Enable Javscript for better performance
வெள்ளியைத் தங்கமாக மாற்றிய சாதனைப் பெண்!- Dinamani

சுடச்சுட

  

  வெள்ளியைத் தங்கமாக மாற்றிய சாதனைப் பெண்!

  By - பா.சுஜித்குமார்   |   Published on : 01st September 2019 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kadhir2

   

  முக்கியமான சர்வதேசப் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் தொடர்ந்து வெள்ளிப் பதக்கமே வென்று வந்து விமர்சனத்துக்கு ஆளாகி வந்த பி.வி. சிந்து உலக பாட்மிண்டன் போட்டியில் அதை தங்கப் பதக்கமாக மாற்றி சாதனை படைத்துள்ளார்.

  இந்தியாவில் விளையாட்டு என்றாலே கிரிக்கெட் தான் அனைவரின் நினைவுக்கு வருவது வழக்கம். ஏனென்றால் அந்த அளவுக்கு கிரிக்கெட் பொது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. சர்வதேச ஆட்டங்களின் போது மைதானங்களில் திரண்டிருக்கும் பார்வையாளர்களே இதற்கு சாட்சியாகும்.

  தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும், கிரிக்கெட்டையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். தற்போது ஹாக்கியும் மெதுவாக தனது புகழை மீண்டும் பெற்று வருகிறது. 

  வேகம், துடிப்பு, நுணுக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது பாட்மிண்டன். இந்த ஆட்டத்தில் பாரம்பரியமாக சீனா, இந்தோனேஷியா, மலேசியா, கொரியா, டென்மார்க், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளே வலுவாக உள்ளன. இந்தியாவில் பாட்மிண்டன்  ஆட்டத்துக்கு முதலில் அடையாளம் தந்தவர் பிரகாஷ் பதுகோன், சையது மோடி, கோபிசந்த் போன்ற வீரர்கள் தான்.

  குறிப்பாக பிரகாஷ் பதுகோன் சர்வதேச அளவில் முக்கிய போட்டியான ஆல் இங்கிலாந்து சாம்பியன் போட்டியில் பட்டம் வென்றார்.

  குறிப்பிட்ட அளவிலேயே ஆடப்பட்டு வந்த பாட்மிண்டனை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஜுவாலா கட்டா, அஸ்வினி, ஸ்ரீகாந்த், போன்றவர்களை சாரும்.

  அதிலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து, சாய்னா என்ற இரு பெயர்களே பிரசித்தம். சாய்னாவை விட 4 வயது இளையவர் சிந்து.புசர்லா வெங்கட சிந்து எனப்படும் பி.வி.சிந்து கடந்த 5.7.1995-இல் பிறந்தார். விளையாட்டுக் குடும்பமான அதில் தந்தை பி.வி.ரமணா இந்திய வாலிபால் அணியிலும், தாயார் பி.விஜயாவும் தேசிய அளவிலும் ஆடியவர்கள். ரமணா, 1986 சியோல் ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். அர்ஜுன விருதும் பெற்றவர். சிந்துவின் மூத்த சகோதரி பி.வி.திவ்யாவும், தேசிய ஹேண்ட்பால் வீராங்கனையாக திகழ்ந்தார். எனினும் அவர் மருத்துவத்துறைக்கு மாறி விட்டார்.

  வழிகாட்டி கோபிசந்த்

  பெற்றோர் வாலிபால் வீரர்களாக இருந்தாலும், சிந்துவுக்கு பாட்மிண்டனில் தான் நாட்டம் சென்றது. ஹைதராபாத்தில் வசித்து வரும் அவர், இளம் வயதில் செகந்தராபாத்தில் உள்ள இந்தியன் ரயில்வே சிக்னல் பிரிவு மைதானத்தில் மெகபூப் அலி என்பவரிடம் அடிப்படை அம்சங்களைக் கற்றார். அதன் பின் கோபிசந்த் அகாதெமியில் சேர்ந்தார் சிந்து. 

  தற்போது தேசிய தலைமைப் பயிற்சியாளராக உள்ள கோபிசந்த் 2001-இல் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றவர். அவரைத் தனது வழிகாட்டியாக கொண்டார் சிந்து. அவரிடத்தில் காணப்பட்ட ஆட்டத்திறமை, எளிதில் விட்டுக்கொடுக்காத தன்மை போன்றவற்றை உணர்ந்து, தீவிர பயிற்சியளித்தார். அதன் பின் சிந்துவின் விளையாட்டு வாழ்க்கை பொலிவு பெறத் தொடங்கியது.

  10 வயதில் முதலில் இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் தேசியப் போட்டியில் பட்டம் வென்றார். தேசிய பள்ளிகள் விளையாட்டிலும் தங்கம் வென்றார்.

  சர்வதேச அறிமுகம்

  2009-இல் சர்வதேச அளவில் அறிமுகமான சிந்து, தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றார். 2010 உலக ஜூனியர் போட்டியில் காலிறுதி வரை முன்னேறினார்.  2012 சீன மாஸ்டர்ஸ் போட்டியில் லண்டன் ஒலிம்பிக் தங்க மங்கை லி ஸியுரெயை வென்றதே திருப்புமுனையாக அமைந்தது. பாட்மிண்டன் வட்டாரத்தில் முக்கிய போட்டிகளான ஜப்பான் ஓபன், இந்தோனேஷிய ஓபன், மலேசிய ஓபன், மக்காவ் ஓபன், சையது மோடி கிராண்ட் ப்ரீ போட்டிகளில் வெற்றி வாகை சூடினார்.

  உலகப் போட்டியில் வெண்கலம்

  2013 உலக சாம்பியன் போட்டியில் அப்போது நடப்பு சாம்பியனாக இருந்த சீனாவின் வாங் ஸியானை வென்ற சிந்து, அதில் முதல் பதக்கமாக வெண்கலம் வென்றார். 2014 உலகப் போட்டியிலும் தொடர்ந்து 2-ஆவது முறையாக வெண்கலத்தைக் கைப்பற்றினார்.

  ஒலிம்பிக்கில் வெள்ளி

  2016 ரியோ ஒலிம்பிக் போட்டி இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் கடுமையாகப் போராடி தோல்வியுற்று வெள்ளி வென்றார். இதன் மூலம் இளம் வயதில் ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார்.

  இறுதி ஆட்டங்களில் தொடர்கதையான தோல்வி

  2016 ரியோ ஒலிம்பிக், 2017, 2018 உலக பாட்மிண்டன், 2018 ஜகார்த்தா ஆசியப் போட்டி, கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டி, தாய்லாந்து, இந்தோனேஷிய, இந்திய ஓபன் போட்டி இறுதி ஆட்டங்களில் தோற்று வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றதால், கடும் விமர்சனத்துக்கு ஆளானார். 2018-இல் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

  உலக சாம்பியன் பட்டம்  

  இடையில் காயத்தாலும் அவதிப்பட்ட சிந்து, அதையெல்லாம் தாண்டி, தீவிரப் பயிற்சி, விடாமுயற்சி போன்றவற்றால் பேஸலில் நடைபெற்ற உலகப் போட்டியில் முதன்முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாம்பியன் ஆனார். இதன் மூலம் இறுதி ஆட்டங்களில் தொடர் தோல்விப் பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். சிந்துவின் இந்த அதிரடி வெற்றியில் கொரியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் கிம்மின் பங்கு அளப்பரியது. அவர் தான் சிந்துவின் ஆட்டமுறையையே மாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை

  கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்து அதிகம் வருவாய் ஈட்டிய வீராங்கனை என்ற பெருமையும் சிந்துவுக்கு உண்டு. ஒலிம்பிக் வெள்ளிக்கு பின் சிந்துவின் பெயர் மிகவும் பிரபலமடைந்து விட்டது. கடந்த 2018-இல் மட்டும் ஸ்பான்ஸர்கள், விளம்பர வருவாயாக அவருக்கு ரூ.66 கோடி கிடைத்தது. பாட்மிண்டன் லீக் போட்டியான யுடிடியிலும்  அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை என்ற சிறப்பும் சிந்துவுக்கு உண்டு.

  பிரிட்ஜ்ஸ்டோன் டயர்ஸ், மூவ் நிவாரண மருந்து, ஜேபிஎல், பிளிப்கார்ட், பானசோனிக், பரோடா வங்கி, பூஸ்ட், ஸ்டே ப்ரீ, போன்றவற்றின் விளம்பரங்களிலும் நடிக்கிறார். மேலும் வைஸாக் ஸ்டீல், சிஆர்பிஎப் படையின் விளம்பரத் தூதுவராகவும் திகழ்கிறார். 

  பிரபல விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களான யோனக்ஸ், சீனாவின் லி நிங் போன்றவற்றுடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.

  துணை ஆட்சியராக நியமனம் 

  சிந்துவின் அபாரமான சாதனைகளைப் பாராட்டி ஆந்திர மாநில அரசு, விஜயவாடாவில் நிலநிர்வாக துறையில் துணை ஆட்சியராக நியமித்தது. 

  உயரிய விருதுகள் 

  2013-இல் அர்ஜுன்,  2015-இல் பத்மஸ்ரீ, 2016-இல் ராஜீவ் கேல் ரத்னா போன்ற விருதுகள் சிந்துவைத்  தேடி வந்தன.

  பிரதான போட்டியாளர்கள் 

  கரோலினா மரின், டைசூ, அகேன் எமகுச்சி, நúஸாமி ஒகுஹரா, சென் யுபெய், போன்றவர்கள் தான் தொடர்ந்து அவருக்கு போட்டியாளர்களாகத் திகழ்கின்றனர்.

  ஒலிம்பிக் கனவு

  உலக சாம்பியன் ஆகி விட்ட சிந்துவுக்கு மற்றொரு கனவு நீடித்து வருகிறது. அது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதாகும்.

  வரும் 2020-இல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தர தயாராகி விட்டார் சிந்து.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai