஆட்டமும் சிரிப்புமாகக் குழந்தைகள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் மலர்ச்சியை சற்று அசூயையுடன் பார்த்தார். தன் கையை விட்டுப் போன நிம்மதி
 தான் அசூயைக்குக் காரணம் என்று அவருக்குத் தெரியாமல் இல்லை.
 நேற்று மாலை அவர் கணக்கைச் சரி பார்த்து கலெக்ஷன்களை வைக்கும் பெரிய பணப்பெட்டியை மூடும் சமயத்தில் அவரது கஷ்டகாலம் ஆரம்பித்தது. ஆனால் அதை நல்லகாலம் என்று அப்போது உடனடியாக மனது நினைத்ததுதான் உண்மை. அவருடைய கணக்குப் புத்தகத்துக்கும் பணப்பெட்டியில் வைத்திருந்த பணத்துக்கும் சரியாக ஐந்நூறு ரூபாய் வித்தியாசம் இருந்தது. கையிலிருந்த பணம் புத்தகம் காண்பித்ததுக்கும் மேலாக இருந்தது. அன்று வரவு வைத்த பணத்தையும் ரசீதுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது இரண்டும் சரியாகவே இருந்தன. அன்று நிகழ்ந்த செலவுகளையும் அதற்கான வவுச்சர்களையும் சரி பார்த்தபோதும் வேறுபாடு எதுவும் தெரிய வரவில்லை. எண்களை எழுதும் போது ஏதாவது தவறு நிகழ்ந்ததா என்றும் சோதித்துப் பார்த்து விட்டார். எல்லாம் சரியாகவே இருந்தன. எனவே கையில் அதிகமாக இருப்பது யாரோ தவறுதலாகச் செலுத்திய பணம் என்று அவருக்குத் தெரிந்து விட்டது.
 ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு முதல் நாளாயிருந்ததாலும் அன்றைய தினம் அரசு விடுமுறை நாள் என்பதாலும் அதிகப் பெற்றோர்கள் வந்து பணம் கட்டிவிட்டுப் போனார்கள். இவர்களில் அதிகப் பணத்தை யார் கொண்டு வந்து கொடுத்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? பணம் கட்டுவதை பள்ளி நிர்வாகம் ஒரு மணி வரைதான் அனுமதித்திருந்தது. திருவாசகம் இந்தப் பண வித்தியாசத்தைக் கண்டுபிடித்த போது மணி நாலரை இருக்கும். அதுவரை யாரும் வந்து கேட்கவில்லை என்றால் கொடுத்தவனுக்கும் அவனுடைய இழப்பைப் பற்றி தெரியவில்லையோ என்று திருவாசகம் நினைத்தார். ஒரு பொருட்படுத்தக் கூடிய பணமாக அது அவன் நினைவில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.
 அந்த ஐந்நூறு ரூபாய் அவருக்கும் வேண்டியிருந்தது. மாதம் முதல் தேதி வாங்கும் சம்பளம் ஒரு வாரம் கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. சம்பளம் வந்தவுடன் அவர் மனைவி முதலில் மளிகைக் கடைப் பாக்கியைத் தீர்த்து விடுவாள். முந்திய மாதப் பாக்கியைத் தீர்த்தால்தான் கடைக்காரப் பிள்ளைவாள் அந்த மாத சாமான் லிஸ்டை ஏறிட்டுப் பார்ப்பார். அப்புறம் பால் சீட்டு, வேலைக்காரி சம்பளம், குடித்தனக்காரர்கள் சங்கத்து சார்ஜ், கேபிள் வாடகை, ஸ்கூட்டிக்காக வங்கிக்குக் கட்ட வேண்டிய மாதாந்திரத் தவணை ...என்று பெரிய லிஸ்ட்டே இருக்
 கிறது. ஏதோ மிச்சம் இருக்கும் பணத்தில் பஸ் சார்ஜ், மருந்து அப்புறம் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பண்டிகைச் செலவு ஆகிய எல்லாவற்றையும் சுருக்கி சுருக்கி வாழ்க்கையை நடத்த வேண்டும்.
 அவர் அந்த ஐந்நூறு ரூபாயை எடுத்துத் தனியே தனது மேஜைக்குள் வைத்துக் கொண்டு கணக்குப் புத்தகத்தை மூடி வைத்தார். பிரணதார்த்தியிடம் மூன்று மாசத்துக்கு முன்பு வாங்கிய இரண்டாயிரம் ரூபாய்க் கடனில் இந்த ஐந்நூறைக் கொடுத்து விட்டால் அவனை இன்னும் இரண்டு மாதங்களுக்குக் காத்திருக்க வைக்கலாம். அவனும் பாவம். அப்படி ஒன்றும் மேட்டில் உட்கார்ந்திருக்கும் ஜாதி இல்லை. அவரைப் போலவே குழியிலிருந்து மேலே எழும்ப முயலும் ஜென்மம்தான்.
 ஆனால் இரவு படுக்கைக்குச் சென்றும் அவரால் உடனே உறங்கிவிட முடியவில்லை. இதற்கு முன் இந்த மாதிரி ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையில் நடந்தது இல்லை. எவ்வளவோ தடவை அவருடைய சொந்தப் பணத்தை இழந்ததாகத்தான் அவருக்கு நடந்திருக்கிறது. "அதற்கு இது ஈடு என்று சொல்கிறாயா?' என்று அவரது மனம் கேட்டது. "அதுதான் நாளைக்குத் தேடி வருபவரிடம் கொடுத்து விடலாம் என்று இருக்கிறேனே?' என்று அவர் பதிலுக்கு முனங்கினார்.
 இப்போது அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தது முதல் மனதின் ஓரத்தில் அந்த உறுத்தல் ஒரு விடாத வலியைப் போல நெருடிக் கொண்டிருந்தது. தினமும் பேப்பரில் போடுகிறான்கள், டிவி.யில் சொல்கிறான்கள், பெரிய மனுஷன் ஒவ்வொருத்தனும் கோடியில் அடித்துக் கொண்டு போகிறான்கள் என்று. லட்சம் கோடி என்றால் உறுத்தல் இருக்காது போலிருக்கிறது. ஐந்நூறுதான் இந்தப் பாடுபடுத்துகிறது. பிரணதார்த்தியின் கடன் இல்லாமல் இருந்திருந்தால் இந்தத் தொல்லை இருந்திருக்காது. ஓஹோ, இப்போது கடன் கொடுத்தவன்தான் இந்தப் பழியை ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
 அவர் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். வேலை ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. அவர் தன்னுடைய கைபேசியை எடுத்து பிரணதார்த்திக்கு கால் போட்டார். எப்போது வந்தால் அவனைப் பார்க்கலாம் என்று கேட்கத்தான் போன் செய்தார். என்கேஜ்டு டோன் வந்தது. அலுத்துக் கொண்டே மேஜை மீது போனை வைத்தார்.
 பத்து மணிக்கு மேல் பணம் கட்டுபவர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். வேலைப் பளு உள்ளே துருவிக் கொண்டிருந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்டு விட்டது. ஒரு மணி வரை மூச்சு விடக் கூட நேரம் இல்லை. அவர் கவுன்ட்டரை மூடும் சமயம் ஓர் ஆள் வந்து நின்றான். வேலையாள் மாதிரி சீருடை அணிந்திருந்தான். நேரே வந்து பணம் கட்ட முடியாது போகும் போது சிலர் இம்மாதிரி வேலையாள் மூலம் பணம் கொடுத்து கட்ட அனுப்புவார்கள். நாற்பது வயதிற்கு இருக்க வேண்டாத சுருக்கங்கள் அப்பிய முகம். கச்சலான தேகத்தைத் துணிகள் கூட மறைக்க முடியவில்லை. ஆனால் கூனிக் குறுகி நிற்கவில்லை.
 "நேரமாச்சு. நாளைக்கு வந்து பணம் கட்டு'' என்றார் திருவாசகம்.
 "இல்ல ஐயா'' என்று அவன் தலையைச் சொறிந்தான்.
 "என்னப்பா, நான் சொல்றேனில்ல நாளைக்கு வான்னு'' என்றார் சற்றுக் கடுமையாக.
 "சாரே, கிறித்துமசு பணம் வாங்கிட்டு போக வந்தேன்'' என்றான்.
 பள்ளியில் கிறிஸ்துமஸ் வரும் போது வருடா வருடம் வெளியில் இருந்து பள்ளிக்காக வேலை பார்க்கும் கார்பொரேஷன், மின்சார வாரியம், டெலிபோன்,போஸ்டல் துறை ஆட்களுக்கு பக் ஷீஸ் கொடுப்பார்கள். அதைத்தான் இவன் இப்போது வந்து கேட்கிறான்.
 "நீ எதுல வேல பாக்கறே?'' என்று கேட்டார் திருவாசகம்.
 அவன் "சூவேசுல' என்றான். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம். அடையாளச் சீட்டை எடுத்து அவரிடம் நீட்டினான்.
 "ஏம்ப்பா இந்த மாதிரி உன் இஷ்டப்படி வந்து உயிரை எடுக்கறே? இப்ப வந்து நிக்கிறதுக்கு அப்பவே வந்திருக்க முடியாதா? எதையானும் பொய்யச் சொல்லிக்கிட்டு இப்படி வந்து நின்னா நான் என்ன பண்றது? கிறிஸ்துமஸ் சமயத்திலயே எல்லாருக்கும் பணம் குடுத்து கணக்க முடிச்சு வச்சாச்சு'' என்றார் எரிச்சலுடன்.
 "சார், அப்ப என் கொளந்த செத்து போயிருச்சு. அதான் நீங்க கிறித்துமசு இனாம் எல்லாருக்கும் குடுத்தப்ப நா வந்து வாங்க முடியாமப் போயிருச்சு'' என்று அவரைப் பார்த்தான்.
 அவர் திடுக்கிட்டார். அவன் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள சில நிமிடங்கள் ஆகின.
 அவன் கண்கள் இரங்கி நிற்பதை அவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவர் கேஷ் பெட்டியைத் திறந்தார். வங்கியிலிருந்து வாங்கி வந்து இன்னும் பிரிக்கப்படாமல் வைத்திருந்த ஐம்பது ரூபாய்க் கட்டைப் பிரித்து ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்தார். அவன் கைநீட்டி வாங்கிக் கொண்டான். அவரைப் பார்த்து " உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும் சாமி'' என்று கையைத் தூக்கி அவரை வணங்கினான்.
 அவர் தன்னுடைய மேஜைக்குத் திரும்பினார். பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. டிபன் பாக்ஸை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தார். அப்போது கவுன்ட்டரின் வெளியேயிருந்து "ஐயா'' என்று கூப்பிடும் குரல் கேட்டது.
 சற்று முன் வந்து போனவன்தான். என்ன ஆயிற்று இவனுக்கு?
 உட்கார்ந்த இடத்திலிருந்தே "என்னப்பா?'' என்றார்.
 "சாமி, நீங்க அம்பது ரூபா சாஸ்தி குடுத்திட்டீங்களே'' என்று கவுன்ட்டர் வழியே கையை நுழைத்து நீட்டினான். அவன் கையில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு மொடமொடத்தது.
 அவர் எழுந்து அவனருகே வந்தார்.
 "புது நோட்டு ஒண்ணுக்கொண்ணு ஒட்டிக்கிடிச்சி போல. போன வருசம் நீங்க அம்பதுதான குடுத்திங்க!'' என்று சிரித்தான். அவரிடம் பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி வந்த வழியே நடந்தான்.
 ஒரு நேர்க் கோடு போல நடந்து சென்ற அந்த உருவத்தைப் பார்த்தபடி திருவாசகம் நின்றார்.
 அப்போது அவரது கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தார். பிரணதார்த்தி.
 "என்னப்பா காலேல கூப்பிட்டா மத்தியானம் லயனுக்கு வரே?'' என்று சிரித்தார் திருவாசகம்.
 "இன்னிக்கி இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல வேல. நீ எப்பிடி நல்லா இருக்கியா?'' என்று கேட்டான் நண்பன். "எதுக்கு போன் பண்ணினே?''
 "உங்கிட்ட பணம் வாங்கி ரொம்ப நாளாச்சே. அதான் ஏதோ கைல மீந்த பணத்துலேந்து கொஞ்சம் திருப்பிக் குடுத்துடலாம்னு. அஞ்சு மணிக்கு வரட்டா?'' என்று கேட்டார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com