சர்வதேச வில் வித்தை போட்டி...கிராமத்து மாணவர்!

"படிக்கிறதுக்கே நேரம் இல்லை. இதுல வேற என்ன விளையாட்டில் சேர முடியும்?'' என்று அலுத்துக் கொள்ளும் மாணவர்கள் ஒரு ரகம்.
சர்வதேச வில் வித்தை போட்டி...கிராமத்து மாணவர்!

"படிக்கிறதுக்கே நேரம் இல்லை. இதுல வேற என்ன விளையாட்டில் சேர முடியும்?'' என்று அலுத்துக் கொள்ளும் மாணவர்கள் ஒரு ரகம்.
 கைபேசியிலும், டேப்லெட்டிலும், இண்டர்நெட்டிலும் நேரத்தை தொலைத்து வெளிப்புற விளையாட்டுகளே தெரியாமல் வளரும் மாணவர்கள் இன்னொரு ரகம். படிப்பு மட்டுமே கதி என்று விளையாட்டை ஒதுக்கிவைக்கும் மாணவர்கள் மற்றொரு ரகம்.
 இத்தகைய மாணவர்களுக்கு மத்தியில் வில்வித்தையில் கலக்கி வருகிறார் குக்கிராமத்து மாணவர் ஒருவர்.
 திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேஉள்ள நயினாரகரத்தில் வசித்து வரும் ப.குகன்ஆனந்த் தான் அந்த சாதனைக்குச் சொந்தக்காரர். தேசிய அளவில் தங்க மெடல்களைக் குவித்துள்ள அவர், பாங்காங்கில் நடைபெறவுள்ள இண்டர்னேஷனல் போட்டியில் கலந்து கொள்ளவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 நயினாரகரத்தில் அவரைச் சந்தித்து பேசினோம்.
 "எங்கள் கிராமம் குக்கிராமம். எனது தந்தை பழனிவேலு, சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நான் பாரத் மாண்டிசோரி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். பொதுவாக கிரிக்கெட், கபடி போன்ற சில விளையாட்டுகள் மட்டுமே மாணவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. மற்ற பல விளையாட்டுகள் குறித்து மாணவர்களுக்கு எதுவுமே தெரியாத நிலையே உள்ளது.
 அப்போதுதான் எனக்கு ஏன் வித்தியாசமாக ஒரு விளையாட்டைத் தேர்வு செய்யக்கூடாது? என தோன்றியது. அதைத் தொடர்ந்து எனது பள்ளி ஆசிரியர்களிடம் கலந்து பேசி வில்வித்தை விளையாட்டை தேர்வு செய்தேன்.
 அதை எனது தந்தையிடம் தெரிவித்தவுடன், அவரும் எனக்கு ஊக்கமளித்தார். ஆனால், அதற்கான பயிற்சி இருந்தால்தான் சாதிக்க முடியும் என உணர்ந்து பயிற்சியாளர்களைத் தேடினேன். சண்முகநாதன், வைரமுத்து ஆகிய இரண்டு பயிற்சியாளர்களும் எனக்கு பயிற்சியளிக்க முன்வந்தனர்.
 வில்வித்தை பயிற்சியை முறைப்படி கற்கத் தொடங்கினேன். 6-ஆம் வகுப்பில் இருந்தே இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். காலை நேரத்தில் தினமும் சுமார் ஒன்றரை மணி நேரம் பயிற்சி செய்து வருகிறேன். வில்வித்தை போட்டிகள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று போட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். மாவட்ட அளவிலான போட்டிகள் பலவற்றில் தங்க மெடல்கள் பெற்றுள்ளேன்.

"ஆர்ச்செரி ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அண்ட் வெல்பேர் அசோசியேசன் ஆப் திருநெல்வேலி' சார்பில், ஆறுமுகநேரியில் நடைபெற்ற முதல் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றேன்.
 காரைக்காலில் நடைபெற்ற 8-ஆவது தேசிய அளவிலான போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலுங்கானா, பாண்டிசேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 17 வயதிற்குள்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதிலும், முதலிடம் பெற்று தங்க மெடலை வென்றேன்.
 இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், 10-ஆவது மாநில அளவிலான வில்வித்தை சேம்பியன்ஷிப் போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது. இதிலும் முதல் பரிசைப் பெற்றேன்.
 திருவண்ணாமலை ஜெ. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாதெமி மற்றும் கலாம் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்டு ஆகியவை சார்பில் திருவண்ணாமலையில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த வில்வித்தை போட்டியில் 100 பேர் பங்கேற்றனர். இவர்கள் 5 குழுவாகப் பிரிந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல் அம்பு எய்தனர். மொத்தம் 35,865 அம்புகள் எய்யப்பட்டன. இதில் நான் கலந்து கொண்டு இடை
 விடாமல் 1,915 அம்புகளை எய்தேன். 100 பேரில் நான் அதிகபட்ச அம்புகளை எய்தேன். இந்த முயற்சி கலாம் புக் ஆப் வேர்ல்டில் பதிவுவாகியுள்ளது.
 இந்த சாதனையைப் பாராட்டி, நெல்லை மாவட்ட வில் வித்தை சங்கம் எனக்கு வீரக்கலை விருது வழங்கி கெüரவித்துள்ளது. இதற்கிடையே, பாங்காங்கில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இண்டர்நேஷனல் வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளேன். வில்வித்தை கற்றுத் தருவதற்கான பயிற்சி மையங்களைத் தொடங்க வேண்டும் என்பது என் ஆசை'' என்றார் குகன்ஆனந்த்.
 - வி.குமாரமுருகன்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com