பகைவனுக்கருள்வாய்

திறனல்ல தற்பிறர் செய்யினும்  நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று” வாழ்நாளில் இப்படி ஒரு விபத்தைக் கண்டதில்லை.  பாக்கு கடிக்கும் நேரத்திற்குள் அது  நிகழ்ந்துவிட்டது.
பகைவனுக்கருள்வாய்

திறனல்ல தற்பிறர் செய்யினும்  நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று” வாழ்நாளில் இப்படி ஒரு விபத்தைக் கண்டதில்லை.  பாக்கு கடிக்கும் நேரத்திற்குள் அது  நிகழ்ந்துவிட்டது. எதிரே வரும் லாரியைக் கவனிக்காமல் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த பி.எம்.டபிள்யு  கார் அதன்மீது மோதியது. 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் அதை  ஓட்டி வர , பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த  இன்னொருவன் மதுக்குப்பியைத் திறந்து ஆளுக்கு ஒரு வாயாக மாறி மாறிக் குடித்துக் கொண்டே வந்தபோதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது. காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கிப் போக  உள்ள இருந்த இருவரும் சாலையில் ஓரத்தில் தூக்கியெறியப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். அந்த விபத்தை நேருக்கு நேர் கண்ட சாமாவிற்கு  சப்தநாடியும் ஒடுங்கிப் போய்விட்டது.   லாரிக்காரன்  சரியான பாதையில் நிதானமாக வந்துகொண்டிருந்தாலும்  குடி வெறியில் இருந்த இளைஞர்கள் தவறான திசையில் வந்து கொண்டிருந்ததால் அந்த  விபத்து நிகழ்ந்தது. ஒருநிமிடம் தாமதித்து லாரியை நிறுத்திய டிரைவர் தாமதிக்காமல் லாரியை வேகமாக ஓட்டிச்சென்று விட்டான். இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஓடிவிட்டான்.


சட்டை போடாத திறந்தமேனி. முதுகெலும்போடு ஒட்டிய வயிறு. வற்றி உலர்ந்த உடல். மார்புக்கூட்டு எலும்புகளை எளிதில் எண்ணிவிடலாம்.  சவரம் செய்யப்படாத ஒரு மாத தாடி . தலையில் சாஸ்திரத்திற்கு கொஞ்சம் முடி நீர்க்காவி  ஏறிய அழுக்கு வேஷ்டி.   தோளில் ஒரு துண்டு, அதில் ஒரு வாழைக்காய், ஒரு கிலோ அரிசி முடிந்து வைத்திருந்தார். காலில் செருப்பு  கூட இல்லை. ஏதோ ஓர் அபர காரியத்துக்காக  சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

ஒதுக்கப்பட்ட ஒரு  மூலையில் தானாகவே சமைத்து, தானே சாப்பிட வேண்டும். உப்பில்லாமல் சமைத்து வைக்கும் சாதம், மற்ற பொருள்களையும் பத்தாம் நாள் அன்று   வாங்கிக் கொண்டு போகும் வேலையையும் அவர் செய்வார். இந்த வகைத்  தினசரித் தொழிலாளி தான் சாமா  என்கிற சாமிநாதன். சாஸ்திரிகள் அக்னியை வளர்த்து இவரை உட்கார வைத்து இவர்மீது “பிரேதத்தை” ஆவாஹனம் செய்து,  இறந்து போனவரின் ஆத்மாவுக்கு” நற்கதிக்கு”  வழி காட்டுவார். அப்போது  சாமா  பிரேத ஸ்வரூபி. தக்ஷிணைகளை வாங்கிக் கொண்டு அந்த வீட்டை திரும்பிப்  பார்க்காமல் போக வேண்டும். குழந்தைகளோ, அண்டை அயல் வீட்டார்களோ அவர் பார்வையில்  பட்டுவிடக் கூடாது.  ஆனால் இவர் முகத்தைத் தினமும் பார்த்துக் கொண்டுதானே இவர் குடும்பம் இயங்குகிறது? சாஸ்திரிகள் அவராகப் பார்த்துக் கொடுக்கும் சம்பாவனையில் தான்  இவர் குடும்பம் நடக்கும். பிடிக்கிறதோ, இல்லையோ, வயிறு வளர்க்கவேண்டுமே!  

அந்த விபத்தைப் பார்த்ததும், ஒரு கொடூரமான கொலையை நேரில் பார்த்ததுபோன்ற உணர்வு சாமாவுக்கு ஏற்பட்டது. அவர் தோளில் இருந்த மூட்டையை சாலை ஓரமாக வைத்துவிட்டு அடிபட்டவர்களைப் பார்க்க விரைந்தார். சாவு, பிணம் இவற்றைக் கண்டு அவருக்குப் பயமோ அருவருப்போ கிடையாது. அடிபட்ட இருவருக்கும் 25 வயதுக்குள் தான் இருக்கும்  அவர்கள் உடலைச் சுற்றி ரத்தம் குளம் கட்டியிருந்தது.    சாலையில் ஒரு ஈ, காக்காய்  இல்லை.  சித்திரை மாத வெயில் சுட்டெரித்தது. சாலையில் இரண்டு மூன்று கார்கள்  சென்றன. நிறுத்த சாமா எவ்வளவோ முயன்றபோதும் யாரும் நிறுத்தவில்லை. அதற்குள் சிறிய கூட்டம்  கூடிவிட்டது. எல்லாரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர, சாமாவிற்கு உதவ யாரும் முன் வரவில்லை.

அதில் ஒருவனின் முகத்தைப் பார்த்ததும் சாமாவின் முகம் வெளிறியது. அவனாக  இருக்குமோ?  மஹா பாவி! நிச்சயம் அவனே தான். சாமாவின் கனவுகள், ஆசைகளில் மண்ணை வாரிப் போட்டவன்!   வாழ்நாளில் மீண்டும் ஒருதடவை யாரைபார்க்கக்      கூடாது என்று நினைத்திருந்தாரோ அவன்தான் ! மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு  யாராவது உதவிக்கு வருவார்களா என்று பார்த்தபோது ஒரு திறந்த டெம்போகாரன் உ தவ முன்வந்தான். இருவருமாகப் பிடித்து வண்டியில் ஏற்றினார்கள். ஆஸ்பத்திரியை நோக்கி வண்டி பறந்தது. காரை ஓட்டிவந்த  இளைஞன் ஒருதடவை கண் விழித்து சாமாவைப் பார்த்தான். பின்னர் நினைவிழந்தான். சாமா வெறுப்போடு அவன் முகத்தைப் பார்த்தார். மருத்துவமனையில்  அவனுடைய சட்டைப் பையில் இருந்த பர்சில் இருந்த முகவரியைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் தகவல் கொடுத்து விட்டு அவர்கள் வரும் வரை சாமாவை அங்கேயே காத்திருக்கச் சொன்னார்கள். சாமா ஓர் இருக்கையில் அமர்ந்தார் 

நீதிமன்றம்!

உள்ளேயும், வெளியேயும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. மிக முக்கியமான வழக்கிற்கு தீர்ப்பு இன்று வழங்கப்படவிருக்கிறது.  சரியாக மணி பத்தரை... நீதிபதி வரும்போது எல்லோரும் எழுந்து நின்றார்கள். எல்லோரையும் வணங்கி விட்டு நீதிபதி இருக்கையில் அமர்ந்தார். பெஞ்ச் கிளார்க் வழக்கு கட்டை எடுத்து  கேஸ்  எண்  146... என்று  விவரங்களைப் படித்தார். இருபத்து ஐந்து  வயதிற்கு உட்பட்ட நான்கு இளைஞர் குற்றவாளிக்கூண்டில்  நின்று கொண்டிருந்தார்கள்  அரசாங்க வக்கீல், தனது தரப்பு வாதத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு...

"எனவே கனம்  கோர்ட்டார்  அவர்களே! இந்த வழக்கில் மிகவும் கொடூரமான முறையில் ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து  வன்புணர்ச்சியில் ஈடுபட்டு பின்னர் அந்த சிறுமியைக்  கொலையும் செய்த இந்த நால்வரையும் கடுமையாகத் தண்டிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று  வாதத்தை முடித்தார். அந்த நால்வரின் சார்பாகவும் இந்தியாவிலேயே மிகப் பெரிய புகழ் பெற்ற கிரிமினல் வக்கீல் மும்பையிலிருந்து வந்து ஆஜராகி இருந்தார். அவருடைய வாக்கு சாதுர்யத்தின்  முன் அரசு வக்கீலின் வாதம் எடுபடாமல் போனது வியப்பில்லை. சட்டம் இருட்டறையிலேயே இருந்தது. சரியான சாட்சிகள் இல்லாமல் போனதால் இந்த வழக்கை  தள்ளுபடி செய்கிறேன் என்று  நீதிபதி தீர்ப்பை வழங்கிவிட்டு உள்ளே எழுந்து சென்றார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. 

இறந்துபோன தேவகி என்கிற சிறுமியின்  தந்தை சாமா பிரமை பிடித்தவர்
போல உட்கார்ந்திருந்தார். அவருடைய வக்கீல் அருகில் வந்து,     ""இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. உயர் நீதிமன்றத்துக்கு அப்பீல்  செய்யலாம்'' என்றார். 

சாமா மெளனம் கலைத்தார். “""அதுக்கெல்லாம் பணம் வேணும். அடுத்தவேளை சாப்பாடே கஷ்டமாக இருக்கற போது   அவ்வளவு பணத்திற்கு நான் எங்கேபோவேன்? என்னை விட்டுடுங்கோ. நான் ஓய்ஞ்சு போயிட்டேன்'' “என்று குலுங்கக் குலுங்க அழுதார். ""ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை. ஆதரவு அற்ற தெல்லாம்  அனாதைகள்தானே? என் விஷயத்தில் சட்டமும், நீதியும் அனாதையாயிடுத்து.  நீதிதேவதை  என் விஷயத்தில் கண்களை கறுப்புத் துணியால் இறுகக் கட்டிண்டுடுத்து  என்னால என்ன செய்ய முடியும் சொல்லுங்கோ ? என்கிட்டே பணமா இருக்கு? ஈஸ்வரன் இருக்கார். அவர் பாத்துப் பார்''” என்று பொங்கும் கண்ணீருடன் எழுந்து போனார். 

நான்குபேர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஐந்து  வருடங்கள் இழுத்த வழக்கு ஒருவழியாக முடிந்தது.  முக்கிய குற்றவாளியின் தந்தை தெய்வநாயகம் மிகப் பெரிய கோடீஸ்வரன். அவருக்கு ஒரேமகன். அவன்தான் பிரதம குற்றவாளி. சாமாவைப் பார்த்து சிறிது நேரம் நின்றார் தெய்வநாயகம்... சலசலப்புடன் கோர்ட் கலைந்தது.. இரண்டு நாட்கள் செய்தித் தாள்களில் செய்தியாக வந்தது  பின்னர் எல்லோரும் மறந்துவிட்டார்கள்.

தேவகி...  பத்து வருடங்களுக்குப் பின்னர்  சாமாவிற்கு  அருமையாகப் பிறந்தபெண். வயிற்றுப்பாடே பெரிதாக இருந்தபோது  எப்படியோ கஷ்டப்பட்டு அருமையாக பாசத்தைக் கொட்டி வளர்த்தார். மூன்று வயதாக இருந்தபோது கடுமையான காய்ச்சல் வந்து வலது கால் பாதிக்கப்பட்டது. நொண்டி,நொண்டித்தான் நடந்தாள்.  அங்கத்தில் குறை இருந்தாலும் அழகிலும் அறிவிலும் குறை இருக்கவில்லை. வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம்... கார்ப்பரேஷன் பள்ளியில்தான் சாமாவிற்கு அவளைச் சேர்க்க   முடிந்தது. பள்ளி ஆசிரியர்களே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு எல்லாவற்றிலும் முதன்மையாக இருந்தாள். சாமாவின் மனைவி மங்களம் ஒரு வீட்டில் சமையல் செய்து வந்தாள். அவர்கள் கொடுக்கும்  சம்பளத்துடன், எஞ்சியதை, மிஞ்சியதை வீட்டுக்கு எடுத்துவருவாள். பிற்பகல் சாப்பாடு தேவகிக்கு பள்ளியில் கிடைத்துவிடும். சாமாவின் சாப்பாட்டைப் பற்றிக் கவலை இல்லை. அரசினர் பேருந்தில்தான் தேவகி பள்ளிக்கு சென்று வருவாள். 

ஒருநாள் பள்ளிக்கு சென்றவள் வீட்டுக்கு திரும்பவே இல்லை.போலீசில் புகார் கொடுத்தார்கள். எங்கெல்லாமோ தேடினார்கள். மூன்று நாட்கள் கழித்து தேசியப் நெடுஞ்சாலை  ஓரமாக கசங்கிய மலர் போல , சிதைந்த அவள்  உடல் பிணமாகக் கிடைத்தது. சாமாவையும், மங்களத்தையும் யாராலும்  தேற்ற முடியவில்லை. குற்றவாளிகளை போலீஸ் தீவிரமாகத் தேடியது. யாரோ கொடுத்த சிறிய துப்பினால் குற்றவாளிகள் பிடிபட்டனர். நான்கு பேரும் இருபது வயதிற்குட்பட்ட பணக்கார வீட்டுப்  பிள்ளைகள்.  போலீசில் வழக்கு பதிவு செய்தார்கள். ஒரு வாரத்தில் பெயில் கிடைத்து வெளியில் வந்தார்கள். முதல் குற்றவாளியின் அப்பா தெய்வநாயகம் மும்பையிலிருந்து  மிகப் பெரிய வழக்கறிஞரை வரவழைத்தார். அதற்கு முன்னர் வக்கீல் சொன்னபடி சாமாவைச் சந்தித்தார். சமாதானப் பேச்சு வார்த்தைகள்  மூலம்  வழக்கை திரும்பப் பெற வற்புறுத்தினார்.

""நடக்கக்கூடாதது நடந்து போச்சு! அதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன் என் பிள்ளை செஞ்ச தப்புக்காக நான் உங்ககிட்டே மன்னிப்பு கேக்கறேன்.எனக்கு இருக்கறது ஒரே பிள்ளை'' என்று சொல்லி முடிக்காமல் கையில் இருந்த ஒரு பையை அவரிடம் கொடுத்து “""இதுலே அஞ்சு லட்சம் ரூபாய் இருக்கு. மறுக்காம  வாங்கிக்கோங்கோ... ஒங்களுக்கு என்ன ஒத்தாசை வேணும்னாலும் தயங்காம கேளுங்கோ...  நான் செய்யறேன்''” என்று நிறுத்தினார்.

சாமா பையைத் தொடாமல் ஒரு குச்சியால் அதை அவர் முன்பு தள்ளினார். “
"" எனக்கு என்ன உதவி செய்வேன்னேளே என்ன உதவி வேணுமானாலும் செய்வேளா? இந்தப் பணம் எல்லாம் எனக்கு வேணாம்.  என்  ஒரே பொண்ணை உங்களால திருப்பிக் குடுக்க முடியுமா? முடியாதில்லியா! பணத்தை எடுத்துண்டு  போங்கோ! நான் ஏழைப்  பிராமணன். என்னால கொலையெல்லாம் செய்ய முடியாது'' என்று பதிலுக்கு காத்திராமல் எழுந்தார். 
""நான் சமூகத்துல பெரிய மனுஷன். என்னால முடியாதது எதுவும் இல்லே! நான் நெனைச்சா இந்த  கேûஸ  ஒண்ணும் இல்லாமப் பண்ண முடியும்.  ஒங்க மேலே பரிதாபப்பட்டு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.  நான் சொல்றதைக் கேட்டா உங்களுக்கும் நல்லது''” 

""பின்னே என்ன?  தாராளமா  பண்ணுங்கோ! பகவான் மேலே எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு, சட்டமும்  நீதியும் இருக்கு. பகவான் உங்களை ஆசீர்வதிக்கட்டும்''” என்று பதிலுக்குக் காத்திராமல் உள்ளே எழுந்துபோனார் அதுதான் அவர் சாமாவை கடைசியாக சந்தித்த நிகழ்ச்சி. பின்னர் நீதி மன்றத்தில் தான் அவ்வப்போது அவரை சந்தித்தார். இருவரும் பேசிக் கொள்ளவில்லை தீர்ப்பு  அவருக்கு சாதகமாக வந்தபோது சாமாவை ஒரு புழுவைப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டு சென்றார். 

பசிக் களைப்பில் சிறிது கண் அசந்துவிட்ட சாமா யாரோ நிற்பதுபோலத் தெரிந்ததும்  கண்களை விழித்துப் பார்த்தார். எதிரில் கைகளைக் கூப்பியபடியே  தெய்வநாயகம் நின்றுகொண்டிருந்தார்.
""சாமி! நீங்களா என்மகனை இங்கே கொண்டுவந்து சேத்தீங்க... ஏன்? எப்படி?'' “என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் அவர் வாய் குளறியது. 
"எதுக்கும் ஒரு வெலை இருக்குன்னு சொன்னேளே இப்போ பாத்தேளா'”  என்று சாமா கேட்பதுபோல அவருக்குத் தோன்றியது.

சாமா எதுவும் பேசவில்லை. மெளனம் காத்தார்

"" என் கண் எதிரேதான் அந்த விபத்து நடந்தது. பக்கத்துல போயிப் பாத்தபோது தான்  அது ஒங்க புள்ளேன்னு தெரிஞ்சுது! ஒரு வண்டிக்காரன் கூட நிறுத்தாம போய்ட்டான். அப்போ  இந்த டெம்போ டிரைவர் தான் உதவி செஞ்சார். ரெண்டு பேருமா சேந்து  இங்கே கொண்டு வந்து சேத்தோம். சில பேர்கிட்டேயாவது மனுஷத் தன்மை இருக்கே! யாருன்னு தெரிஞ்சும்  கூட  எனக்கு அப்படியே விட்டுட்டுப் போக இந்த பாழாப்போன மனசு எடம் குடுக்கலே! நான் பகவானுக்காகவும் மனச்சாட்சிக்காகவும்  பயப்படறவன். எம் பொண்ணு,அந்த சின்னஞ்சிறு பிஞ்சு அப்போ எப்படியெல்லாம் துடிச்சிருப்பா? நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணினேன்னு அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு தண்டனையைக் குடுத்திருப்பார். அவள் அங்கஹீனமான பொண்ணுன்னு தெரிஞ்சும் அவளைக் கதற, கதற, கசக்கிக் கடிச்சுத்  துப்பின நாய்கள் சட்டத்துலேருந்து தப்பிச்சிடுச்சு. என்னை மாதிரி கையாலாகாதவுங்க தான் பகவான் பத்துப்பார்ன்னு இன்னும் நம்பிண்டு இருக்கோம். உங்களுக்கு வேணுமானா கடவுள் நம்பிக்கை  இல்லாம எதையும் பணத்துல சாதிச்சுப்பிடலாம்னு நினைக்கலாம். என் பொண்ணு செத்துப் போன போது கூட நான் பகவானை நிந்திக்கல்லே! நமக்கு குடுத்து வச்சது அவ்வளவுதான்னு மனசை தேத்திண்டேன். 

கற்புக்கரசி சீதா தேவியை ராவணன் கடத்திண்டு போயி,  அசோகவனத்துலே வச்சான். ஆனா, ராமர் அவன் செத்துப்போன போது அவனுக்கு முறையான ஈமச்சடங்குகளை விபீஷணைவிட்டு செய்ய வச்சார் . இந்திரஜித் செத்துப்போனபோது அவனோட தலையை அவன் மனைவி சுலோச்சனா கிட்டே ஒப்படைச்சு மரியாதையை செலுத்தினார். நான் அவரைத் தெய்வமா வணங்கறவன். என்  நிழல்லே  நின்னவனுக்குக் கூட பழி வாங்கற எண்ணம் ஏற்படாது. இப்பவும் கூட உங்களோட புள்ளைக்காக பகவான் கிட்டே  பிரார்த்தனை பண்றேன்'' 

டாக்டர்  ஐசியூவிலேருந்து  வெளிவந்தார். அவர் தெய்வநாயகத்திடம் சொன்னார் இருவரின் உயிருக்கும்  தற்போது ஆபத்து இல்லை. தலை உடைந்து போனதால் டீப் கோமாவுல இருக்காங்க. அதுலேருந்து வெளிவர சில மாதங்களோ, ஏன் வருஷங்களோ கூட ஆகலாம். என்னால முடிஞ்சதை செய்திட்டேன். எல்லாத்துக்கும் மேலே ஒருத்தன் இருக்கான். அவன் என்ன நினைக்கிறானோ! பிரார்த்தனை செய்யுங்க!  ஐ ஆம் சாரி''  இடிந்து போய்  உட்கார்ந்தார் தெய்வநாயகம். சாமா அமைதியாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது திடீரென மழை  பெய்தது. கோடை மழை!  சாமா மழையைப்  பொருட்படுத்தாமல்  இறங்கி நடந்தார்.


தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com