ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மன அழுத்தத்திற்கு மருந்து!

நன்கு படித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த என் மகளுக்குத் திருமணம் செய்து வைத்த சில நாட்களிலேயே விவாகரத்துப் பிரச்னை ஏற்பட்டுவிட்டது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மன அழுத்தத்திற்கு மருந்து!

நன்கு படித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த என் மகளுக்குத் திருமணம் செய்து வைத்த சில நாட்களிலேயே விவாகரத்துப் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. சில வருடங்களுக்குப் பிறகு மறுமணம் செய்து வைத்ததும் பிரச்னையாகி அதுவும் விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் ஏற்பட்ட மன பாதிப்பால் DEPRESSION ஏற்பட்டு, தற்சமயம் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதுடன், பெற்றோர் ஆகிய எங்களை ஒருமையில் திட்டுவதும், கத்துவதும், வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் பேசுவதுமாக எங்கள் மனதை மிகவும் புண்படுத்துகிறாள். ஆங்கில மருந்துகளால் அதிகம் தூங்குகிறாளே தவிர, குணமாகவில்லை. இதற்கு ஆயுர்வேதத்தில் மருந்துள்ளனவா?

 -சீனிவாசன், நங்கநல்லூர்.

சுக துக்கங்களை அறிய காரணமாயிருப்பது மனம் என்று தர்க்க சாஸ்திரம் கூறுகிறது (சாக்ஷôத்காரே சுக துக்கா நாம் கரணம் மன உச்யதே). ஆனால் அந்த மனம் என்பது என்ன என்பதை ஒருவரும் சொல்லவில்லை. சிந்தனை செய்யக் கூடிய சக்தி மூளையில் ஆரம்பமாவதாக விஞ்ஞானங்கள் தெரிவிக்கின்றன. மூளையில் ஏதாவது ஒருபகுதி பாதிக்கப்பட்டு வேலை செய்யாவிட்டாலோ அல்லது அறுத்து வெளியே எடுத்தாலோ மனதின் வேலைகள் சில குறைக்கப்பட்டோ அல்லது இல்லாமலோ ஆகின்றன. அதனால் மூளைக்கும் மனதின் காரியங்களுக்கும் ஒரு சம்பந்தமிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் என்ன சம்பந்தமென்று தான் தெரியவில்லை. மூளையிலிருந்து இது உண்டாகிறதா? அது திரவமா? அல்லது காரியத்தினால் தான் கணக்கிடக்கூடிய வஸ்துவா? என்பது சரியாகத் தெரியவில்லை.

உங்களுடைய மகளுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நிறைந்த உணர்ச்சிக்கு மூல காரணமாக இருப்பது மூளை தான் என்று தெளிவாகிறது. அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக திருமணம் இருமுறை அமைந்துவிட்டதாலும், விவாகரத்திற்கான காரணங்களால் மனமும் மூளையும் பாதிக்கப்பட்டதன் வெளிப்பாடே அவரின் செய்கைகளும் பேச்சும் என்று நாம் அறிய முடிகிறது.

கோபம் வரும் சமயத்தில் அதிகமாக சுரக்கும் அட்ரீனலின் என்னும் திரவம் மூளையைப் பெரிதாக பாதிக்கின்றது. மனதின் இருதோஷங்களாகிய ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றின் ஆதிக்கமே, சத்வம் எனும் மனதின் தூய குணத்தைக் குறைத்து, மூளையின் மேல் புறத்திலுள்ள CEREBRAL CORTEX எனும் பகுதிகளிலுள்ள அநேக வளைவுகளில் பொதிந்துள்ள கோடிக்கணக்கான கோசாணுக்களை (Brain cells) பாதிக்கின்றன. 

