திரைக்கதிர்

நடிகை நயன்தாராவுக்கு திருமணம் எப்போது என்பதுதான் கோலிவுட்டில் பிரதானக் கேள்வியாக உள்ளது.
திரைக்கதிர்


நடிகை நயன்தாராவுக்கு திருமணம் எப்போது என்பதுதான் கோலிவுட்டில் பிரதானக் கேள்வியாக உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அவருக்குக் காதல் இருப்பது அனைவரும் அறிந்ததே. 

இருவரின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். கடந்த 2 வருடங்களாகவே இவர்களது திருமண கிசுகிசு வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது, இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் அதே வேளையில்,  எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல் பரவியிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். நயன்தாரா நடிக்கும் படமொன்றை அவர் தயாரிக்கிறார். இதில் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடிக்கிறார் நயன்தாரா. ஏற்கெனவே விஜய்யுடன் நடித்துள்ள "பிகில்' விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் கிறிஸ்டோபர் நோலன். கதை, அது நடக்கும் களம் என எல்லாவற்றிலும் இவர் காட்டும் தனித்துவம்  உலக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படமான "டெனெட்' படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியா வரவுள்ளார். இந்தியாவின் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவுள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் மும்பை வந்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். இந்த படத்தில் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா, பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள டென்ஜில் ஸ்மித் நடிக்கிறார்கள்.

படத்தில் டிம்பிள் கபாடியாவின் கணவராக டென்ஜில் ஸ்மித் நடிக்கிறார். மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் இதன் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார் நோலன். 6 மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்து இங்கு படமாக்க வேண்டிய காட்சிகளை எடுக்க நோலன் திட்டமிட்டுள்ளார்.

"நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படம் முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியைக் கொண்ட கதை என்பதால், சிஜி வேலைகள் அதிகமாக இருக்கின்றன. தற்போது அந்த வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் "கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் அவரது ஜோடியாக புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கன்னடம், தெலுங்கு படங்களில் வளர்ந்து வரும் பிரியங்கா அருள் மோகன் இப்படத்தின் வாயிலாக தமிழுக்கு வருகிறார். 

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. இதில் நடிக்க தமிழ் பெண்ணுக்கான சாயலில் இருக்கும் புதுமுக நடிகையைத் தேடி வந்தனர். இந்நிலையில் படக்குழு சிபாரிசின் பேரில் பிரியங்கா அருள் மோகனைத் தேர்வு செய்துள்ளனர்.

கடந்த வாரம் ஆண் குழந்தைக்கு தாயானார் எமி ஜாக்சன்.  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்களைத் தனது இணைய தள பக்கங்களில் பகிர்ந்தார்.  இந்தப் படங்களுக்கு பலவித கருத்துகளை நெட்டிசன்கள் பதிவு செய்தனர். புகைப்படத்துக்காக இப்படி போஸ் கொடுக்கலாமா என கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.  

எத்தனை முறைதான் இந்த அம்மா  முகத்தையே பார்ப்பது என்று சிலர் கமென்ட் பகிர்ந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிப்பதுபோல் பதில் பகிர்ந்திருக்கிறார் எமி. "நான் அம்மாவாக உங்களைப் போர் அடிப்பதாக எண்ணுகிறேன். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் என் குழந்தை மிகவும் அழகு' என குறிப்பிட்டுள்ளார். எமியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், ""அம்மா என்றால் அன்பு... நீங்க நடத்துங்க...!'' என்று அவர் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்கப்படுத்துவது போல் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றனர். 

கே.ஜி.எப். படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை ஈர்த்தார் யஷ். கர்நாடகத்தைச் சேர்ந்த பஸ் நடத்துநரின் மகனான இவர், இப்போது கன்னட சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்துள்ளார். "கே.ஜி.எப்.' படத்தின்  இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் வேளையில் "சூர்யவம்சி' என்ற படத்தில் நடித்துள்ளார் யஷ். மஞ்சு சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஷாம், ராதிகா பண்டிட், தேவராஜ், சுமித்ரா, சீதா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. காதல் மற்றும் ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. அதே வேளையில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மகேஷ்ராவ் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். வரும் நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com