தற்காப்புக் கலைக்குத் தங்கம்!

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பல வழிகளில் போராடுகிறான். எதிரி தாக்க வரும்போது, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் திருப்பித் தாக்குவதை தற்காப்புக் கலை எனலாம்.
தற்காப்புக் கலைக்குத் தங்கம்!

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பல வழிகளில் போராடுகிறான். எதிரி தாக்க வரும்போது, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் திருப்பித் தாக்குவதை தற்காப்புக் கலை எனலாம். பல வகை தற்காப்புக் கலைகள் இருந்தாலும் இலக்கு ஒன்றே. அது எதிரியை வீழ்த்துவது. தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் கைகளை மட்டுமே பயன்படுத்தும் வர்மக்கலை, குத்துவரிசை, மல்யுத்தம் போன்றவையும் தற்காப்புக் கலைகளே. சிலம்பம், வாள், இரட்டை வாள், சுருள்பட்டை உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் ஆயுதங்களைப் பயன்படுத்தி செய்யப்படுபவையாகும்.
 தற்காப்புக் கலையைக் கற்பதனால், தன்னம்பிக்கை மற்றும் சகிப்புத்தன்மை வளரும். உடல் எடையைக் குறைக்க, எலும்புகளை வலுவாக்க இந்தக் கலையில் பயிற்சி பெறலாம். இந்த கலை பயின்றவர்களுக்கு கவனக்குறைவு என்பது இருக்காது என பயற்சியாளர்கள் கூறுகிறார்கள். தற்காப்புக் கலையின் சர்வதேச அளவிலான போட்டியில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்தவ மாணவ, மாணவிகள் 4 பேர் வியட்நாம் நாட்டிற்குச் சென்று போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் என 5 பதக்கங்களைப் பெற்று வந்துள்ளனர்.
 இது குறித்து விருதுநகர் மாவட்ட சிலம்பம் கழகம் சார்பில் திருத்தங்கலில் தற்காப்புக் கலை பயிற்சி அளித்துவரும் எஸ்.முத்து கிருஷ்ணனிடம் கேட்டபோது, அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
 "நாங்கள் சிலம்பம், களரி, குத்துவரிசை, வர்ம முறை ஆகியவை குறித்து பயிற்சி அளித்து வருகிறோம். எங்களிடம் முதலாம் வகுப்பு மாணவர் முதல் கல்லூரி படிக்கும் மாணவர் வரை 80 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என வார நாள்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை பயிற்சி அளிக்கிறோம். தொடக்கத்தில் சிலம்பம், வாள், இரட்டை வாள், சுருள்பட்டை உள்ளிட்ட 4 வகையான கலைகளிலும் பயிற்சி கொடுப்போம். அதில், எந்த கலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெறுகிறார் என கண்டறிந்து, பின்னர் அதில் மட்டும் பயிற்சி அளிப்போம்.
 பயிற்சி பெற்றவர்களை முதலில் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியிலும், பின்னர் மாநில அளவிலான போட்டியிலும், தொடந்து தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெறச் செய்வோம்.
 கடந்த 2018 ஜூலை 13ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதிவரை, தெற்காசிய சிலம்பம் சம்மேளனம், கன்னியாகுமரியில் 2 ஆவது தெற்காசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தினர். இதில் எங்களிடம் பயிற்சி பெற்ற 5 ஆம் வகுப்பு மாணவி ஏ. முருகலட்சுமி, 8 ஆம் வகுப்பு மாணவி பி.லத்திகாஸ்ரீ, 8 ஆம் வகுப்பு மாணவர் ஜி.துளசி ராம், பத்தாம் வகுப்பு மாணவர் ஏ.வென்னிமலைராஜா ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் வியட்நாம் அரசு மற்றும் அங்குள்ள ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை இணைந்து 2019 ஆகஸ்ட் 6 ஆம் தேதிமுதல் 12 ஆம் தேதி வரையில் சர்வதேச அளவிலான தற்காப்புக்கலைப் போட்டியை நடத்தின.
 இப்போட்டியில் ரஷ்யா, சீனா, மலேசியா, மெக்சிகோ உள்ளிட்ட 22 நாடுகளிலிருந்து வீரர்கள் மற்றம் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வேல் கம்பு வீச்சு, வாள் வீச்சு உள்ளிட்ட 20 வகையான போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவிருந்து கலந்து கொண்ட 12 பேரில், எங்களிடம் பயிற்சி பெற்ற 4 பேரும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட முருகலட்சுமி ஓப்பன் வாள்வீச்சில் தங்கப் பதக்கமும், லத்திகா ஸ்ரீ (18 வயது குட்பட்டோர் பிரிவு) கை ஜோடி முறையில் தங்கப் பதக்கமும், வாள்வீச்சில் வெண்கலப் பதக்கமும், துளசிராம் (18 வயதுக்குட்பட்டோர் பிரிவு) சுருள் வாள் வீச்சில் வெள்ளிப் பதக்கமும் , 19 வயதுக்கு மேலான பிரிவில் வென்னிமலைராஜா சுருள்வாள் வீச்சில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இப்போட்டியில் எதிரிகளுடன் மோத வேண்டும் என்றில்லை. மோதுவதுபோல பாவனை செய்தால் (வேகம், விறுவிறுப்பு, ஆயுதத்தைக் கையாளும் முறை) அதற்கு ஏற்றார்போல மதிப்பெண்கள் உண்டு. இதில் பதக்கம் பெற்ற 4 பேரும் வரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் அக்டோபர் 2 ஆம் தேதிமுதல் 6ஆம் தேதிவரை நடைபெறும் சர்வதேச தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். அந்தப் போட்டியிலும் தங்கப்பதக்கத்தை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை'' என்றார்.

 - ச.பாலசுந்தரராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com