ஒவ்வொரு கோசாணுவிற்கும் இரண்டிரண்டு படர் கொடிகளிருக்கின்றன (Tendrils). இவற்றின் மூலமாக ஒன்றிலிருந்து மற்றொரு கோசாணுவிற்கு மின் ரசாயனச் (Electrochemical) செய்திகள் பரவுகின்றன. வலி, ஞாபகம், கோபம் முதலியவை  இவ்வணுக்கள் மூலம், மின்ரசாயனச் செய்திகளால் தான் பரவுகின்றன.

பித்ததோஷத்தின் ஆதிக்ககுணங்களாகிய ஊடுருவும் தன்மை மற்றும் சூடும், ரஜோதோஷத்தின் உட்புறப்பகுதிகளில் ஆவேசத்தைப் பெறும் போதும், கபதோஷத்தின் நெய்ப்பும், குளிர்ச்சியும், கனமும், மந்தமும் தமோதோஷத்தின் உட்புறப்பகுதிகளில்  ஆவேசத்தை அடையும் போதும் ஏற்படும் குழப்பமான தன்மையே மனதைச் சஞ்சலமடையக் காரணமாகின்றன. பெற்றோர் மீது வெறுப்பும், கூறத் தகுதியற்ற வார்த்தைகளின் பிரயோக விசேஷத்திற்கும் இவையே காரணமாகின்றன.

படிப்பினால் அவருக்கு ஏற்பட்ட அறிவு வளர்ச்சி, காலச் சூழ்நிலையினால் மறைக்கப்பட்டுப் போன நிலையை மறுபடியும் மாற்ற நேர்மையான சிந்தனை, தர்க்கரீதியாகப் பேசுதல், மனதின் பண்பாடு ஆகியவற்றைக் கொண்டே சாதிக்க முடியுமே தவிர, மருந்து மாத்திரைகளால் ஏற்படும் ELECTRO CHEMICAL  மாற்றம் சாதித்துத் தராது. ஆனால் அதற்கு அவரைத் தயார்படுத்த சிறந்த COUNSELLING செய்யக்கூடிய மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்களை நாடுவதே இத்தருணத்தில் தங்களுக்குப் பயன்தரக்கூடும். அவர்களிடம் அழைத்துச் செல்வதற்கு அவர் மனரீதியாக ஒத்துக் கொள்வாரா? என்பதும் சந்தேகமே!

அவருடைய பிடிவாதம், வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பு, மனக் கொதிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்த அவர் அறியும்படி மருந்து கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம். மருந்தை அவர் தூக்கி எறியலாம், வாயிலேயே வைத்திருந்து பிறகு துப்பி விடலாம் என்பதால், அவர் அறியா வண்ணம் உணவிலேயே சேர்த்துக் கொடுக்கக் கூடிய மூலிகை நெய் மருந்துகள் உள்ளன. உடல் நிலைக்குத் தகுந்தவாறு அவற்றைத் தேர்ந்தெடுத்து சீரகம், கடுகு தாளித்து சாம்பார், ரசம் போன்றவற்றில் சேர்த்துக் கொடுக்க, மருந்தினுடைய வீர்யமானது மூளைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரஜ - தம தோஷங்களின் தாக்கத்தை மட்டுப்படுத்தி அவருக்கு ஒரு நிதானத்தை ஏற்படுத்தித் தரலாம். 

அதன் பிறகு அவரின் சம்மதத்தின் பேரில், வைத்திய முறைகளான தலையில் மூலிகைத் தளமிடுதல், மூலிகைத் தைலம் கொண்டு தலையில் ஊற்றப்படும் சிரோதாரா, போன்றவற்றைச் செய்ய முயற்சிக்கலாம். எதுவாயினும் மனோதத்துவ அறிஞர்களும், தேகதத்துவ விஞ்ஞானிகளும் மனம், புத்தி, ஞாபகசக்தி, மூளை முதலிய விஷயங்களைப் பற்றி அறியாத உண்மைகள், அறிந்ததை விட அதிகம் என்றே கருதுகிறார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com