Enable Javscript for better performance
நான் தனிமரம்  இல்லை!- Dinamani

சுடச்சுட

  
  kadhir2


  மதுரை திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு தள்ளி அமைந்திருக்கிறது "தென்கால் கண்மாய்'. அருள்மிகு வெயில் உகுந்த அம்மன் கோயிலின் எதிர்புறத்திலிலுள்ள மதுரை திருமங்கலம் சாலையின் ஒருபுறம் தென்கால் கண்மாய்; மறுபுறம் ரயில் தடம். கண்மாய் ஒட்டி அமைந்த சாலை ஓரத்தில் ஓராண்டாக சுமார் நூறு மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார் வாழவந்தான்.


  ஆரம்பத்தில் மரக் கன்றுகளை நட்டு அவை கொஞ்சம் வளர்ந்ததும் கீழேயே சரிந்து விழாமல் இருக்க பக்கத்தில் மூங்கிலையும் தாங்காக நட்டு... கால்நடைகள் இலைகளை உணவாக மேய்ந்துவிடுவதிலிருந்து காக்க உரச்சாக்குகளை உடையாக மரக்கன்றுகளுக்கு அணிவித்து வளர்த்து வருபவர் வாழவந்தான். மரக் கன்றுகளுக்குத் தினமும் தண்ணீர் ஊற்ற மறப்பதில்லை. இன்று மரக் கன்றுகள் சிறிய மரங்களாக வளர்ந்து விட்டன. மரங்களின் பராமரிப்பு வேலைகளை மறக்காமல் செய்து வரும் வாழவந்தான் சமூக ஊழியரோ... அரசாங்க அலுவலரோ... பொழுதுபோக்கிற்காக சேவை செய்யும் தனவந்தரோ அல்ல.

  கோடை மாதங்களில் அழைப்பு வருகிற தருணங்களில் சோடா கலர் தயாரிப்பு கம்பெனியில் நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் சம்பளம் பெறும் சாதாரண ஊழியர். வேலையில்லாத நாள்களில் கோயிலில் தரப்படும் அன்னதானம்தான் உணவு... தெரிந்தவர் கடையில் தரப்படும் இட்லி... தேநீர் சாப்பிட்டு கிடைக்கும் இடத்தில் தூங்கி எழுபவர் வாழவந்தான். தனக்கு நிழல் தர குடிசை வீடு கூட இல்லாத சூழ்நிலையில்தான் வாழவந்தான் ஓராண்டு காலமாக நூறு மரக்கன்றுகளை பயணிகளுக்கும் மண்ணுக்கும் நிழல்தர கரிசனமாக வளர்த்து வருகிறார். லாப நோக்கில் இல்லாமல் பசுமைப் பணியில் ஈடுபட்டிருக்கும் வாழவந்தானுக்கு, வயது 66 ஆகிறது. நேரில் பார்த்தால் எழுபதைக் கடந்துவிட்ட தோற்றம்.
  வாழவந்தானிடம் பேசினோம்:

  ""எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. மூன்று மகள்கள். மனைவி காலமாகி விட்டார். அருப்புக்கோட்டையில் சிறிய வீடு எனக்குச் சொந்தமாக இருந்தது. சொந்த வீட்டில் மரம் வளர்ப்பதற்காகவே சிறிய இடத்தை ஒதுக்கி மரங்களை நட்டு வைத்து பராமரித்தேன். மரக்கன்றுகளோடு, வீட்டிற்குத் தேவையான காய்கறி செடிகள், பூச்செடிகள் மற்றும் மருத்துவகுணம் நிறைந்த செடிகளையும் வளர்த்து வந்தேன். பக்கத்து வீடு, எதிர்வீடு, தெருவில் வசிப்பவர்கள் அனைவருக்கும் நான் வளர்த்த செடிகளின் பூவோ அல்லது மருத்துவத்திற்கான இலையோ பயன்பட்டது. மனைவி மறைந்த பின்பு, வீட்டை விற்று மூத்த மகளையும் அண்ணனின் மகள்களையும் அருப்புக்கோட்டையில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, இரண்டு பெண்பிள்ளைகளுடன் திருப்பரங்குன்றத்தின் மேட்டுத் தெருவிற்கு வாடகைக்குக் குடிவந்தேன்.

  "மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடா' கம்பெனியில் பணி செய்தேன். தினந்தோறும் காலை எட்டுமணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை எட்டு மணி நேர வேலை. தினக் கூலி நானூற்று ஐம்பது ரூபாய். மழை மாதங்களில் வேலை இருக்காது. இரண்டு மகள்களுக்கும் மதுரையிலே திருமணத்தை முடித்து வைத்தேன். தனி ஆளான எனக்கு வாடகை வீடு எதற்கு என்று வீட்டைக் காலி செய்தேன். வாடகை கொடுக்க சிரமமாக இருந்ததும் வீட்டைக் காலி செய்ய ஒரு காரணம். தெரிந்தவர் டீக்கடையின் முன்பகுதியில் இரவு தூங்கிக் கொள்வேன். இந்தக் கடைக்காரர் எனக்கு இரவுநேர உணவை இலவசமாகத் தருபவர். இந்தக் கடையில்தான் நான் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற பயன்படுத்தும் குடத்தையும், குழி தோண்டும் மண்வெட்டியையும் வைத்துக் கொள்வேன். இப்பொழுது என்னுடைய சொத்துக்கள் இரண்டு ஜோடி உடைகள்... ஒரு மண்வெட்டி, ஒரு குடம் , சிறிய இரும்பு கம்பி, தேய்ந்து போன செருப்பு மட்டுமே.

  "சூரியன் மறைவுக்குப் பின் உறங்கு. உதிப்பதற்கு முன் எழு' என்று என்னுடைய அப்பா சொல்வார். நான் அதை இன்றும் கடைப்பிடிக்கிறேன். அதிகாலை ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரை மரக்கன்றுகள் பராமரிப்புப் பணிகளைச் செய்வேன். பின்பு மதியம் ஒருமணியிலிருந்து ஆறுமணி வரை செடிகளோடு இருந்துவிடுவேன். வளர்த்துவிட்ட மரங்களுக்கு இரண்டு தினங்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவேன் . மரக்கன்று நடும் ஆரம்ப நாட்களில் மரக் கன்றுகளை நட குச்சி கொண்டு மண்ணைக் குத்திக் குத்தி கைகளால் மண்ணை அள்ளி எடுத்து குழி உண்டாக்குவேன். நான் சிரமப்படுவதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இரும்புக் கம்பி ஒன்றைக் கொடுத்தார். பிறகு நானே மண்வெட்டியை விலை கொடுத்து வாங்கினேன்.

  கண்மாயில் தண்ணீர் இருந்தாலும் தூரத்தில் இருக்கிறது. குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து செடிகளுக்கு ஊற்றுவேன். சுமார் ஐம்பது குடம் தண்ணீர் கொண்டு வர வேண்டும். மூச்சிரைக்க கொண்டு வருவேன். சில வேளையில் யோகேஸ் என்கிற கல்லூரி மாணவர் தண்ணீர் கொண்டு வந்து உதவுவார். வேம்பு, கருங்காலி, ஆலமரம், பூவரசு, பன்னீர்புஷ்பம், புளியமரம், அரசமரம், நாவல்மரம், மா மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வருகிறேன். இந்த நூறு மரங்களில் பாதி பலர் அன்பளிப்பு செய்தது. பன்னீர் புஷ்பம் மரக்கன்று 125 ரூபாய். அதை யோகலட்சுமி கணேசன் என்பவர் வாங்கிக் கொடுத்தார். மூன்று நான்கு மரங்கள் விட்டு ஒரு வேப்ப மரம் என்ற கணக்கில் அதிக வேப்ப மரங்களை நட்டிருக்கிறேன். காரணம் வேப்ப மரத்தில் கொசுக்கள் தங்காது. வேப்ப மரம் இருப்பதினால் பக்கத்து மரங்களிலும் கொசுக்கள் தங்காது.

  தண்ணீர் ஊற்றாத நாட்களில் செடிகளைப் பாதுகாப்பது, யாரேனும் வந்து செடிகளைப் பிடுங்க வந்தால் சப்தம் போடுவது, செடிகள் மீது சிறுநீர் கழிக்க ஒதுங்குபவர்களை விரட்டிவிடுவது, செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்க சிறு மேடுகளை உருவாக்குவது , தேவையில்லாத களைகளைப் பிடுங்கி எறிவது, சாலையில் பயணம் செய்பவர்கள் வீசி எறிந்துவிட்டுச் செல்லும் காகிதங்கள், பிளாஸ்டிக் கவர் மற்றும் குப்பைகளை மரக் கன்றுகளிலிருந்து அகற்றுவது இதுதான் எனது தினசரிப் பணி.

  எனது இந்த மரக் கன்று நடுவதை பார்த்து விட்டு தங்கள் வீட்டுப் பண்ணை அல்லது நிலங்களில் மரங்கள், காய்கறிகள் வளர்க்க வேலைக்கு அழைக்கிறார்கள். நான் போய்விட்டால் இந்த நூறு மரங்களை யார் பார்ப்பார்கள்? இப்போது இருக்கும் நூறு மரங்களைத் தொடர்ந்து இன்னும் நூறு மரக்கன்றுகள் நட வேண்டும். இந்த நூறு மரங்களை பார்த்த பலரும் "நாங்களும் மரக்கன்றுகள் தருகிறோம். நட்டு வளர்த்துவிடுங்கள்' என்கிறார்கள்.

  மாலை நேரத்தில் காற்றில் தலை அசைக்கும் இந்த மரங்களை பார்த்தவாறே பொழுதைக் கழிப்பேன். நான் தனி ஆள்தான். ஆனால் என்னுடன் நூறு மரங்கள் இருக்கின்றன. அதனால் நான் தனிமரம் இல்லை. நாளை இந்த மரங்கள் வளர்ந்து பெரிதாகி நிற்கும் போது பார்க்க எத்தனை ரம்யமாக இருக்கும். நான் எல்லாவகையிலும் ரொம்பச் சாதாரணமானவன். என்னால் "நிழல் குடை' அமைக்க முடியாது. "தண்ணீர் பந்தல்' வைக்க முடியாது. அதனால்தான் நிழல், தண்ணீருக்கு அடிப்படையாக இருக்கும் மரங்களை நட்டு வளர்க்கிறேன்'' என்கிறார் மரங்களை வாழவைக்கும் வாழவந்தான்.

  அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத வாழவந்தான் வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டதாரி. கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்த நிலையிலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி மரங்களின் மேல் மனதை வைத்திருக்கும் வாழவந்தான் ஓர் அதிசய மனிதர்தான்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai