Enable Javscript for better performance
மாறியது நெஞ்சம்- Dinamani

சுடச்சுட

  
  kadhir3


  பூஜையை முடிச்ச கையோட மருமக கவிதா அன்போட பரிமாறின இட்லிய வெங்காய சட்னியோட ஒரு பிடி பிடிச்சிட்டு... திருப்தியோட ஏப்பம் விட்டவாறே ஹாலுக்கு வந்த சாமிநாதனைப் பார்த்து,   ""என்னங்க... ப்ரகாஷ், கவிதா கல்யாண ஆல்பம் வந்துருச்சுங்க. வாங்க ரெண்டு பேருமாப் பார்க்கலாம்''னு மரகதம் ஆல்பத்தைப் பிரிக்க, சாமிநாதனுக்கோ  நினைவுகள் பின்னோக்கிப் பறந்தன.

  இப்படித்தான் அன்னைக்கும் காலைல டிஃபனை முடிச்சுகிட்டு ஹாலில் உட்கார்ந்திருந்த கணவருக்கு காஃபி கொண்டு வந்த மரகதம், ""என்னங்க... நீங்க.  செய்யறது  உங்களுக்கே நல்லா இருக்கா?'' என்று கேட்க,  மரகதத்தின் கேள்வியிலிருந்த உட்பொருளைக் கண்டு கொள்ளாமல் மரகதம் கொண்டு வந்திருந்த காப்பி டம்ளரைக் கையில் வாங்கின சாமிநாதன்.

  “""என்ன செய்றது மரகதம்?  காப்பி குடிக்க வேண்டாம்னு டாக்டர் சொல்லியும் ஒரு வேளையாச்சும் காப்பி குடிக்கலேன்னா பயித்தியம் புடிச்ச மாதிரி ஆயிடுதே''ன்னார் வெள்ளந்தியாக. 

  ""அய்யோ நீங்களும் உங்க காஃபியும்.  நான் சொல்ல வந்ததப் புரிஞ்சிக்காம''” என்று அலுத்துக் கொண்டாள் மரகதம்.

  ""நம்ம பையனோட எதிர்காலத்தப் பத்தி உங்க மனசுல ஏதாவது  நெனப்பு இருக்கா, இல்லையா? அவனோட கல்யாணத்தப் பத்தி அவங்கிட்டப் பேசினீங்களா இல்லையா? எங்கிட்டதான் அவன் எதுவும் சொல்லமாட்டேன்கிறான். நீங்களாவது அவனுக்குப் புத்தி சொல்லக் கூடாதா? மூணு மாசமா தீ விபத்துல சிக்கி இறந்து போன அவன் சிநேகிதன் ரமேஷ் நெனப்புலயே இருக்கான். சரியா சாப்புடறதில்ல. தூங்கறதில்ல. இப்படியே போனா இவனுக்கும் ஏதாவது ஆயிரும் போல இருக்குங்க'' 

  ""என்ன மரகதம்... நான் அவங்கிட்ட இதப் பத்தி பேசாம இருப்பனா?  நேத்து கூட பேசினேன். இந்த வாரம் ஊருக்கு வரட்டும். நேர்லயே கேட்டுடறேன். என்னதான் மணிக்கணக்கா செல்லுல பேசினாலும் நேருக்கு நேர மூஞ்சியப் பாத்து பேசறாப்புல ஆகுமா?''

  "" ம்...ம்... அந்த மகராசன் ரமேஷ் மட்டும் உசுரோட இருந்திருந்தா,  ப்ரகாஷ் மனசை மாத்தி அந்த நர்சுப் பொண்ணு கவிதாவையே இவனுக்கு முடிச்சு இருக்கலாம்.  அத்தனை உறுதியா ரமேஷ் எங்கிட்ட சொன்னாப்புல. அப்பா நீங்க எதுக்கும் கவலைப் பட வேணாம். நானாச்சு அவன் மனச மாத்துறதுக்குன்னு சொல்லிட்டு சிரிச்சு கிட்டே போன புள்ள இப்ப இல்லேனு நெனச்சுப் பாக்க என்னாலயே ஆகலையே''

  ""ஒண்ணாங் கிளாஸ்ல இருந்து கூடப் பொறந்த பொறப்பு கணக்கா ஒண்ணாவே வளந்த சிநேகிதன் நெனப்பு ப்ரகாஷ் மனச விட்டு அவ்வளவு சீக்கிரம் போயிடுமா என்ன?  கொஞ்சம் விட்டுதான் புடிக்கணும் மரகதம். அவனுக்குனு ஒருத்தி பொறந்துதான இருப்பா? இரு பாப்போம். சரி நான் கடைக்குக் கௌம்பறேன். மதிய சாப்பாட்டை கடைக்கே அனுப்பிடு என்ன? நீயும் கொஞ்சம் மனசப் போட்டு அலட்டிக்காம நேரத்துக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடு'' என்று     மனைவிகிட்ட  கனிவாகப் பேசிட்டுத் தன்னுடைய மளிகைக் கடைக்கு  கிளம்பியவருக்கும் ரமேஷின் நினைவு மனசை விட்டு அகலவில்லை. தான் என்ன செய்வது? விதி போடும் முடிச்சை அவிழ்க்க மனிதனால் முடிகிறதா? 

  ப்ரகாஷும், ரமேஷும் திருப்பூரில் ஒன்றாவது படிக்கும் போதிருந்து கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை ஒண்ணாப் படிச்ச உசுருக்குசுரான சிநேகிதங்க.  படிப்பு முடிஞ்சு ரெண்டு பேரும்  வேலைக்காகப் பல போட்டித் தேர்வுகளை எழுதிக்கிட்டிருந்த சமயம், ரமேஷோட அப்பாக்கு உடம்புக்கு முடியாம, படுத்த படுக்கையாகிவிட,  அவர் நடத்திக்கிட்டிருந்த டெக்ஸ்டைல் பிசினஸ்ûஸ ரமேஷ் எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை.  ப்ரகாஷ் வங்கித் தேர்வு ஒண்ணுல பாஸாகி சென்னையில் வேலையில் சேர வேண்டியிருந்தது. ரமேஷ் திருப்பூர்லயும், ப்ரகாஷ் சென்னையிலும் இருக்க வேண்டிய நிலையில் ரெண்டுபேரும் பிரிவாற்றாமையில் ரொம்பவே நொந்து போய்ட்டாங்க.  சரி வாரா வாரம் ப்ரகாஷ் திருப்பூர் வந்துட வேண்டியது. அவனால வர முடியலயினா அந்த வாரம் ரமேஷ் சென்னைக்குப் போக வேண்டியதுங்கிற  ஒப்பந்த  அடிப்படையில் ப்ரகாஷ் சென்னையில் வேலையில் சேர்ந்தான்.

  மகனுக்கும் வேலை கிடைச்சுருச்சு. சென்னையில் எத்தனை நாளைக்கு ஓட்டல் சாப்பாடு சாப்பிடுவான்? அவனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுடலாம்னு ஒரு நல்ல நாள் பார்த்து ஜாதகத்தை தெரிந்த ஒரு தரகரிடம் கொடுத்தாங்க சாமிநாதன் தம்பதி. 

  ப்ரகாஷும் ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கும் போதே திட்டவட்டமாக சொல்லி விட்டான்.  “

  ""அப்பா... அம்மா.... உங்க ரெண்டு பேர் மனசுக்கும் மனசுக்கு நிறைவா,  பிடிச்சிருந்தா மட்டும் எனக்கு ஃபோட்டோ அனுப்புங்க.''

  ""பொண்ணு பாக்க ரமேஷையும் கூட்டிட்டுப் போறோம். பொண்ணைப் பாக்குறோம். பேசி முடிக்கிறோம்''

  ""சும்மா சும்மா பொண்ணு பாக்கப் போகணும்; லீவு போட்டுட்டு வான்னு சொல்லாதீங்க. எனக்கு லீவும் கிடைக்காது. அது மட்டுமில்லாம நான் பாக்கப் போற மொதல் பொண்ணையே என் மனைவியா ஏத்துக்கணும்னு மனசுக்குள்ள ஒரு சபதம், லட்சியம் வெச்சிருக்கேன். தயவு செஞ்சு அதுக்குப் பங்கம் வர்ற மாதிரி பண்ணிடாதீங்க. அப்புறம் வரதட்சணை அதுஇதுன்னு எந்த பிரச்னையும் வரக் கூடாது''ன்னு” திட்ட வட்டமா சொல்லிட்டுக் கிளம்பிட்டான் சென்னைக்கு.    

