சுடச்சுட

  
  ksahir7

  சாந்திநிகேதனில்...

  பின்னர் நமது சொந்த மாகாணத் தலைவர் ராஜாஜிக்குக் கடிதம் எழுதினாராம்.
  "தேசத்திற்காக உயிரைவிடக் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டேன். எவ்விடத்தில் ஆரம்பிக்கலாம்?'  என்று யோசனை கேட்டிருந்தாராம்.

  "கள்ளுக்கடையில் ஆரம்பிக்கலாம். ஒரு குடிகாரனைக் குடியை விடும்படி செய்தால், ஒன்பது தடவை உயிரை விடுவதை விட அதிகப் பலன் உண்டு'  என்று ராஜாஜி பதில் எழுதினாராம்.

  "இதென்னப் பிரமாதம்? ஒரு குடிகாரனைக் குடியை விடும்படிச் செய்து ஒன்பது தடவை தேசத்திற்கு உயிர் விடுவோம்'  என்று தீர்மானித்துக் கொண்டு கல்கி  அவர்கள் திருச்செங்கோட்டுக்கு ராஜாஜியிடம் போய்ச் சேர்ந்தாராம்.

  ராஜாஜி இவரைப் பார்த்தவுடன்,  ""ஓ... நீங்கள்தானா தேசத்திற்காக உயிரைவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்? உம்மிடம் உயிர் இருப்பதாகவே தெரியவில்லையே; பின் எப்படி அதை விடப் போகிறீர்?'' என்றாராம். உடனே கல்கி, ""அதுவா? ரயிலில்-பஸ்ஸில் வண்டியில் வரும்போது பத்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காகப் பெட்டியில் வைத்திருக்கிறேன்'' என்று சொல்லிப் பெட்டியிலிருந்து சில துண்டுப் பிரசுரங்கள், சின்னப் புத்தகங்கள் முதலியவற்றை எடுத்து வெளியில் போட்டாராம்.

  ராஜாஜி அவற்றைப் படித்துவிட்டு,  ""பேஷ்! இதை நீர் உம்முடைய உயிர் என்று சொன்னது சரிதான்!'' என்று மெச்சிவிட்டு அதைப்போல நிறைய எழுதும்படி கல்கியைத் தூண்டினாராம்.

  கல்கி தமிழில் எழுத ஆரம்பித்தார்!

  அடடா! தமிழ் மொழிக்கு யோகமல்லவா பிறந்துவிட்டது!

  கல்கியின் எழுத்துப் பைத்தியத்தை ராஜாஜி போலவே ஆசிரியர் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரும் வளர்ந்து வந்தார். ""தமிழ்நாட்டில் பலர் செய்வதுபோல என்னுடைய தமிழ் நடையைக் "காப்பி' அடித்துக் கெட வேண்டாம்; உன் போக்கிலேயே செல்'' என்று திரு.வி.க. அவர்கள் கல்கிக்கு போதனை செய்தார்.

  இதெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழ் மக்களாகிய நாம் மிஸ்டர் வாரன் என்னும் ஆங்கில துரை மகனாருக்கு ஒரு கோயில் கட்டிக் கும்பாபிஷேகமும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில் கல்கியைத் தமிழ் எழுத்தாளராக ஆக்கியதற்கு முக்கியப் பொறுப்பாளி அவர்தான்!

  1922-ஆம் ஆண்டிலே கூடலூர் சிறைச்சாலைக்கு கல்கியை மேற்படி துரைமகனார் அனுப்பி வைக்கப் போக, அங்கே சும்மா இருப்பதற்கு முடியாமல் கல்கி தமிழ் எழுத ஆரம்பிக்க, பின்னர் தமிழும் கல்கியும் ஓருயிரும் ஈருடலுமாகி, "தமிழ் என்றால் கல்கி--கல்கி என்றால் தமிழ்' என்பது போன்ற பொய்யா மொழிகளும் உண்டாகிவிட்டன.

  தமிழ் வாழ்க! அதை வாழ்விக்க வழி செய்த வாரன் துரை மகனாரும் வாழ்க; என்று வாழ்த்துவோமாக!

  "கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்றும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்றும், "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' என்றும், தமிழ்நாட்டின் பெருமைகளைப் பலர் பலவிதமாகச் சொல்லிப் பாராட்டி மகிழ்கிறார்கள்.

  "கல்கி பிறந்த தமிழ்நாடு' என்று சொன்னாலும் மிகையாகாது. 

  ஏனெனில் கம்பரும், வள்ளுவரும், இளங்கோவும், பாரதியும், கல்கியின் உருவத்திலே தமிழ்நாட்டில் உலாவுகிறார்கள். ஆகவே "கல்கி' பிறந்த தமிழ்நாடு' என்று கூறுவதுதான் சரி'' என் பேச்சு முடிந்ததும் சபை மகிழ்ச்சியில் திளைத்தது. பலர் மேடைக்கு வந்து கைகுலுக்கி னார்கள். சிலர் மாலை அணிவித்தார்கள். ஒரு பெண்மணி ஒரு டாலருடன் கூடிய தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசாக அளித்தார். உடனே பெண்மணிக்கு நன்றி தெரிவித்து விட்டு, ""கல்கியைப் பற்றி நான் பேசியதற்குக் கிடைத்தது இந்தப் பரிசு. இதை நான் கல்கி அவர்கள் சேர்க்கும் பாரதி மண்டப நிதிக்கு அளிக்கிறேன். இதை கல்கி அவர்களே ஏலத்திற்கு விட்டு, கிடைக்கும் பணத்தை நிதியில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்'' என்று சொல்லி பலத்த கரகோஷத்துக்கிடையில் கல்கி அவர்களிடம் மேற்படி தங்கச் சங்கிலியைக் கொடுத்தேன்.

  கல்கி அவர்களும் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த சிறிய சொற்பொழிவு ஒன்றைச் செய்து மேற்படி தங்கச் சங்கிலியை ஏலத்துக்கு விட்டார். சங்கிலி எவ்வளவு தொகைக்கு ஏலம் போயிற்று என்று நம்புகிறீர்கள்?
  சொன்னால் நம்பமாட்டீர்கள். ரூபாய் ஐயாயிரத்துக்கு ஏலம் போயிற்று. அதைவிட அதிசயம் ஏலம் கேட்ட மற்றவர்களும் எங்களுக்குச் சங்கிலி மேல் ஆசையில்லை. பாரதி நிதிக்கு நாங்களும் பணம் தருகிறோம் என்று கூறித் தாங்கள் கேட்ட ஏலத்தொகையை அவரவர்களும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதையும் சேர்த்து மொத்தத் தொகை ரூ.9780 சேர்ந்தது.

  கல்கத்தா தமிழர்களின் பாரதி பக்தியைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்.

  ராஜாஜியின் மதிநுட்பம்

  இதுவரையில் நான் ஏராளமாகச் சொற்பொழிவுகளைச்  செய்திருப்பேன். நான் தமிழில் பேசி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லப்பட்ட சொற்பொழிவு ஒன்றே ஒன்றுதான்.

  சொற்பொழிவு நடந்த இடம் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன்.

  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி. 

  வங்காள கவர்னராக ராஜாஜி 1947-இல் பதவி ஏற்றபோது நாங்கள் கல்கத்தா சென்றிருந்தோம். ராஜாஜியின் விருந்தினராகத் தங்கும் பாக்கியம் கிடைத்தது. சாந்திநிகேதனில் ராஜாஜிக்கு ஒரு வரவேற்பு நடந்தது. மிகவும் ரம்யமான வரவேற்பு. வங்காளத்தின் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கூடியிருந்த அந்தச் சபையில் என்னைப் பேசும்படி தலைமை வகித்த திரு. பி.சி. கோஷ் (அப்போதைய வங்காள முதன் மந்திரி) அழைத்தார். நான் திடுக்கிட்டுப் போனேன். ராஜாஜியைப் பரிதாபகரமாகப் பார்த்தேன்.

  ""சும்மா தமிழிலேயே பேசுங்கள். ரசிகமணி டி.கே.சி. ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்'' என்று ராஜாஜி கூறினார். ""சரி'', என்று ""மைக்'' அருகில் வந்தேன். திடீரென்று ராஜாஜியே எழுந்து ஒரு மாலையை என் கழுத்தில் போட்டார். சபையோரின் கரகோஷம் அடங்க  கொஞ்ச நேரமாகியது. நான் ராஜாஜியின் அன்பினால் திணறித் திக்குமுக்காடிப் போய் பேச்சை ஆரம்பித்தேன்.

  ""ராமபிரானுடைய ஆண்மையும், கிருஷ்ணனுடைய ராஜதந்திரமும், புத்தருடைய தூய்மையும், சிபிச் சக்ரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மதப் பக்தியும், வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து உருவெடுத்து வந்திருப்பவர் ராஜாஜி.

  ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம் இந்து மதத்திற்குப் புத்துயிர் உண்டாயிற்று. தமிழ்நாடு அப்பொழுது விழித்தெழுந்தது. அவர்கள் இருவரும் இந்த வங்காளத்தில் பிறந்தவர்கள். பின்னர் மற்றொரு வங்காள வீரர் விபின் சந்திரபாலர் சென்னைக்கு விஜயம் செய்து தம்முடைய ஆறு பிரசங்கங்களின் மூலம் தமிழ்நாட்டில் தேச பக்தியை உண்டாக்கினார்.

  தேசபந்து தாஸ் வக்கீல் தொழிலை விட்டு நாடு முழுதும் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன்ராய், ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி போஸ் முதலியவர்களால் தமிழ்நாட்டுக்கு எவ்வளவோ லாபம் ஏற்பட்டிருக்கிறது.

  சென்ற பல வருஷ காலமாக வங்காளம் எங்களுக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட வங்கத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யலாம், செய்ய முடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம்.

  ஆனால் அதெற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எங்கள் ராஜாஜியை உங்களுக்குக் கவர்னராகக் கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய இவ்வங்காளம் 100 வருஷ காலம் தவம் செய்திருக்க வேண்டும்'' என்று கூறியபோது, ""ராஜாஜிக்கு ஜே!'' என்ற கோஷம் வானை அளாவியது.

  நானும் மரியாதையாக அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டேன். விழா முடிந்தது. கல்கத்தா திரும்பும்போது ராஜாஜி அவர்களிடம் நான், ""என்னை எதற்குப் பேசும்படி பணித்தீர்கள். ரசிகமணி டி.கே.சி. பேசினால் போதாதா?'' என்றேன். அதற்கு ராஜாஜி ""ரசிகமணி ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. ஆகவே நம் தமிழ் மொழியை வங்காளிகள் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் உங்களைப் பேசச் சொன்னது'' என்று சொல்லிய பிறகு சிறிது மௌனமாக இருந்துவிட்டு, ""நானே உங்களுக்கு மாலை போட்டது ஏன் தெரியுமா?'' என்ற கேள்வியும் கேட்டு பதிலையும் சொன்னார்.

  ""உங்களை இங்கு ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் பேசும்போது யாரோ என்று அசிரத்தையாக வங்காளிகள் இருந்துவிட்டால் உங்கள் தமிழை யாரும் கவனித்துக் கேட்க முடியாது. நான் மதித்து மாலை போடக்கூடிய ஆள் என்று தெரிந்து விட்டால் எல்லோரும் கவனமாகக் கேட்பார்கள் அல்லவா? அதற்காகத்தான்'' என்று கூறினார்.

  ராஜாஜியின் பெருந்தன்மையை நினைத்து உருகிப் போனேன்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai