பெண்ணுரிமைக்காக குரல்  எழுப்பிய  தந்தை!

பாலிவுட்  நடிகையும்,  சமூக ஆர்வலருமான ஷப்னா  ஆஷ்மி, தனது  கணவர் - கவிஞரும்,  திரைக்கதை  வசன கர்த்தாவுமான ஜாவீத் அக்தருடன்  சேர்ந்து இலக்கிய  கூட்டங்கள்  நடத்துவதுண்டு.
பெண்ணுரிமைக்காக குரல்  எழுப்பிய  தந்தை!

பாலிவுட்  நடிகையும்,  சமூக ஆர்வலருமான ஷப்னா  ஆஷ்மி, தனது  கணவர் - கவிஞரும்,  திரைக்கதை  வசன கர்த்தாவுமான ஜாவீத் அக்தருடன்  சேர்ந்து இலக்கிய  கூட்டங்கள்  நடத்துவதுண்டு.  ஷப்னா  அவரது  தந்தை  கைய்ஃபி ஆஷ்மி  மற்றும் ஜாவீத்தின் தந்தை  ஜான் நிஷார் அக்தர்  ஆகியோரின் வாழ்க்கை  மற்றும் அவர்களது   கவிதைகளை  மேடையில்  படித்து விளக்கம் அளிப்பதுண்டு.  இதுதவிர ஷப்னா அவரது அம்மாவாகவும், ஜாவீத் அக்தர் ஷப்னாவின் தந்தையாகவும்  "கைய்ஃபி அவுர்  மெய்ன்'  என்ற தலைப்பில்  நாடகமொன்றை  நடத்துவதுண்டு.  இதுவரை  இந்த நாடகம்  300- தடவைகளுக்கும் மேல் நாடு முழுவதும்  மேடை ஏறியுள்ளது.  தற்போது "ராக்ஷயாரி'  என்ற புதிய  நாடகத்தை  அரங்கேற்றவுள்ளனர்.  ஷப்னாவின் தந்தை கடைசிவரை  பவுண்டன்  பேனா  மட்டுமே  பயன்படுத்தி  கவிதைகளை எழுதி வந்தாராம்.  அவரது  நூற்றாண்டைச்  சிறப்பாக  கொண்டாடும் வகையில் "கைய்ஃபி ஆஷ்மி' என்ற பெயரில்  சிறப்பு  பவுண்டன்  பேனாக்களை வெளியிட  ஏற்பாடு செய்துள்ளார் ஷப்னா.  அவர் தன்  தந்தையை  பற்றி இங்கு நினைவு கூர்கிறார்:

""என்னுடைய தந்தையும்,  கவிஞருமான கைய்ஃபி ஆஷ்மி  நடத்தி வந்த "இந்திய மக்கள் நாடக அமைப்பு'  ( ஐ.பி.டி.ஏ)  உலகிலேயே பெரிய அளவில்  10 ஆயிரம்  உறுப்பினர்களைக்  கொண்டிருந்தது.  அந்த நாடக  அமைப்பின் அனைத்திந்தியத்  தலைவராக  இருந்ததால்  வீதி நாடகங்களை  நடத்துவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.  சுதந்திரமடைந்த  பின்னர்  வலிமை மிக்க இந்தியாவாகத்  திகழ,  மக்களிடையே  நாடகம்,  பாடல்கள்,  கலை நிகழ்ச்சிகள் மூலம்  விழிப்புணர்வை  ஏற்படுத்தி  சமூக  மாற்றங்களை  ஏற்படுத்த பாடுபட்டார்.

என்   சிறுவயது  வாழ்க்கை  நன்றாக  நினைவில்  உள்ளது.  நாங்கள்  120  சதுர அடி கொண்ட  சிறிய வீட்டில்  வசித்து  வந்தோம்.  எட்டு குடும்பங்கள்  வசித்து வந்த  அந்த  பகுதியில்  இருந்த ஒரே ஒரு குளியலறையைத்தான்  அனைவரும் பயன்படுத்துவோம்.  அனைத்து  சமூகத்தினரும்  அங்கு குடியிருந்தனர்.  அந்த காலத்திலேயே சமூக நீதி,  பெண்ணுரிமை, சமத்துவம்   போன்ற  கருத்துகளை என்  பெற்றோர்  கற்றுக்கொடுத்தனர்.

இதுகுறித்து  என் தந்தை  பேசும்போது,  சொற்பொழிவு ஆற்றுவது  போல் இருக்கும்.  70 ஆண்டுகளுக்கு  முன் அவர் எழுதிய "அவுரத்'  என்ற கவிதைத் தொகுப்பில், "பெண் என்பவள், வெறும்  சமையலறையையும், குழந்தைகளையும்  தான் கவனித்துக் கொள்ள வேண்டும் . ஆண்கள் வேலைக்கு  செல்ல வேண்டும்  என்ற நிலை  மாற வேண்டும். பெண்களும் வேலைக்கு போகலாம்,  வெளி விவகாரங்களைத் தெரிந்து  கொள்ள வேண்டும்' என்பதை  வலியுறுத்தியிருந்தார்.  அவரது  வாழ்நாளில்  இன்றைய ஹீரோக்களுக்கு  எவ்வளவு  மதிப்பளிக்கிறார்களோ  அந்த  அளவு கவிஞர்களுக்கு  மதிப்பும்,  மரியாதையும்  ரசிகர்களிடையே  இருந்தது.  புரட்சி எழுத்தாளர்களின்  இயக்கமும்  வலுவாக  இருந்தது.  இன்று  அந்த அளவுக்கு வலிமை இல்லை.  இதற்கு காரணம்  அரசியல்.  மக்களும்  சமூக வலை தளங்கள்  மூலம் கருத்து  பரிமாற்றம்  செய்வதை  விரும்புகின்றனர். ஏனெனில் சமூக வலைதளங்களில் பதியும்  கருத்துகளுக்கு  தணிக்கை இல்லை.  ஒரு பட்டனை  தட்டுவதன்  மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு  தகவல் சென்றடைகிறது.

திரைப்படம் மூலம்  கருத்துகளைச்  சொல்வது  அதிக செலவான  விஷயம்.  ஒரு சாதாரண படம்  எடுக்க வேண்டுமென்றாலும்  சில கோடிகள்  தேவைப்படும். நான் "அர்த்'  (1982)  படத்தில்  கணவனால்  கைவிடப்பட்ட பெண்ணாக நடித்தபோது,  நிறையப் பெண்கள் தங்கள் கருத்துகளை என்னுடன்  பகிர்ந்து கொள்ள முன் வந்தனர்.  அதன்பின்னரே  பெண்ணுரிமை  இயக்கங்களில்   நான் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினேன்'' என்றார்  ஷப்னா  ஆஷ்மி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com