Enable Javscript for better performance
பூரணியும் கொலு போட்டியும்- Dinamani

சுடச்சுட

  

  பூரணியும் கொலு போட்டியும்

  By பவித்ரா நந்தகுமார்  |   Published on : 01st September 2019 12:00 AM  |   அ+அ அ-   |    |  

  kadhir4


  தன் மனதுக்கு நெருங்கிய மகளிர் பத்திரிகையில் "பிரம்மாண்ட மெகா கொலு போட்டி' அறிவிப்பைப் பார்த்ததும் பூரணிக்கு தொண்டை குழியில் தேன் இறங்கியதைப் போல இனித்தது. 
  அழகிய கொலு புகைப்படத்துடன் போட்டி குறித்தான அறிவிப்பும் அதற்கான விதிமுறைகளும் வழவழ காகிதத்தில் பூரணியின் கண்களுக்கு விருந்தாய் தெரிந்தது.  
  "சொக்கா... 1000 பொற்காசுகளும் எனக்கே எனக்கா!'” என பரிசுக்கு ஏங்கிய திருவிளையாடல் தருமி போல் அவள் மனம் பரிசு குறித்து அதிகம் யோசித்து கொண்டாட்ட நிலைக்கு தாவியது.  6 சிறப்புப் பரிசுகளும் 12 ஊக்கப் பரிசுகள் என மொத்தம் 18 இல்லக் கொலுவுக்கு பரிசுகள் கிடைக்கப் போகின்றன.  ஆறு சிறப்புப் பரிசுகளுள் ஒன்றை அடைந்தே தீருவது என பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிவு செய்து  கொண்டாள். ஏனெனில் சிறப்பு பரிசுக்கான தொகை மிக அதிகம் மற்றும் பூஜைக்கு தகுந்த வெள்ளிப் பொருட்களும் அதனுள் அடக்கம்.
  விண்ணப்பிப்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர் இல்லத்துக்கு திடீர் விஜயம் செய்து பரிசுக்
  குரியவர்களை தேர்வு செய்வர் என விதிமுறையில் இருந்தது.  விண்ணப்ப கூப்பனையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அனைத்தும் செய்து அனுப்பினாள்.
  அந்த கடிதத்தை தபால் பெட்டியில் சேர்ப்பித்த அடுத்த நொடியிலிருந்து பூரணியின் மனம் றெக்கை கட்டி பறந்தது.
  இத்தனைக்கும் பூரணி சென்ற வருடம் புரட்டாசியில் கூட, "இந்த வருடம் கொலு வைக்கலாமா' என யோசித்தவள்.  ஏனெனில் அவளின் குடும்பம் கொலு வைக்கும் வழக்கத்தை கொண்டிருந்தது தான்.  ஆனால் அவளின் மாமியார் 15 வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்ட மனக்
  கஷ்டங்களால் கொலு வைக்கும் முறையையே தவிர்த்து விட்டிருந்தார். பின்னால் வந்த பூரணியும் தன் வேலைப்பளு, உடல் அசதி, சோம்பேறித்தனத்தை கருத்தில் கொண்டு மாமியாரின் செயலுக்கு அச்சுஅசலாய் ஒத்துப் போனாள். அந்த பழைய சோம்பேறித்தனத்தை தற்போது சுருட்டி பரண் மீது வீசியெறிந்தது சாட்சாத் இந்த போட்டியேதான்.
  15 நாட்களுக்கு முன்பிருந்தே ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டாள் பூரணி.  பூசலார் மனதிலேயே சிவபெருமானுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியது போல பூரணியும் மனதிலேயே கொலுப் படிகளை அடுக்கி இன்னின்ன படியில் இத்தனை பொம்மைகள் என இறுதியில் கலசம் கூட நிறுத்தி விட்டாள். எந்தெந்த விதத்தில் கொலுவில் புதுமைகளை புகுத்த முடியும் என அவள் மூளை தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்தது.
  பொம்மைகளை கொலுவில் வைக்காது பரணிலோ பெட்டியிலோ வருடக்கணக்காக பூட்டியே வைத்திருப்பது குடும்பத்துக்கு நல்லதல்ல. அந்த பொம்மைகள் சாபம் இட்டுவிடும்” என பலரும் அவளுக்குச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.
  அத்தனை பேரின் அறிவுரைகளுக்கு மதிப்பு கொடுக்காதவளின் மனம் ஏனோ இந்த பத்திரிகை நடத்தும் "மெகா கொலு போட்டி'யின்பால் வீழ்ந்து  போயிற்று.
  கொலு செய்திகளை தேடித் தேடி வாசித்தாள்.  நவதானியங்களை முன்கூட்டியே பலசரக்குக் கடைகளில் சேகரித்தாள்.  வீட்டில் ஒட்டடை காணாமல் போயின.  ஜன்னல் கம்பிகள், கண்ணாடி, கதவுகள், மரச்சாமான்கள் துடைக்கப்பட்டு பளிச்சென மின்னியது.  படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள், கால் மிதிப்பான்கள் துவைத்து அலசி காய வைக்கப்பட்டன.  பழைய ஓட்டை ஒடைசல் பாத்திரங்கள் ஒழிக்கப்பட்டு அடைசல்கள் விலகின.  தலைவாசற்கால் தூசியின்றி பளிச்சென உருமாறியது. வீடே அமர்க்களமாக மிரட்டியது.
  பத்திரிகையின் போட்டி குழு தம் வீட்டுக்கு வரும்போது அவர்களை எப்படி வரவேற்பது, எங்கே அமரவைப்பது, எதை உண்ணக் கொடுத்து உபசரிப்பது என்றவரையில் மூளையில் வலை பின்னல்கள் பூரணிக்கு.
  வரும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்க மஞ்சள், குங்கும குப்பிகள், வெற்றிலை பாக்கு, வாழைப்பழ இத்யாதிகள், சுண்டல் செய்ய 9 வகை தானியங்கள் எனப் பார்த்துப் பார்த்து வாங்கினாள்.  லலிதா சகஸ்ரநாமம் மற்றும் தேவி மகாத்மிய பாடல் சி.டி.க்கள் கைவசம் பெற்றாயிற்று.  இன்னும் இன்னும் புதுப்புது உத்திகள் என்பதாய் அவள் மனமெங்கும் கிளை
  பரப்பி ஓடியது.
  நவதானியங்கள் ஊற வைத்து முளை கட்டப்பட்டு செம்மண்ணில் விதைத்தும் ஆயிற்று.  முளைத்து வருவது தான் பாக்கி.
  இன்னும் இரண்டே நாளில் அமாவாசை. அன்று தான் நல்ல நேரம்  பார்த்து கலசம் நிறுத்த வேண்டும்.  வீடு நீரால் கழுவப்பட்டு தூய்மை பெற்றது.
  ஏற்கெனவே எக்கச்சக்க பொம்மைகள் அவள் இல்லத்தில் நிறைந்துள்ளது. வருடத்திற்கு ஒன்று உயிர் கொடுக்க வாங்கி வைக்க வேண்டும் என்ற சாங்கியத்துக்கு புதுவிதமான பொம்மை வைக்க விரும்பி அழகான கிருஷ்ணர் பொம்மை ஒன்றை மட்டும் வாங்கினாள்.
  பூரணியின் இந்த அபரிமித மாற்றம் தீனாவை புருவம் உயர்த்தச் செய்தது. எத்தனையோ முறை உறவுகள் சொல்லி கேட்காத இவள் ஒரு பத்திரிகை போட்டிக்காகவா இப்படி மாறிப் போனாள் என அசந்து போனான்.  நாளுக்கு நாள் அவள் முகத்தின் தேஜஸ் கூடிக் கொண்டே போனது.
  விடிந்தால் அமாவாசை.  இன்றைய தினமே பரணிலிருந்து பொம்மைப் பெட்டிகளை தீனாவின் உதவியுடன் இறக்கினாள்.  காகித கிழிசல்கள் மற்றும் வைக்கோல் சூழ பொதியப்பட்டுக் கிடந்த பொம்மைகளைக் கையிலெடுக்கையில் கருப்பையிலிருந்து குழந்தைகளை எடுப்பதுபோல இருந்தது அவளுக்கு.  ஏனோ திடீரென கண்கள் பனித்தன.  தொண்டை அடைத்தது.  கை கால்களில் ஒருவித நடுக்கம்.  இத்தனை பொம்மைகளை தன்னால் சரிவர வைத்து சுத்தபத்தமாக  நவராத்திரியைக் கடக்க முடியுமா என்ற பயம் தோன்றி அவளுக்குள் உலவத் தொடங்கியது.  இது சிறு குழந்தைகள் ஆடும் சொப்பு விளையாட்டு போன்றதல்ல, பூஜை புனஸ்காரங்களை அத்தனை ஆச்சாரமாக செய்ய வேண்டும் எனும் பக்தி அவளுக்குள் பயமாக அவ்வப்போது வெளிப்பட்டது.
  கொலு வைக்கும் நாளும், ஒரு வழியாக வந்தே வந்தது.  மஹாளய அமாவாசையில் தலைமுழுகி காலையிலேயே ஒன்பது படிகளை பலகைகள் போட்டு நிரவினான் தீனா.  ஆரம்பத்தில் விருப்பமின்றி மொழிந்திருந்தாலும் பூரணியின் பேரார்வம் அவனுக்குள்ளும் சற்றே இறங்கி மந்திரச்செயல் புரிந்திருந்ததால் அவளுக்கு முடிந்தவரையில் உதவி செய்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பிப் போனான்.
  அரைப்படி பச்சரிசியை ஆழ அகல இட்டு நிரப்பி அதன்மேல் பளிச்சென துலக்கி வைக்கப்பட்டிருந்த பித்தளை கலச சொம்பின் வாயளவு சுத்தமான  நீர் நிரப்பினாள்.  பின் அதில் சிட்டிகை பச்சைக் கற்பூரம், கதம்பப்பொடி, தட்டிய ஏலக்காய், சிறிதளவு கோமியம், ஒரு ரூபாய் நாணயத்தை வரிசையாகப் போட்டாள்.  அத்தனையும் தன் மாமியார் அலைபேசியில் சொல்லச் சொல்ல குறித்து வைத்தவை தாம்.  நல்ல பச்சை வாசம் கொண்ட தேர்ந்த பாங்கான மாவிலையைத் தேர்ந்தெடுத்து விரித்து கிடத்தி மட்டை தேங்காயைச் சீராக நிறுத்தி மூன்று பட்டை விபூதி பூசி, நடுவே குங்குமத் திலகம் இட்டாள். அவ்வளவு தான்.  கலசம் நிறுத்தியாயிற்று.    
  அடர்ந்து கட்டிய கனகாம்பரம் மற்றும் மல்லிச்சரங்களை கலசத்தில் இட்டு நடுநாயகமாக ஒற்றை ரோஜாவை இருத்தியதும் தெய்வீகக் கலை கலசத்தில் அமர்ந்து கொண்டது.
  வீடெங்கும் அந்த  நேர்மறை வீச்சின் தன்மை எதிரொலித்தது. பெருவாரியாக இருந்த சுவாமி பொம்மைகளை அதன் உயரம் அளவுகளுக்கேற்ப படியினில் நிரவினாள்.  பருத்தி துணியினால் துடைத்துவிட்டு அடுக்கும்போது ஒவ்வொரு பொம்மையின் பேசும் கண்கள், கூரிய மூக்கு, அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த ஆபரணங்கள் என ரசித்து அடுக்கியதில்... மனம் லேசாகியது அவளுக்கு. ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு கதையை சுவாரஸ்யமாக தன்னுள் ஒளித்து வைத்திருந்தது.  அதிலும் அவளின் ஆதர்ச கடவுள் ஸ்ரீராமனின் உருவம் கொண்ட பொம்மை உயிர் பெற்று அவளிடம் பேசுவது போல் இருந்தது.
  கூட்டாக இடம்பெறும் குழு பொம்மைகள், அடுக்கி வைக்கப்படும் நேர்த்தியில் ரசனை கூடிக் கொண்டிருந்தது.
  பூரணி காலை முதல் மாலை வரை பொம்மைகளுடனே புழங்கி, பொம்மைகளுடனே பேசி, பொம்மைகளுடனே சிரித்தாள்.
  இத்தனை காலம்... கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் பூட்டியே கிடந்த பொம்மைகளிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கும் விதமாய் இருந்தது அவளது செயல்கள்.
  மாலை வீடு வந்த தீனா மலைத்து போனான்.  அவர்களது வீட்டில் ஓரளவு பெரிய கூடம் தான்.  இவர்கள் இருவரும் புழங்குவதற்காக கொஞ்சமே கொஞ்சம் இடம் விட்டு மீதி இடங்களிளெல்லாம் பொம்மைகளை நிரப்பி இருந்தாள்.
  தன்னந்தனி பெண்ணாக பூரணி மேற்கொண்ட சிரமத்தைப் பார்த்த அவனுக்கு இது நாள் வரை இல்லாது அவள் மேல் பெரிய மரியாதை ஏற்பட்டது.  அவளின் தனித்திறன் அவனுக்கு விளங்கியது.
  மறுநாள் மாலைக்குள் பூங்கா, கோயில் வளாகம், திரையரங்கம், துணிக்கடை, சாலைகள், மருத்துவமனை, குடில்கள், திருமண மண்டபம் என அமர்க்களமாய் தயாராகி விட்டது கொலு... மக்கள் பார்வைக்காக.
  நவராத்திரியின் முதல் நாளிலேயே காலை, மாலை என சுத்த பத்தமாக நைவேத்யம் செய்து படைத்தாள்.  பொம்மைகளைப் பார்க்கப் பார்க்க மனம் கொண்டாட்டமாக இருந்தது.  இது அத்தனையும் தன் ஒருவளின் முயற்சியிலா சாத்தியமாகியது என்று நினைக்கையில் உடல் முழுவதும் புல்லரித்தது.  உடல் அசதி ஒரு புறம் இருந்தாலும், அது நீங்கி பூரணம் பெற்றது போல மனம் நிறைந்தாள் பூரணி.
  பக்கத்து வீட்டு குட்டிப் பாப்பாவை நன்றாக அலங்கரித்து தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அழைப்பு விடுக்கச் செய்தாள்.
  முதல் இரண்டு நாட்களுக்கு கூட்டம் கொஞ்சம் குறைவு தான்.  பின் பூரணி வீட்டில் புதிதாய் மீண்டும் கொலு வைக்கத் தொடங்கியிருப்பது காட்டுத்தீ போல் பரவி அடுத்தடுத்த நாட்களில் அவளை மூச்சுத் திணற வைக்கும் விதமாய் அக்கம்பக்கத்தார் வந்து வாய்பிளந்தனர்.
  வந்திருந்த அத்தனை பேரும் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காது பூரணி திரும்ப கொலு வைக்கத் தொடங்கியதை வாழ்த்திய வண்ணம் இருந்தனர்.
  தன் முயற்சிக்கு இத்தனை பாராட்டா என நெக்
  குருகினாள் பூரணி.  பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழகை வந்திருந்த அனைவரும் பாராட்டித் தள்ளினர்.  பூரணிக்கு தனி அந்தஸ்து கூடிவிட்டதாக வாய்ஜாலம் செய்தனர்.
  அக்கம் பக்கத்து தெரு மழலைகள் பட்டாளத்துடன் வந்து சுண்டல் பெற்றுச் சென்றதுகள்.  அவர்கள் அத்தனை பேருக்கும் அவள் “கொலு ஆன்ட்டி” ஆனாள்.
  வந்திருந்தவர்களில் ஒரு சில பெண்கள் அமர்க்களமாய்ப் பாட்டு பாடினார்கள். 7 மணிக்கெல்லாம் செய்து  வைத்த சுண்டல் தீர்ந்து போகும் அளவு கூட்டம் வந்தது.  பூரணி கொலு வைத்த செய்தி அறிந்த உறவினர் பெண் ஒருத்தி தன் மகளின் திருமணம் விரைந்து நடக்க வேண்டி மனதில் பிரார்த்தித்துக் கொண்டு கிருஷ்ணர் ராதை பொம்மையை வாங்கிக் கொடுத்தாள்.
  சிறுவர் சிறுமிகள் கண்களை அகல விரித்து பொம்மைகளைக் கண்டார்கள். ஒரே இடத்தில் இத்தனை பொம்மைகளைப் பார்த்ததும் வழக்கமாக பொம்மை வேண்டும் என அடம் பிடிக்கும் சில வாண்டுகள் கூட செய்வதறியாது பிரமித்துப் போயின. பூரணியின் வீட்டை விட்டு நகர்வேனா என்றதுகள்.
  சில பிள்ளைகளோ ஆர்வக்கோளாறில் பொம்மைகளை முன்னும் பின்னும் நகர்த்தின.  செல்லக் கோபத்தை முகத்தில் காண்பித்து அவர்களைத் திருத்தினாள் பூரணி.
  தீனா தன் நட்பு வட்டத்திலிருந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்தான். அவர்களும் கொலு பொம்மைகளைப் பார்த்து பரவசமடைந்து கொலு தத்துவம் என்றால் என்ன என்பது வரை இவர்களிடம் கேட்டு விளங்கிச் சென்றார்கள்.
  வழக்கமான வீட்டு வேலைகள் மட்டுமல்லாது, கூடுதலாகிப் போன இந்த பணிச்சூழல் கடுமையாக இருப்பினும் மனம் ஒன்றி செய்ததால் அயர்ச்சி தெரியவில்லை அவளுக்கு. நவராத்திரியை முன்னிட்டு தினசரி அவள் படுப்பதற்கு இரவு 11.30 தாண்டியது.  
  ஒரு பெண்ணாக இருப்பதன் சிறப்பை தாம்பூலம் கொடுக்கும்போது பூரணி பூரணமாய் உணர்ந்தாள்.  பெண்ணாக பிறந்து வளர்வதில் இது போன்ற சில செளகர்யங்கள் உண்டு தானே!
  ஐந்து நாட்கள் கடந்து விட்டன.  நவராத்திரியின் ஆறாம் நாளும் துவங்கியாயிற்று.  அதுவரை இயல்பாக இருந்துவிட்டவளின் கண்கள் ஆறாம் நாள் அலைபேசியையே வெறித்துக் கொண்டிருந்தது.
  முதல் மூன்று நாட்கள் விடுத்திருந்தாலும் நான்காம் நாளிலிருந்து அந்த பத்திரிகைக் குழு கொலு இல்லத்தை தேர்ந்தெடுத்து சென்று வந்திருப்பார்கள். ஐந்து நாள் கழித்தும் தனக்கு அழைப்பு ஏதும் வராததை எண்ணி அவள் மனம் மெல்லிய நடுக்கத்திற்கு ஆட்பட்டது.
  தீனாவிடம் சொன்னால் தன்னைக் கடிந்துக் கொள்வான் என்பது அவளுக்குத் தெரியும்.  இன்னும் 4 நாட்கள் மீதமிருப்பதை எண்ணி கண்டிப்பாக தம் இல்லம் வருவார்கள் என நம்பினாள்.
  5 ஆம் நாள், 6 ஆம் நாள், 7 ஆம் நாள் என அடுத்தடுத்த நாட்கள் அவளை பொறுத்த அளவில் விரைவிலேயே கடந்து போயிற்று.  நவராத்திரியின் 8 ஆம் நாளும் வந்துவிட்டது.  மறுநாள் சரஸ்வதி பூஜை.  
  எண்ணெய் கையிலிருந்து பாத்திரம் வழுக்கியதைப் போல பூரணியின் நம்பிக்கை நழுவிப் போயிற்று.  8 ஆம் நாளின் இரவு சுண்டல் பாத்திரம் தன் கனம் இழந்து வெறுமை பூசிக்கொண்ட நேரம்.  பூரணிக்கோ நெஞ்சு பகுதியில் கனமான கல்லை வைத்தது போல ஆற்றாமை அழுத்தியது.
  எத்தனை எதிர்பார்ப்பு! எத்தனை பிரயத்தனம்! அத்தனையும் வீணாகி விட்டதோ என்ற தவிப்பு.  இனி தீனா கூட தன்னை இது குறித்து அடிக்கடி 
  கிண்டல் செய்வான்.  பூரணிக்கு உள்ளுக்குள் புழுங்கியது.  இனி பத்திரிகைக் குழு தம் வீட்டுக்கு வர சாத்தியமே இல்லை என்ற உண்மை புரிந்தது. இருப்பினும் இரவு 8.30ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.  இந்நேரம் தொடர்பு கிடைப்பது அத்தனை எளிது அல்ல.  ஆனால் தொலைபேசியில் அழைத்து ஒருமுறை பத்திரிகை அலுவலகத்துக்கே கேட்டுவிட்டால் என்ன?  என்ற யோசனை அழுத்த அலைபேசிக்கு உயிர் கொடுத்தாள்.  அழைப்பை ஒரு பெண் குரல் ஏற்றது.
  “""மேடம்... நான் பூரணி.  வேலூரிலிருந்து பேசறேன்.  உங்க பத்திரிகை நடத்துற கொலு போட்டிக்கு விண்ணப்பிச்சிருந்தேன்.  தேர்வானா திடீர் விசிட் வருவாங்கன்னு போட்டிருந்தீங்க.  நானும் இந்த நாள் வரை எதிர்பார்த்திட்டிருக்கேன்.  எங்க வீடு தேர்வாயிருக்கா?  எங்க வீட்டுக்கு குழு வருவாங்களா?  நாளைக்கு சரஸ்வதி பூஜை.  இன்னும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கு''”
  “""ஹலோ... ஹலோ... மேடம்.  உங்க ஆர்வத்துக்கு நாங்க தலைவணங்குறோம். ஆனா நீங்க ஒரு விஷயத்த புரிஞ்சுக்கணும்.  தேர்வான 18 பேருக்கும் முன்னமே போன்ல தகவல் தெரிவித்தாச்சு.  எங்க குழு அவங்க வீட்டுக்கும் விசிட் போயிட்டு வந்துட்டாங்க.  நேத்தோட அந்த புராஜெக்ட் முடிஞ்சிடுச்சி.  úஸா... இனிமே எதிர்பார்க்காதீங்க.  போட்டியில் கலந்து கொண்டதுக்கு எங்க பத்திரிகை சார்பா நன்றி.  கண்டிப்பா அடுத்த வருஷம் கலந்துக்குங்க மேடம். அடுத்த வருடத்தில் உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்''” என்றார்.
  பூரணிக்கு தலை சுற்றியது.  இப்போது தன் மீதே அவளுக்கு கழிவிரக்கம் பொங்கியது.  இதை 3 நாட்
  களுக்கு முன்பே கேட்டுத் தொலைத்திருந்தால் கூட இத்தனை நாள் நிம்மதியாகவேனும் இருந்திருக்
  கலாம்.  மனதில் முளைத்த ஆசை தீய்க்கு நெய் விட்டு நெய் விட்டு வார்த்து இப்போது குபீரென அணைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? எதிர்பார்த்து ஏமாந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
  தற்போது வெடித்து அழ வேண்டும் போல் இருந்தது.  வெளியே தீனாவின் "புடு புடு' வண்டிச் சத்தம்.  உள் நுழைந்த தீனா பூரணியின் முக வாட்டத்தை அறிந்து துருவினான்.  மடை திறந்த வெள்ளம் போல மொத்தத்தையும் கொட்டி முடித்து விம்மினாள்.  வீட்டில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் "கரக் கரக்' சத்தம் அவளுடன் சேர்ந்து அழுவது போல் இருந்தது.
  கொலு வைத்த வீட்டில் கண் கலங்கக் கூடாது என ஒருவாறு சொல்லி அவளைத் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவனுக்கு.
  மறுநாள் சரஸ்வதி பூஜை.  காலையிலிருந்தே சுரத்தில்லாமல் தான் வேலை செய்து கொண்டிருந்தாள்.  ”அம்மாவும் அண்ணியும் சாயந்திரம் வருகிறார்களாம்” என தனக்கு பேசியில் வந்த தகவலை பூரணியிடம் தெரிவித்திருந்தான் தீனா. அவர்களின் வருகையை ஒட்டி சற்றே இயல்பாகி இருந்தாள் பூரணி. 
  மாமியார் அறிவழகி ஓர்ப்படி மீனா மற்றும் மீனாவின் இரு மகன்கள் என நால்வரும் காரில் வந்து இறங்கினார்கள். அறிவழகி முதுமை காரணமாக இயலாமையில் தாங்கியபடி நிதானமாக நடந்து வந்து உள்நுழைந்தாள். வந்ததும் சோபாவில் பொத்தென அமர்ந்தவள் ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு கூடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
  உதடுகள் துடித்தன.  அவள் கண்கள் விரிந்தன.  புருவம் எழும்பியது. தொண்டை குழி மேலும் கீழுமாக ஏறி இறங்கியது.  பக்கத்தில் நின்றிருந்த பூரணியை பார்த்தாள்.
  தான் வாழ்ந்த வீட்டில் மற்றொரு முறை கொலு வைக்கப்பட்டு பார்த்ததே அவளுக்கு பேரானந்தம் தந்தது.
  பூரணியின் மேல் பெரிதாகப் பிடிப்பு ஏற்படாத நிலையில் பெரியவன் குடும்பத்துடனே தங்கிவிட்டவள் தான் அறிவழகி.  தற்போது பூரணியை ஆழ்ந்து பார்த்தார்.  பூரணி கொஞ்சமாக இதழ் விரித்து அறிவழகியின் பார்வை தீட்சையை அழகாக உள்வாங்கினாள்.
  ”""பூரணி... ரொம்ப அழகா கலை நேர்த்தியா கொலு வெச்சிருக்க.  உனக்கு எப்படி கொலு வைக்கணும்னு தோணுச்சு?''” அங்கே ஒரு சின்ன அமைதி.  பின் அதை உடைக்கும் விதமாக அவரே தொடர்ந்தார்:  
  ""உன் மாமனார் காலமான பிறகு சுமங்கலிங்களுக்கு எப்படி தாம்பூலம் கொடுக்கறதுன்னு அந்த வருஷத்தோட கொலு வைக்குற பழக்கத்த விட்டவ தான்.  ம்ம்ம்... மீனா வந்த பிறகு எத்தனயோ முறை சொல்லிப் பாத்துட்டேன்.    அவ அதப்பத்தி நெனச்சிக்கூட பாக்கல.  ஆனா நீ இந்த வருஷம் கொலு வெச்சு என் வயித்துல பால வார்த்துட்ட.  நம்ம குடும்பத்துல பல தலைமுறையா கொலு வெச்சு என்னால தொடர முடியாம போயிடுச்சேங்குற குற்ற உணர்வு என்னை அரிச்சிட்டே இருந்துச்சு.  இன்னிக்கு தான் அதிலிருந்து விலக்கு கெடச்சிருக்கு''” என பூரணியின் கைப்பிடித்து அறிவழகி நெக்குருகினாள்.  
  வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போல் இருந்தது பூரணிக்கு.
  அவ்வளவு சீக்கிரம் தன் அம்மாவிடமிருந்து நல்ல பெயர் வாங்கி விட முடியாது என்பது தீனாவுக்குத் தெரியும். தன் தாயிடம் இப்படி சில வார்த்தைகளை கேட்டதும் சந்தோஷத்தில் அவனுக்கும் தலைகால் புரியவில்லை.  பூரணியை வாஞ்சையுடன் பார்த்தான்.
  தன் மாமியாரின் ஆசிர்வாதம் கிடைத்த திருப்தியில் அந்த பத்திரிகைக்கு மனதிற்குள்ளாகவே மானசீக நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள் பூரணி.
  இப்போது அந்த பத்திரிகையின் பரிசு கிடைக்கவில்லையே என்ற கவலை துளிக்கூட மிஞ்சாமல் முழுவதும் துடைக்கப் பட்டு விட்டது பூரணியின் மனதில்.   
  ஒரு பத்திரிகை பரிசுப் போட்டி தன் வாழ்க்கையில் இப்படியும் மலர்ச்சி ஏற்படுத்துமா என்று ஆச்சர்யத்தில் அசந்து போனாள் பூரணி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai