நடனப் பயிற்சி அளிக்கும் தலைமையாசிரியர்!

இந்தியாவின் விலை மதிக்க முடியாத பலவற்றுள் நாட்டுபுறக்கலைச் செல்வங்களும் அடங்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குள்ளும் விதவிதமான நாட்டுப்புறக்கலைகள் விளங்குகின்றன.
நடனப் பயிற்சி அளிக்கும் தலைமையாசிரியர்!

இந்தியாவின் விலை மதிக்க முடியாத பலவற்றுள் நாட்டுபுறக்கலைச் செல்வங்களும் அடங்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குள்ளும் விதவிதமான நாட்டுப்புறக்கலைகள் விளங்குகின்றன. பாடல்கள், ஆட்டங்கள், இசைக்கருவிகள், இசை வகைகள், கதைகள், கைவினை கலைப்பொருட்கள், உடை, ஒப்பனைகள் நிகழ்த்தும் முறைகள் என இவை ஒவ்வொரு மாநிலக் கலைகளிலிருந்தும் வேறுபட்டு அமைவதே தனிச்சிறப்பாகும்.
 தமிழ்நாடு என்பது இந்திய தென்பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். இங்கே வெப்பம் அதிகம் என்பதால் இங்குள்ள காவடி ஆட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற ஆட்டக்கலைஞர்கள் சட்டை அணியாது வெற்றுடம்பில் ஒப்பனை செய்தவாறு ஆடுவர். ஆனால் இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்களில் குளிர்ச்சி அதிகம். குளிர்த் தன்மைக் கேற்ப அப்பகுதி வாழ் மக்களின் கலைஞர்கள் அணியும் உடை ஒப்பனைகள் குளிர்தாங்கும் நோக்கில் அமைந்தவாறு பெரும்பாலான இடங்களில் இருக்கும் என்பது குறிப்பித்தக்கது.
 நாட்டுப்புறத் தெய்வங்கள் இடத்துக்கு இடம், இனத்துக்கு இனம் ஆண் தெய்வங்கள் என்றும், பெண் தெய்வங்கள் என்றும், உருவமற்ற தெய்வங்கள் என்றும் பலவாறு விளங்கக் காணலாம். இவ்வகை தெய்வங்களை துதிக்கும் முறையில் சடங்குகள் செய்வது வழக்கம். இவ்வாறு செய்யும் வழிபாட்டுச்சடங்கின் போது நிகழ்த்தப்படும் கலைகளைச் சடங்கு முறைக் கலைகள் எனலாம். தமிழகத்தில் சாமியாட்டம், காவடி ஆட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்றவை சடங்கு முறைக் கலைகளாகும். கும்மியைத் தவிர பிற யாவும் ஆண்களால் நிகழ்த்தப்படக் கூடியவை. கரக ஆட்டம், தப்பாட்டம்(பறையாட்டம்) குறவன் குறத்தி ஆட்டம், ராஜாராணி ஆட்டம், ஜிம்பலாக் கொட்டு ஆட்டம் போன்றவை தொழில்முறைக் கலைஞர்களால் ஆடப்படுபவை ஆகும். சடங்குமுறைக் கலைகளே காலப்போக்கில் தொழில் முறைக் கலைகளாக மாறி, அவற்றுக்கான கலைஞர்கள் உருவாகியுள்ளனர். இப்படி பல வரலாறுகள் நமது பாரம்பரிய நடனக் கலைகளுக்கு உண்டு.
 இந்த கலைகளை முறையாகக் கற்றுக் கொண்டு அதை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுக்கொடுப்பவர்தான் திருப்பூர் மாவட்டம் எம்.நாதம்பாளையம் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ப.கனகராஜ். இவரைத் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கிராமத் திருவிழாவில் இவருடைய ஆட்டத்தையும், இவருடைய பேச்சையும் கேட்டு ரசித்தோம். அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...
 "எனது தந்தை சி.பழனிச்சாமி, தாய் இராமாத்தாள், கருப்பாத்தாள். சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கருமத்தம்பட்டி. இவ்வூர் தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது. விசைத்தறி, நூல் மில்கள் நிறைந்த பகுதி. இங்கே பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில், மிகவும் பழமையான பெருமாள் கோயில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாதா தேவலாயம், காவல் நிலையம் போன்றவை உள்ளன.

1990- இல் கிராமியக் தமிழர் பாரம்பரியக் கலையான ஒயிலாட்டத்தை ஆசிரியர் இந்திராநகரைச் சேர்ந்த இராஜேந்திரன் என்பவரிடம் நல்லபடியாக கற்றுக்கொண்டேன். நான் கற்றுக் கொண்டதை நான்கு நபர்களுக்காவது சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு விழா நேரங்களில் இந்த கலையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன் அப்போது அருகில் உள்ள சிறிய கிராம மக்களும் "எங்களுடைய பிள்ளைகளுக்கும் இதை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர். இதனால் 2010- ஆம் ஆண்டில் "சங்கமம் கலைக்குழு' தொடங்கி முதலாவதாக ஒயிலாட்டப் பயிற்சியை ஆரம்பித்தேன். எங்கள் பகுதியில் உள்ள 20 கிராமங்களில் அரங்கேற்றம் செய்தோம். இதில் 1000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது கணியூர் சந்தோஷ்நகர், சின்னியம்பாளையம், பெரியநாதம்பாளையம், நம்பியாம்பாளையம் ஆகிய இடங்களில் ஒயிலாட்டப் பயிற்சி 500 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியை பிற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். 150-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தொடர்ந்து பயணித்து வருகிறோம். 2015 -இல் காவடி ஆட்டமும், 2018 - இல் வள்ளி கும்மியும் அரங்கேற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து பயிற்சி, நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஒவ்வொருவரையும் சிறப்பித்து வருகிறோம்.
 எனது பெற்றோர், எனது அனைத்து ஆசிரியர்கள், கலை ஆசான் கருமத்தம்பட்டி செளந்தராசன், ஒயிலாட்ட ஆசான் இந்திராநகர் என்.இராஜேந்திரன், காவடி மற்றும் கராத்தே ஆசான் வடுகம் பாளையம் வி.எம்.சி. மனோகரன், பரதம், சிலம்பு, யோகா ஆசான் மறைந்த செல்வமணி, வள்ளிகும்மி ஆசான் செல்லப்பகவுண்டர், சங்கமம் கலைக்குழு ஆலோசகர் காளியாபுரம் ஜி.மயில்சாமி ஆகியோரை என் வழிகாட்டியாகக் குறிப்பிடுவேன்.
 நான் பணிபுரியும் இக்கிராமத்திற்கு முக்கியமான சிறப்பு இருக்கிறது. தேசியக் கொடி மட்டுமே இக்கிராமத்தில் பறக்கும். கட்சிக்கொடிகள், கட்சி பதாகைகள் எதுவுமே ஊருக்குள் வைப்பதில்லை. தேர்தல் நேரங்களில் பிரசாரத்திற்கு வருவோர் சுவற்றில் எழுதவோ, போஸ்டர் ஒட்டுவதோ இல்லை. இதை இப்போது தேர்தல் ஆணையம் கடைப்பிடித்தாலும் 1991-ஆம் ஆண்டு முதலே இக்கிராமத்து மக்கள் இதை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த ஊரில் பெரிய திருவிழா என்றால் அது சுதந்திரதினம் என்றே சொல்லலாம். அன்றைக்கு பல இளைஞர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் அனைவரும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வைச் சிறப்பாக நடத்துவார்கள் இது போன்ற சில நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருந்து வருகிறது.
 நாங்கள் ஆடும் ஆட்டங்களான ஒயிலாட்டம், காவடி ஆட்டம், வள்ளி கும்மி இவற்றில் ஒயிலாட்டம் மக்கள் மனதை அதிகம் கவர்கிறது என்பதை அங்கே சேரும் கூட்டங்களை வைத்து கண்டுகொள்ளலாம். அதைவிட இந்த ஆட்டத்தை முடித்து புறப்படும் போது எல்லோரும் வந்து எங்களுடைய குழுவைப் பாராட்டுவார்கள்; சிலர் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கலைஞர்களுக்குத் தேவை பாராட்டுதானே?
 பொ.ஜெயச்சந்திரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com