  "ஆணழகனான தங்களோட மகனுக்குப் பேரழகியாக ஒரு மனைவி அமையணும். படிச்சிருந்தா போதும். வேலைக்குப் போகணுங்கிற அவசியமில்லை. அவள் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை'   என்பது மங்களத்தோட ஆசை.  சாமிநாதனுக்கோ அழகு கூட இரண்டாம்பட்சம் தான். வரப்போகும் மருமகதங்கள் குடும்பத்திற்கு ஏத்தவளா, நல்ல குணவதியா இருக்கணும்ங்கிற எதிர்பார்ப்பும்,  அழகும், நல்ல குணமும் மட்டுமே போதும் என்ற அடிப்படையில் இதுவரை வந்த எந்த ஜாதகமும் சரி வராமல் மனம் சோர்ந்த நிலையில் இருந்தப்பதான் மூணு மாசத்துக்கு முன்ன தரகர் ப்ரகாஷுக்காக ஒரு ஜாதகமும் புகைப்படமும் கொண்டு வந்தார். இதுவரை அவர் கொண்டு வந்த வரன்கள் எல்லாம் மரகதம் சாமிநாதன் இருவராலுமே நிராகரிக்கப் பட்டாச்சு. ஆனா கவிதாவின் போட்டோவைப் பார்த்ததுமே இவதான் நம்ம மருமகங்கிற எண்ணம் ரெண்டு பேருக்குமே வந்துருச்சு.    அந்த அளவுக்கு அவங்களுக்குப் பொண்ணை பிடிச்சுப் போச்சு.    பொண்ணை மகனுக்குப் பிடிக்கணுமேன்னு மரகதம் எல்லா தெய்வங்களையும் வேண்டிகிட்டதோட, அவனுடைய உயிர்த் தோழன் ரமேஷுக்கும் போட்டோவைக் காட்டி அபிப்ராயம் கேட்டுக்கிட்டுதான் ப்ரகாஷ்க்கு வாட்ஸ் அப்பில் போட்டோவை அனுப்பினாங்க.    

  அவனும், "" பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. பொண்ணுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கோங்க. அதுக்கப்புறமா பொண்ணைப் பாக்கப் போலாம். என்னோட லட்சியம்தான் உங்களுக்குத் தெரியுமே.  ஒரே ஒரு பொண்ணைத்தான் பார்ப்பேன்... அவங்களத்தான் கல்யாணம் செய்துக்குவேன்''” என்று அவனுடைய நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதியாகச் சொல்லிவிட்டான்.  

  பெண்ணுக்கும், ப்ரகாஷைப் பிடித்திருக்கிறது என உறுதியாகத் தெரிந்தவுடன்தான் பெண் பார்க்கும் படலத்திற்கும் நாள் குறிச்சாங்க பெரியவங்க.  அந்த நாளும் வர ப்ரகாஷ், ரமேஷ், மரகதம், சாமிநாதன், தரகர்னு அஞ்சு பேரும் பொண்ணு பாக்கப் போனாங்க.

  போட்டோவைக் காட்டிலும் நேரில் பன்மடங்கு அழகாகத் தெரிஞ்ச கவிதாவைக் கண்டதும் மனசுக்குள் கவிதையே பாட ஆரம்பிச்சுட்டான் ப்ரகாஷ்.  ரெண்டு வீட்டாருக்கும் திருப்தினு தெரிஞ்ச பிறகு,  மற்ற விஷயங்களை எல்லாம் பேச ஆரம்பித்த போதுதான் கவிதாவின் அப்பா பெருமையாக, “ ""படிச்சு முடிச்சு இத்தனை நாளா வேலைக்கு ஆர்டர் வரும்னு எம்பொண்ணு ஆசை ஆசையாக் காத்துகிட்டிருந்தா. ஆனா இப்ப பாருங்க... மாப்பிள்ளை ஜாதகம் எங்க கைக்கு வந்த அன்னைக்கே வேலைக்கும் ஆர்டர் வந்திருச்சு.  எல்லாம் மாப்பிள்ளையோட அதிர்ஷ்டம்தான்''னு” புளகாங்கிதத்தோடு சொன்னார்.

