ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடம்பில் அரிப்பு -  காரணங்கள்... தீர்வுகள்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடம்பில் அரிப்பு -  காரணங்கள்... தீர்வுகள்!

எனக்கு வயது 79. சர்க்கரை அளவு 169. கடந்த ஒரு வார காலமாக உடம்பில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ஊசி போட்டால் இரண்டு   நாட்களுக்கு அரிப்பு இல்லை. இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் அரிப்பு ஏற்படுகிறது.

எனக்கு வயது 79. சர்க்கரை அளவு 169. கடந்த ஒரு வார காலமாக உடம்பில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ஊசி போட்டால் இரண்டு   நாட்களுக்கு அரிப்பு இல்லை. இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் அரிப்பு ஏற்படுகிறது. இந்த உபாதைக்குக் காரணம் என்ன? ஆயுர்வேதத்தில்  மருந்து உள்ளதா ?

-ஓ. செந்தூர்பாண்டி, சாத்தூர்.

இந்த அரிப்பு உபாதை வெறும் தோல் மட்டும் சார்ந்ததா? அல்லது உடல் உட்புற உபாதைகளால் தோன்றுகிறதா? என்பதை அறிந்து, அதற்கேற்றாற் போல் மருந்தைத் தீர்மானிப்பது நலம். வயோதிகத்தில் நரம்பு சம்பந்தமாகவும், மனநிலை சார்ந்ததாகவும், சாப்பிடும் மருந்துகளால் ஏற்படும் தோல் அலர்ஜியாலும் கூட அரிப்பு ஏற்படலாம். வயோதிகம் காரணமாக ஏற்படும் தோல் சுருக்கம், அவ்விடத்தில் உள்ள நெய்ப்புக் குறைவு, தோலில் புதிய அணுக்களின் உற்பத்திக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தோலின் அடிப்புறம் ஊட்டம் தரும் சதைப்பிடிப்புக் குறைவு, தூக்கம், மன அழுத்தம் போன்ற உட்புறக் காரணங்களாலும், புற ஊதாக்கதிர்களின் தாக்கம், சுற்றுச் சூழல் மாசுபாடு, புகைப்பிடித்தல், உணவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் போன்ற வாழ்க்கை முறை காரணிகளாகிய வெளிப்புறக் காரணங்களாலும் இந்த அரிப்பு உபாதை ஏற்படலாம். உடல் வெப்பநிலையில் ஏற்படும் ஏற்றமும் குறைவும், நாள அமைப்புகளால் தோலுக்கு வர வேண்டிய ரத்த ஊட்டம் குறைதல், வியர்வைச் சுரப்பிகளில் ஏற்படும் கிருமித் தொற்று, தொடு உணர்ச்சி நரம்புகளில் பாதிப்பு போன்றவையும் காரணமாகலாம்.

மழை, குளிர், நாட்களில் ஏற்படும் காற்றின் ஈரப்பதத் தாக்கமானது தோலை வறளச் செய்து வெடிப்புகள் ஏற்படுத்தி அரிப்பை அதிகப்படுத்தும், அருகிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சுக்காற்று, மூட்டைப்பூச்சிகளின் எச்சில் உடம்பில் பட்டவுடன் அதை, எதிர்த்து உடனே போராட முடியாத அளவிற்கு மங்கிப்போன சக்தி நிலை, சிறுநீரகங்களின் வழியாக வடிகட்டி வெளியேற்றப்பட வேண்டிய கழிவுப் பொருட்களின் தேக்கம், ரத்தசோகை, நாளாமில்லாச் சுரப்பியான தைராய்டின்  அதிகமும் குறைவுமான சுரப்புத்தன்மை, சுற்றுப்புறச் சூழல்களிலிருந்து வரும் அணுக்கிருமிகளின் பாதிப்பு, கவலை தரும் குடும்பச் சூழ்நிலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல், வருத்தம், கோபம், மனஸ்தாபம், மூளையைச் சார்ந்த கட்டி உபாதைகள், ரத்தத்தில் ஏற்படக்கூடிய தொற்று உபாதை போன்ற எண்ணற்ற காரணங்களால் நீங்கள் குறிப்பிடும் அரிப்பு ஏற்படலாம்.

நவீன ஆராய்ச்சியாளர்களின் தெளிந்த அறிவினால் உணரப்பட்ட இக்காரணங்களை, பழமை வாய்ந்த ஆயுர்வேதக் கூற்றுடன் சற்று சேர்த்து ஆராய வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.  கபதோஷத்தினுடைய குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, நசநசப்பு, நிலைப்பு ஆகியவற்றிற்கு ஏற்படும் உருகு நிலை, தோல் வழியாகவும், சிறுநீரகங்களின் வழியாகவும் வெளியேற முயற்சிக்கும் தறுவாயில், அவற்றிலுள்ள கழிவு அரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த உருகு நிலையை உடல் உட்புறச் சூடு உண்டாக்குகிறது. சூடு பித்தமின்றி ஏற்படாது என்பதால், பித்தத்தின் வழியே கிளறி விடப்பட்ட இக்குணங்களின் சீற்றமானது, தங்களுக்கு அதிகரித்திருக்கிறது என்றே கூறலாம்.

உட்புறம் மற்றும் வெளிப்புறச் சிகிச்சைகளால் மட்டுமே இந்த அரிப்பை மட்டுப்படுத்தலாம்; குணப்படுத்தலாமா? என்று கேட்டால், உறுதியாகக் கூற இயலாது. காரணம் வயோதிகம். மேற்குறிப்பிட்ட குணங்களின் கழிவை உட்புற வழியாக அகற்றக் கூடிய ஆரக்வதாதிகஷயாம், வில்வாதிகுளிகை, கதிராரிஷ்டம், ஹரித்ராகண்டம், சிலாஜது பற்பம் போன்றவை தரமான மருந்துகள். வெளிப்புறப் பூச்சாக, ஏலாதிகேர தைலம், தூர்வாதி கேரதைலம், நால்பாமராதி தைலம், தினேஷவல்யாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். குளிக்கும் தண்ணீரில் வேப்பம்பட்டை, சரக்கொன்றைப்பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, புங்கம்பட்டை, ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்தி, இச்சிப்பட்டை ஆகியவற்றில் ஒன்றிரண்டைப் போட்டு பெருந்தூளாக  தண்ணீருடன் நன்கு காய்ச்சி வடிகட்டி, அது கொண்டு குளிப்பதும்  நல்லதே. தலையிலுள்ள சில நுண்ணிய நரம்புகளின் தூண்டுதலின் வழியாக ஏற்படக் கூடிய ரசாயனிகள் மூலமாகவும் உடலரிப்பு ஏற்படலாம் என்பதால் தலைக்கு மூலிகைத் தைலமாகிய அய்யப்பாலா கேர தைலம், ஆரண்யதுளஸ்யாதி தைலம் போன்றவற்றைத்  தேய்த்து குணம் காண முயற்சிக்கலாம்.

புளித்த தயிர், நல்லெண்ணெய், கத்தரிக்காய், கடுகு, புலால் உணவு போன்றவற்றைத்  தவிர்ப்பது நலம். பகல் தூக்கத்தினால் ரத்தம் கெட்டு விடும் அபாயமிருப்பதால், அதைத் தவிர்ப்பதும் உசிதமே. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com