Enable Javscript for better performance
வாயு உபாதைகளைப் போக்க...!- Dinamani

சுடச்சுட

  

  வாயு உபாதைகளைப் போக்க...!

  By DIN  |   Published on : 24th November 2019 11:32 AM  |   அ+அ அ-   |  

  ayl

  ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
   என் வயது 83. சர்க்கரை பிரச்னை போன்ற எதுவும் இல்லை. ஆனால் வாயுத் தொல்லை உள்ளது. அஷ்ட சூரணம் தான் சாப்பிடுகிறேன். வாயு பதார்த்தம் எதுவும் சாப்பிடுவதில்லை. ஆனாலும் வாயுத் தொல்லை தீரவில்லை. இதற்கான தீர்வு ஆயுர்வேதத்தில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
   -கே. வேலுச்சாமி, தாராபுரம்.
   "வாதம் ஸ்நேஹேன மித்ரவத்'" என்று ஆயுர்வேதம். நண்பனை ஸ்நேஹம் எனும் அன்புடன் எப்படி அரவணைத்துக் கொள்வோமோ அதுபோல, மனித உடலில் எங்கும் சஞ்சரிக்கக் கூடிய வாயுவை ஸ்நேஹம் எனும் நெய்ப்புப் பொருட்களால் அரவணைத்து சீற்றமுறச் செய்துவிடாமல் கவனித்துக் கொள்ளுதல் அவசியமாகும் என்று அதற்கு அர்த்தம் கூறலாம்.
   நான்கு வகையான நெய்ப்புப் பொருட்களாகிய நெய் - மஜ்ஜை- வஸை எனும் மாமிசக் கொழுப்பு- தைலம் (எண்ணெய்) ஆகியவற்றால் நீங்கள் உங்கள் உடலில் பரவியுள்ள வாயுவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
   இயற்கையாகவே, வயோதிகத்தில் பசியை ஏற்றமாக சில சமயங்களிலும் குறைவாக சில நேரங்களிலும் செய்துவிடக் கூடிய தன்மையை குடல் வாயு பெற்றிருக்கும் என்பதால், இவை நான்கில் எது தங்களுக்கு குடலில் சீரான செரிமானத்திற்கு பயன்படுத்தப்பட்டு, உடல் உட்புறப் பகுதிகளுக்கு அவற்றின் குணங்களைக் கொண்டு சென்று, வாயுவிற்கு எதிராகச் செயல்படுமோ அவற்றை மட்டுமே ஜாக்கிரதையுடன் கையாளப்பட வேண்டும். அதனால் பசியின் தன்மை என்பது நபருக்கு நபர் மாறக் கூடும்.
   அதைப் பற்றிய விவரத்தை மருத்துவரிடம் எடுத்துக் கூறி, மூலிகை மருந்துகளை இட்டு காய்ச்சித் தயாரிக்கக் கூடிய இந்த நெய்ப்புப் பொருட்களை உள்ளும் புறமுமாகப் பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறலாம். இவற்றை உணவாக நீங்கள் சாப்பிட்டால், உடல் மென்மை, பலம், நிறம், மழமழப்பு ஆகியவை அதிகரித்து வாயுவைக் குறைக்கும். வயிற்றில் வாயு தடைபடாதிருக்கவும், இரைப்பை முதலியவற்றின் சவ்வின் மேல் பாதிப்பு ஏற்படாதிருக்கவும் மென்மை ஏற்படவும் நெய்ப்புத் தேவை. இவை முன் குறிப்பிட்ட நெய் - மஜ்ஜை முதலியவற்றால் கிட்டுகிறது. நெய்யும் எண்ணெய்யும் நேரடியாகச் சேர்க்க முடியாத நிலையில் கூட, பால், தயிர், எள், தேங்காய் முதலியவற்றைச் சேர்ப்பதால் கிடைத்து விடுகிறது. நெய்ப்பின்றி செல்லும் உணவும் ஜீரணத்திற்கு கெடுதலே.
   புழுங்கலரிசியுடன் கோதுமை முதலிய தானியங்களையும், பாசிப்பயறு முதலிய பருப்புகளையும் சேர்த்துச் சிறிது வறுத்துக் குருணையாக்கி 60 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கால்லிட்டர் மீதமாக்கும்படி கஞ்சியாக்கியது புஷ்டிதரும் கஞ்சி. வயிற்றில் கனமும் வாயுவும் தங்கியிருந்தால் இதில் சுக்கைச் சீவல் போல் மெல்லியதாகச் சீவிப்போட்டு கஞ்சிவைத்து, அதில் ஆயுர்வேத மருந்தாகிய இந்துகாந்தம் எனும் நெய்யை 5 - 10 மி.லி. உருக்கிச் சேர்த்து, சிறிது இந்துப்பு கலந்து காலை உணவாக வெது வெதுப்பாகச் சாப்பிட, உங்களுடைய வாயுத் தொல்லை குறைந்து உடலும் புஷ்டி அடையும்.
   அமுக்கறாக் கிழங்கு எனும் அஸ்வகந்தா சூரணம் நல்ல தரமாக தற்சமயம் விற்கப்படுகிறது. 3 - 5 கிராம் அதை எடுத்து சுமார் 100 - 120 மி.லி. சூடான சர்க்கரை கலந்த பாலுடன் மாலை வேளையில் சாப்பிட, வாயுவினால் வலுவிழந்த தளர்ந்த தசைகள் வலிமை பெற்று முறுக்குடன் இயங்கும். ரத்தக் குழாய் தளர்ச்சி நீங்கி, ரத்த ஓட்டம் சீராகும்.
   உள்ளும் புறமும் நெய்ப்பு தரும் தாவர எண்ணெய் வித்துகளில் மிகச் சிறந்தது எள்ளு. உடற்சூட்டைப் பாதுகாக்கும். சுவையில் இனிப்பும் துணையாக கசப்பும் துவர்ப்பும் தோலுக்குப் பதமளிக்கும். எளிதில் ஊடுருவிப் பரவும். கேசம் செழிப்பாக வளர உதவும். கண்ணிற்கு ஒளி பலம் தரும் உணவுப் பொருள். வாயுவைக் கண்டிக்கும். வயிற்றின் அழற்சியைக் குறைக்கும். ரத்தக் கட்டைக் கரைக்கும். தொண்டைப்புண்ணை ஆற்றி இனிய குரல் தரும். எள்ளை வறுத்துப் பொடி செய்து நீங்கள் மதிய வேளையில் சூடான சாதத்துடன் கலந்து, அதில் 3 -5 மி.லி. விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை விட்டுப் பிசைந்து சாப்பிட, உடல் வலிவு பெறும். வாயு உபாதைகளைத் தீர்த்து தசை நார்களை வலுப்படுத்தும்.
   திங்கள் - புதன் - சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய்யை இளஞ்சூடாக தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்துக் குளிக்கவும். புத்திக்குத் தெளிவு, கண்களுக்குக் குளிர்ச்சி, பார்வைத் தெளிவு, உடம்பின் பூரிப்பு, புஷ்டி, வலிவு, தோலின் மென்மை, தோலுக்கு வலிமை, எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றைத் தரக்கூடியது. பல மூலிகைகளை நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சக் கூடிய க்ஷீரபலா தைலத்தைத் தலைக்கும், மஹா மாஷ தைலத்தை உடலுக்கும் நீங்கள் பயன்படுத்தினால், மேற்குறிப்பிட்ட நன்மைகள் மேலும் இரட்டிப்பாக உங்களுக்குக் கிடைக்கும்.
   (தொடரும்)
   பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
   ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
   நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
   செல் : 94444 41771
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai