சுடச்சுட

  

  மனதை  ஒருமுகப்படுத்த ஓவியப் பயிற்சி!

  By -  வி.குமாரமுருகன்   |   Published on : 17th March 2019 02:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kadhir1

  ஓய்வு நேரங்களில் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறார் ஓவியர் ஜெயராம்.

  கடையநல்லூர் ரயிலடி பகுதியைச் சேர்ந்தவர் கோ.ஜெயராம். ஓவியரான இவர் "விதை நெல் வாசகர் வட்டம்' என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்து மாணவர்களுக்காக பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

  விவசாயப் பணியை மேற்கொண்டு வரும் இவர் ஓய்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக ஓவிய ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஓவியங்கள் வரைய கற்றுக் கொடுக்கிறார்.  மேலும், ஓவியம் வரைவதற்கு தேவையான அட்டைகள் மற்றும் பொருள்களை இவரே தனது சொந்த செலவில் வாங்கி மாணவர்களுக்கு கொடுத்து ஓவியப் பயிற்சியளித்து வருகிறார்.

  ஓவியர் ஜெயராமை சந்தித்து பேசினோம்...

  ""பொதுவாக ஓவியப் பயிற்சி என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் மிக சிறந்த கலையாகும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் பொருத்தவரை ஓவிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால்,  தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஓவியர் ஆசிரியர் பணியிடங்கள் இருப்பதில்லை. 

  மனதை ஒருமுகப்படுத்த மாணவர்கள் பழகிக் கொண்டால், அனைத்து திறன்களையும் மாணவர்களால் எளிதில் வசப்படுத்த முடியும். அதற்கு ஓவியம் துணை புரிகிறது. ஒரு பொருளை வரைய முயலும் போது, அந்த பொருள் குறித்த சிந்தனையைத் தவிர, வேறு எந்த சிந்தனையும் மனதில் வராது. இது ஒரு விதமான பயிற்சி. இப்படி தொடர்ந்து ஓவியம் வரையும் பொழுது, மாணவர்களின் மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, படிப்பு உள்ளிட்ட விஷயங்களில் அவர்களால் முழுமையாக ஈடுபட முடியும். 

  அதனால்தான், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஓவியப் பயிற்சியை வழங்கி வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக விரும்பும் பள்ளிகளுக்கு சென்று பயிற்சி அளித்து வருகிறேன். மேலும், வெளியூர்களுக்கு செல்லும் போது, அருகேயுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு ஓவியம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த முயன்று வருகிறேன். மேலும் கலையாசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்து வருகிறேன். 

  இந்திய கோயில்களில் எண்ணற்ற ஓவியங்கள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோயில்களின் ஓவியங்கள் அப்பகுதியின் வரலாற்றைப்  பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோயில் ஓவியங்களும், மதுரைப் பகுதியிலுள்ள ஓவியங்களும் ஒன்று போல் இருப்பதில்லை. அந்தந்த பகுதிகளுக்குகேற்ப ஓவியங்களும் மாறுபட்டுள்ளன. அவற்றின் கோடுகளும் கூட மாறுபட்டு உள்ளன. 

  இதை அறிவதற்காக ஓவியர் பொன்.வள்ளிநாயகம் உள்ளிட்டோரைக் கொண்ட எங்கள் குழு, பல்வேறு இடங்களுக்குச் சென்று கோயில் ஓவியங்கள், மலைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அதிலுள்ள நுட்பங்களை உள்வாங்கி, அதை ஓவியக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு கற்பித்து வருகிறோம். இது போன்ற மரபு சார்ந்த ஓவியங்கள் இன்றைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பித்து வருகிறோம். 

  கோடை விடுமுறையில், "விதை நெல் வாசகர் வட்டத்தின்' சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக ஓவியப் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி வருகிறோம். எதிர்காலத்தில் ஓவியக்கலையில் ஆர்வமுள்ளவர்களைக் கொண்டு, மரபு சார்ந்த இந்திய ஓவியக் கலையை கற்பிக்கும் பட்டறையை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள்ளது என்ற அவர் மரபு சார்ந்த இந்திய ஓவியங்கள் கோபுரங்களில்தான் காணப்படுகின்றன. என்னைப் போன்ற ஓவியர்கள் அந்த ஓவியங்களை பார்வையிடுவதற்கு, பலதுறைகளிடம் அனுமதி பெற வேண்டிய நிலையுள்ளது. அதை எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்'' என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai