சுடச்சுட

  
  k4

  * தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு ஹிந்தி படவுலகுக்குச் சென்றவர் ஸ்ரீதேவி. ஒரு கட்டத்தில் இந்தியா முழுமைக்கும் ரசிகர்களைக் கொண்டிருந்தார் அவர். அவரது திடீர் மறைவுக்குப் பின்னர் மகள் ஜான்வி நடிகை ஆனார். இந்தநிலையில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஜான்வியை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்வியின் தந்தையும், "நேர்கொண்ட பார்வை' தயாரிப்பாளருமான போனிகபூர் பேசும் போது...
  "தென்னிந்தியப் படங்களை எங்கள் குடும்பமே விரும்பிப் பார்க்கும். ஸ்ரீதேவி இங்கு நிறையப் படங்களில் நடித்திருக்கிறார். இங்குள்ள நடிகர்களுடன் நாங்கள் நல்ல உறவுடன் இருக்கிறோம். ஜான்வி தென்னிந்தியப் படங்களை ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் அதற்கு நல்ல கதை அமைய வேண்டும். அந்த தருணத்துக்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அப்படியொரு கதை அவருக்குக் கிடைக்கவில்லை. தென்னிந்தியப் படங்களை ஜான்வி நிராகரிக்கிறார் என்று சொல்வதெல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை'' என்று தெரிவித்துள்ளார் போனிகபூர்.

  • புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளின் போது பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கி கொண்டவர் அபி நந்தன். பின்னர் பாகிஸ்தான் அவரை விடுவித்தது. இந்த நிலையில் அபி நந்தனின் வாழ்க்கையைத் தழுவி சினிமா உருவாகவுள்ளது. 
  காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தை விவேக் ஓபராய் தயாரிக்கிறார். பாகிஸ்தான் படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தன் கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கான தேர்வு நடக்கிறது. இது குறித்து விவேக் ஓபராய் கூறுகையில், ""இந்தியப் படையின் வீரத்தைப் போற்ற வேண்டியது, இந்தியன் என்ற முறையில் எனது கடமை. அபிநந்தன் உள்பட பல வீரர்கள் செய்த சாகசங்கள் இதில் இடம்பெறும். முறையான அனுமதி பெற்று இப்படத்தைத் தயாரிக்கிறேன். இவ்வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது'' என்றார்.

  • "பாகுபலி' படத்தின் சில காட்சிகளை பல்கேரியாவில் படமாக்கினார் ராஜமௌலி. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. உலக அளவில் பெரும் சாதனை படைத்தது. இப்போது தனது அடுத்த படமான "ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பையும் பல்கேரியாவில் நடத்தச் சென்றிருக்கிறார். கதைப்படி ஜூனியர் என்டிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளை பல்கேரியாவில் படமாக்குகிறார் ராஜமௌலி. இந்தப் படத்தில் ராம் சரண் தேஜா, அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். அவரையும் ராஜமௌலி தேர்வு செய்துவிட்டார். விரைவில் அவரைப் பற்றி அறிவிப்பார் என்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது. பல்கேரியாவில் படமாக்குவது என்பது அவருக்கு சென்டிமெண்டான விஷயம் என்கிறார்கள். 

  • பெரும் ஆளுமைகளின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கத்தில் பல தலைவர்களின் வாழ்க்கை படமாகி வருகின்றன. 
  வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கை பரப்புரை எனப் பல வடிவங்கள் இருந்தாலும், இது ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையைத் தழுவி படம் எடுக்கப்பட்டு வருகிறது. "பசும்பொன் தெய்வம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் அவரின் பிறப்பு, படிப்பு, குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், நேதாஜியுடனான சந்திப்பு, கைரேகைச் சட்டத்தை எதிர்த்தது, சுதந்திரப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம், பார்வர்டு பிளாக் கட்சி பணி, "நேதாஜி' என்ற பெயரில் வெளியான பத்திரிகையில் பணியாற்றிய அனுபவங்கள், அவரின் மரணம் உள்ளிட்ட பல சம்பவங்கள் இதில் தொகுக்கப்படவுள்ளன. சூலூர் கலைப்பித்தன் இப்படத்தை திரைக்கதை எழுதி தயாரித்து இயக்குகிறார். இவர் ஏற்கெனவே "சாட்டையில்லாத பம்பரம்', "சுதந்திர பாரதி', "துளசி மாலை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியுள்ளார். ராஜா முகம்மது, அண்ணாதுரை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

  • "என்னமோ ஏதோ', "கரையோரம்', "நாரதன்', "7 நாட்கள்', "பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்தவர் நிகிஷா படேல். தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் "பாண்டிமுனி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குநருடன், நிகிஷா பங்கேற்றார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து நிகிஷா நீக்கப்பட்டார். இயக்குநர் கஸ்தூரிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து நிகிஷா நிராகரிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. புதிய படம் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிகிஷா, இணையத்தில் அதற்காக வலை வீசி வருகிறார். மும்பை வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த நிகிஷா திடீரென்று துருக்கிக்குப் பறந்தார். கடற்கரைப் பகுதியிலும், நீச்சல் குளத்திலும் சிவப்பு நிற நீச்சல் உடையில் நீந்தி மகிழ்ந்ததுடன் அப்படங்களை இன்ஸ்டாவிலும் பகிர்ந்து "என்னைப் பார் என் அழகைப்பார்' என்று கமெண்ட் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ஏகத்துக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். "சினிமாவில் உங்களை மீண்டும் எப்போது பார்ப்பது?' என்று பலர் கேட்டிருக்கின்றனர்.
  ஜி.அசோக்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai