திசையெட்டும் திருக்குறளைப் பரப்புபவர்!

"உனது வீட்டு வாசற்படியில் இருந்துதான் உலகம் தொடங்குகிறது' என்றொரு பழமொழி உண்டு.
திசையெட்டும் திருக்குறளைப் பரப்புபவர்!

"உனது வீட்டு வாசற்படியில் இருந்துதான் உலகம் தொடங்குகிறது' என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, எந்தவொரு விழிப்புணர்வையும் ஏற்படுத்த நினைப்பவர்கள் அதைத் தனது வீட்டிலிருந்தே தொடங்குவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். இது  யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலரும், உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் சல்வத்துக்கு மிகவும் பொருந்தும். அவருக்கு வயது 71.

ஆம். பன்னீர் செல்வத்தின் வீட்டு வாசல்படியும் நிலைக்கதவும்   வள்ளுவரின் உருவத்தை பெருமையுடன் தாங்கி நம்மை வரவேற்கிறது. ஆதி பகவன், ஆதி பனிமொழி என தனது பேரக் குழந்தைகளுக்கு குறளில் இருந்து பெயர் சூட்டியும், துணைவியார் வெள்ளிநிலா, மகன்கள், மகள்கள்,  மருமகள்கள், பேரக்குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் வள்ளுவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடுத்தியும் தனது வீட்டில் இருந்து விழிப்புணர்வைத் தொடங்கி வெளியெங்கும் பரப்பி வருகிறார்.

தமிழாசிரியர், தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர் என கல்வித் துறை சார்ந்த பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தபோதும் சரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,   தமிழாசிரியர் கழகம், வள்ளலார் கல்வி அறக்கட்டளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித்த போதும் சரி, தற்போது உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும்போதும் சரி, மாணவர்கள், ஆசிரியர்கள், கற்றோர், கல்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் குறள் குறித்தும் குறளை வாழ்வியல் நெறியாகக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தி வருகிறார். 

தினமணி நாளிதழின் இணைப்பான தினமணி கதிரில் 2004-ஆம் ஆண்டு, "தமிழும் மலையாளமும் ஒண்ணுதன்னே' என்ற தலைப்பில், கேரளாவில் வள்ளுவருக்குச் சிலை அமைத்து, வள்ளுவரைத் தெய்வமாகப் போற்றி, வள்ளுவத்தை பரப்பி வரும் சிவானந்தர் குறித்த பதிவு வெளிவந்திருந்தது. அதைப் படித்த பன்னீர் செல்வம் கேரளா சென்று சிவானந்தரைச் சந்தித்தார். மலையாள மொழி பேசும், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வளவு முனைந்து வள்ளுவத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, தமிழகத்தைச் சேர்ந்த நாம் ஏன் இதுபோன்ற பணிகளில் ஈடுபடக் கூடாது என்று 16 ஆண்டுகளுக்கு முன்பு உதித்த சிந்தனையை இன்று வரை தொய்வின்றி தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறார். 

ஜெயம்கொண்ட சோழபுரம் அருகேயுள்ள செங்குந்தபுரத்தில் 4,000 சதுர அடி பரப்பளவில் திருவள்ளுவர் ஞான மன்றத்தை முதல்கட்டமாக  ஏற்படுத்தினார். வாரத்துக்கு மூன்று நாள்கள் அன்னதானம் அளித்தல், திருக்குறள், திருக்குறள் குறித்து அவ்வப்போது வெளியாகும் நூல்கள் குறித்து சொல்லாய்வு, பொருளாய்வு, திறனாய்வு செய்தல், வாழ்வியல் நெறியாக வள்ளுவத்தைக் கடைபிடிக்க பொதுமக்களை வலியுறுத்தல், எந்த விழாவாக இருந்தாலும் அவற்றில் திருக்குறளை முன்னிலைப்படுத்துதல் என ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கிய அவரது பயணம்  இன்று மாவட்டம், மாநிலம், நாடு கடந்து உலகளாவிய அளவில் வள்ளுவரின் போதனைகளைப் பரப்பும் முயற்சியில் தொடர்கிறது.

வாரத்தில் மூன்று நாள்கள் அன்னதானம் அளித்த செங்குந்தபுரம் திருவள்ளுவர் ஞான மன்றம் தற்போது வாரத்துக்கு ஆறு நாள்கள் அன்னதானமும், ஒரு நாள் சிற்றுண்டியும் அளித்து வருகிறது. செங்குந்தபுரம் திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில், சுமார் 60-க்கும் மேற்பட்ட திருக்குறள் குறித்து வெளியான புத்தகங்கள் மீது கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டு திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. "திருக்குறள் தமிழ் மறையா?' என்ற கையேட்டின் 70 ஆயிரம் பிரதிகள் குறளார்வலர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், "திருக்குறள் மக்கள் இயக்கமாக ஏன் மாற வேண்டும்?', "வள்ளுவம் வணக்கத்துக்குரியது" என்ற இரு நூல்களும்  வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மூலம்  ஒரு குறளையும் அதன் விளக்கத்தையும் தாங்கிய 50 ஆயிரம்  ஸ்டிக்கர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

1,330 குறள்களையும் மனப்பாடம் செய்து அதை ஒப்பித்து தமிழக முதல்வர், இந்திய ஜனாதிபதி ஆகியோரிடம் விருது பெற்ற மாணவியை திருவள்ளுவர் ஞான மன்றம்  உருவாக்கியிருக்கிறது.  தமிழகமெங்கும் 20-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளை நிறுவியிருக்கிறது.  திருமண விழாக்களில் திருவள்ளுவர் உருவம் பொறித்த டைல்ஸ்களை பரிசாக வழங்கி, கையெழுத்துப் பிரதியாக இருந்த கவிதைகளை நூல்களாகப் பதித்து கவிஞர்களை ஊக்குவித்திருக்கிறது.  மணிக்கொரு முறை ஒரு திருக்குறளையும் அதன் விளக்கத்தையும் அறிவிக்கும் மணிக்கூண்டை நிறுவியிருக்கிறது.  "குறள் சாரல்' எனும் இதழை மாதமிருமுறை வெளியிடுகிறது. 

தமிழர் திருநாளில் வள்ளுவருக்கு மேள தாளத்துடன் தேரோட்டம் நடத்தி ஜெயம்கொண்ட சோழபுரம் நகரை வலம் வரச் செய்திருக்கிறது.  

திருவள்ளுவர் ஞான மன்றத்தின் மூலமாக பொதுமக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு எட்டுவது முயற்சிப்பது என பன்னீர் செல்வம் ஆற்றி வரும் பணிகள் ஏராளம். 

மேலும் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியை செங்குந்தபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அதன் செயலாளராக இருந்து நடத்தி வருகிறார். இப்பள்ளியின் மூலம் 100 மாணவ,  மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வியை தமிழார் வலர்களின் உதவியுடன் பன்னீர் செல்வம் அளித்து வருகிறார். 

மேற்சொன்ன அனைத்துப் பணிகளுக்கும் முத்தாய்ப்பாக,  இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள திருக்குறள் மன்றங்களை ஒருங்கிணைத்து உலகத் திருக்குறள் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.  அதன் ஒருங்கிணைப்பாளராகவும் பன்னீர் செல்வம் தற்போது உள்ளார். இவரது ஒருங்கிணைப்பின் கீழ், இவ்வமைப்பு தமிழகத்தை குறள் மண்டலங்களாக நான்காகப் பிரித்து பள்ளிகள், கிராமங்கள் தோறும் திருக்குறளை மையப்படுத்தி பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி ஊக்குவித்து வருகிறது.  கன்னியாகுமரியில்  நடைபெற்ற இவ்வமைப்பின் இரண்டாம் ஆண்டு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து குறளார்வலர்கள், தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். 

உலகத் திருக்குறள் கூட்டமைப்பில் தற்போது வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட திருக்குறள் மன்றங்கள் இணைந்துகொண்டு திறம்பட செயல்பட்டு வருவது மட்டுமல்லாது, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள திருக்குறள் அமைப்புகளும் இதில் இணைந்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள திருக்குறள் மன்றங்களையும் இவ்வமைப்புடன் இணைக்க பன்னீர் செல்வம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

கன்னியாகுமாரியில் காந்தி, காமராஜருக்கு மணி மண்டபம் இருப்பதைப்போல வள்ளுவருக்கும் மணி மண்டபம் எழுப்ப அரசை வலியுறுத்துவது, மாவட்டம் தோறும்  திருக்குறள் பிரசார வாகனங்களை இயக்குவது, பள்ளி - கல்லூரிகளில் மாதமொரு முறை திருக்குறள் சார்ந்த விழாக்களை நிகழ்த்துவது, கூட்டமைப்பு உறுப்பினர்களின் வீட்டு சிறப்பு நிகழ்வுகளில் குறளை முன்னிலைப்படுத்துவது என வள்ளுவத்தை பரப்ப 
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மூலம்  பன்னீர் செல்வம் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

தேர்வில் மதிப்பெண்கள் பெற மட்டுமே திருக்குறள் படித்தால்போதும் என்ற மனநிலையில் மாணவர்கள் இருக்கும் இன்றையச் சூழலில், குறளை வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடிக்க  பல்வேறு முயற்சிகளை அயராது மேற்கொண்டு வருகிறார் பன்னீர் செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com