அன்பு வழி

அருகில் போய் பேசலாமா வேண்டாமா என்று சற்று குழப்பமாகவேஇருந்தது. சக ஊழியனுக்கு உதவலாம் என்று இங்கு வரும்வரை எந்த குழப்பமும் இல்லாமல்தான் இருந்தது.
அன்பு வழி

அருகில் போய் பேசலாமா வேண்டாமா என்று சற்று குழப்பமாகவேஇருந்தது. சக ஊழியனுக்கு உதவலாம் என்று இங்கு வரும்வரை எந்த குழப்பமும் இல்லாமல்தான் இருந்தது. பாக்கெட்டில் இருந்து அலை பேசியை எடுத்து நேரம் பார்த்தேன். ஏழு மணி. இன்னமும் சுரேஷ் அலுவலகத்தில்தான் வேலை பார்த்துக் கொண்டு இருப்பான். அவன் அலுவலகம் விட்டு வரஎப்படியும் எட்டு மணியாவது ஆகும்.

அதற்குள் அவன் அப்பாவைப் பார்த்து, சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடவேண்டும். சுரேஷிடம் சொல்லிவிட்டே கூட வந்திருக்கலாம். அவன் வேண்டாம் என்றேசொல்லியிருப்பான்.

தன் தந்தை சொன்னதாக சுரேஷ் சொன்ன விஷயத்தைக் கேட்டதிலிருந்தே எப்படியாவது அவன் அப்பாவைப் பார்த்து தெளிவுபடுத்த வேண்டியது, தன் கடமை என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

இன்று எப்படியும் அதைச் செய்தே விடுவது என்று கிளம்பி வந்திருந்தேன்.

தினமும் எட்டு எட்டரை மணி வரை அலுவலகத்தில் இருப்பவன், அன்றைக்கு சீக்கிரம் ஆறரை மணிக்கே கிளம்புவதைக் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்துச் சிரித்தான் சுரேஷ். ஒரு மெல்லிய சிரிப்பு. அவ்வளவுதான். பின் தலையைக் குனிந்து மேஜையில் இருந்த டிராயிங்கைப் பார்த்தபடி வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.

இந்த டெடிகேஷன்தான் சுரேஷிடம் பிடித்த விஷயம். வேலையில் சேர்ந்த நாளில் இருந்து இந்த ஐந்து மாதங்களாக அவனது இந்த டெடிகேஷன், தேவையில்லாத எந்தப் பேச்சும் யாரிடமும் இல்லாதது என்று ரொம்பவே சுரேஷைப் பிடித்துப் போனது.

பொறியியல் படித்து முடித்து இதுதான் முதல் வேலை. அதுவும் அபுதாபியில். முதல் சம்பளமே திர்ஹாமில். ஒரு திர்ஹாம் இந்திய ரூபாயில் இன்றைய தேதிக்கு 18 ருபாய். எப்படியெல்லாம் ஜாலியாக இருக்கலாம்?

ஆனால், சுரேஷ் எப்போதும் வேலையே கதியென்று இருந்தான்.

அவனது இந்த ஆத்மார்த்தமான ஈடுபாடு ஆச்சரியம் தந்து, ஒருநாள் அவனிடம் விசாரித்தேன். வேறு எந்த விஷயங்களிலும் மனம் போகாத அளவுக்கு வேலை பிடித்திருக்கிறதா என்று கேட்டபோது, சுரேஷ் சொன்ன விஷயங்கள் அவனைப் பற்றிய மதிப்பை இன்னமும் அதிகப்படுத்தின.

சுரேஷின் அப்பா அபுதாபியில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த பத்து வருடங்களாக நாத்தூராக (வாட்ச்மேன்) வேலை பார்த்து வருகிறார். அதில் வந்த சம்பளப் பணத்தை வைத்து, சுரேஷையும் அவன் அண்ணனையும் படிக்க வைத்து இரண்டு பேரையும் பொறியாளர்கள் ஆக்கினார். சுரேஷின் அண்ணன் பொறியாளனாக துபாயில் ஒரு கம்பெனியில் வேலையில் இருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவனுக்குத் திருமணம் ஆனது.

தற்சமயம் மனைவியோடு துபாயில் வசிப்பவன் மாதமொருமுறை வந்து அப்பா, தம்பியை பார்த்துவிட்டுப் போவான்.

அவர்கள் இருவரையும் ஆளாக்குவதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சம்பளம் போதாமல் அவர் வாங்கிய கடன் எல்லாவற்றையும் அண்ணன் தம்பி இருவருமாக இப்போது அடைத்துக் கொண்டு வருகின்றனர்.

அனாவசிய செலவுகள் எதையும் செய்யாமல் பார்த்துக் கொண்டான் சுரேஷ். எல்லோரையும் போல ஆறு மணிக்கு அலுவலகம் விட்டுக் கிளம்பினால், எங்காவது மால், மார்க்கெட் என்று போய், வீண் செலவு செய்து விடுவோமோ என்று எப்போதும் அலுவலகமே கதி என்று இருந்தான்.

ஆரம்பத்தில் இதையெல்லாம் நான் கவனிக்கவில்லை.

வேலை பிடித்திருக்கிறதா என்று கேட்ட சமயம், அவன் அப்பா, அண்ணாவைப் பற்றிய தகவல்களை சொன்னபோது, அவன் சொன்ன ஒரு விஷயம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

இத்தனை பொறுப்பான பையனைப் பார்த்து அவன் அப்பா இப்போது கொஞ்ச நாட்களாய் இரவு தாமதமாக போகும்போது, ""எங்க ஊரை சுத்திட்டு வர?'' என்று கேட்கிறாராம்.

சுரேஷின் அப்பாவைப் பார்த்து அவன் தாமதமாக வருவதன் காரணத்தை சொல்லி விட வேண்டுமென்று அப்போதே முடிவெடுத்தேன்.

தொடர்ச்சியான வேலைப்பளு. இன்று நேரம் கிடைத்து கிளம்பி வந்தவன், சுரேஷ் சொன்ன விவரங்களை வைத்து அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை
சுலபமாகக் கண்டுபிடித்தேன். அவன் சொன்ன மாதிரி அந்த கட்டத்தின் எதிரில் ஒரு சைவ உணவு ரெஸ்டாரண்ட் இருந்தது.

அருகில் நெருங்கி, “""நீங்கதானே சுரேúஸாட அப்பா ஆறுமுகம்...?'' என்றேன்.
""ஆமா... நீங்க?'' என்றவரிடம் ஆபீஸ் பெயரைச் சொல்லி சுரேஷ் தன்னோடு வேலை பார்ப்பதைச் சொன்னேன்.

""வேலைல ஏதாவது பிரச்னைங்களா...?''”

""சேச்சே...அதெல்லாம் ஒன்னும் இல்ல...நானா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்...ஒரு காபி சாப்பிட்டு வரலாமா?''”

எதிரில் இருந்த ரெஸ்டாரண்டில் நுழைந்து ஒரு மூலையில் இருந்த டேபிளில் அமர்ந்தோம்.

இரண்டு பேருக்கும் காபி சொல்லிவிட்டு, எதிரில் உட்கார்ந்திருந்தவரிடம், ""சுரேஷ் என்னைப் பத்தி ஏதாவது சொல்லியிருக்கானா?'' என்றேன்.

""சொல்லியிருக்கான் தம்பி... நீங்கதான் அவனுக்கு வேலையெல்லாம் சொல்லித் தர்றா சொல்லியிருக்கான்''”

""சரி. நான் நேரா விஷயத்துக்கு வரேன். தினமும் அவன் நேரங்கழிச்சி வர்றது ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கறதாலதான். நானும் அவளோ நேரம் ஆபீஸ்ல தான் இருப்பேன்''

""இதெல்லாம் என்கிட்ட...?''”

""இருங்க...நான் சொல்லி முடிச்சுடறேன். ஒருநாள் சுரேஷ் கொஞ்சம் மூட் அவுட்டா இருந்த சமயம், நான் வற்புறுத்திக் கேட்டப்ப, அவன் சொன்னத வச்சு தான் தெரியும்... உங்களை பத்தி, உங்க வேலையைப் பத்தி, ரெண்டு பசங்களை ஆளாக்க நீங்க பட்ட கஷ்டம், வாங்கின கடன் இதெல்லாம் ... ஆபீஸ்ல சேர்ந்த புதுசுல, சுரேஷ் இந்தக் காலத்துப் பசங்க மாதிரி இல்லாம இருக்கறது, கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சுது. நானா துருவித் துருவி விசாரிச்சதுலதான் இதெல்லாம் என்கிட்டே சொன்னான். இதுவரைக்கும் இங்க இருக்கற எந்த மாலுக்கோ, சூப்பர் மார்க்கெட்டுக்கோ, ஏன் ஒரு சினிமாகூட இதுநாள்வரை போனதில்லையாம். உங்க கடன் சுமையெல்லாம் தீர்க்கணும்னு அவனுக்குள்ள இருக்கற தீர்மானம், எல்லாத்துக்கும் மேல உங்களைப் பத்தி பேசும்போது அவன் கண்ல தெரியற உங்கமேல வச்சிருக்கிற அன்பு... ஆனா...நீங்க அதைப் புரிஞ்சிக்கலியோன்னு தோணுது. தினமும் சாயந்திரம் அவன் ஊரைச் சுத்திட்டு வரான்னு சொல்றீங்கனு எவளோ வருத்தப்படுறான் தெரியுமா?''”

""எனக்கு நல்லாத் தெரியும் தம்பி... அவன் ஊரெல்லாம் சுத்துறது இல்லேன்னு''”

""பின்னே ஏன் அப்படி?''”

""வேணும்னுதான் அப்படி சொல்லிட்டிருக்கேன்...''”

""என்ன சொல்றீங்க ... எனக்குப் புரியல... இவ்வளவு அன்பா இருக்கற பையனைப் போய்...''”

""அந்த அன்புதான் பிரச்னை தம்பி''”
"".... .... .... ''
""இந்த லெட்டரைக் கொஞ்சம் படிச்சிப் பாருங்க...'' என்று பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.

""என்ன லெட்டர் இது?''”

""என் மூத்த பையன் துபாய்ல இருந்து எழுதின லெட்டர்.''”

""நான் எப்படி?''”

""பரவால்ல படிங்க...அப்பதான் நான் சொல்றதுஉங்களுக்குப் புரியும்''”

ஆர்டர் செய்திருந்த காபி வந்தது. காபியை குடித்தபடியே கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.

அன்பே வடிவான அப்பாவிற்கு, என்ன இவன் கடிதம் எல்லாம் எழுதுகிறான் என்று உங்கள் விழிகள் விரிவதை என்னால் உணர முடிகிறது. நேரில் சொல்ல முடியாத சில விஷயங்களைச் சொல்ல எனக்கு இது தேவைப்படுகிறது.

முதலில் ஒன்றைத் தெளிவாக நீங்கள் சொல்ல வேண்டும். எங்கிருந்து உங்களின் இந்த குணாம்சத்தை பெற்றீர்கள்? நினைவு தெரிந்து சிறிய அளவில் கூட கோபத்தை உங்களிடம் நாங்கள் பார்த்ததில்லை. கூடவே எந்தவிதக் கஷ்டமும் எங்களுக்குத் தெரிய வராமல் எப்படி உங்களால் வைத்திருக்க முடிந்தது?

ஊரில் அம்மாவோடு நாங்கள் எங்கள் படிப்பே கதி என்று இருந்தோம். தேவைப்படும் நேரமெல்லாம் பீஸ் கட்ட, இதர செலவுகளுக்கு என்று பணம் அனுப்பி வைப்பீர்கள். அப்போதெல்லாம் உங்களின் எந்தவிதமான சிரமத்தையும் எங்களிடம் சொல்லாமல் இருக்க அம்மாவை எப்படித் தயார் செய்தீர்கள்?

இன்னும் சொல்ல வந்ததை சரியாக சொல்ல எனக்கு வரவில்லை.

கல்யாணம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம் என்றவனை மறித்து வேலை கிடைத்த உடனே பண்ணி வைத்து விட்டீர்கள். அதை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால் நல்ல ஒரு மருமகளைத் தேடிப் பிடிக்க இன்னும் கொஞ்சம் காலம் எடுத்து செய்திருக்கலாமோ?

உடனே உங்கள் மருமகளை பற்றிய எந்தவித முடிவுக்கும் வந்து விடாதீர்கள். என் மீதான அவள் கரிசனத்திற்கு எந்த குறைவும் இல்லை. ஆனால், நம் குடும்பம் மீது, குறிப்பாய் என் சம்பளப் பணத்தில் பெரும் பகுதியை கடன்களுக்காக நான் கொடுப்பதில் அவளுக்குச் சம்மதம் இல்லாததை சமீப காலமாக காட்ட ஆரம்பித்திருக்கிறாள்.

எவ்வளவோ நான் எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ள மறுக்கிறாள். புரியாதது போல் நடிக்கிறாள் என்று தெளிவாகத் தெரிகிறது. ""இதிலெல்லாம் நீ தலையிடாதே'' என்று குரலை உயர்த்த எனக்கு ஒரு நிமிடம் ஆகாது. அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையே நிலவிய அந்நியோன்யத்தைப் பார்த்து வளர்ந்தவன் இல்லையா? என்னால் கோபப்பட முடியவில்லை. முடிந்தவரை அன்பாய் சொல்லிப் புரிய வைக்க அனுதினமும் முயன்று கொண்டிருக்கிறேன்.

என்னுடைய பயமெல்லாம், என்றைக்காவது அவள் போர்க்கொடியில் விழுந்து விடுவேனோ என்பதுதான். ஏன் இப்படி எங்களை அன்பு ஒன்றையே காட்டி வளர்த்தீர்கள் அப்பா? எங்களை என்னும்போது சுரேஷைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது. நானாவது கொஞ்சம் கோபத்தைக் காட்டுவேன். சுரேஷ் அப்படியே நீங்கள்தான்.

அவனுக்குத் திருமணமாகி இப்போதைய என் போன்ற சூழ்நிலையில் இருந்தால் எப்படி நிலைகுலைந்து போவான் என்று ஒரு நினைப்பு ஓடியது. நிச்சயம் கஷ்டப்படுவான் என்று தோன்றியது. ஒருவேளை சமாளிப்பான் என்றும் தோன்றியது. இப்படி சம்பந்தம் இல்லாமல் அவனை வைத்து நானாக தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறேனோ?

ஏதோ சொல்ல வந்தவன் எதையெதையோசொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையுடன், சுரேந்தர்.”

படித்து முடித்து விட்டு, கடிதத்தை அவரிடம் கொடுத்தேன்.

""இதுக்கும் நீங்க சுரேஷ்கிட்ட "ஊரை சுத்திட்டு தாமதமா வரே'னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?''”

""பெரியவன் அவன் கஷ்டத்தை சொன்னதைப் பார்த்தீங்கல்ல, எல்லாத்துக்கும் காரணம் இந்த அன்புதானே தம்பி. இப்படி அன்பா இருக்கறதுதானே? ஒரு பிள்ளையா அவன் கடமையை செய்ய நினைக்கிறது ஒரு தப்பா? ஒரேயடியா அன்பை மட்டுமே காட்டி ரெண்டு பேரையும் கொஞ்சம் பயந்தாங்கொள்ளியா வளத்துட்டேனோ? நாளை பின்னே தனியா இந்த உலகத்த எதிர்கொள்ற பக்குவத்தையும் கொஞ்சம் ரெளத்ரத்தையும் கத்துக்குடுக்கத் தவறிட்டேனோன்னு இப்ப தோணுது தம்பி... அதான், சின்னவன் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா முகத்தைக் காட்ட ஆரம்பிச்சிருக்கேன்... போகப் போக கொஞ்சம் கொஞ்சமா உலகத்தைப் புரிஞ்சுக்குவான்னு ஒரு நம்பிக்கை...என்ன சொல்றீங்க?''”

என்ன சொல்வதென்று தெரியவில்லை, எதுவும் சொல்லவும் தோன்றவில்லை.
பில்லை எடுத்துக் கொண்டு, கேஷ் கவுண்டரை நோக்கி நடந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com