Enable Javscript for better performance
தங்கராசு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தங்கராசு

    By DIN  |   Published On : 19th May 2019 12:45 PM  |   Last Updated : 19th May 2019 12:45 PM  |  அ+அ அ-  |  

    k2

    அண்மையில் காலமான தோப்பில் முஹம்மது மீரான் "ஒரு கடலோரக் கிராமத்தின் கதை' என்ற தனது முதல் நாவலின் மூலம் தமிழ்ப் படைப்புலகில் கவனம் பெற்றவர். முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக சித்திரிக்கிற இவரின் "துறைமுகம்' , "கூனன் தோப்பு', "அன்புக்கு முதுமை இல்லை' ஆகிய படைப்புகளும் இவரது எழுத்தாற்றலை உறுதி செய்கின்றன.
     நேசமணி போக்குவரத்துக் கழகம் இதுவரையிலும் நுழையாத , குண்டும் குழியும் நிரம்பிய கல்ரோடு முடிவடையும் சிறு கிராமத்திலிருந்து பொன்னம்மாவும், தங்கராசும் பயணம் புறப்பட்டனர். ஊசி முனையுள்ள கல் ரோட்டிற்கு மூன்று கிலோ மீட்டர் நீளம். அதன் பக்கவாட்டிலுள்ள பூச்சி முட்கள் நிரம்பிய செம்மண் தடம் நோக்கி நடந்து கீல் போட்ட ரோட்டை அடையும்முன் வேர்த்துக் கொட்டியது. கறுத்த ரோட்டின் ஓர் ஓரத்தில் நாட்டிய, "பஸ் ஸ்டாப்' என்று எழுதிய போர்டின் முன் நின்று மூச்சு வாங்கினர். பேய் பிடித்துப் பாய்ந்து வந்த சிவப்பு நிற பஸ்ûஸக் கண்டதும் பொன்னம்மா கையை நீட்டினாள்.
     சிவந்த பஸ் "தடம் பிரேக்' போட்டு நின்றது. அவளையும் தங்கராசையும் ஏற்றிக் கொண்டு முறுமுறுத்தவாறு சீற்றத்துடன் குதித்து ஒரு ஓட்டம். போய் நின்றது, ரேசன் கார்டு வாங்கச் செல்லும் தாலூகா பீசும், தங்கராசின் அப்பனை கள்ளுக்கேஸில் பிடித்துச் சென்று உதைத்துக் கொன்ற போலீஸ் ஸ்டேசனுமுள்ள சிறு நகரத்தில்.
     தங்கராசு இனி படிக்க வேண்டிய பள்ளிக்கூடம் அங்குதான். அங்கு ஒன்றல்ல, பல பள்ளிக்கூடங்கள் வேறெயும் உண்டு என்பதை பக்கத்திலுள்ளவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறாள். வேதக்காரருடையது, இந்துக்களுடையது இப்படி... ஏதாவது ஒன்றில் தங்கராசை சேர்த்துவிடத்தான் முடிவு.
     தங்கராசு வளர்ந்தால் "அண்டி ஆப்பீஸில்' கூலி வேலைக்கு அனுப்பக் கூடாது என்று அவனுடைய அப்பன் இறந்த அன்று பொன்னம்மா எடுத்துக்கொண்ட முடிவு. எப்பாடு பட்டாவது அவனைப் படிக்க வைத்து பள்ளிக்கூட வாத்தியாராக்க வேண்டுமென்பது வாழ்நாள் ஆசை. அந்த கிராமப்பள்ளிக் கூடத்திலுள்ள வாத்திமார்கள் போவது வருவதை இமைமூடாமல் பார்த்து நிற்பதுண்டு. தினமும் குளித்து தலைமுடி சீவி ஒதுக்கி, நெற்றியில் சந்தனப் பொட்டுவைத்து மடிப்புக் குலையாத சட்டை அணிந்து செல்லும் வாத்திமார்கள் சிலர் வெற்றிலை போட்டு தெரு ஓரத்தில் நீட்டி துப்பிச் செல்வது ஓர் அழகுதான்.
