நூல் மதிப்புரை: தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனான' சிவபரம்பொருளின் மாண்பு களையும், அவன் மீது "அயரா அன்பு' செலுத்திய மெய்யடியார்களின் பெருமைகளையும், வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஓர் உன்னதமான
நூல் மதிப்புரை: தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனான' சிவபரம்பொருளின் மாண்பு களையும், அவன் மீது "அயரா அன்பு' செலுத்திய மெய்யடியார்களின் பெருமைகளையும், வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஓர் உன்னதமான -அற்புதமான புராணம்தான் சேக்கிழார் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட "திருத்தொண்டர் புராணம்' எனும் "பெரியபுராணம்'. இது ஒரு விரி நூல்.

சிவபெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு "தில்லைவாழ் அந்தணர்' என்று அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரரால் அருளிச் செய்யப்பட்டது "திருத்தொண்டத் தொகை' எனும் மெய்யடியார்களின் பெருமை பேசும் முதல் நூல். சுந்தரரின் பாக்களை அடியொற்றி நம்பியாண்டார் நம்பி என்பவரால் அருளிச் செய்யப்பட்டது "திருத்தொண்டர் திருவந்தாதி' எனும் வழி நூல். சிவபெருமானே "உலகெலாம்' என்று சேக்கிழார் பெருமானுக்கு அடியெடுத்துக் கொடுக்க, மேற்கூறிய இரு நூல்களின் துணையுடன் சேக்கிழார் பெருமானால் விரிவாக விரித்துரைக்கப்பட்டதுதான் "எடுக்குமாக் கதை', "திருத்தொண்டர் புராணம்' என்றெல்லாம் கூறப்படும் "பெரியபுராணம்' எனும் விரிநூல்.

""புதிய கோயில்களை உருவாக்குவதை விட, பாழடைந்த கோயில்களைப் புதுப்பிப்பது எவ்வாறு சிறந்த தொண்டோ, அதுபோல புதிய நூல்களை எழுதாமல், பழைய ஏட்டுச்சுவடிகளில் உள்ள அரிய நூல்களை மறுபதிப்புச் செய்வதுதான் நாம்தமிழன்னைக்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டு'' என்கிற "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் வாக்கை சிரமேற்கொண்டு செயல்பட்டுவருகிறார் மிகச்சிறந்த பதிப்பாசிரியரான "சிவாலயம்' ஜெ.மோகன். இவர் இதற்கு முன்பே வள்ளலாரின் "வடிவுடை மாணிக்க மாலை', ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகளின் "திருமயிலைத் தலபுராணம்', மா.வயித்தியலிங்கன் உரையுடன் கூடிய வள்ளலாரின் "விண்ணப்பக் கலிவெண்பா', "திருவருட்பா', கே.எம்.பாலசுப்பிரமணியின் "திருவாசகம்' (உரை, ஆங்கில மொழிபெயர்ப்பு), தி.சுப்பிரமணிய தேசிகரின் "தேவாரஇன்னிசை பயிற்சி', புலவர் கோ.வடிவேல் செட்டியார், கி.குப்புசாமி முதலியார், சரவணப் பெருமாளையர் ஆகியோரின் அரிய திருக்குறள் உரைகள் - முதலிய பல நூல்களை மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் பதிப்பித்திருக்கிறார். தற்போது, 1887-ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் உரை விளக்கத்துடன் கூடிய பெரியபுராணத்தை மறுபதிப்பு செய்து சைவப் பேருலகிற்கு வழங்கிப் பெருந்தொண்டாற்றியிருக்கிறார்.

தமிழ் நாட்டின் வரலாற்றை விரித்துக் கூறும் வகையில், பிறமொழிச் சார்பில்லாமல் தமிழ் மொழியில் முதன்முதலாகத் தோன்றிய சிறப்பான செந்
தமிழ்க் கருவூலம்தான் பெரியபுராணம். இந்நூலில் 13 சருக்கங்கள் உள்ளன. 13 சருக்கங்களில் இரண்டு முதல் பன்னிரண்டு வரையுள்ள பதினொரு சருக்கங்களின் தலைப்புகளைத் திருத்தொண்டத் தொகையிலிருந்து எடுத்து சேக்கிழார் பெருமான் கையாண்டிருக்கிறார். எனவே, திருத்தொண்டத் தொகையாக இடம்பெறாத நாயன்மார்கள் பெயர்கள் பெரியபுராணத்தில் இடம்பெறவில்லை என்று கூறுவர் சான்றோர்.

அநபாய சோழன் வேண்டுகோளுக்கு இணங்க, அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான், திருத்தில்லைக்குச் சென்று அம்பலவாணன் திருமுன்னர் வணங்கி, அடியார் பெருமக்களது வரலாற்றைத் தாம் உரைத்திட ஆடல்வல்லானின் அருள் வேண்டி நின்கிறார்.

அப்போது "உலகெலாம்' எனும் அசரீரி வாக்கு (வான் வாக்கு) அம்பலவாணர் சந்நிதியிலிருந்து எழ, "உலகெலாம்' என்ற அந்த இறைவாக்கையே - சொற்றொடரையே சிரமேற்கொண்டு திருத்தொண்டர் புராணத்தை விரிநூலாக 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வரலாற்றை விரித்துரைக்கிறார்.

பெரியபுராணத்தில் உள்ள ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றையும் நிறைவு செய்யும்போது, அந்த நாயன்மார்களின் திருவடிகளை வணங்கி, அடுத்த நாயன்மார் புராணம் தொடங்கப் போவதாக சேக்கிழார் கூறுவார். இந்தப் பண்பு எந்த நூலாசிரியரிடமும் இல்லாத உயரிய பண்பு.

சைவ சித்தாந்தக் கருத்துகள் பெரியபுராணத்தில் விரவிக் காணப்படுவதுடன், பாயிரத்தின் முதல் பாடலான "உலகெலாம்' என்ற பாடலிலேயே இறைவனின் இயல்பு கூறப்படுகிறது. இரண்டாவது பாடல், மானுடப்பிறவி எடுத்ததன் பயனை உணர்த்தும் பொருட்டு "ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச் சாரும்' என்று கூறப்பட்டுள்ளது. இங்கு, "மானுடப் பிறவி தானும் வகுத்தது மனம்,வாக்கு, காயம் ஆனிடத்து ஐந்தும் ஆடும் அரன் பணிக்காக அன்றோ' என்கிற மெய்கண்ட சாத்திரமான "சிவஞான சித்தியார்' பாடலை நினைவூட்டுவதாகஅமைந்துள்ளது.

மூன்றாவது பாடலில், உயிர்களை பிறவிக் குழியிலிருந்தும் எடுக்கும் தன்மை உடையது இந்தப் பெரியபுராணம் என்பதை "எடுக்கு(ம்) மாக்கதை' என்னும் தொடரால் குறிக்கிறார் சேக்கிழார். நான்காவது பாடலில், உள்ளும் புறமும் தூய்மை உடைய அடியார்களின் கூட்டத்தைப் "புனிதர் பேரவை' என்கிறார். 10-ஆவது பாடலில், இந்நூலுக்குத் "திருத்தொண்டர் புராணம்' என்னும் பெயர் சூட்டியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார். "பந்தம் வீடு தரும் பரமன் கழல்' என்று 300-ஆவது பாடலில் சேக்கிழார் பெருமான் அருளிச் செய்திருப்பது சிறந்த சைவ சித்தாந்தக் கருத்தைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.

ஸ்ரீஆறுமுகத் தம்பிரான் பெரியபுராணத்தில் கலிக்காமர் புராணம் 234-ஆவது திருப்பாட்டு வரை உரை எழுதிய நிலையில் அவர் இறைவனடி சேர, உரை நிறைவடையாத நிலையில், சிதம்பரம் ஈசான்ய மடத்து ஸ்ரீஇராமலிங்க சுவாமிகள் தொடர்ந்து உரை எழுதி நிறைவு செய்திருக்கிறார். அத்தகைய சிறந்த பேரிலக்கியத்தை நான்கு தொகுதிகளாக மறுபதிப்பு செய்திருக்கும் ஜெ.மோகனுக்கு சைவ உலகம் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

மூலப் பிரதியிலிருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிவந்துள்ளன. பெரியபுராண செய்யுளைச் சந்தி பிரித்து மூலச் செய்யுள்களுக்குக் கீழே தரப்பட்டுள்ளது. பக்க எண்களும், செய்யுள்களுக்கான தொடர் எண்களும் நடைமுறையில் உள்ளவாறு மாற்றப்பட்டிருக்கின்றன. மிக எளிய உரை விளக்கத்துடன் கூடிய மேற்கோள் இலக்கண விளக்கங்கள், சொற்களுக்கான விளக்கங்கள், பத சாரங்கள், சைவ நுண்பொருள் விளக்கம் போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன.

திருமுறைகண்ட புராணம், திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிக்கோவை, அறுபத்துமூன்று நாயன்மார் திருநட்சத்திரம், புராணத்தின் மூலமும் உரையும், நம்பியாண்டார் நம்பி கலித்துறைத் திருவந்தாதி எனத் தொடங்கும் இந்நூல், பெரியபுராணத்தை (நாயன்மார்கள் வரலாற்றை) விரித்துரைக்கிறது. திருத்தலத்தின் அட்டவணை, அந்தந்த திருத்தலத்தில் ஓதிய தேவாரப் பாடலின் முதல் வரியும் அதற்கான பண்ணும், சொற்பொருள் அகராதி, நாயன்மார்கள் வரலாற்றைச் சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் முதலியவற்றையும் இணைத்திருப்பது நூலை மெருகேற்றியுள்ளது.

பெரியபுராணம், சிவபரம்பொருள் தம் மெய்யடியார்களுக்கு அருளிய திறனையும், மெய்யடியார்களின் வரலாற்றையும் மட்டுமே விரித்துரைக்கவில்லை. அக்காலத்திய மக்களின் வாழ்க்கைமுறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பழக்க வழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், பல்வேறு இனத்தாரின் - குலத்தாரின் தொழிற் சிறப்பு, மனித நேயம், அறநெறிகள், நீதிநெறிகள் முதலிய பல்வேறு சிறப்புகளையும் ஒருங்கே எடுத்துரைக்கும் ஒரு மாபெரும் தமிழ்க் காப்பியமாகவும் திகழ்கிறது பெரியபுராணம்.

"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்கிற ஒளவையின் அருள்வாக்கே பெரியபுராணத்தின் சாரமாகும்; அதுவே சேக்கிழார் பெருமானின் திருவாக்காகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com