குளிர்ந்த நீரும் மாத்திரைகளும்!

கேப்ஸ்யூல் அல்லது மாத்திரைகளைக் குளிர்ந்த நீரில் சாப்பிடுவதை விட, வெதுவெதுப்பான நீரிலோ, வெந்நீரிலோ சாப்பிடுவதே நல்லது என்ற விவரம் தங்களுடைய கேள்வியில் இருந்தே நன்கு விளங்குகிறது.
குளிர்ந்த நீரும் மாத்திரைகளும்!

 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
 என் வயது 66. வீட்டில் நடக்கும் போது கால் விரல் இடறி விட்டதில் ஏற்பட்ட நகப்புண் குணமாக, மருத்துவர் தந்த கேப்ஸ்யூல் மருந்தை குளிர்ந்த நீரில் சாப்பிட, வந்தது வினை. பசிமந்தம், வயிறு உப்புசம், மலச்சிக்கல் என்ற வகையில் ஏற்பட்ட துன்பம், பல மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. இந்த உபாதைகளைக் குணப்படுத்த வழி உள்ளதா?
 - பாலசுந்தரம், வண்ணாரப்பேட்டை, சென்னை.
 கேப்ஸ்யூல் அல்லது மாத்திரைகளைக் குளிர்ந்த நீரில் சாப்பிடுவதை விட, வெதுவெதுப்பான நீரிலோ, வெந்நீரிலோ சாப்பிடுவதே நல்லது என்ற விவரம் தங்களுடைய கேள்வியில் இருந்தே நன்கு விளங்குகிறது. மருந்து வேலை செய்கிறதோ இல்லையோ, சில நேரங்களில் நாம் அருந்தும் வெந்நீரே, அருமருந்தாகி நோயை அகற்றிவிடக் கூடும்! வயிற்றில் ஏற்படும் மப்பு நிலையில், காய்ச்சல் ஏற்படுவதுண்டு. அந்த சமயத்தில் ஏற்படும் தண்ணீர் தாகத்தை அகற்ற, ஆயுர்வேதம் வெந்நீரைச் சிறிது சிறிதாக அருந்த வேண்டுமென்றும், அப்படி அருந்தினால் நாக்கு, உணவுக்குழாய் மற்றும் வயிற்றில் அடைபட்டுள்ள கபம் எனும் தோஷமானது, வெந்நீரின் வரவால் உருக்கப்பட்டு, தண்ணீர் வேட்கையை உடனே மாற்றுகிறது. வயிற்றிலுள்ள பசித்தீயை நன்கு தூண்டிவிடுகிறது. வயிற்றைச் சுற்றியுள்ள நுண்ணிய உட்புறக் குழாய்களை மிருதுவாக்கி, அதன் உட்புறங்களில் படிந்துள்ள அழுக்குகளை திரவநிலைக்குக் கொண்டுவந்து, அவ்விடம் விட்டு அகற்றி, குழாய்களின் உட்பகுதிகளைச் சுத்தமாக்குகிறது. குடலில் தேங்கியுள்ள பித்தம் மற்றும் நகர முடியாமல் சிக்கியுள்ள வாயுவையும் விரைவாக வெளியேற்றச் செய்கிறது. வியர்வை கோளங்களைத் தூண்டிவிட்டு வியர்வையைத் தோல் வழியாக வழியச் செய்கிறது. பெருங்குடலில் அடைபட்டுள்ள மலம், சிறு நீர்ப்பையில் தங்கியுள்ள சிறுநீர் ஆகியவற்றை அவற்றிற்கே உரிய வழியில் வெளிப்படுத்துகிறது. குடல் மந்தத்தால் ஏற்படும் அதிக உறக்கத்தையும், தசை நார் பிடிப்பையும், நாக்கிலுள்ள ருசியறியாத் தன்மையும் மாற்றுகிறது. இதற்கு மாற்றாக, காய்ச்சலின்போது, குளிர்ந்த நீரைப் பருக நேர்ந்தால், மேற் குறிப்பிட்ட கெடுதல்களை மேலும் அதிகமாக்குகிறது. நோய்க்குக் காரணமான மப்பு நிலையை மேலும் உறையச் செய்து காய்ச்சலை வலுப்படுத்துகிறது.
 அதனால், நீங்கள் செய்த ஒரு சிறு தவறினால், மிகப்பெரிய பின் விளைவுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது. நீங்கள் சாப்பிட்ட கேப்ஸ்யூலை திறக்கச் செய்து, அதனுள்ளே இருந்த வீரியமான மருந்தை சிதறச் செய்து குழாய்களின் மூலமாக உட்செலுத்தாமல், அதை விரைக்கச் செய்து, இரைப்பையின் உட்புறச் சுவரில் படியச் செய்து விட்டதினால், ஏற்பட்ட வம்பு இது! இரைப்பையின் சுதந்திரமான அரவையின் மூலமாக, இந்தப் படிவம் கஷ்டப்பட்டு அகற்றப்படும்படி நேர்ந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டிய நிர்பந்தமிருக்கிறது. அந்த வகையில் - கந்தர்வஹஸ்தாதி எனும் விளக்கெண்ணெய் மருந்தை 15 மி.லி. காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு, சிறிது சூடான தண்ணீர் அருந்துவதையும், வைச்வானரம் எனும் சூரண மருந்தை சுமார் 5 கிராம் எடுத்து 100 மி.லி. வெந்நீரில் கரைத்து காலை, இரவு உணவிற்கு அரை மணி முன் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டால், பிரச்னை தீர வாய்ப்புள்ளது.
 வயிற்றைச் சுற்றி சுக்கு, வசம்பு, சதகுப்பை, பெருங்காயம் போன்றவற்றில் அரைத்த விழுதை, வெந்நீர் விட்டுத் தளர்த்தி பற்று இடுவதும், ஆசனவாய் வழியாக, மூலிகை எண்ணெய், கஷாயம் போன்றவற்றை மாறி மாறிச் செலுத்தி, வாயு மற்றும் மலத்தை அகற்றுவதும் ஆயுர்வேதம் கண்டறிந்த சிறந்த சிகிச்சை முறைகளாகும்.
 மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளால், குடலிலுள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, பசி நன்றாக எடுக்கத் தொடங்கியதும், கல்யாண குலம் எனும் லேஹிய மருந்தை, சுமார் 10 கிராம் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, கேப்ஸ்யூல் மருந்தால் வந்த வினை முழுவதும் அகன்று விட வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
 இரவில் படுக்கும் முன் வெந்நீர் அருந்துவதும், இடது பக்கமாகச் சரிந்து படுப்பதையும் உங்களைப் போன்றவர்கள் பழக்கப்படுத்திக் கொள்வது நலம். செரிமானத்துக்குக் கஷ்டமானதும், வாயுவையும், மலத்தையும் அதிகப் படுத்துவதுமாகிய மைதாப் பொருட்கள், வேக வைக்காத பச்சைக் கறிகாய்கள், வாழைப்பழம் ஆகியவை செரிப்பது கடினம். புலால் வகை உணவுகளை நீங்கள் தவிர்ப்பது நலம். சூடான புழங்கலரிசிக் கஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்த சூடான ரசம் சாதம், கருவேப்பிலைத் துவையல், நன்கு வேக வைத்த கறிகாய்கள் சாப்பிட உகந்தவை.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com