     முந்தைய நாள் வெளிவந்த தினசரியில் ஓராயிரம் எண்களுக்கிடையே அவனுடைய எண்ணைத் தேடி கண்டபோது தங்கராசு தரையில் நிற்கவில்லை. ஒரே ஓட்டம்.
     "யம்மோவ்''
     அந்த நேரம் பொன்னம்மா கால் நீட்டி உட்கார்ந்து மரச்சீனிக்கிழங்கை வட்டமாக தகடு கனத்தில் அரிந்து கொண்டிருந்தாள்.
     தங்கராசு ஓடி வருவதைக் கண்டாள்.
     "நான் ஜெயிச்சேன்'' மூச்சு வாங்கியபடி சொன்னான்.
     பொன்னம்மா எழும்பி சேலையை உதறினாள். குலைந்து கிடந்த முடியைச் சுற்றிக் கட்டினாள். ஓடிச் சென்றது செத்தைச் சுவருக்கு நேராக, அங்கு ஒரு கயிற்றில் தொங்கவிட்டிருந்த புலிமேல் வெற்றிப்பயணம் செய்யும் அய்யப்பனின் திரு சந்நிதியில்.
     "பகவானே' கூப்பிட்டு நன்றி சொன்னாள்.
     முற்றத்தில் இறங்கி நின்று பக்கத்துக் குடிலில் கேட்கும்படி உரக்கச் சொன்னாள்.
     "எக்கா, தங்கராசு பயன் செவிச்சாண்டியேய்''
     இடுப்பில் தண்ணீர்க்குடமும் கையில் பானையும் கயிறுமாக ஒரு பக்கமாக சாய்ந்து ஒய்யாரமாக நடந்து வந்த பெண்கொடிகள் கேட்டனர்.
     "தங்கராசு பயன் செவிச்சானா...?''
     "ஆமோவ்'' பொன்னம்மாவின் வெற்றிலைபோட்டு கறுத்த பற்கள் தெரிந்தன.
     "பத்து க்ளாசு படிச்சு செவிச்சானில்லியா... இனி அண்டி ஆப்பிசிலெ வேலைக்கு உடு மாமி. நிக்கெ பட்டினி தீரும்''.
     பெண்கொடிகள் சொன்னது அவளுக்கு ரசிக்கவில்லை.
     "என்னவேள சொல்லிதியோ குட்டியளே... எக்கெ பயலெ வாத்தியாராக்குவேன்''.
     "இஞ்செ பத்து க்ளாசு வாரதானே உண்டு மாமி...''
     பெண்கொடிகள் சொன்னபோது தான் அவளுக்கு அந்த உண்மை தெரியவந்தது.
     அவனெ படிக்க வைத்து வாத்தியாராக்குவது எப்படி?
     மேத்தனின் பள்ளியில் இரவு பாங்கு சொல்லும் நேரம்; பொன்னம்மா மகனைக் கூப்பிட்டாள்.
     "பெலேய்''
     அந்த நேரம் தங்கராசு மஞ்சமசாலா பொட்டு மயக்கிய மரச் சீனி கிழங்கு, நெத்தோலி குழம்பு கூட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
     "நீ செவிச்சாயில்லியா...? இனி எங்கலெ படிக்க போணும்?''
     "டவுணுக்கு'' இது சொல்லும்போது வீட்டிற்குள் மேயும் நித்திய வறுமையை நினைத்தான். முகம் சோர்ந்தது. பிற மாணவர்களை விட அந்தப் பள்ளியில் அதிக மார்க்கு வாங்கியது தங்கராசு. அந்த அபிமான உணர்வு அவனைச் சூழ்ந்து நின்றது. அந்த அபிமானத்தில் பெருமையின் வேர்கள் ஓடிக்கிடப்பது எங்கே? தேடினான்.