  ""அப்படியா தரகர் சொல்லவே இல்லையே'' என்று”சாமிநாதன் திகைக்க...

  ""இல்லைங்க. அவருக்கும் தெரியாது. நாம நேர்ல பார்க்கும்போது சொல்லிக்கலாம்னு அவர்கிட்டவும் சொல்லல... கவிதா அடுத்த வாரம் வேலைல சேரணும்'' என்றார் கவிதாவின் அப்பா.

  ""அப்படியா எங்க என்ன வேலை?'' என்று அப்பதான் கொஞ்சம்கொஞ்சமா கவிதாவோட மயக்கத்திலிருந்து மீண்டு வந்த ப்ரகாஷ் கேட்க,  

  ""நர்சு வேலைதாங்க மாப்பிள. கவிதா பி.எஸ்சி நர்சிங்க் தான படிச்சிருக்கு. ட்ரெய்னிங்கும் முடிச்சிருக்கே. அதுவும் ஸ்டேட் ரேங்க்ல பாஸ் பண்ணி தங்க மெடல் எல்லாம் வாங்கி இருக்குதுங்களே. அம்மிணி போய் உன்னோடஅப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டர், கோல்ட் மெடலை எல்லாம் எடுத்தாந்து உங்க மாமியார், மாமனார் கிட்டவெல்லாம் காமிச்சு ஆசீர்வாதம் வாங்கிக்கோ''”  எனச் சொல்ல தலை கிறுகிறுத்துப் போயிருச்சு ப்ரகாஷ்க்கு. மெதுவா ரமேஷ் காதுல, ""டேய் பொண்ணை வேலைக்கெல்லாம் அனுப்ப வேணாம்னு சொல்லுடா. அதுவும் நர்ஸ் வேலையாமில்ல''னு கெஞ்ச...

  ""டேய்... டேய்... சும்மாயிருடா.   நான் பேசிப் பாக்கிறேன்''”என்று  அவனை அடக்கிய ரமேஷ், ""அப்பா பொண்ணு வேலைக்குப் போறதுல ப்ரகாஷ்க்கு இஷ்டமில்லையாம். நீங்க பக்குவமா பேசிப் பாருங்க''ன்னு சாமிநாதன் காதில் கிசுகிசுத்தான். 

  ""என்ன உங்களுக்குள்றயே பேசிக்கிறீங்க? எதானாலும் சொல்லுங்க''”கவிதாவின் அப்பாவே  ரொம்ப எதார்த்தமா எடுத்துக் கொடுத்தார். 

  ""அதொண்ணுமில்லீங்க. பொண்ணு வேலைக்குப் போகணுங்கிற அவசியமே இல்லீங்க. எங்களுக்கிருக்கிறது ஒரே பையந்தான். வேணுங்கிற மட்டும் சொத்து, பத்து இருக்கு. பொண்ணு வேலைக்குப் போய் எதுக்கு கஷ்டப்படணும்னுதான்''ன்னு சாமிநாதன் இழுக்க, 

  ""என்னங்க இப்பிடி சொல்லிப் போட்டீங்க?''” கவிதாவின் அப்பா பேச ஆரம்பிக்கும் போதே இடைமறித்த கவிதா,    ""அப்பா நான் கொஞ்சம் பேசிக்கட்டுமா? பெரியவங்க எல்லாம் என்னை மன்னிக்கணும். சின்ன வயசுல இருந்தே நர்ஸ் வேலைக்குப் போகணும்கிற கனவோடயும், லட்சியத்தோடயும்தான் நான் படிச்சேன்.  புனிதமான அந்த வெள்ளை உடையை அணிஞ்சுக்கிட்டு, என்னால முடிஞ்ச அளவுக்கு மக்களுக்கு சேவை செய்யணும்கிறதுதான் என்னோட வாழ்நாள் லட்சியமே.  மருந்துகளால உடம்புக்கு வந்த நோயைத்தான் குணப்படுத்த முடியும். ஆனா நோயாளிகளோட நொந்து போன மனசை எங்களைப் போல செவிலியர்களாலதான் குணமாக்க முடியும். செவிலியர்களோட கனிவான பார்வையும், பரிவான சொற்களும் இதமான புன்னகையுமே உடம்புக்கு வர்ற பாதி நோயைக் குணப்படுத்திடும்னு  எங்களுக்கு ட்ரெயினிங்க்ல சொல்லி குடுத்திருக்காங்க.  வேலைக்குப் போய்க் கொஞ்ச வருஷங்களுக்கப்புறமா கல்யாணம் செய்துக்கிறேன்னுதான் நான் சொன்னேன்... ஆனா அப்பாதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தங்கமானவங்க... உன்னோட ஆசைக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்கனு உறுதியாச் சொன்னாரு. அதனாலதான் நானும் பொண்ணு பார்க்க சம்மதிச்சேன்.  எனக்கு வேலை கிடைச்ச விஷயத்தைக் கூட சொல்லச் சொன்னேன்.  அதுக்கும் அப்பா நேர்ல பேசிக்கலாம்னு சொல்லி என் வாயை அடைச்சிட்டாரு'' என்றாள்.

  கவிதாவின் அப்பா, ""ஏனுங்க சம்பந்தி  நர்சு வேலைங்கிறது எத்தனை புனிதமானது? அதப் போயி யாராச்சும் வேணாம்னு சொல்லுவாங்களா? ங்கிறது எம்பட எண்ணம். அதான் நான் எல்லாத்தையும் நேர்ல பேசிக்கலாம்னேன்... இதுல எந்தப்பு என்னங்க?'' என்று”பரிதாபமாகக் கேட்டார். 

  அதற்கு மரகதம், ""இப்ப அவசர அவசரமா எந்த முடிவுக்கும் வர வேணாம். வீட்டுக்குப் போய் நிதானமா பேசி முடிவு பண்ணலாம்'' என்று  சொல்ல எல்லோரும் கிளம்பினார்கள். "ப்ரகாஷ்தான் சின்ன வயசுல இருந்தே பயங்கரமான பிடிவாதக்காரனாச்சே. இவம் மனசு மாறுவது ரொம்பக் கஷ்டமாச்சே... கடவுளே நல்ல பொண்ணு... கை நழுவிப் போயிடும் போல இருக்கே'ன்னு மனசுக்குள்ளே மறுகிகிட்டே வர்றாங்க சாமிநாதன் தம்பதி.

  வரும் வழி முழுவதும் யாரோடும் பேசாமல் வந்த ப்ரகாஷ்,  வீட்டுக்கு வந்ததும்,   “""பொண்ணு பி. எஸ்சினு சொன்னீங்க. நர்சிங்னு ஏனுங்கப்பா சொல்லல. எனக்கு எப்பவுமே இந்த ஆஸ்பத்திரி, டாக்டர், நர்ஸ், ஊசி, மருந்துன்னாலே பயம்... அலர்ஜி...  சின்ன வயசுலருந்தே எனக்கு அப்டித்தான்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அம்மாவோட அம்மா ஆஸ்பத்திரில நர்ஸா இருந்தாங்க. அவங்க எத்தனை கெஞ்சிக் கேட்டாலும் பயந்துகிட்டு அவங்க பக்கத்துல கூட நான் போக மாட்டேன். இதுல அம்மாவுக்கும் எனக்கும் நெறய சண்டைகூட வந்திருக்கு. இதை எப்படி நீங்க ரெண்டு பேரும் மறந்தீங்க? நீங்க மொதல்லயே சொல்லி இருந்தா நாம பொண்ணு பாக்கவே போயிருக்க வேண்டாமே?'' என்றான்.

  ரொம்பச் சின்ன வயசுல இருந்தே அவனுக்கு ஆஸ்பத்திரி, டாக்டருங்க, நர்ஸ் இதெல்லாம் பாத்தா ஒரு இனம் புரியாத பயம், அலர்ஜினு எப்படி வேண்ணா சொல்லிக்கலாம்.  அவனுக்கு விவரம் தெரிஞ்ச பிறகு போட வேண்டிய தடுப்பு ஊசிகளைக் கூட அவனுக்குப் போடல. எப்படி போடறது? ஆஸ்பத்திரிக்குப் போனால்ல போட முடியும்? அவந்தான் ஆஸ்பத்திரின்னாலே எங்கனாச்சும் கண்காணாம போயி ஒளிஞ்சிக்கிறவனாச்சே? அப்படியும் ஒருக்கா முக்கியமா ஒரு தடுப்பூசி போட்டே ஆகணும்னு,  மரகதத்தோட அம்மா கண்டிசனா சொல்ல... ப்ரகாஷ் தூங்கிகிட்டிருக்கைல நைசா ஆசுபத்திரிக்கு எடுத்துட்டுப் போக பய சரியா ஊசியப் போடற நேரத்துக்கு கண்ணு முழிச்சுகிட்டு, பேய்க்கூச்சல் போட்டுகிட்டு ஊசி போட வந்த அவனோட அம்மாயி கைய - அவங்கதான அந்த ஆஸ்பத்திரில நர்ஸ் அவங்க கையப் புடிச்சு கடிச்சுக் கொதறிட்டான்.  பாவம் பேரனுக்கு ஊசி போடறதுக்குப் பதிலா பாட்டிக்குதான் ஏகப்பட்ட ஊசி போட வேண்டியதாப் போச்சு.  அப்ப இருந்து இப்பொ வரைக்கும் ப்ரகாஷுக்கு வந்த காச்சல், சளி இருமல் எல்லாத்துக்கும் மரகதத்தோட கை வைத்தியம்தான். 

  ""முடிவா சொல்றேன் கேட்டுக்குங்க... பொண்ணு வேலைக்குப் போகலேன்னாதான் இந்தக் கல்யாணம் நடக்கும்.  இல்லேன்னா இந்தப் பொண்ணு மட்டுமில்ல இனி எந்தப் பொண்ணையும் நான் கல்யாணம் செய்துக்கறதா இல்லே. என்னோட லட்சியம்தான் எனக்குப் பெரிசு . நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.  இதை அந்தப் பொண்ணு வீட்டுலயும் தெரியப்படுத்திருங்க''

  ""இங்க பாருடா ப்ரகாஷ்... பொண்ணு பி. எஸ்சினு தான் அவங்க குடுத்த பயோ-டேட்டால போட்டிருந்தது. நர்ஸிங்கா இருக்கும்னு நாங்களும் நெனச்சுப் பாக்கலை.   அப்படியே இருந்தாலும் எதோ சின்ன வயசுல ஒரு பயத்துல உனக்கு அப்படி இருந்திருக்கலாம்.  இப்பவுமா அப்படியே இருப்பே?   யாராச்சும் கேட்டா சிரிக்கப் போறாங்க... ஏன்டா உனக்கு மட்டும்தான் லட்சியம் இருக்குமா?அந்தப் பொண்ணும்தானே சின்ன வயசுலருந்து லட்சியத்தோடஒரு கனவோட படிச்சிருக்கு. ஜெயிச்சிருக்கு'' 

  ""இருக்கட்டும்பா... வேற எந்த வேலைன்னாலும் பரவாயில்ல... இந்த வேலை மட்டும் வேணாம்... என்னை விட்ருங்க''” சொல்லிட்டுக் விர்ருனு கௌம்பிட்டான் ஊருக்கு.

  அதுக்குள்ள ஏதோ அவசரமா போன் வரவும், ரமேஷும் கிளம்ப எத்தனிக்க, சாமிநாதன், ""ரமேசு நீதான்  ப்ரகாஷுக்கு சொல்லிப் புரிய வெக்கணும். நல்ல சம்பந்தம். கை நழுவிடும்டா... இவன் என்ன பெரிய்ய இவனாட்டம் பேசறான்?''னு கோபத்தில் குதிக்க ""கவலையேபடாதீங்கப்பா... நான் பாத்துக்கிறேன்'' என்று”அவரைத் தோளோடு தோளா அணைச்சு ஆறுதல் சொல்லிட்டு ரமேஷும்  கிளம்பிப் போக, பெரியவங்க ரெண்டு பேரும் "இதென்னடாகிணறு வெட்டப் பூதம் கிளம்பின மாதிரி ஆயிடுச்சே... இவன் பெரிய பிடிவாதக் காரானாச்சே' என்று  ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துகிட்டு உக்காந்துகிட்டாங்க. 

  அடுத்த நாள் விடிஞ்சது. ஆனா நல்லதனமா விடியல... ரமேஷோட கம்பெனில தீப் பிடிச்சுகிட்டதாகவும் முக்கியமான ஃபைல், லேப்-டாப்பை எல்லாம் எடுக்க உள்ளே போன ரமேஷ் பலத்த தீக்காயங்களோட ஆஸ்பத்திரில இருக்கறதாகவும் தகவல் வர சாமிநாதன் தம்பதி அலறியடிச்சுகிட்டு ஓடினாங்க. ப்ரகாஷும் பதறிகிட்டு வந்து சேர்ந்தான்.  கண்ணும் கருத்துமா பதினஞ்சு நாள் சிநேகிதனைப் பக்கத்திலிருந்து கவனிச்சும் நண்பனைக் காப்பாத்த முடியாமப் போனதுல கவலைப்பட்டே உருகிப் போனான். யந்திரத்தனமா மாறிப் போனான்.  ஒரு சிரிப்பில்ல... கேட்ட கேள்விக்கு மட்டும் ஒத்த வார்த்தயில பதில். இந்த நெலமையில எப்படி அவங்கிட்ட கல்யாணத்தப் பத்தி பேச? ரமேஷ் இருந்திருந்தா ப்ரகாஷ் மனசை மாத்தி இருப்பான். அதுக்கும்தான் அந்த ஆண்டவன் வழி வுடலையேனு மனசுக்குள்ள மறுகிப் போனார் சாமிநாதன்.  இப்படியே மூணு மாசம் ஓடிப் போகவும் தான் மரகதத்துக்கு கவலை.  தம் புருஷங்கிட்ட புலம்பித் தீத்துட்டா. 

  செரி... நாமளே இந்த வாரம் அவன் வரும் போது பேசுவொம்னு முடிவு பண்ணி சாமிநாதன்மகனை பக்கத்துல உக்காத்தி வெச்சுகிட்டு அவங் கையை எடுத்து தம்மடில வெச்சுகிட்டு, ""கண்ணு.  நாம எத்தன கவலைப் பட்டாலும் கண்ணீர் சிந்தினாலும் போனவன் திரும்ப வரப் போறதில்ல. நீ உன்னோட எதிர்காலத்தயும் கொஞ்சம் நெனச்சிப்பாரு.  எங்களையும் நெனச்சிப்பாரு. எத்தனை காலத்துக்குத்தான் நீ இப்பிடியே இருக்க முடியும்?  ஒனக்கு ஒரு கண்ணாலம், காட்சி செஞ்சு... பேரன் பேத்திய எடுத்துக் கொஞ்சணும்கிற எங்க ஆசை எல்லாம் நிராசைதானா?''”ன்னு கண் கலங்க. 

  கொஞ்ச நேரம் மெளனமா இருந்த ப்ரகாஷ், ""அப்பா கவிதாவுக்கு வேற மாப்பிள்ளை முடிவாயிருச்சா?'' என்று கேட்டான். 

  ""தெரியல கண்ணு... அன்னிக்குத் தரகர் கிட்ட பொண்ணு வேலைக்குப் போறதுல உனக்கு இஷ்டமில்லைன்னு மட்டும் சொல்லி அனுப்பினோம். அவரும் போயி சொல்லி இருப்பாரு. அதுக்கப்புறம் எந்தத் தாக்கலுமில்லையே. ஆமா எதுக்குக் கேக்கறே?''

  ""அதொண்ணுமில்லப்பாஅது. வந்து'' என்று ப்ரகாஷ் மென்று முழுங்கினான்.
  ""சொல்லு கண்ணு...  அப்பாகிட்ட என்ன தயக்கம்?'' என்று”சாமிநாதன் முடுக்கி விட,  சற்றே தெளிந்தவனாய்...

  ""அப்பா...  ரமேஷ் கூட ஆஸ்பத்திரியில பதினைஞ்சுநாள் இருந்தேனில்ல... அப்பதான் நான் ஒரு உண்மையைப் புரிஞ்சுகிட்டேன்.  எனக்கு அப்ப நாம ஆஸ்பத்திரில இருக்கோம்ங்கிறது  என் புத்தியில உறைக்கல. எந்த ஒரு பயமோ அலர்ஜியான எண்ணமோ எதுவுமே எனக்கு வரல.  ரமேஷ் குணமாகணும்ங்கிறது மட்டும்தான் என்னோட ஒரே  எண்ணமா நோக்கமா இருந்துச்சு. அப்ப என் கண்ணு முன்னால அங்க இருந்த நர்ஸ்கள்  செஞ்ச ஒவ்வொரு செயலும் என்னை அசர வெச்சிருச்சுப்பா.  நர்ஸ்களோட கடமையுணர்ச்சியையும் சேவை மனப்பான்மையையும் பாத்துப் பாத்து மனசு நெகிழ்ந்துட்டேன்ப்பா... கவிதா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான வார்த்தைகள்ப்பா.  அர்ப்பணிப்பு உணர்வோட புன்னகை மாறாமல் இன்முகத்தோட அவங்க செய்ற வேலைக்கு எத்தனை ஊதியம் கொடுத்தாலும் போதாதுப்பா.  எத்தனை பொறுமை? என்ன ஒரு சகிப்புத்தன்மை? ஆஸ்பத்திரின்னாலே முகத்தை சுளிச்சிகிட்டு ஓடற எனக்கு... இப்ப அது ஒரு கோயிலாகவும்... அங்க வேலை செய்ற நர்ஸூகள் தெய்வங்களாகவும் தெரியறாங்க.   எம்மேலயே எனக்கு கோபம், கோபமா வருதுப்பா.  கவிதாவுக்கு ஆட்சேபணை இல்லேன்னா நான் கல்யாணத்துக்கு ரெடிப்பா.  எம்மனசு மாற காரணமாயிருந்த கவிதா கிட்ட மன்னிப்பு கேக்கவும் நான் தயார்ப்பா. ஆஸ்பத்திரியிலயே இதை நான் ரமேஷ்கிட்ட சொன்னேன்ப்பா.   அரை மயக்கத்துல இருந்தவன் மெதுவா கண்ணை முழிச்சுப் பாத்து சிரிச்சான்ப்பா.   நீங்க அவங்ககிட்ட பேசிப் பாருங்க. கவிதா அவ லட்சியப்படி புனிதமான அந்த நர்ஸ் வேலைக்குப் போகட்டும்.  அதுல எனக்கும் பெருமைதான்ப்பா''ன்னான் கண்ணுல கண்ணீர் வழிய. 

  ""இத...இத...இதத்தான் நான் எதிர் பார்த்தேன்'' என்று  துள்ளிக்கிட்டு எழுந்த சாமிநாதன் தரகருக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்ல, கவிதாவின் வீட்டுலயும் சம்மதிக்க, அப்புறமென்ன? அடுத்த முகூர்த்தத்துலயே ப்ரகாஷ் - கவிதா கல்யாணம் நடக்க... சாமிநாதன் தம்பதியர் கண்ணுல ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க... எல்லாம் இன்பமயம்.   நண்பனோட மனசு மாற தானும் ஒரு காரணமா இருந்திருக்கோம்கிறத நெனச்சு ரமேஷோட ஆன்மாவும் ரொம்ப சந்தோஷப் பட்டிருக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai