தலைமுறை... தலைமுறையாக!

100 ஆண்டுகளுக்கு முன்னர் 1919 ஏப்ரல் 13 - இல் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நம் மக்கள் மீது நடத்திய மிகவும் மோசமான தாக்குதல்களில் ஒன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை.
தலைமுறை... தலைமுறையாக!

100 ஆண்டுகளுக்கு முன்னர் 1919 ஏப்ரல் 13 - இல் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நம் மக்கள் மீது நடத்திய மிகவும் மோசமான தாக்குதல்களில் ஒன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை. ஆங்கிலேய ஆட்சியாளர்களுடைய மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய - எந்த ஆயுதங்களும் இல்லாத - ஆயிரக்கணக்கான மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்ற நாள் அது.
 ஆங்கிலேய ஆட்சியாளர்கள் "ரவுலட் சட்டம்' என்று சொல்லப்படும் "குழப்பம் மற்றும் புரட்சிகர குற்றங்கள் சட்டத்தை' 1919 மார்ச்சில் கொண்டு வந்தனர். அனைத்துவிதமான அரசியல் எதிர்ப்புகளையும் அழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்தின்படி, அரசு தனது விருப்பம் போல யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; விசாரணையின்றி சிறையில் தொடர்ந்து அடைத்து வைக்கலாம். கைது செய்யப்பட்டவர்களின் அரசியல் குற்றங்களைப் பற்றிய விசாரணையை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்தலாம். எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கலாம். இதற்கான அதிகாரங்களை "ரவுலட் சட்டம்' ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு வழங்கியது.
 ரவுலட் சட்டத்திற்கு எதிராக பொது மக்கள் நாடு முழுவதும் திரண்டனர். பஞ்சாபில் அந்த எதிர்ப்பு தீவிரமாக இருந்தது. அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 10 அன்று - 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினார்கள். பேரணியில் சென்ற மக்கள் மீது, ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் கடுமையான காயமடைந்தனர். இது மக்களின் கோபத்தை அதிகரித்தது. இந்நிலையில் ஏப்ரல் 12 -ஆம் தேதி பொதுக்கூட்டங்களுக்கும், மக்கள் ஒன்று கூடுவதற்கும் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
 ஏப்ரல் 13 -ஆம் தேதி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஜாலியன் வாலாபாகில் ஒன்று கூடினர். அவர்கள் ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும் ஏப்ரல் 10 - ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகவும் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அப்போது அங்கு வந்த ஜெனரல் டயரும் அவனுடைய படைகளும் அந்த பூங்காவிலிருந்து வெளியேறுவதற்காக இருந்த ஒரே ஒரு பாதையையும் அடைத்தனர்.
 அதன் பிறகு, தொடர்ந்து பத்து நிமிடங்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெளியேற முடியாத மக்களில் 1500 - க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இது இந்திய வரலாற்றில் "ஜாலியன்வாலாபாக் படுகொலை' என அழைக்கப்படுகிறது.
 அந்த துப்பாக்கிச் சூடு நடந்தபோது அங்கிருந்த ஒருவர் உயிர் பிழைத்துவிட்டார். மேடைக்கு அடியில் அவர் ஒளிந்திருந்ததால் தப்பித்துவிட்டார். அவர் ஒரு மருத்துவர். பெயர் சாஸ்தி சரண் முகர்ஜி. மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். தனது மருத்துவ சேவையை அகமதாபாத் நகரில் செய்து வந்தார்.

அப்போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த மதன் மோகன் மாளவியாவின் ஆணைப்படி பஞ்சாபில் காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கான பொருத்தமான இடத்தைக் கண்டறிவதற்காக அமிர்தசரஸ் வந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு அவர் மனதை உலுக்கிவிட்டது. ஒன்றுமறியாத மக்கள் கொல்லப்பட்டதை நேரில் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கே அவருக்கு நீண்டகாலமாயிற்று. அதன் பிறகு படுகொலை நடந்த அந்த இடத்தை காங்கிரஸ் கட்சி கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சாஸ்தி சரண் முகர்ஜி முன் வைத்தார்.
 ஆனால் அந்தப் படுகொலைக்கான சாட்சியமாக ஜாலியன் வாலாபாக் இருக்கக் கூடாது என்று ஆங்கிலேய அரசு நினைத்தது. அந்த இடத்தை துணிக்கடைச் சந்தையாக மாற்ற அது திட்டமிட்டது.
 சாஸ்தி சரண் முயற்சியால் இந்திய தேசிய காங்கிரஸ் அந்த இடத்தை தியாகிகள் நினைவிடமாக ஆக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றி, ஆங்கிலேய அரசுக்கு அதற்கான விண்ணப்பத்தையும் அளித்தது. வேறுவழியில்லாமல் அந்த இடத்துக்கு 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை விலையாக அரசு நிர்ணயித்தது.
 ஜாலியன் வாலாபாக்கை வாங்குவதற்காக நிதி தருமாறு மக்களிடம் காந்தி வேண்டுகோள் விடுத்தார். சாஸ்தி சரண் முகர்ஜி வீடு வீடாகச் சென்று 9 லட்சம் ரூபாய்க்கும் மேல் அதற்காக நிதி திரட்டினார். தியாகிகள் நினைவிடம் உருவாக்கப்பட்டது. சாஸ்தி சரண் முகர்ஜி அதன் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த நினைவிடத்தைப் பாதுகாப்பது ஒன்று மட்டுமே அவருடைய வாழ்வின் குறிக்கோளாக இருந்தது. 1962 - இல் சாஸ்தி சரண் மறைந்தார். அதற்குப் பிறகு ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தை அவருடைய மகன் பாதுகாத்து வந்தார். இப்போது அதைப் பாதுகாத்து வருபவர் சாஸ்தி சரண் முகர்ஜியின் பேரனான சுகுமார் முகர்ஜி.
 சுகுமார் முகர்ஜிக்கு இப்போது வயது 65.
 " என்னுடைய அப்பாவுடன் இணைந்து 1978- இல் இருந்தே இந்த நினைவிடத்தைப் பாதுகாக்கும் பணியை நான் செய்து வந்தேன். 1988 - இல் என்னுடைய அப்பா மறைந்தார். அதன் பிறகு முழுமையாக இதைக் கவனித்துக் கொள்கிறேன்'' என்று கூறும் சுகுமார் முகர்ஜி, ஒரு வங்கிப் பணியாளராவார்.
 "அரசும், ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளையும் இந்த நினைவிடத்தின் வளர்ச்சிக்காக தங்களால் முடிந்த அளவு திட்டமிட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன'' என்கிறார்.
 முகர்ஜி இந்த நினைவிடத்தில் உள்ள ஓர் அறை மட்டுமே உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார். அதற்கு மிக அதிகமான வாடகையையும் கொடுக்கிறார். ஆனால் அதைப் பற்றி முகர்ஜியோ அவருடைய குடும்பத்தினரோ கவலைப்படுவதில்லை.
 நினைவிடத்தைப் பார்வையிடுவதற்காக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசுப் பொறுப்பில் உள்ள பெரிய அதிகாரிகள் யாராவது வருவதாக முன்கூட்டியே தெரிவித்தால், அவர்கள் இங்கு வந்து மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை முகர்ஜி செய்து வைக்கிறார். மெழுகுவர்த்திகளை வாங்கி வைக்கிறார்.
 இதற்காக ஆகும் செலவை எப்படிச் சரிக்கட்டுகிறீர்கள் என்று கேட்டால், ""நினைவிடத்துக்கு வருகிற ஒவ்வொருவரிடமும் நுழைவுக்கட்டணமாக ரூ.2 வசூலிக்கிறேன்'' என்கிறார்.
 "இங்கு வரும் சாதாரண மக்களில் பலர் இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தியாகிகள் நினைவிடம் என்பதை மறந்துவிடுகிறார்கள். குப்பைகளைக் கண்ட இடத்தில் போடுகிறார்கள். நினைவிடத்தைத் தூய்மையாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கிருப்பதில்லை'' என்கிறார் சுகுமார் முகர்ஜி.
 - ந.ஜீவா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com