சிறுநீர்க் குழாயில் எரிச்சல்!

எனக்கு வயது 75. சிறுநீர்க் குழாயில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரையின் அளவு 200-க்குள் உள்ளது. மாத்திரை சாப்பிடுகிறேன். இதனைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் ஏதேனும் உபாயம் கூறப்பட்டுள்ளதா?
சிறுநீர்க் குழாயில் எரிச்சல்!

எனக்கு வயது 75. சிறுநீர்க் குழாயில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரையின் அளவு 200-க்குள் உள்ளது. மாத்திரை சாப்பிடுகிறேன். இதனைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் ஏதேனும் உபாயம் கூறப்பட்டுள்ளதா?
 - அ. சுவாமிநாதன், நொளம்பூர், சென்னை.
 சிறுநீரை தாராளமாக உற்பத்தி செய்து வெளியேற்றும் திறனுடைய வெள்ளரி விதை, பூசணி விதை, பரங்கிவிதை, புடலங்காய் விதை, பீர்க்கங்காய் விதை, சுரைக்காய் விதை போன்றவற்றை வகைக்கு ஐந்து கிராம் வீதமெடுத்து, நல்ல குளிர்ச்சி தரும் மண்பானையில் போட்டு, நீரூற்றி, மெல்லிய துணியால் பானையின் மேல்புறத்தை மூடி, மொட்டை மாடியில், இரவு முழுவதும் நிலவின் கதிர்கள் அதில் இறங்கும்படி வைத்து, மறுநாள் காலை வடிகட்டி, சிறிது சிறிதாகக் குடிக்கப் பயன்படுத்தலாம்.
 அருகம்புல், கரும்புவேர், வெட்டிவேர், சிறுகீரைவேர் ஆகியவற்றையும் மேற்படி பானைத் தண்ணீரில் சேர்க்கலாம்.
 நீர்ப் பானைகளில் முடித்துக் கட்டிப் போட்டு கோடையின் வெப்பத்தைத் தணிக்கப் பெறும் விலாமிச்சைவேர் மட்டுமே நீங்கள் பயன்படுத்தினால் கூட, உடல் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் ஆகியவற்றை நீக்கி உற்சாகம் - மனத்தெளிவையும் தரும்.
 முள்ளங்கிக் கீரையை எண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட நீரடைப்பு, நீர் சுருக்கு நீங்கும். மேலும் சில கீரை வகைகள் உங்களுக்குப் பயனளிக்கக் கூடியவை. தண்டுக் கீரையின் இலையும் தண்டும் பயன்படும்.
 மலமிளக்கி கொதிப்பை அடக்கும். வயிற்றுக் கடுப்பு, ரத்தபேதி, நீர்சுருக்கு குணமாகும்.
 தண்டுகீரையைச் சார்ந்த சிறுகீரையைப் பயன்படுத்தினால் கண்புகைச்சல், பாதரசம், நாபி முதலியவற்றின் விஷசக்தி, நீர்சுருக்கு, புண், வீக்கம் இவற்றைப் போக்கும். வயோதிகத்திலும் உங்களுக்கு அழகைத் தரும்! பசலைக் கீரை நீர்சுருக்கு, நீர்க்கடுப்பு, ருசியின்மை, வாந்தி முதலியவற்றுக்கு நல்லது.
 கொடிப்பசலைக் கீரை சிவப்பு, வெளுப்பு என இருவகை உள்ளழற்சிகளைப் போக்கும். கொதிப்பை அடக்கும் சிறுநீரை அதிகம் வெளியேறச் செய்யும். மலமிளக்கி. இதன் இலைச்சாற்றுடன் (5 மி.லி.) கற்கண்டு சேர்த்து புகட்ட குழந்தைகளுக்குச் சளி பிடிக்காது. இதனைத் தண்ணீரில் போட்டு அலசினால் கொழகொழப்புடன் உள்ளபசை வெளிப்படும். அதனைத் தலையில் பூச, தீராத தலைவலி நீங்கும், தூக்கமுண்டாகும்.
 சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும் பருப்புக் கீரை இனிப்பும் புளிப்பும் உள்ளது. உடல் கொதிப்பை அடக்கும். குடல் வறட்சியை அகற்றி மலத்தை இளக்கும். உள் புண்ணை ஆற்றும்.
 கார்ப்பும், துவர்ப்பும், கடுமணமும் கொண்ட புதினாக்கீரை, உள்கொதிப்பை அடக்கும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும். வயிற்று வாயுவை தடங்கலின்றி வெளியாக்கும். உடல் வலியைப் போக்கும். செரிமானமாகாமல் வரும் பெருமலப் போக்கைக் கட்டுப்படுத்தும். அதிக அளவில் உணவேற்கச் செய்யும்.
 ஜவ்வரிசியை நீங்கள் கஞ்சியாகவோ, கூழாகவோ, செய்து சாப்பிட்டால் இனிய புஷ்டிதரும் உணவுப் பொருளாகப் பயன்படுவதுடன் நீர்த்தாரை குடலின் அழற்சியையும் நீக்கும். கடுப்பு, சீதபேதி, நீர்ச்சுருக்குள்ளவருக்கு ஏற்ற உணவு.
 சீரகத்தையும் சிறிது கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகிவிடும்.
 மணத்தக்காளி இலையைச் சாறாகப் பிழிந்தும், உப்பு போடாத வற்றலை வெந்நீரில் ஊற வைத்தும் சாப்பிட, கல்லீரல், மண்ணீரல் கெட்டு வரும் வீக்கம், சிறுநீர்த்தடை, மார்பு வலி, கீழ் வாயு முதலியவை குணமாகும். சிறுநீர் அதிகமாகப் பிரியும். வீக்கம் குறையும். வாயுத்தடை நீங்கும். கெட்டியான சளியுடன் கூடிய இருமல் இழுப்பு நிலையில் இதன் வற்றலைத் தூளாக்கி ணீ - 1 ஸ்பூன் அளவு தேனில் சாப்பிட நல்லது.
 நெருப்பின் அம்சம் நிறைந்த காரம், புளி, உப்புச் சுவை நிறைந்த உணவானது, கல்லீரல் வழியாகச் செல்லும் போது, அவற்றை சிறுநீர் மூலமாக வெளியேற்ற எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், சிறுநீர்த்தாரையில் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால், நீங்கள் இந்த மூன்று சுவைகளையும் பெருமளவு குறைத்து, கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களை சற்று தூக்கலாகச் சேர்ப்பதே நல்லது. இவ்விரண்டு சுவையிலும் நெருப்பின் அம்சம் சிறிதும் இல்லையென்பதாலும், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையவையாக இருப்பதும் இவற்றைப் பரிந்துரை செய்யப்படுவதிலும் நன்மையுண்டு.
 சுகுமாரம் கஷாயம், ப்ருகத்யாதி கஷாயம், புனர்நவாதி கஷாயம், வீரதராதி கஷாயம், பிரவாளபஸ்மம், சிலாஜது பஸ்மம் போன்ற மருந்துகள் உங்கள் பிரச்னையைத் தீர்க்கக் கூடியவை.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com