Enable Javscript for better performance
தோற்றப் பிழை- Dinamani

சுடச்சுட

  
  kadhir4


  கொட்டிக் கொண்டிருந்த அந்த மழையை ரசித்தபடி, ""எனக்கு மழைன்னா 
  ரொம்பப் பிடிக்கும்'' என்றாள் நிர்மலா.


  அவள் அப்படிச் சொன்னது பாலுவுக்கு ஆச்சரியமாக  இருந்தது.
  அவள் இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும்,  மழையை அவளால் ரசிக்க முடிகிறதா?
  மும்பை மாஹிம் கிரீக்கில், சேறும் சகதிக்கும் இடையில்  நிர்மலாவின் அந்த தகர ஷெட் அமைந்திருந்தது. 
  சுற்றிலும் துர்நாற்றம் வீசியது. 
  மும்பையின் குடிசைப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு மழைக்காலம் என்பது நரகம் என்று கேள்விப்பட்டு இருந்த அவனுக்கு,   மழை கொட்டும் அந்த ஆகஸ்டு மாதத்தில் அவள் அப்படிச் சொன்னது  வித்தியாசமாய் இருந்தது.
  "லைவ்லி ஹுட் மிஷன்' என்று சொல்லப்படுகிற,  சுயவேலை வாய்ப்புக்கு உதவி  கொடுக்கும் அமைச்சகத்தின் சார்பாக ஓர் ஆய்வுப் பணிக்காக பாலு டில்லியில் இருந்து மும்பை வந்திருந்தான். மழை கொட்டிக் கொண்டிருந்தது.
  தாதர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, முனிசிபல் டைரக்டர் ஆபீசில் இருந்து புரோகிராம் 
  ஆபீசர் ஒருவர் வந்திருந்தார். தன் பெயர் ஷிண்டே என்று சொன்னார் அவர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பாலுவை தன் அலுவலகத்திற்கு ஜீப்பில் அழைத்துக் கொண்டு போனார்.
  மூன்று பக்கமும் கடல் சூழ அமைந்திருந்த அந்த அலுவலகம் மழையில் பாசி படர்ந்து, பழமையாய்க் காட்சி தந்தது. அந்தப் பழமை அவனுக்குப் பிடித்திருந்தது. அலுவலகத்தின் வாசலை அடைவதற்கு கடலுக்கு மேல் கான்கிரீட்டில் ராம்ப் கட்டியிருந்தார்கள்.  ஜீப் ராம்பில் இரண்டு வளைவு வளைந்து, அலுவலகத்தின் வாயிலை அடைந்தது. ராம்பின் கீழே கடல் அலைகள் ஆர்ப்பரித்து அதன் தூண்களின் மீது மோதிக் கொண்டிருந்தன. கடல் நீர் மோதி மோதி அந்த கான்கிரீட் தூண்கள் அரித்துப் போய் உள்ளே இருந்த அந்த துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே துருத்திக் கொண்டு இருந்தன. 
  தூரத்தில் பாந்தரா வோர்லி கடல் பாலம் கம்பீரமாய்க் காட்சி அளித்தது. 
  ஷிண்டே தன் டைரக்டர் ரூமுக்கு பாலுவைக் கூட்டிக் கொண்டு போனார். டைரக்டருடன் பேசிய பிறகு, அந்தேரியில் உள்ள ஒரு காப்பகத்தை அவனுக்குக் காண்பிப்பதாக முடிவு ஆனது. புறப்பட்டார்கள்.
  பாந்த்ரா வோர்லி கடல் பாலத்தின் மீது ஜீப் சென்றது. இரண்டு புறமும், கடல் அலைகள் ஆக்ரோஷமாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
  ""இந்த பாலம் மேற்கு மும்பையையும், தெற்கு மும்பையையும் இணைக்குது... இந்த பாலம் வந்ததினால டிராபிக் கொஞ்சம் ஈஸி ஆயிடிச்சி...''”  ஷிண்டே சொன்னார்.
  ""இந்த பாலம் வர்ரதுக்கு முன்னாடி, எப்படி இருந்துச்சு?''”
  ""எல்லா டிராபிக்கும் மாஹிம் காஸ்வே வழியாகத்தான் போயாகணும்... எப்பவுமே டிராபிக் ஜாம் தான். அதுவும் பீக் ஹவர்ல கேக்கவே வேணாம்''”
  ""இந்த புதுப் பாலம் எவ்வளவு  நீளம்?''”
  ""ஆறு கிலோ மீட்டர்''”
  ஜீப் பாந்தராவைத் தாண்டி, அந்தேரியை அடைந்தது.
  ""எங்கே போகணும், அந்தேரி கிழக்கா, மேற்கா?''” என்று ஜீப் டிரைவர் ஷிண்டேவிடம் கேட்டார்.
  ""கிழக்கு''” என்று டிரைவரிடம் சொன்ன ஷிண்டே, பாலுவிடம் திரும்பி,
  ""பாந்தராவாகட்டும், அந்தேரியாகட்டும், கிழக்கு பகுதியில தான் ஏழைகள் இருக்காங்க''” என்றார்.
  ""அப்படிங்களா... மும்பையில பாந்தரா மேற்கு, கிழக்குன்னு சொல்றாங்க. அப்புறம் அந்தேரியை மேற்கு, கிழக்குன்னு சொல்றாங்க... எது மேற்கு, எது கிழக்குன்னு எப்படிச் சொல்றாங்க?''”
  ""ரயில்வே லைனை வைச்சி தான். ரயில்வே லைன் தான் ரெண்டா பிரிக்குது... ரயில்வே லைனுக்கு கிழக்குல இருக்கற பகுதி அந்தேரி கிழக்குன்னும், மேற்கில இருக்கிற பகுதி அந்தேரி மேற்குன்னும் சொல்றாங்க''”
  "அன்னை தெரஸா ஆதரவற்றோர் காப்பகம்' என்று பெயர்ப் பலகை காண்பித்தது. ஜீப்பை நிறுத்தினார் டிரைவர்.
  ""யார் நடத்தறாங்க?''”
  ""மதர் ஹோம்ஸ் என்ற என் ஜி ஓ நடத்தறாங்க''” என்று ஷிண்டே சொன்னார்.
  ""இந்த ஹோமில் எத்தனை பேர் இருக்காங்க?''”  பாலு கேட்டான்.
  ""பெண்கள் பதினாறு பேர் இருக்காங்க... 
  குழந்தைங்க ஆறு பேர் இருக்காங்க...'' என்றார் அவர்.
  ""ஓ... குழந்தைகளும் இருக்காங்களா?''”
  ""ஆமாம்''”   
  ""என்ன ஏஜ் குரூப்?''” 
  "" பெண்கள் இருபத்து அஞ்சில இருந்து ஐம்பத்து அஞ்சு வரைக்கும்... குழந்தைகள் ஆறில இருந்து பதினாலு வரைக்கும்''” 
  ""எல்லா ஹோம்லேயும் இப்படித்தானா?''”
  ""இல்ல... மலாட்ல, போரிவேலியில குழந்தைங்க கிடையாது. பெண்களும் கிடையாது. பையன்கள் மட்டும் தான். பத்து வயசில இருந்து பதினெட்டு வரைக்கும்''”
  ""பதினெட்டு வயசுக்கு அப்புறம்?''”
  ""அவங்களுக்கு நாங்க தொழில் பயிற்சி கொடுக்
  கிறோம். வெல்டர், மொபைல் ரிப்பேர் இப்படி... பெண்களுக்கு டெய்லரிங், பியூட்டி பார்லர் வேலைக்குப் பயிற்சி கொடுக்கிறோம். அதுக்கு அப்புறம் அவங்க கௌம்பிடுவாங்க''”   
  ஆண்களுக்கான  பயிற்சி வகுப்புகளைப் பார்த்துக் கொண்டு வந்த பாலு, பெண்களுக்கான டெய்லரிங் பயிற்சி வகுப்பை பார்க்க வந்தான். 
  அங்கு தான் நிர்மலாவை பாலு பார்த்தான்.
  முதலில் பாலு தான் அவளை அடையாளம் கண்டு கொண்டான்.
  கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 
  ""உங்களுக்கு என் கிட்ட ஒரு கேள்வி கேக்கனும்னு இருக்கு இல்லியா?''”
  திடீரென்று அப்படி நிர்மலா கேட்டவுடன் 
  அவனுக்கு சற்று அதிர்ச்சி தான்.
  ""இல்லியே...''” அவன் சமாளிக்க முயன்றான்.
  ""என்னோட புருஷனைப் பத்தி''”
  சற்று தடுமாறிப் போனான் பாலு.
  ""ஆமாம்... இப்போ எங்கே அவர்?''”
  ""நான் கூட்டிக்கிட்டு போய் காண்பிக்கிறேன்''”
  ஒரு டாக்சியை வைத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.
  கொள்ளை அழகுடன், படிப்பில் சுட்டியாய் இருந்த அந்த நிர்மலாவை, படிப்பை விட்டு, வீட்டை விட்டு ஓடிப் போக வைத்த அவன் எப்படி இருப்பான்?
  டாக்சி போய் கொண்டிருந்தது.
  ""இன்னொரு கேள்வி கேக்கனும்னு தோணுதா?''”
  அவள் தான் கர்ப்பமாய் இருந்ததைப் பற்றி 
  சொல்கிறாள் என்பது புரிய, மறுபடியும் பாலு 
  தடுமாறினான்.
  ""இல்லியே''” என்று மறுபடியும் சொன்னான்.
  ""என்னுடைய குழந்தையைப் பத்தி''”
  பாலு எதுவும் பேசவில்லை. 
  ""அந்த குழந்தை செத்து போயிடிச்சி''”
  ""ஏன்?''” பாலு பதறிப் போய் கேட்டான்.
  ""அதை என்னால வளர்க்க முடியல. பசியில செத்துப் போயிடிச்சி... பால் வாங்க காசு இல்ல...''”
  பாலுவுக்கு பதில் ஏதும் சொல்ல முடியவில்லை.
  அப்படியானால் நிர்மலாவைக் கூட்டிக் கொண்டு ஓடிய அந்த மெக்கானிக் பையன் வேலை எதுவும் செய்ய முடியாதவனா?
  குழந்தை பசியால் இறந்து விட்டது என்றால் அவன் சம்பாதிக்கவில்லையா?
  என்ன நடந்து இருக்கும்?
  நிர்மலா எப்படி இந்த மும்பை காப்பகத்திற்கு வந்து சேர்ந்தாள்.
  நன்றாகப் படித்துக் கொண்டிருந்த நிர்மலா, நல்ல படியாக  பெரிய படிப்பு படித்து, ஒரு பெரிய வேலைக்கு வந்து இருக்கலாமே?
  அதையெல்லாம் விட்டு விட்டு அந்த மெக்கானிக்குடன் ஓடிப் போக முடிவு செய்தாள் என்றால் அவன் எதிர்காலத்திற்கு  உத்தரவாதம் கொடுக்காமலா இருந்திருப்பான்?
  அந்தச் சின்ன வயதில் நிர்மலாவின் மேல் அப்படி ஒரு நினைப்பு வந்ததற்காக, பின்னாளில் பாலு பல முறை வருந்தியது உண்டு.
  எட்டாம் வகுப்பில் இருந்து அவளும், அவனும் ஒன்றாகப் படித்தார்கள்.  படிப்பில் நிர்மலா, பாலுவைப் போலவே திறமைசாலி.  அவனை விடவே திறமைசாலி என்று சொல்லலாம். ரொம்பவும் அழகு.  பக்கத்து ஊர். ஏழைக் குடும்பம்.  அவனிடம் பல முறை அவள் படிப்பு சம்பந்தமாகப் பேசியிருக்கிறாள். 
  அதனால்?
  எப்படியோ, அவனுக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. 
  பக்கத்து ஊர் தானே? பொறுத்து இருந்து பிறகு, அதாவது வேலைக்கு வந்த பிறகு அவளிடமும், அவளின் பெற்றோர்களிடமும் சொல்லி சம்மதம் வாங்கி, நிர்மலாவைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று மனதில் நினைத்து இருந்தான். 
  ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் போய் விட்டது. 
  பத்தாம் வகுப்பு விடுமுறை முடிந்து பதினென்றாம் வகுப்பு ஆரம்பித்த போது, அவனுடைய வகுப்பிலேயே மறுபடியும் வந்து சேர்ந்தாள் நிர்மலா. பாலுவுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. 