     பரீட்சை நடக்கும் இரவுகளில் சிம்மினி விளக்கின் கஞ்சத்தனமான ஒளியில், எழுத்துகளில் கண்களை ஊன்றி மௌனமாக மனனம் செய்யும், அவனுடைய முகத்தில் உற்று நோக்கியும், வியர்வைத்துளிகள் நெற்றியில் முத்துக்களாய் உருளும்போது பாளை விசிறியால் வீசிக்கொடுத்தும், அவனுடன் விழித்திருக்கும் அம்மாவின் இதயத்தின் ஆழங்களிலல்லவா? எத்தனை எத்தனை இரவுகளில் விழித்திருந்து முதுகு தடவித் தந்து, படிக்க உற்சாகப்படுத்திய எழுத்தறிவற்ற இதயத்தெளிநீரிலல்லவா?
     கொல்லக்காரன் மேத்தனின் அண்டி ஆப்பீசில், அண்டி உடைத்து, அண்டிக்கறை படிந்து கறுத்துப் போன கைப்படங்கள், துறைமுகத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம், லாரி உரிமையாளர்களின் போராட்டம், அண்டி ஆப்பீஸில் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம், அண்டி கையிருப்பு இல்லாததால் வேலையின்மை இந்த நாட்களில் வீட்டிற்குள் மோப்பம் பிடித்து திரியும் பட்டினி. அந்தப் பட்டினி, அம்மாவின் கன்னக்கதுப்பை கரம்பித் தின்று ஒட்டிப்போக வைத்தது. எலும்பு வரிசைகளுக்கிடையிலுள்ள கிடங்குகளில் தோல் வீழ்ந்தது. எலும்புகள் மட்டும் துருத்தி காணப்பட்டன. அண்டி ஆப்பீஸ் திறந்து செயல்படும்போது கிடைக்கும் நித்திய கூலியை தட்டிச் செல்ல, கழுகுக் கண்களுடன் மாலை வேலைகளில் அண்டியாப்பீசின் தலைவாசலில் உட்கார்ந்திருக்கும் வட்டிக்காரர்கள்.
     கதிர் பொதி வந்த வயல் ஏலாவின் அப்புறம் பாறை இடுக்குகள் வழியாக ஒழுகி வந்து குத்திவிழும் காட்டு வெள்ளம் சிதறும் பாதிராவின் பெருமூச்சு கேட்டுக் கிடந்த பொன்னம்மா, தங்கராசை கூப்பிட்டாள்.
     "பெலேய்...''
     வன்மரக் கூட்டங்களுக்கு நடுவில் குடுமித் தலையை நிமிர்த்து நிற்கும் மேல்நிலைபள்ளிகளையும், பள்ளி வளாகங்களில் இடுப்பளவு உயரத்தில் வளர்ந்து நிற்கும் பல வண்ண இலைகளுள்ள செடிகளையும், பந்து விளையாடும் பரந்த களங்களையும், சிந்தனையில் தாங்கிய பளுவில் உறக்கம் வராத தங்கராசு அம்மா கூப்பிட்டதை கேட்டான்.
     "என்னவாம்...''
     " படிச்சண்டாமா?''
     "படிக்கணும்''
     " நின்னெ படிச்ச வய்ப்பேன் பலே. நீ வாத்தியாராவணும்''
     " பணம் வேண்டாமா?''
     ""நிச்ச அப்பன் கெட்டின தாலி இருக்கி. பசியும் பட்டினியும் வந்தப்போக்கூட நான் விச்சல்லெலே. நின்னெ படிக்கவச்சூதுக்கு வாண்டி அப்படியே வச்சிருக்கேன்''.
     "ஒரு துண்டு பீடிகூட வலிச்சாத தங்ககொணமுள்ள மனுசன்''. அம்மா எப்போதும் ஏக்கப் பெருமூச்சுடன் அப்பனைப் பற்றி சொல்வதை தங்கராசு கேட்டிருக்கிறான். அவனுடைய நினைவில் பச்சையாக நிற்காத அப்பன் எப்படி இருந்திருப்பார் என்று அடிக்கடி மனசில் கற்பனை செய்வதுண்டு. அவனுடைய குருத்துக்காலில் வெள்ளித் தண்டை மணிகள் செம்மண் தரையில் கிலுங்கிய நாளில் இறந்து போன அப்பனை...
     ஒரு துண்டு பீடிகூட குடிக்காத அப்பனையா, போலீஸ் ஸ்டேசனில் இழுத்துக் கொண்டு போய் கள்ளு அருந்தியதாக உதைத்துக் கொன்றார்கள்?
     அண்டி ஆப்பீசில் பணி முடிந்து பின் தங்கராசின் அப்பன் "பொன்றை வயல்' ஏலாவின் வடபகுதியில் ஓடும் பட்டணம் காலில் சென்று துணி துவைத்து குளித்துவிட்டு மீன் சந்தையிலிருந்து மீனும் வாங்கி வீட்டுக்கு வருவது வழக்கம். அப்படி ஒரு மாலையில் வீடு திரும்பாத தங்கராசின் அப்பனைத் தேடி பொன்னம்மா தெருவிலிறங்கி தொலைவில் கண்களை எறிந்து நின்றாள். மேத்தனின் பள்ளியில் இரவு பாங்கு சப்தம் கேட்டப்பின்னும் வீடடையவில்லை. காலில் தண்டை அணிந்த தங்கராசை இடுப்பில் வைத்துக் கொண்டு அண்டி ஆப்பீசின் மூடிய வாசல் பக்கம் சென்றபோது நெஞ்சில் பதற்றம். பட்டணம் காலில் குளிக்கும் கடலிலும் ஆள் நடமாட்டமில்லாதது பதற்றத்தை அதிகரித்தது. மீன் சந்தையின் சூன்யத்தில், மீன் வாடையை மட்டும் முகர்ந்தாள். அவர் வழக்கமாக சாயா குடிக்கும் பணிக்காரின் கடைப் பக்கம் சென்றபோதுதான் தெரிந்து கொண்டாள், போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட உண்மையை.
     குடிசைக்கு ஒப்பாரி போட்ட பொன்னம்மாவை, சவ எறும்பைப் போல் பஞ்சாயத்து மெம்பர் மோப்பம் பிடித்துவந்தார். தங்கராசின் அப்பனை ஜாமீனில் வெளியே எடுக்க, காதில் கிடந்த பாம்படத்தை கழற்றி கையில் கொடுக்கும்போது வேண்டினாள்.
     "பகவானே''
     தரையில் பலர் வெளிச்சம் விழும்போது குடிசைவாசல் முன் மெம்பரின் சிவந்த கண்களில் பொன்னம்மா உற்று நோக்கினாள்.
     "பயலுக்கெ அப்பன் எங்கே...?'' பொன்னம்மா ஆவலோடு கேட்டாள்.
     "ஓவரா குடிச்சு, லக்கு கெட்டு, போலீஸ் ஸ்டேசன் நடையில் விழுந்தாரு. தலெ கல் படியில் இடிச்ச மரிச்சுப்போனாரு. ராத்திரியே ஸ்டேசனிலெ கொஞ்சம் காசு செலவாச்சு. போட்டு, பெறவு தந்தா போதும், பிரேதம் ஏற்று வாங்க, பந்துக்கள் வரணும்.'' மெம்பருடைய வாயிலிருந்து சாராயத்தின் எரிவாடை குபு குபு வென்று பிரவகித்தது.
     ""பெலேய்'' ... பொன்னம்மா
     நேரம் பெலந்து ஓடனே மகனை கூப்பிட்டாள். "ஏமானுக்கெ பெண்டாட்டிடெ, நிச்ச அப்பன் கெட்டின தாலியெ கொண்டு போய் வித்து சக்கரம் வாண்டணும், பொத்தகவும் பொக்கும் வாண்டண்டாமாலே...''
     தங்கராசு பதில் எதும் சொல்லாமல், குடிசை கூரையைப் பார்த்துக் கனவு கண்டான். மனத்தில் பல சித்திரங்கள். நேசமணி பஸ்ஸில் பயணம் செய்வது, ஒருபுதிய சட்டையும் நிக்கரும் அணிந்து செல்வது...
     ரப்பர் எஸ்டேட் முதலாளியின் மகன்தான், மிக்க குறைவான மார்க்கு வாங்கி வெற்றி பெற்றவன். அதுவும் இரண்டு தடவை தோற்றபின், அந்தப் பள்ளியில் அதிக மார்க்கு வாங்கிய தங்கராசுக்கு தலைமை ஆசிரியர் ஒரு பேனா கொடுத்து முதுகில் தட்டிக் கொடுத்து ஆசிர்வாதம் செய்த மயிர்சிலிர்ப்பு இன்னும் நீங்கவில்லை.
     இரவு அம்மா நீலம் சோப்பு கல்லில் அடித்து துவைத்துப் போட்ட சட்டையும் நிக்கரும் உலர, ஒரு பகல் வெயில் வேண்டும். ஈர நிக்கரும், சட்டையும் அணிந்து கொண்டு தங்கராசு அம்மாவுடன் டவுனுக்குப் புறப்பட்டான்.
     ஓடும் பஸ்ஸிலிருந்தபோது, ரோட்டோரத்தில் மன்னர் காலத்தில் நட்ட புறம்போக்கு மரங்கள் ஊதிய காற்றில் சட்டையும், நிக்கரும் காய்ந்து கிடைத்தது. பெரும் ஆசுவாசமாகத் தோன்றியது.
     தளர்ந்து நின்ற பஸ்ûஸவிட்டு இறங்கியதும், கோழி குடல் போல் நீண்டு காணப்பட்ட சாலை வழியாக நடந்தனர். சாலை ஓரத்தில் கண்ட போர்டை தங்கராசு வாசித்தான். செயிண்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளி, பள்ளிக்கூடத்தின் முன் பல நிறங்களில், பல தரத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள், அப்பாவுடன் பிள்ளைகள், பைகள் தொங்கவிட்டு, பொன் நகைகள் அணிந்த தாய்மார்களுடன் பிள்ளைகள்.
     பொன்னம்மா பின்வாங்கி நின்றாள். தங்கராசு அம்மாவின் முதுகுப்பக்கம் பம்மினான்.
     ""பெலேய்''
     "என்னா?''
     "இஞ்சா எடம் கெடச்சுமா?''
     ""கிட்டும், எனக்கு நல்ல மார்க்குண்டு''
     ""பாம் விலை பத்து ரூபா'' தங்கராசு பள்ளி போர்டு, வாசித்துச் சொன்னான்.
     பொன்னம்மா இடுப்பில் சொருகி வைத்திருந்த மடிச்சீலையை உருவி எடுத்தாள்.
     தங்கராசு அலுவலகத்திற்குள் புகுந்தான்.
     பாரம் விநியோகம் செய்யும் குமாஸ்தா, தங்கராசை ஏறிட்டுப் பார்த்தார். துவைத்தும் அழுக்கு நீங்காத சுருண்டு போன சட்டை, முடியிலிருந்து நெற்றியில் வடியும் எண்ணை.
     "எங்கெ படிச்சா?...''
     படித்த பள்ளி பெயரைச் சொன்னான்.
     " எவ்வளவு மார்க்கு...''
     "398''
     ""போதாது, 400-க்கு மேல் மார்க்கு வாங்கினவர்களுக்குத்தான் இங்கே எடம் கொடுப்போம்''.
     பொன்னம்மா தங்கராசை பிடித்துக் கொண்டு திரும்பி நடந்தாள். பள்ளி வாசலைவிட்டு வெளியே கால் வைக்கும்போது, எதிரில் வந்த பச்சைநிற அம்பாசிடர் கார் பள்ளிக் கூடத்திற்குள் நுழைந்தது, ரப்பர் எஸ்டேட் முதலாளி பின் சீட்டில், பையன் முன் சீட்டில், தங்கராசு அவனைப்பார்த்துச் சிரிக்கும் முன் கார் கடந்து போய்விட்டது.
