விழுந்தது காமெடியின் தூண்!

பல படங்களுக்கு கிரேஸி மோகனுடன் இணைந்து பணியாற்றியவர் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்.
விழுந்தது காமெடியின் தூண்!

பல படங்களுக்கு கிரேஸி மோகனுடன் இணைந்து பணியாற்றியவர் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார். இவர்கள் இருவருக்கும் நட்பின் பாலமாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். கிரேஸி மோகன் மரணம் இவருக்கு தெரிந்தபோது இவர் ஹைதராபாத்தில் இருந்தார். உடனே வரவேண்டும் என்று இவர் விரும்பினாலும் இரவு பத்து மணிக்குத்தான் சென்னை வரமுடிந்தது. இவர் சென்னை வந்தவுடன் கிரேஸி மோகன் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்...
 "கிரேஸி மோகனுடன் இணைந்து நான் சுமார் 5 படங்கள் செய்துள்ளேன். அவருடன் பழகியதில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், அவர் சுத்தமானவர். வாக்கில் சுத்தம், செய்கையில் சுத்தம், பழக்கத்தில் சுத்தம். இவை மட்டும் அல்ல, நட்பில் கூட சுத்தத்தைக் கடைப்பிடிப்பவர். நானும் அவரும் கமல் சாருடன் சேர்ந்து பல மணிநேரம் பேசியிருக்கிறோம். எங்காவது மரத்தடி கிடைத்தால் போதும் எங்கள் பேச்சு தொடங்கி முடியும். நான் ஏதோ ஒரே வார்த்தையில் இதைச் சொல்லி விட்டேன். ஆனால் இந்தப் பேச்சு சில மணிநேரமாவது நீடிக்கும். அவருக்கு பஞ்சு மெத்தையோ, படாடோபமான ஏ.சி. அறையோ தேவையில்லை. நின்று கொண்டே பேசி ஒரு திரைக்கதையை அல்லது ஒரு காட்சியை முடிவு பண்ணிவிடுவோம். இதுவரை அவர் யாரைப் பற்றியும் தவறாகவோ விமர்சித்தோ கூட ஒரு வார்த்தை சொன்னதில்லை. எல்லாரும் இவரது நண்பர்கள் என்று தான் பேசுவார். அதே போல் அவர்களைப் பார்த்தாலே அன்பாகப் பேசுவார். தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இவர் என்றும் நல்ல நண்பர், உற்ற தோழர்.
 இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாக இருக்கும். இவர் என்றும் பணத்தைக் கையால் தொட மாட்டார். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், "எப்ப கொடுத்தாலும் காசோலையாகக் கொடுங்கள்' என்று கேட்பார். ஒரு முறை நான் "தெனாலி' படத்திற்கான ஒரு பகுதி பணத்தை வெள்ளிக்கிழமையே கொடுக்க வேண்டும் என்று நினைத்து பணமாக அவருக்கு அளித்தேன். காரணம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை என்பதால் இதை மனதில் வைத்துக் கொண்டு பணமாகக் கொடுத்தேன்.
 அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? "நீங்கள் எனக்கு காசோலையாகவே கொடுங்கள். போதும். பணம் வேண்டாம்' என்றார். நான் பல்வேறு காரணங்களைக் கூறி, "பணம் உங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்குமே' என்று சொன்னாலும், நாகரிகமாக மறுத்து காசோலையாகவே பெற்றுக் கொண்டார்.
 அரசாங்கம் காசோலையாகவே பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு முன்பாகவே அவர், தனது பழக்கத்தால் நம்மையும் மாற்றுவார். அது மட்டும் அல்லாமல், இவருக்கு எழுதுவதைத் தவிர பல விஷயங்கள் தெரியாது. அதில் ஒன்று வங்கி பரிவர்த்தனை. சில மாதங்கள் வரை இவரது வங்கி வேலைகளை எல்லாம் இவரது தந்தையார்தான் செய்வார் என்று அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சமீபத்தில்தான் இவரது தந்தையாரும் காலமானார். ஒரு வேலை தந்தைக்கு உதவி செய்ய இவரும் மேலுலகம் சென்று விட்டாரோ, என்னவோ?
 எங்கள் படங்களுக்கு வசனம் எழுதுவதற்கு அவர் என்றுமே சிரமப்பட்டதில்லை. இரவு முழுக்க வேலை செய்யும் பழக்கத்தை கிரேஸி மோகன் கடைப் பிடித்து வந்தார் என்று எங்களுடன் அவர் இணைந்த போதுதான் தெரிந்தது. வசனம் எழுதும் நாள் வந்தால் மாலையில் ஜீரகத் தண்ணீர், வெற்றிலை பாக்கு, உதவிக்கு ஒரு பையன் சகிதம் அலுவலகம் வருவார். ஒரே இரவில் வசனத்தை அசல்டாக எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விடுவார். பெரும்பாலான சமயங்களில் அவரது வசனங்களை நாங்கள் மாற்றம் செய்யவே தோன்றாது. அவ்வளவு கன கச்சிதமாக காட்சியுடன் பொருந்திவிடும்.
 அது மட்டும் அல்ல, செட்டுக்கு அவர் வந்தால், ஒவ்வொரு நிமிஷமும் வசனம் மாற்றப்பட்டு, நகைச்சுவை மிளிரும். அதுவும் கமல் சார் கூட இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். இவர்கள் இருவரும் காட்சியைப் பேசிப் பேசியே மெருகேற்றி எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவார்கள். ஒரு நிமிடத்தில் பல ஜோக்குகளைச் சொல்லும் திறமை உள்ளவர் மோகன்.
 கூட்டுக் குடும்பதில் நம்பிக்கை உள்ளவர் மோகன். சினிமா politics  தெரியாதவர். எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். பேசும் போதே ஜோக்ஸ் வந்து விழும். "அவ்வை சண்முகி' படத்தில் அண்ணா என்ற வார்த்தையை வைத்து அவர் ஆடிய விளையாட்டை நாங்கள் செட்டிலேயே ரசித்துச் சிரித்தோம். அதே போல் "பஞ்ச தந்திரம்' படத்தில் வரும் "முன்னாடி பின்னாடி' கார் காட்சி இப்படிப் பேசிப் பேசியே தான் இன்று நாம் எல்லோரும் சிரிக்கும் அளவிற்கு கமல்ஜியும் மோகனும் மாற்றினார்கள்.
 ஒவ்வொரு வருடமும் மே மாதம் என் குடும்பத்துடன் நான் வெளிநாடு செல்வது வழக்கம். அந்த சமயத்தில் தான் என் குழந்தைகளுக்கு லீவு கிடைக்கும் என்பதால். மற்றொரு காரணம், மே மாதம் 30 ஆம் தேதி எனது பிறந்த தினம். இந்த மாதம் நான் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன். எனது நண்பரை எப்படியோ கேட்டு தெரிந்து கொண்டு எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். இதில் மற்றொரு ஒற்றுமை இருக்கிறது. அதே மே மாதம் 30 ஆம் நாள், மோகன் மனைவிக்கும் பிறந்த நாள் என்று தெரிந்தது. ஒவ்வொரு வருடமும் மோகனின் வாழ்த்துச் செய்தி என்னைத் தேடி வரும். இந்த வருடமும் வந்தது. இனி?
 - சலன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com