நாவல் அல்ல...வாழ்க்கை! கு.சின்னப்பபாரதி

உயிர், உணர்வு சார்ந்த படைப்பே நாவலாக உருவெடுப்பதாகவும், அதன் உண்மைத்தன்மையே எழுத்து நடையாக மாறுவதாகவும்பிரபல எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி தெரிவித்தார்.
நாவல் அல்ல...வாழ்க்கை! கு.சின்னப்பபாரதி

உயிர், உணர்வு சார்ந்த படைப்பே நாவலாக உருவெடுப்பதாகவும், அதன் உண்மைத்தன்மையே எழுத்து நடையாக மாறுவதாகவும்பிரபல எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி தெரிவித்தார்.
 "தாகம்', "சங்கம்', "சர்க்கரை', "பவளாயி', "தலைமுறை மாற்றம்', "சுரங்கம்', "பாலைநில ரோஜா' உள்ளிட்ட ஏழு நாவல்களை எழுதியவர் கு.சின்னப்பபாரதி. திருக்குறளுக்கு அடுத்தபடியாக, 13 மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இடதுசாரி சிந்தனை கொண்ட அவர், வாழ்வின் அடிமட்டத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை இனம் கண்டறிந்து, அவர்களுடன் தங்கியிருந்து நாவல்களை எழுதி படைப்பதில் வல்லவர்.
 திருவாரூர் மாவட்டம், வெண்மணி கிராமத்தில் நிலச்சுவான்தாரர்களிடம் அடிமையாக இருந்த மக்களின் நிலையை உணர்வுப்பூர்வமாக எழுதி, "தாகம்' எனப் பெயரிட்டு தனது முதல் படைப்பை வெளியிட்டார். அதன்பின், கொல்லிமலை மலைவாழ் மக்கள் விவசாயத் தொழில் சார்ந்து அனுபவிக்கும் வேதனைகளை விளக்கும் வகையில் "சங்கம்' என்ற நாவலை வெளியிட்டார். "தாகம்', "சங்கம்' இரண்டுமே அவரது எழுத்துக்கு ஒரு சான்று.
 மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களின் வாழ்வியலைக் குறிக்கும் "சர்க்கரை', விதவைப் பெண்ணின் வேதனைகளைச் சொல்லும் "பவளாயி', உயிருக்கு உத்தரவாதமில்லாத வாழ்க்கையை வாழும் சுரங்கத் தொழிலாளர்களின் நிலை பற்றிய "சுரங்கம்' போன்ற நாவல்கள் அம் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவை. லியோ டால்ஸ்டாய், பாரதி, பாரதிதாசன், மு.வரதராசனார் போன்றவர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர்.
 எட்டாம் வகுப்பில் எழுத்துப் பணியைத் தொடங்கியவர், 85-ஆவது வயதிலும் அதற்கான பாதையில் இருந்து விலகவில்லை. கதை, கவிதை, காவியம், சிறுகதை தொகுப்பு, குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள், வாழ்வியல் நாவல்கள் என இன்னும் அவருடைய பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 நாமக்கல் முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த போது...
 "பரமத்தி வேலூரில் பள்ளிப் படிப்பை முடித்தபின், சென்னை பச்சையப்பர் கல்லூரியில் என்னுடைய படிப்பைத் தொடர்ந்தேன். அங்கு எனக்கு குருவாக இருந்தவர் மு.வரதராசனார். அவருடைய தமிழ்ப்பற்று, நான் அவர் மீது கொண்ட பற்று, எழுத்து மீதான எனது ஆர்வம் போன்றவை நாவல்களை எழுதத் தூண்டின.
 பட்டியலின மக்கள், நிலச்சுவான்தாரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த சம்பவத்தை எழுதும் பொருட்டு, திருவாரூர் மாவட்டத்தில் தங்கியிருந்து, "தாகம்' என்ற நாவலை இரு பாகங்களாக எழுதினேன். உயிரும், உணர்வும் கலந்தது அந்த நாவல். அங்குள்ள மக்களோடு தங்கியிருந்து, அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்து எழுதினேன்.
 அதேபோன்று, விவசாயத் தொழிலாளர்களைப் பற்றியது "சங்கம்' நாவல். இந்த இரு நாவல்களும் தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, வங்காளி, ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஸ், சிங்களம், உள்பெக், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
 மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளில் சிறந்த நாவல்களை இயற்றியமைக்காக கெüரவிக்கப்பட்டேன். இதுவரை 7 நாவல்களை எழுதியுள்ளேன். ஒரு நாவல் எழுத ஐந்து, ஆறு ஆண்டுகள் கூட ஆகும். நாவல் என்பது சாதாரண புத்தகம் அல்ல. அதில், அந்த மனிதர்களின் வாழ்க்கை உள்ளது.
 உதாரணமாக, "சுரங்கம்' நாவல் எழுதுவதற்கு முன், மேற்கு வங்க மாநிலம் அசன்சால், பத்துவான் ஆகிய சுரங்கங்களுக்குச் சென்றேன். அங்கு 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், நான் 77 வயதில் சுரங்கத்துக்குள் செல்ல அனுமதி பெற்றேன். நெய்வேலி போன்று திறந்தவெளி நிலக்கரி சுரங்கம் அல்ல அது. பூமிக்குள் பல அடி தோண்டி அதற்குள் நின்று தொழிலாளர்கள் பணியாற்றுவர். முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு தான் உள்ளே செல்ல முடியும். சாதாரண இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசம்பாவிதம் நிகழும். அவ்வாறான தொழிலாளர்களின் கஷ்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் "சுரங்கம்' நாவல் அமைந்தது.
 தற்போதுள்ள இளைஞர்கள் நல்ல நாவல்களைக் கண்டறிந்து படிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை நேரடியாகப் புரிந்து கொண்டே நாவல் எழுதப்படுகிறது. உயிர் சார்ந்த படைப்புகள் தான் நாவல் தொகுப்பாக மாறுகிறது.
 வருங்கால மாணவர்கள், இளைஞர்கள் எழுத்துகளின் மீது ஆர்வம் காட்ட வேண்டும். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அகில இந்திய சின்னப்பபாரதி கருத்தரங்கு அறக்கட்டளை என்ற பெயரில் ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு பொற்கிழி வழங்கி கெüரவிக்கிறோம்.
 மேலும், தற்போது புதிய நாவல் ஒன்றை எழுதி வருகிறேன். ஒரு பகுதி முடித்துவிட்ட நிலையில், மற்றொரு பகுதியை எழுத ஆயத்தமாகியுள்ளேன்'' என்றார் சின்னப்பபாரதி.
 - எம்.மாரியப்பன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com