  வகுப்பு ஆரம்பித்து பத்து நாட்கள் தான் 
  ஆகியிருக்கும். 
  ஒரு நாள் வகுப்பில் நிர்மலா மயங்கி விழுந்தாள். அவளின் அம்மாவும் அப்பாவும் அலறி அடித்துக் கொண்டு வந்து கூட்டிக் கொண்டு போனார்கள். அதற்கு பிறகு அவன் கேட்ட செய்திகள் அவனை நிலை குலைய வைத்தன. அந்த சின்ன வயதில் ஒரு மெக்கானிக் பையனுடன் அவளுக்குக் காதல். அதில் அவள் கர்ப்பம் என்றார்கள்.
  இரண்டாவது நாள். வீட்டில் அவளைக் காணவில்லை. அந்த மெக்கானிக் பையனும் காணவில்லை. அவனுடன் அவள் ஓடிப் போய் விட்டாள் என்றார்கள். அவளின் அம்மா தற்கொலை செய்ய முயன்று, பிறகு காப்பாற்றப் பட்டார் என்றெல்லாம் சொன்னார்கள்.
  இது நடந்து பத்து வருடங்கள் இருக்கும். 
  நிர்மலாவை மறுபடியும் இப்படி ஒரு நிலையில் மும்பையில் பார்க்க வேண்டி வரும் என்று பாலு எதிர்பார்க்க வில்லை. 
  ""என்னோட வீட்டுக்கு வா பாலு.. என் புருஷனைப் பார்க்கலாம்...''” என்று நிர்மலா அழைக்க, மிகுந்த எதிர்பார்ப்புடன் நிர்மலாவின் கணவனைப் பார்க்க பாலு கிளம்பினான்.
  பாந்தரா குர்லா சாலையில் டாக்சி சென்றது.
  பேமிலி கோர்ட் ஜங்சனில், டிராபிக் ஜாமில் டாக்சி நின்றது.
  நிர்மலா கேட்டாள்.
  ""நான் அடிக்கடி இந்த வழியா போயிருக்கிறேன்... இந்த பேமிலி கோர்ட் போர்டையும் பாத்து இருக்கேன்''
  "" பேமிலி கோர்ட்னா என்னா?''
  "" விவாகரத்து வாங்குறதுக்கான கோர்ட்''”
  ""அதுக்குக் கூட கோர்ட் இருக்கா?''
  ""ஆமாம்''”
  நிர்மலாவின் குடிசைக்குப் போன பாலு, நிர்மலாவின் கணவனைப் பார்த்து அதிர்ந்து போனான்.
  குடிபோதையில் படுத்துக் கிடந்தான்.
  வந்து இருப்பது யார் என்று கூட புரிந்து கொள்ள முடியாமல் இருந்தான்.
  ஆள்  மிக அசிங்கமாய் இருந்தான்.
  இவனுக்காகவா, நிர்மலா தன் படிப்பை, தன் வாழ்க்கையைத் தொலைத்தாள்?
  பாலுவால் நம்ப முடியவில்லை.  
  அவனுக்கு கார் மெக்கானிக் வேலை தெரியுமாம். எப்போதாவது  வேலைக்குப் போய் வருவானாம். கெடைக்கிற பணத்தை தானே குடித்து தீர்த்து 
  விடுவானாம்..
  ""அப்படிப் பட்ட ஆளை ஏன்?''” 
  பாலுவால் கேள்வியை முடிக்க முடிய வில்லை.
  ""என்னைப் பொறுத்த வரைக்கும் அந்த வயசில நான் செஞ்ச அந்த தப்பு பாலுணர்ச்சியில செஞ்சது தான். அதை காதல்னு சொல்ல மாட்டேன்.''
  ""உனக்கு ஏதாவது உதவி வேணுமா?''” பாலு கேட்டான்.
  ""இந்த ஹோமுக்கு நான் கேர் டேக்கர் ஆக முடியுமா?  நான் பத்தாம் கிளாசுன்னு நெனக்காதீங்க... இப்ப  நான் கரஸ்ல பி ஏ முடிச்சி இருக்கேன்'' என்றாள் நிர்மலா.
  ""நீ பியூட்டி பார்லர் கோர்ஸ் படிச்சி இருக்கிறதா சொன்னியே? பியூட்டி பார்லர் சொந்தமா வைக்க பண உதவி செய்யட்டுமா?''” என்றான் பாலு.
  ""எனக்கு அது பிடிக்கலே''”
  ""எனக்கு கேர் டேக்கர் வேலை வாங்கி கொடுங்க... அது போதும்''” என்றாள்.
  ""ஏன்?''” என்றான் பாலு.
  ""எனக்கு அழகுங்கற வார்த்தையே பிடிக்கல''” 
  என்றாள் நிர்மலா.
  ""சரி... ஓகே. கேர் டேக்கர் வேலை வாங்கி தர முயற்சி பண்றேன்''” என்றான் பாலு.
  ""வேற ஒரு உதவி செய்யட்டுமா?''” என்று கேட்டான் பாலு.
  "என்ன?' என்பது போல் என்னை சந்தேகத்தோடு பார்த்தாள் நிர்மலா.
  ""உன்னோட கணவர் சம்பந்தமா... அவருக்கு ஒரு கவுன்சலிங் ஏதாவது வைச்சி... அவருக்கிட்ட பேசி பார்த்து... அவரை சரி செஞ்சி''
  ""இல்ல... வேண்டாம்...பல முறை முயற்சி செஞ்சி பார்த்தாச்சு''” என்றாள் நிர்மலா.
  கொஞ்சம் நிறுத்திய நிர்மலா,
  ""எங்க அப்பா,  என்னோட ரெண்டு அக்காவையும் பத்தாங்கிளாசோட நிறுத்திட்டாரு... என்னை மட்டும் தான் கஷ்டப் பட்டு பீஸ் கட்டி, ஹையர் செகண்டரியில சேத்தாரு.  நான் மசக்கையில கிளாஸ்ல மயங்கி விழுந்து, அவருக்கு நன்றிக் கடன் செஞ்சிட்டேன்''”
  நிர்மலா தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். 
  ""சரி விடு... நீ நல்லா படிச்ச பொண்ணாச்சே... இதுல மாட்டிக்காம இருந்திருந்தா, உனக்கு ஒரு நல்ல படிப்பும், ஒரு நல்ல வேலையும் கெடைச்சிருக்கும்... இல்லியா நிர்மலா?''
  ""இன்னும் ஒரு விஷயமும் நல்ல படியா அமைஞ்சு இருக்கும்... அதை நீ சொல்லாம விட்டுட்ட பாலு''”
  ""எதைச் சொல்ற நிர்மலா?''”
  ""ஒரு நல்ல கணவன். ஒரு நல்ல வாழ்க்கை''”
  பாலுவுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. பேசாமல் இருந்தான்.
  ""ஆமாம் பாலு.. நான் இந்த பாழும் கிணத்தில விழாம இருந்து, படிச்சி, வேலைக்கு போயிருந்தா, எனக்கு ஒரு நல்ல கணவன், ஒரு நல்ல வாழ்க்கை கெடைச்சிருக்கும்''” என்றாள் நிர்மலா.
  சற்று யோசித்த பாலு பேசினான்.
  ""இப்போ கூட அதுக்கு சான்ஸ் இருக்கு''”
  ""என்ன சொல்ற பாலு?''”
  ""வர்ர வழியில.. பாந்தரா குர்லா ரோட்ல பார்த்தோமே.. பேமிலி கோர்ட்''”
  ""நீ சொல்றது எனக்கு புரியுது பாலு...  எனக்கு இவன் கிட்டே இருந்து விவாகரத்து... அதைப் பத்தி தானே பேசறே?''”
  ""ஆமாம்''” என்றான் பாலு.
  அதற்கு நிர்மலா, ""இல்ல பாலு..  இது நான் தெரிஞ்சே செஞ்ச தப்பு. அதுக்கான தண்டனையை, நான் மட்டும் தான் அனுபவிக்கணும்...  இந்த ஜென்மம் பூராவும், இந்த தண்டனையை நான் அனுபவிக்கணும்... இதுல நான் வேற யாரையும் சேர்த்துக்க விரும்பல...''”  என்றாள். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai