சோறு

நான்  ஒவ்வொரு முறையும்   எனக்கு முன்பு வைக்கப்படும் சோற்றை அவசர, அவசரமாக  அள்ளிச்  சாப்பிட்டு விடுகிறேன்.
சோறு


நான்  ஒவ்வொரு முறையும்   எனக்கு முன்பு வைக்கப்படும் சோற்றை அவசர, அவசரமாக அள்ளிச் சாப்பிட்டு விடுகிறேன். ""ஏன் இந்த அவசரம்? பத்து நாள்கள் பட்டினி கிடந்தவரைப் போல'' என்று எனக்கு அருகிலிருப்பவர்கள் என்னைப் பார்த்துக்  கேட்கும் போது, நான் வெட்கத்தால் குறுகிப் போகிறேன். என்னால் ஏன் சோற்றை நிதானமாகச் சாப்பிட முடியவில்லை ? நான் ஒன்றும் பத்து நாள் பட்டினி கிடப்பவன்  இல்லையே... இப்போது  எனக்கு பெரும் பசியும் இல்லையே... சில வேளைகளில், ""யாரும் சோற்றை தட்டிப்பறித்துக் கொண்டு ஓடிவிட மாட்டார்கள். நிதானமாகச் சாப்பிடுங்கள்''  என்ற குரல் கூட எனது காதுக்கு பக்கத்தில் கேட்கிறது.  எனக்கு  ஏன் இப்படி  நடந்து விடுகிறது...?

இப்போது நான்  அமர்ந்து  சோறு உண்டு கொண்டிருக்கும் இந்த  ஓட்டல் எனக்குப் பிடித்தமானது. இந்த நகருக்கு நான் வரும் போதெல்லாம் இந்த ஓட்டலில் தான் சோறு உண்கிறேன். மங்கிய வெளிச்சத்தில்,   வரிகளற்ற மெல்லிசையை காற்றில் பரவவிடும் இந்த ஓட்டலின் சாப்பாட்டு அறை என்னை வசீகரித்திருக்கிறது.  இதைவிட முக்கியமாக இன்னொன்றும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆம், இங்கே வெள்ளுடை அணிந்து உணவு பரிமாறும் சர்வர்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லாமல் சோற்றை அள்ளி அள்ளி வைக்கின்றனர்.  பருப்புக்கு ஒரு முறை, சாம்பாருக்கு ஒரு முறை, எனக்குப் பிடித்த வற்றல் குழம்புக்கு ஒருமுறை, புளிசேரிக்கு ஒரு முறை, ரசத்திற்கு ஒரு முறை, தயிருக்கு ஒரு முறை என சலிப்பதேயில்லை அவர்கள். சிரித்த முகத்துடனேயே இன்னும் வைக்கவா எனக் கேட்டவாறே அள்ளி அள்ளி சோற்றை வைக்கின்றனர்.  பசியின் ஆழம் இவர்களுக்குத்  தெரிந்திருக்குமா என்ன...? 

நான், நெய் கலந்த பருப்புக் குழம்புடன் சோற்றை வழக்கம் போல் வேகம், வேகமாக அள்ளி வாயில் தள்ளிக் கொண்டிருந்த போது எனக்கு எதிர் இருக்கையை நோக்கி செல்லிடப் பேசியில் பேசியவாறு பெண்மணி ஒருவர் வந்ததைக் கவனித்து நிமிர்ந்தேன். அவரின் முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததால் மேலும், மேலும் அந்த முகத்தைக் கூர்ந்து  பார்த்தேன். இப்போது அந்தப் பெண்மணி இருக்கையில் அமர்ந்து,  அருகில் வந்த சர்வரிடம் டோக்கனைக் கொடுத்தார். செல்லிடப் பேசியில் பேச்சு நின்றபாடில்லை. எனது மனம் அந்தப் பெண்மணியை இதற்கு முன்பு பார்த்த இடம் குறித்து தேடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின், அந்தப் பெண்மணி செல்லிடப் பேசியில் பேசுவதை நிறுத்திக் கொண்டு, தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த இலையை  விரித்து அதில்  தண்ணீர் தெளித்து, பின்னர் விரல்களால் தண்ணீரை  வெளியேற்றி விட்டு நிமிர்ந்தார்.

""உங்களை எங்கேயோ பார்த்த நினைவு...'' என்று நான் சிறு புன்னகையோடு அவரின் முகம் பார்த்துக் கேட்டேன்.

 ""எனக்கு சொந்த ஊரு திருவட்டாறு...''

""நீங்கள்  சொக்கலிங்கப் பிள்ளை சாரின் மகளா...?'' என்றேன் சற்று தயக்கத்தோடு.

""ஆமாம்.. ஆமாம்...எப்படிக் கண்டுபிடித்தீர்கள்... நான் அந்த ஊரை விட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதே...''

""உங்கள் முகத்தில் சாரின் முகத்தை ஒட்டியல்லவா வைத்திருக்கிறீர்கள்...''

"ஓ...' என்று சொல்லியவாறு அவர் சிறிதாகப் புன்னகைத்துக் கொண்டார். பின்னர், ""நீங்கள் அப்பாவின் மாணவரா...?''  என்று கேட்டார்.

""ஆமாம்... குலசேகரம் பள்ளிக் கூடத்தில்'' சர்வர்  இலையில் சோற்றை வைத்துக் கொண்டிருந்தார்.   இரண்டு கரண்டி சோறு வைக்கப்பட்டவுடன்  ""போதும்'' என்று சர்வரின் முகத்தைப் பார்த்து கையைக் காட்டினார்.

""சார் எப்படி இருக்காங்க...?''  நான் அவரின் முகம் பார்த்து கேட்கவும் மீண்டும் செல்லிடப் பேசி ஒலித்தது. 

அவர்  ""ஒன் மினிட் ப்ளீஸ்.. கம்பெனி எம்.டி. கூப்பிடுறார்..'' என்று  என்னிடம் சொல்லிவிட்டு  செல்லிடப் பேசியை காதில் வைத்துக் அதில் பேசத் தொடங்கி, பேசிக் கொண்டே இருந்தார். ""ஆமா சார், ஊருக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். குடும்பக் கோயில்ல அன்னதானம் கொடுக்கிறோம்.. அரிசி, பருப்பு, சர்க்கரை எல்லாம் வாங்கணும்...'' என்பது போல அவரது பேச்சு போய்க் கொண்டிருந்தது. 

சொக்கலிங்கப் பிள்ளை சாருக்கு, பார்த்ததும் மனதில்  ஒட்டிக் கொள்ளும் உருவம்.  ஆறு அடி வரை இருக்கும் உயர்ந்த உருவம் அவருக்கு. மேல் நோக்கி வாரி சீவிய தலை முடி. நெற்றியில் நீளமாய் பட்டை போல் திருநீறு.  இரண்டு பொத்தான்கள் கொண்ட   இள நீல நிற ஜிப்பாவும், ஒற்றைக் கரைக் கொண்ட கதர்  வேட்டியும் அணிந்திருப்பார்.   ஜிப்பாவின் கைகள் சுருட்டப்பட்டு அரைக்கையாக வைக்கப்பட்டிருக்கும். 

நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்களது வகுப்பு அறை  பள்ளியில் பிராதன 3 மாடி கட்டடத்திற்கு எதிரே உள்ள ஓட்டுக் கட்டடத்தில் இருந்தது. தென்னை மரம் ஒன்று அந்த ஓட்டுக் கட்டடத்திற்கு குடை பிடித்தது போல் நிற்கும். அந்த  ஓட்டுக் கட்டடத்தில் எங்கள் வகுப்பு அறையுடன் மொத்தம் 5 வகுப்பு அறைகள் இருந்தன. ஒவ்வொரு வகுப்பு அறைக்கும் இடையே மரத் தட்டி வைக்கப்பட்டிருந்தது.  எங்கள் வகுப்பில் மாணவியர் இல்லை.  ஆண்கள் மட்டும்  தான்.   சொக்கலிங்கப் பிள்ளை சார் வகுப்புக்கு வருகிறார் என்றால்  வகுப்பு கலகலப்பாகிவிடும். அவர் வரலாறு-புவியியல் பாடம் எடுப்பார். ""அப்பனே... முருகா...'' என்று சொல்லியவாறு தான் வகுப்பறைக்குள் காலடி எடுத்து வைப்பார். இதர ஆசிரியர்களைப் போன்ற கடுமை அவரிடம் இருப்பதில்லை. பிரம்பால் தாறுமாறாய் விளாசுவதும் இல்லை. அப்படி அடித்தாரென்றாலும், வலிக்காமல் மென்மையாய் அடிப்பது அவரது சுபாவம். பாடங்களை எளிமையாய் கற்றுத் தருவார்.  கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் ""கேட்டியா அப்பனே நல்லாப் படிக்கணும்...'' என்று சொல்லியவாறு தோள்பட்டையில் கிள்ளும் பழக்கமும் அவருக்கு உண்டு. எல்லா மாணவர்களும் அவருக்கு "அப்பனே' தான். நான் நிறைய நாள்களில் அவரிடம் கிள்ளு வாங்கியிருக்கிறேன். ஏன் அடியும் வாங்கியிருக்கிறேன்.  சில நேரங்களில் அவரது தண்டனைகள் நகைச்சுவையாய்  கூட இருக்கும். ஒருநாள், என்னை நோக்கி பிரம்புக் குச்சியை நீட்டி  எழும்புமாறு சைகை செய்தார். பின்னர், ""கல்கத்தாவில் விமான நிலையம் எங்கு உள்ளது...?''  என்ற கேள்வியைக் கேட்டார். நான் பதில் தெரியாமல் "திரு...திரு'வென விழித்துக் கொண்டு  நின்றேன். இத்தனைக்கும் முந்தின நாள் தான் அந்தக் கேள்விக்கான பாடத்தை எடுத்திருந்தார்.  ""சார், என்னை முன்னால் வா..'' என்று சைகையால் அழைத்தார். நான் தயங்கித் தயங்கி அவரது இருக்கைக்கு அருகில் சென்றேன்.

""கையை நீட்டு...''

நான் வலது கையை நீட்டினேன்.

""டம்...டம்...'' என்று சொல்லிக் கொண்டே கையில், பிரம்புக் குச்சியால் ஒரு போடு போட்டார்.

வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் "ஹக்ஹக்' என்று சத்தமாய் சிரித்தனர்.

நான் மட்டும் பதில் சொல்லாமல் சாரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

சார் மறுபடியும் "டம்...டம்...' என்று சொல்லிக் கொண்டு  ஒரு போடு போட்டார்.

எனக்கு இப்போதும் பதில் தெரியவில்லை.

அப்புறம் ""இவனை என்ன செய்வது?'' என்று வகுப்பைப் பார்த்துக் கேட்டார்.

எல்லா மாணவர்களும் ஒன்று சேர்ந்து "டம்...டம்' என்று கத்தினார்கள்.

""அப்பனே அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் கேட்குதா...?''

""ம்.. கேட்குது...''

""என்னக் கேட்குது...?''

""டம்..டம்...''

""இப்ப கேள்விக்கு பதில் கிடைச்சுதா...?''

நான் மீண்டும் "திரு.. திரு..' என விழித்தேன்.

சார் என்னை தன்னோடு அணைத்துக் கொண்டு, ""மக்குப்பய... மக்குப்பய...''   கல்கத்தா விமான  நிலையம் அமைந்திருக்கும் இடத்தின் பெயர் "டம்...டம்...' புரியுதா?'' என்றார்.

நான் தலையாட்டிய படியே ""டம்...டம்..'' என்றேன்.

""இனி மறக்கக் கூடாது, போய் உட்காரு...'' என்றார்.

இன்னொரு நாள் வேறு ஒரு சம்பவம் நடந்தது. ""உன்னிடம் தான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்''  என்று  கூறி கடைசி பெஞ்சில் இருந்த அசோக்குமாரை கைகாட்டி எழுப்பி விட்டு ""அசோக சக்கரவர்த்தி சாரநாத்தில் நிறுவிய அசோகா தூணில் இருக்கும் சக்கரத்திற்கு என்னென்ன பெயர்கள்...?''   என்ற கேள்வியைக் கேட்டார். அசோக்குமார் வழக்கம்  போல் கைகளை பிசைந்து  கொண்டு நின்று கொண்டிருந்தான். சார், கையில் வைத்திருந்த பிரம்புக் குச்சியால் ஆட்டி ""வா.. அப்பனே...''  என  அவனை முன்பக்கம் வருமாறு அழைத்தார்.  பின்னர் அவனது கையைப்  பிடித்து  மேசையில் பக்கவாட்டில் நிறுத்திவிட்டு,

"ம்..ம்...' என்று கம்பை நீட்டிக் கொண்டு சொன்னார். அசோக்குமாருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அவர் சொல்வது என்னவென்று புரியவில்லை.

""ம்...  மேசையின் இந்தப்  பக்கம் நுழைந்து மறுபக்கம் வா...அது தான் உனக்குத் தண்டனை'' என்றார்.

நாங்கள் என்ன நடக்கப் போகிறது என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம்..

அசோக்குமார் மேசையின் இடப்பக்கம் தலையை நுழைத்து உள்ளே புகுந்தான். இப்போது சார் அவனது பின்புறத்தில் குச்சியால் லேசாய்   ஒன்று போட்டார். அவன் அலறிக் கொண்டு,  மேசையோடு  நிமிர்ந்து விட்டான்.  அந்தக் காட்சியைப் பார்த்து  வகுப்பு முழுவதும் விழுந்து விழுந்து சிரித்தது. 

""டேய், மேசையை கீழே விடுடா..'' என்று சார் கெஞ்ச வேண்டியதாகிவிட்டது. அதன் பிறகு அசோக்குமார் மேசையை கீழே விட்டு, விட்டு மறுபுறம் வழியாக வெளியே வந்தான். 

சார், இப்போது அவனைப் பார்த்து  கேட்டார், ""சாரநாத் தூணில் உள்ள சக்கரத்திற்கு என்னென்ன பெயர்கள் ?''

""தெரியாது...'' 

""அசோகச் சக்கரம், தர்மச்சக்கரம்... சரியா..? இனி  மறக்கக் கூடாது.. பெயரை மட்டும் அசோக்குமார் என்று வைத்திருந்தால் போதுமா...?'' என்று கேட்டு விட்டு  ""போய் உட்கார்...'' என்றார். 

ஒரு நாள்  பிற்பகல் முதல் வகுப்பு கணித  ஆசிரியரின்  வகுப்பு. அன்று  கணித ஆசிரியர் பள்ளிக்கு வராததால்  சொக்கலிங்கம்பிள்ளை சார் வந்தார். வந்தவர், சிறிது நேரம் பாடம் நடத்தி விட்டு கேள்வி கேட்க ஆயத்தமாகி, ""இமய மலையின் உயர்ந்த சிகரம் எது...?'' என்ற கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டார்.

நான் பதில் எதுவும் சொல்லாமல் எழுந்து நின்றேன். 

எனது முகத்தைப் கூர்ந்து பார்த்தவர், ""என்ன அப்பனே சோர்வா இருக்க.. மத்தியானம் சோறு  சாப்பிடலியா...'' என்றார்.

அப்போது எனது பக்கத்தில் இருந்த வர்க்கீசும், குமரேசனும் தான் ""சார்  இவன் மத்தியானம் சாப்பாடு கொண்டுவாறதில்லை  சார்... ஒவ்வொரு நாளும் தின்னாமத்தான் உட்கார்ந்துகிட்டு இருக்கான்...'' என்றனர். அப்போது பள்ளிகளில் சத்துணவு திட்டம் இல்லாத காலம்.

சார், எனது முகத்தை மேலும் கூர்ந்து பார்த்து விட்டு, ""முன்னால் வா...'' என சைகை செய்தார்.

 நான் அவரின் அருகில் சென்று நின்றேன். பின்னர்,
""அப்பாவுக்கு என்ன வேலை...'' என்று கேட்டார்.
""நம்மாட்டி  வெட்டு...'' (விவசாயக் கூலித் தொழில்)
""அம்மாவுக்கு வேலை உண்டுமா...''

""தோட்டவேலைக்குப் போகும்... ரெண்டுபேரும் விடியக்காலையில எழும்பி  வேலைக்குப்  போயிருவினும்...'' 

""பசியோட இருக்கக் கூடாது கேட்டியா அப்பனே.. மத்தியான நேரம் ஒரு பிடி சோறாவது  சாப்பிடணும்...'' என்றார் எனது தோளைப் பிடித்துக் கொண்டு. 

பின்னர்,  குமரேசனைப் பார்த்து ""அப்பனே.. இவனைக்    கூட்டிக்கிட்டு தங்கம்மையின் கடையில போய்  நான் சொன்னேன்னு சோறு வாங்கிக் கொடு.. சோறு இல்லையின்னா தோசையாவது இருக்கும்..  சீக்கிரம் போங்க...'' என்றார். 

குமரேசன் எனது கையைப்பிடித்து  நேராக பள்ளிக்கு எதிரே இருந்த தங்கம்மையின் ஓட்டலுக்கு கூட்டிச் சென்று உட்கார வைத்து விட்டு, தங்கம்மையிடம் ""சொக்கலிங்கப் பிள்ளை சார் அனுப்பி விட்டார், சோறு கொடுக்கணுமாம்...'' என்றான்.

தங்கம்மை அங்கிருந்த உலர்ந்த வாழை இலைத்துண்டு ஒன்றை எடுத்துப் போட்டு சோற்றை வைத்து, குழம்பை ஊற்றினாள்.

நான் குழம்பு ஊற்றி முடிப்பதற்குள் அவசர, அவசரமாக சோற்றை அள்ளி அள்ளி வாயில் போடத் தொடங்கினேன். 

""பய்யத் தின்னு.. பய்யத் தின்னு... என்ன அவசரம்... யாரும் தட்டிப் பறித்து விடமாட்டுனும்...''   என்று என் காதின் அருகில் கிசுகிசுத்தான்  குமரேசன்.  

நான் நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்து விட்டு நிதானமாகச் சாப்பிடத் தொடங்கினேன்.

""பயலுக்கு நல்ல பசி போலயிருக்கு...'' என்று சொல்லிக்  கொண்டு தங்கம்மை லேசாய் சிரித்தாள்.

 சாப்பிட்டு விட்டு குமரேசனோடு வகுப்புக்கு திரும்பினேன். 

""சோறு கிடைச்சுதா...'' சார் கேட்டார்.

""ம்..கிடைச்சுது...''

சாரின் முகம் மலர்ந்து கொண்டது. ""இனி மேல்  ஒவ்வொரு நாளும் மத்தியானம் அங்கப் போய் சாப்பிட்டுக்கோ.. நான் சொல்லிக்கிறேன்...'' என்றார்.

நான்,  "ம்...' என்று தலையசைத்தவாறு எனது பெஞ்ச் நோக்கி நகர்ந்தேன். 

அப்போதெல்லாம்  வீடுகளில்  மாலையோ, இரவே ஒரு நேரம் தான் சோறு கிடைக்கும். பெரும்பாலும், மரவள்ளிக்  கிழங்கு தான் ஆகாரம். பேச்சிப்பாறை வனத்திலிருந்து கூப்புக் கிழங்குகளை  ஏற்றிய லாரிகள்  இருள் கவியும் மாலையில் ஊருக்கு  வரும். கிழங்கு பிடுங்கச் செல்லும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு  பொடிக்கிழங்குகளும்   கொஞ்சம்  காசும் கூலியாகக் கிடைக்கும். லாரிகள் அரசமரத்தடி முக்கில் வந்து நிற்கும் போது சாக்கு மூடைகளில் நிறைக்கப்பட்ட பொடிக்கிழங்குகளுடன்  லாரிகளின்  மேலிருந்து   தொழிலாளர்கள் இறங்கிக் கொள்வார்கள். லாரிகள் அப்புறம் கிழக்கு நோக்கி நாகர்கோவிலுக்கோ அல்லது வேறு ஊர்களுக்கோ செல்லும். கிழங்கோடு இறங்கிக் கொண்ட தொழிலாளர்கள் அரசமரத்தடி முக்கில் மூடைகளை அவிழ்த்து கிழங்குளைக்  கூறு போடுவார்கள்.. நீண்ட வேர்களுடன் இருக்கும் பொடிக்கிழங்குகள் எலிகளைப் போலக் கூட  இருக்கும். கிழங்குகளை  வாங்க ஜனக்கூட்டம் காத்துக் கிடக்கும். கூறு வைப்பதற்கு பொறுக்காது கூட்டம். 25 காசுக்கும், 50 காசுக்கும் தள்ளிக் கொண்டும் முந்திக் கொண்டும் கிழங்குகளை வாங்கிக் கொள்ளும் ஜனக் கூட்டம்.  நான் கூட  காத்துக் கிடந்து பொடிக் கிழங்குகளை வாங்கிக் கொள்வேன். பெரும்பாலும் செங்கம்பன் கிழங்குகள் தான் வரும். நல்ல கசப்பாய் இருக்கும் செங்கம்பன் கிழங்குகள். இரண்டு, மூன்று முறை தண்ணீர் வடித்தால் தான் கசப்பு போகும். வட்ட, வட்டத் துண்டுகளாய்  சீவி மசால் சேர்த்து வேக வைத்து மயக்கித்  தருவாள் அம்மா.  

சொக்கலிங்கப்  பிள்ளை சார், என்னிடம்  தங்கம்மையின் ஓட்டலில் ஒவ்வொரு நாளும்  மதியம் சோறு  சாப்பிட்டுக் கொள் என்று சொன்ன பிறகு நான், ஒவ்வொரு நாளும் சாரின் கணக்கில் தங்கம்மையின் ஓட்டலில் தான் மதியம் சோறு  சாப்பிட்டேன். அப்போது தான் தெரிந்தது, குமரேசனும் வேறு சிலரும் சாரின் கணக்கில் அங்கு பல மாதங்களாக சோறு சாப்பிட்டுக் கொண்டிருப்பது. 

எனக்கு ஒரு பத்திரிகையில் செய்தியாளர் பணி கிடைத்த பிறகு நான் அந்த அடிக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன்  தங்கியிருந்தேன். சொக்கலிங்கப் பிள்ளை சார் பணி ஓய்வுக்குப் பின்னர், ஊரில் உள்ள பெருமாள் கோயிலில் சேவை செய்ய புறப்பட்டு விட்டார். சனிக்கிழமைதோறும் கோயிலில் அவர், முழுகாப்பு வழிபாட்டை முன்னின்று நடத்துவார். முழுகாப்பு வழிபாட்டு நாளில் அனந்தசயனத்தில் பள்ளி கொண்டிருக்கும் சுவாமிக்கு சந்தனத்தில் முழுகாப்பு செய்யப்பட்டு நைவேத்தியமும் கொடுக்கப்படும்.   மாதத்திற்கு இரு முறை அன்னதானம் அவரது முயற்சியில் நடக்கும். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் முழுகாப்பு வழிபாடு முழு சிறப்போடு நடக்கும். அப்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்னதானம்  உண்டு.

முழு காப்பு செய்தியை நாளிதழில் "இன்றைய நிகழ்ச்சி' பகுதியில் வெளியிடும் வகையில், சாரிடமிருந்து எனது முகவரிக்கு அஞ்சல் அட்டை வாரம் தவறாமல் வரும். அதில்  எத்தனையாவது முழுகாப்பு வழிபாடு.  நேரம், நாள், அன்னதானம்  என்பன போன்ற  குறிப்புகள் அவரது அழகான பொடிக் கையெழுத்தில் இருக்கும். கூடவே "அன்னதானம் உண்ணுவற்கு நிச்சயம் நீ வரவேண்டும்' என்ற அடிக்குறிப்பும்  இருக்கும். ஒரு முறை நான் எடிட்டோரியலுக்கு  இன்றைய நிகழ்ச்சிப் பகுதிக்கு  அன்னதான குறிப்பை அனுப்பத் தவறிவிட்டேன். சரியாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சார்,  கையில் மடக்கிய குடையுடன் நான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு  படியேறி  வந்து விட்டார்.

வந்தவர், ""அப்பனே..  இன்றைய நிகழ்ச்சியில் முழுகாப்பு அறிவிப்பைக் காணலியே...'' என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தார்.

நான் திகைத்துப்  போய், ""சார் .... இதுக்குப் போய் இந்த வேகாத வெயில்ல நீங்க வரணுமா... யாரையாவது அனுப்பி விட்டு சொல்லியிருக்கலாமில்லையா...  இல்லையின்னா   ஒரு கார்டு எழுதிப் போட்டிருக்கலாமில்லையா?'' என்றேன்.   அகிலா, சாருக்கு இளஞ்சூடாக  வென்னீர் எடுத்து வந்து குடிக்கக் கொடுத்தாள்.

""முக்கியமான நிகழ்ச்சியில்லையா அப்பனே... அன்னதானமும் கொடுக்கிறோம் இல்லையா... செய்தியைப் பார்த்துக்கிட்டு நாலு பேரு வரமாட்டாங்களா...?  அடுத்த வாரம் முதல் தவறாம போட்டிரு...'' என்று சொல்லிக் கொண்டு கிளம்பிப் போனார்.  

இரண்டு,  மூன்று முறை நானும் கூட முழு காப்பு வழிபாட்டு நாளில் அன்னதானம் சாப்பிடச் சென்றிருக்கிறேன்.  விளக்குப் பாவைகள் அணிவகுத்து நிற்கும் நீண்ட பிரகாரத்தில் எதிர் எதிரே முகம் பார்த்த வண்ணம் அன்னதானம் உண்பவர்கள் உட்கார வைக்கப்பட்டு அவர்களுக்கு  வாழை இலையில் பிச்சிப் பூ போன்ற சோறு பரிமாறப்படும்.  அவியல், பச்சடி, துவரன் என கூட்டுகளும் இருக்கும். வேட்டியின் ஒரு தும்பை தூக்கி இடது கை கச்சத்தோடு பிடித்துக் கொண்டு நிற்க நேரமில்லாதவரைப் போல் சார் பரபரப்பாக இருப்பார். என்னைப் பார்த்தால் ""வந்தியா அப்பனே.. சோறு சாப்பிட்டுக்கிட்டுத் தான் போகணும்..."" என்று சொல்வதோடு சரி. அத்தனை பரபரப்பு அவருக்குள் இருக்கும். 

ஒரு முறை நான் சாரிடம் கேட்டேன். ""சார் அன்னதானத்திற்கான செலவு அதிகமாக இருக்குமே எப்படி வாரா வாரம் சமாளிக்கிறீங்க...'' என்று. 

""பணமோ, பொருளோ கொடுக்கிறதுக்கு மனம் உள்ளவங்க நெறைய பேர் இருக்காங்க அப்பனே.... நாம தான் தயக்கம் பார்க்காம படியேறிப்   போய் கேட்டு வாங்கணும்.. கொடுப்பாங்க அப்பனே.. எல்லோரும் கொடுப்பாங்க...  

நீயோ...நானோ... பசி துரத்தாதவங்க  யாரிருக்கா  சொல்லு'' என்றார்.  நான் அவரது முகத்தை சிறிது நேரம் ஆழமாகப் பார்த்துக் கொண்டு நின்றேன். 

நான் சொந்தமாக வீடு கட்டி குடியேறிய நேரம். அதுவும் ஒரு ஞாயிற்றுக்கிழமை தான். வீட்டின் முன்புற கேட் தட்டப்படும் சப்தம் கேட்டு அகிலா, ""யாரோ வந்திருக்காங்க போய் பாருங்க...'' என்றாள். நான் கேட் பக்கமாக ஓடிப் போய் திறந்து பார்த்தால், சொக்கலிங்கப் பிள்ளை சார் நின்றிருந்தார். கையில்  பானை போன்று உருண்டையாய் ஒரு   பொதி வைத்திருந்தார்.

""அப்பனே முருகா... என்னா வெயில்...'' என்று சொல்லிக் கொண்டவரை  வீட்டினுள் அழைத்து வந்து உட்கார வைத்தேன். 

""புது வீடு அழகாய் இருக்கு.. பால்காய்ப்பிற்கு கூப்பிட்டிருந்தா வந்திருப்பேனில்லியா...'' என்று வீட்டைப் பார்த்தவாறே கூறினார்.

அதிர்ந்து போனேன் நான்.