     "398 மார்க்கு வாங்கின எனக்கு, இடம் இல்லை. பிறகு எப்படி 205 மார்க்கு வாங்கின உனக்கு இடம் கிடைக்கும்' மனத்தில் நினைத்துச் சிரித்தான் தங்கராசு.
     அம்மாவும் மகனும் நடந்தனர்.
     வேறு ஒரு போர்டை வாசித்தான்.
     "ஹாஜி அப்துல் சத்தார் மேல் நிலைப்பள்ளி'
     பள்ளிக்கூட வளாகத்தை எட்டிப் பார்த்தான்.
     முற்றம் நிறைய கார்கள். இருசக்கர வாகனங்கள்.
     ""பெலேய், இஞ்செ எடம் தருவாங்களா?''
     "எனக்கு நல்ல மார்க்குண்டு தருவாங்கொ'' தங்கராசு அலுவலகத்தில் நுழைந்தான்.
     "என்னப்பா தம்பி''
     "பாம் வேணும்''
     "மார்க்''
     "398''
     "425 மார்க்கு மேல் உள்ளவங்களுக்குதான் எடம்''
     தங்கராசும் அம்மாவும் திரும்பி நடந்தனர்.
     "நடந்து, நடந்து வவுறு பொவுச்சுது'' தங்கராசு வயிற்றைத் தடவினான்.
     அரசாங்க மேல் நிலைப்பள்ளி என்று போர்டு கண்ட இடத்தில் பசியை மறந்துவிட்டான். எட்டிப் பார்த்தான். கூட்டமே இல்லை. கொஞ்சம் தலைகள்தான் கண்ணுக்கு தெரிந்தன.
     "இஞ்செ எடம் கேட்டுப் பாருலெ''
     "இஞ்செ கிட்டும்'' தங்கராசுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டது.
     தங்கராசு உள்ளே சென்றான். அலுவலகத்தில் பெரும் திரள் எதுவுமில்லை.
     ""பாம் வேணும்''
     "எந்த க்ளாஸ்''
     "ப்ளஸ் ஒன்''
     "மார்க்''
     "398''
     "400க்கு மேல் மார்க்கு எடுத்தவங்களுக்கு சீட்டு கொடுத்த பிறகுதான் கெடக்கும். ஒரு வாரம் சென்று வாங்கொ''
     குமாஸ்தா சொன்னதை பொன்னம்மா கேட்டாள்.
     முற்றத்தில் நின்றபடி பொன்னம்மா கெஞ்சினாள்.
     ""சாறே... எனகெ பயலுக்கு ஒரு எடம் குடுங்கொ சாறே''
     " இங்கே எடமில்லேம்மா... முனிசிபாலிட்டி
     ஸ்கூலிலெ கேட்டு பாருங்கொ...''
     தங்கராசின் முகத்தில் மழைமேகம் இழைந்தது. இந்தப் பள்ளிக் கூடங்களெல்லாம் தனக்கு தொலை தூரக் கனவுகளா? அவனுடைய கண்களில் கசிவு தட்டியது.
     அம்மாவும், மகனும் நடை தொடர்ந்தனர்.
     நண்பகல் சாயத் துடங்கியது. பசியை பற்களுக்கிடையே நெரித்துக் கொண்டு நடக்கையில், மீண்டும் கண் முன்னில் வேறு ஒரு போர்டு.
     "தியாகி பரமேஸ்வரன் நினைவு இந்து மேல் நிலைப்பள்ளி''
     தங்கராசு உரக்க வாசித்ததை பொன்னம்மா கேட்டாள்.
     "நம்மொ சாதி சனசத்துக்கெ பள்ளிக் கொடம் தானே, போய் கேட்டுப் பாரு மக்கா...''
     பொன்னம்மா தன்னம்பிக்கையுடன் மகனைப் பின் தொடர்ந்து, பள்ளிக்கூட வளாகத்தில் நுழைந்தாள். சேலையை நல்லபடியாக சொருவி வைத்துக் கொண்டுதான்.
     ""பாம்...?''
     "எந்த க்ளாஸ்''
     "ப்ளஸ் ஒன்''
     குமாஸ்தா, டிஸியையும் மார்க்கு லிஸ்டையும் தங்கராசிடமிருந்து வாங்கியபோது அவன் மனம் குளிர்ந்தது. குமாஸ்தாவின் விரல், ஜாதி பெயர் எழுதிய வரியில் சென்றது. உடன், டிஸியையும் மார்க்கு லிஸ்டையவும் திருப்பிக் கொடுத்தார்.
     "ஸ்கூல் கம்மிட்டி மெம்பருடைய சிபாரிசு கடிதம் வேண்டும்.''
     தங்கராசு டிஸியையும், மார்க்கு லிஸ்டையும் குழல் போல் சுருட்டி கையில் பிடித்தவாறு குமாஸ்தா முன் ஒரு சிலை போல் நின்றான்.
     "நிக்கண்டாம். முனிசிபாலிட்டி ஸ்கூலில் போய் கேளு...''
     பொன்னம்மாவும் தங்கராசும் பள்ளிக் கூடத்தை விட்டு வெளியேறும்போது மணி மூன்று கடந்துவிட்டது. வயிற்றுக்குள் எலிகள், குழிகள் பறித்தன.
     எஞ்சியிருப்பது, முனிசிபாலிட்டி தன்னுடைய ஆசை மையம்.
     கீல் கழன்று போன ஒரு ரோடு வழியாக நடந்து ஒரு வளைவு திரும்பியபோது, முனிசிபல் பள்ளிக்கூடம் கண்ணுக்குப் புலப்பட்டது. பூச்சு கழன்று போன சுவர், ஓர் அரச மரத்திலிருந்து வீழ்ந்த சருகுகள், குப்பையாக முற்றத்தில் கூட காணப்பட்டது. பேய் வீடு போன்ற தோற்றமுடைய பள்ளிக்கூட கட்டிடம், பொன்னம்மாவும், தங்கராசும் அலுவலகத்திற்குள் புகுந்தனர். மூக்கு முனையில் தாழ்ந்து வந்த கண்ணாடிக்குள் உருளும் இரு கண்களைக் கண்டனர். அந்த குமாஸ்தாவின் கொடூரப் பார்வை கண்டு பயந்தவாறு தங்கராசு மெதுவாக கேட்டான்.
     "ஒரு பாம்''
     "ஹெச்.எம். உள்ளே உண்டு, போய் கேளு, நிக்காதே போ...'' ஹெச்.எம். அறைக்கு முன் சென்ற போதே உள்ளே இருந்து பழமையான ஒரு வாடை வீசியது. ஹெச்.எம்.பழைய ரிக்கார்டுகள் குவிந்த அறைக்குள் தனிமையாக ஒரு பைலில் கண்களைப் புதைத்து வைத்திருப்பதை கண்டான்.
     மனித வாடை வீசியபோது, ஹெச்.எம். பைலிலிருந்து முகத்தை உயர்த்தினார். சோடாப்புட்டி கண்ணாடி வாயிலாக தங்கராசைப் பார்த்தார். நடுங்க வைக்கும் குரூரப் பார்வை.
     "உம்?''
     " பாம்''
     ஹெச்.எம். பொன்னம்மாவை பார்த்தார். பார்வையின் கடினத்தில் அவள் தரை பிளந்து உள்ளே
     சென்றாள்.
     "எங்கே படிச்ச...'' ஒரு போலீஸ் அதிகாரியின் அதட்டல் குரல். பதில் சொல்லும்போது தங்கராசின் தொண்டை வறண்டுவிட்டது.