""சார்... ரொம்ப சிம்பிளாத் தான்  சகோதரங்களயும் பக்கத்து வீட்டு ஆள்களயும் மட்டும் கூப்பிட்டு பால்காய்ப்பு நடத்தி குடியேறினேன்... அதனாலத் தான் உங்கள...'' என்று பேச்சை இழுத்தேன்..

குரல் உடைந்து போய்,  உடம்பெல்லாம்  வேர்த்துக் கொட்டியது எனக்கு.

""கல்யாணம் கட்டிக்கிறதும், வீடு கட்டிக்கிறதும் ஒரு மனுசனோட வாழ்க்கையில முக்கியமானதில்லையா   அப்பனே... கூப்புடணும்... எல்லாரையும் கூப்புடணும்..'' என்று சொல்லிக் கொண்டு கையில் இருந்த பொதியைப் பிரித்து அதில் இருந்த  எவர்சில்வர் பானையை எனது  கையில் தந்தார்.

கையில் சாருக்காக பழபானம் ஏந்திக்  கொண்டு நின்றிருந்த  அகிலா, அந்தப் பானையைப் பார்த்து  விட்டு, ""அழகா அமைப்பா இருக்கு... இதில் தான் இனி சோறு பொங்குவோம்...'' என்றாள்.

""ஆமா.. மகளே ஒரு போதும் சோற்றுக்கு குறைவிருக்காது...'' என்றார்  சார், அவளது முகத்தைப் பார்த்து.

 எனக்கு கண்கள் நிறைந்து கண்ணீர் வருவது போல் இருந்தது.

சில மாதங்களுக்குப் பின்னர் பெருமாள் கோயிலில் சொக்கலிங்கப் பிள்ளை சார், அன்னதானம் நடத்தி பெயர் வாங்குவது  சிலருக்கு பிடிக்கவில்லையென்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் அன்னதானம் நடத்துவதை நிறுத்தி விட்டு தொலை தூர பெருநகரத்தில் வசிக்கும் மகளின் வீட்டுக்கு சென்று விட்டார் என்றும் கேள்விப்பட்டேன்.

சொக்கலிங்கப் பிள்ளை சாரின் மகள், ""பிரதர்...'' என்று என்னைப் பார்த்து அழைத்து  எனது சிந்தனையைக் கலைத்தார். அவர் செல்லிடப் பேசி பேச்சை நிறுத்தியிருந்தார். 

""அப்பா எப்படி இருக்காங்க...'' நான் அவரது முகத்தைப் பார்த்து மறுபடியும்  கேட்டேன்.

 ""அப்பா இறந்துட்டாங்க...  ரெண்டு  வருஷம் ஆகுது...''

எனக்கு பதில் வார்த்தை வரவில்லை.

வலது கண்ணிலிருந்து விழுந்து கன்னம் வழியாக பாய்ந்து சோற்றில் விழுந்த கண்ணீர்த் துளியை   சாரின் மகள்  கவனித்து எனது முகத்தைப் பார்க்க திராணியற்றது போல்  தலையைக் குனித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். 

""ஒரு அன்னத்தின் முன்னால் நீங்களும், நானும் சந்தித்து கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா... உங்களுக்குத் தெரியுமா என்று  எனக்குத் தெரியவில்லை, சாருக்கும் எனக்கும் இடையிலான சோற்று உறவை...''  என்று சொல்லிக் கொண்டு சோற்றை பிசையத் தொடங்கினேன். 

அவர் ஏதோ புரிந்து கொண்டது மாதிரியான  முகபாவத்தை வெளிப்படுத்தினார். பின்னர் ""சோற்றை பிசையாதீர்கள். அள்ளிச் சாப்பிடுங்கள்...வயிறு நிரம்பட்டும்... பசி இருக்கக்கூடாது...'' என்றார். 

நான் நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தேன்.  சொக்கலிங்கப்  பிள்ளை சார் தான் என் முன்பாக  உட்கார்ந்து இப்படி சொல்கிறாரோ என்றுதோன்றியது.

""ம்.. சாப்பிடுங்கள்...'' என்றார் மறுபடியும்.
நான் ஒரு கவளம் சோற்றை உருட்டி வாயில்
வைத்தேன். அதில் சிறிதாய்  உப்புக் கரிப்பது போல் இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com