     "எங்க பள்ளியிலே படித்த பையன்களுக்குத்தான் இங்கே சீட். வெளி மாணவர்களுக்கு இங்கே சீட் கிடையாது. கமிஷனரைப் பாரு''
     "சாரே...'' பொன்னம்மா கும்பிடும் கரங்களோடு நின்றாள்.
     "ஒண்ணும் பேசண்டாம். இங்கே இடமில்லை. போலாம்''
     ""நாங்கொ பாவங்கொ, போன பள்ளிக்கொடத்தில் எல்லாம் இஞ்செவந்து கேக்கத்தான் சொன்னாங்கோ...''
     "இது குப்ப கூளங்களை ஏத்துக் கூடிய பள்ளிக்கூடமில்லை. இந்த வருசம் நல்ல பையன்மாரெ சேர்த்து நல்ல ரிசல்டு கொண்டு வரப் போறேன்''.
     "எனக்கு நல்ல மார்க்கு உண்டு''
     "எனக்கு உனக்கெ மார்க்கு தெரியண்டாம். இங்கே இடமில்லை.''
     ""சார்...''
     "போறியா இல்லியா...'' ஹெச்.எம். கண்ணாடி கழற்றி கையில் எடுத்துக் கொண்டு அலறினார்.
     அம்மாவும் மகனும் நடுநடுங்கி வெளியே கிளம்பினர்
     "பெலேய்...''
     "ஊட்டுக்குப் போலாம்''
     பொன்னறை வயல் ஏலாவின் அப்புறம் பாறைக்கூட்டங்களுக்கிடையில் நரிகள் உணர்ந்து ஊளையிடும்போது, பொன்னம்மா தங்கராசிடம் கேட்டாள்.
     "பெலேய், நீ இனி வாத்தியாராவமாட்டாயா?''
     அம்மாவின் தொண்டையில் சப்தம் தடுமாறுவதை அவன் புரிந்து கொண்டான். பதில் எதுவும் சொல்ல
     வில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் பச்சை அம்பாசிடர் காரில் வந்த ரப்பர் எஸ்டேட் முதலாளியின் மகன் சொன்ன சொற்கள்.
     "எனக்கு சீட் கெடச்சு. பஸ்டு குரூப், டாக்டராட்டும் போலாம். இஞ்சினயராட்டும் போலாம்.''
     தங்கராசின் தலைக்குள் காட்டு வண்டுகள் ரீங்காரம் முழக்கின. அந்த இரவில் ஓராயிரம் வட்டம். அவன் ஒரே கேள்வியை அவனுக்குள்ளே எழுப்பினான் ""நானோ?'' விடை கிடைக்கவில்லை. விடை கிடைக்காமல் குழம்பினான். தலையில் பெருப்பம், யானை வண்டுகள் உறுமி உறுமிப் பறந்தன. அவனுக்கு வேண்டியது அந்த கேள்விக்கு ஒரு விடை விடைக்காகத் தடுமாறித் திரிந்தான். கிடைக்காத போது அவனே ஒரு விடையைக் கண்டுபிடித்தான்.
     "பெலேய், நீ இனி வாத்தியாராவமாட்டாயா?''
     அம்மாவின் ஆசைக்கனவு. காதில் முழங்கிக் கொண்டே இருந்தது.
     அவன் அவனுக்கே பதில் சொன்னான் "நான் அண்டி ஆப்பீசில், அண்டி உடைக்கப் போவேன். மாலைப் பட்டணம்காலில் குளிப்பேன். பணிக்கருடைய சாயாக் கடையில் தினமும் ஒரு சாயா குடிப்பேன். கேஸ் கிடைக்காத போது, போலீஸ்காரர்கள் ஊதச் சொல்வார்கள். ஊதுவேன். குடிக்காத என்னை குடித்ததாகப் பிடித்துச் செல்வார்கள். அம்மா இனி ஒருமுறை டவுனுக்கு வருவது, என்னுடைய பிரேதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக'.
     (செப்டம்பர் 15, 1992)
     தோப்பில் முஹம்மது மீரான்
     
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp