பற்றியெரியும் சுற்றுச்சூழல்..!

இன்றைய கால கட்டத்தில், "அமேஸான்' என்றாலே சர்வதேச அளவில் பல்வேறு நுகர்பொருள்களை ஆன்லைன்னில் விற்கும் "மெய் நிகர்' அங்காடிதான் சட்டென்று நினைவுக்கு வரும்.
பற்றியெரியும் சுற்றுச்சூழல்..!

இன்றைய கால கட்டத்தில், "அமேஸான்' என்றாலே சர்வதேச அளவில் பல்வேறு நுகர்பொருள்களை ஆன்லைன்னில் விற்கும் "மெய் நிகர்' அங்காடிதான் சட்டென்று நினைவுக்கு வரும். அதையும் தாண்டி "அமேஸான் காடுகள்' உலக தலைப்புச் செய்தியாக மாறியிருக்கின்றன.

காரணம் "பூமியின் நுரையீரல்' என்று சொல்லப்படும் அமேஸான் காடுகள் "தீக்குளித்து' வருவதுதான். அனைத்து உலக நாடுகளும் "என்ன செய்தாவது அமேஸான் காட்டுத் தீயை அணையுங்கள்... அதற்கு தாராள நிதி உதவி செய்கிறோம்... பரவும் தீயைக் கட்டுப்படுத்தாவிட்டால் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் கஷ்டப்படுவோம்'' என்று பதறியிருக்கின்றன.

உலகின் மிகப் பெரிய காடு அமேஸான் மழைக் காடுகள். அமேஸான் ஆற்றுப் படுகை 70 லட்சம் சதுர கி.மீ. என்றால் அதில் காடு மட்டும் 50 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவிற்கு அமைந்திருக்கிறது .

அமேஸான் காடுகளை எல்லையாக பிரேசில், பொலிவியா, பெரு, ஈக்வேடார், கொலம்பியா, கயானா, சுரினாம், வெனிசுலா போன்ற ஒன்பது நாடுகள் கொண்டிருக்கின்றன என்றாலும் பிரேசில் நாட்டில் அமேஸான் காடுகள் அதிகம் பரவியுள்ளன.

அமேஸான் காட்டுக்குள் பாயும் அமேஸான் நதி சுமார் 7000 கி.மீ. நீளம் கொண்டது. இதன் கிளை நதிகள் 1100. இந்தியாவின் அனைத்து நதிகளும் கொண்டு வரும் நீரின் அளவை விட அமேஸான் நதி நீரின் அளவு பல மடங்கு அதிகம். "வலிய மன்னத்தல்' ஹம்ஸா என்ற கேரள விஞ்ஞானி அமேஸான் ஆற்றுக்கு 4000 மீட்டர் ஆழத்தில் 6000 கி.மீ. நீள ஆறு ஒன்று பாய்வதை எலிசபெத் தவர்ஸ் பிமெண்டல் என்ற தனது ஆராய்ச்சி மாணவியுடன் இணைந்து 2011 -இல் கண்டுபிடித்தார். அதனால் அந்த நதிக்கு "ஹம்ஸா நதி' என்று பெயரிடப்பட்டது.

ஆற்றின் நன்னீரை உறிஞ்சி மரங்கள் வெளியேற்றும் நீராவி ஒட்டு மொத்த அமேஸான் காட்டிற்கு மேல் பிரமாண்ட வெண்ணிறக் குடையாக உலவுகிறது. மண்ணில் பாயும் நதியின் நீரோட்டத்தைப் போன்றே நீராவி ஓட்டமும் இருப்பதால், நீராவிக் குடையை "பறக்கும் ஆறு' என்கின்றனர். இந்த நீராவிக் குடைதான் தென் அமெரிக்க நாடுகளில் பெய்யும் மழைக்கு அடிப்படையாக அமைகிறது.

அமேஸான் நதி தீரங்களில் இந்த ஆறு நாடுகளின் நகரங்கள் பல அமைந்திருந்தாலும் அமேஸான் மழைக்காடுகள் எந்த அளவுக்குப் பரந்து விரிந்திருக்கிறது என்பதை விண்வெளியிலிருந்து படம் எடுத்தால் அந்த நகரங்கள் ஒரு புள்ளியாகக் கூடத் தெரிவதில்லை. எல்லாம் பச்சை மயம் . இந்த ஒன்பது நாடுகளில் ஆங்காங்கே அமேஸான் காட்டில் தீ எரிந்து கொண்டிருந்தாலும், பிரேசில் பகுதியில் இருக்கும் அமேஸான் காட்டில் மிக அதிகமாக காட்டுத் தீ பற்றி பரவிக் கொண்டிருக்கிறது. காடு எரிவதினால் கிளம்பும் புகை மண்டலம் அது பிறப்பிக்கும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனோ ஆக்ஸைடு பிரேசிலை மட்டுமல்ல, உலகையும் அச்சுறுத்துகிறது.

எங்கோ பிரேசிலில் அமேஸான் காடுகள் தீ பற்றி எரிந்தால் அண்டை நாடுகள் கவலைப்படலாம். பல்லாயிர மைல்கள் தூரத்தில் இருக்கும் நாடுகள் ஏன் கவலைப்பட வேண்டும் ?

அதற்குக் காரணம் இருக்கிறது. உலகில் மக்கள் சுவாசிக்கத் தேவைப்படும் ஆக்சிஜனில் இருபது சதவீதம் உற்பத்தி செய்வது அமேஸான் காடுகள். உலகில் வெளிப்படுத்தப்படும் கார்பன் டை ஆக்ஸைடை அதிக அளவு உறிஞ்சி எடுத்து, உலகின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் இந்தக் காடுகள் உதவுகின்றன. இவை தவிர, இதுவரை காணாத பல்வகை மரங்கள், மிருகங்கள், பறவைகள், உயிரினங்கள், ஆதிவாசிகள் அடங்கிய அமேஸான் மழைக் காடுகள் மூன்று இந்தியாவை விட பெரியது.

"அனகோன்டா' எனப்படும் பூதாகர பாம்புகள் அமேஸானின் தனி சொத்து. விஷப் பல்லிகள், விஷ சிலந்திகள், விஷ தவளைகள் அமேஸான் காடுகளுக்குள் மனிதர்கள் நுழைவதை தடுக்கும் தடைகள்.

அமேஸான் காடுகளில் மழை பெய்யும் போது மழை நீர் பூமிக்கு வந்து சேர பத்து நிமிடம் பிடிக்குமாம். சூரிய வெளிச்சம் அமேஸான் காட்டு மண்ணைத் தொடவே தொடாது. ஆக பகலிலும் இருட்டுதான். இரவில் எப்படி அமேஸான் "கும்' இருட்டாய் இருக்கும் என்று சொல்ல வேண்டாமே...! அந்த அளவுக்கு மரங்கள் நெருக்கமாக இருக்கின்றன.

திக்குத் தெரியாத அமேஸான் காட்டுக்குள் போகிறவர்கள் திரும்பி வர முடியாது. இங்கு வாழும் ஆதிவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அமேஸான் காடுகளைப் பற்றி இதுவரை தெரிந்து கொண்டது கையளவு மட்டுமே. தெரிந்து கொள்ளாதது கடல் அளவு. அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்தது அமேஸான் காடுகள்!

அமேஸான் காடுகளில் கோடை காலத்தில் தீ தானே பற்றிக் கொள்ளும் என்று சொல்லப்பட்டாலும் அமேஸான் கரையோர நாட்டு மக்கள் தங்களுக்காகவும், பயிர்களை வளர்ப்பதற்காகவும், ஆடு மாடு, பன்றிகளை மேய்ப்பதற்காகவும் நிலம் தேவைப் படுவதால் மரங்களுக்குத் தீ வைத்து கொளுத்துகிறார்கள்.

இப்படி தீ வைத்துக் கொளுத்துவதால் அமேஸான் காடுகளில் இருபத்தைந்து சதவீதம் அழிந்துவிட்டதினால் அமேஸான் நீர்ப்படுகை நிலப்பகுதியில் வெப்ப அளவு ஒன்றிரண்டு டிகிரி அதிகரித்துள்ளது. இந்த வெப்ப மாற்றம் உலகத்தின் இதர பகுதிகளையும் பாதித்து வருகிறது. அமேஸான் தீ உலகின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதால், அண்மையில் நடந்து முடிந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டில் பிரேசில் நாட்டின் அமேஸான் காடுகளில் பிடித்திருக்கும் தீ தர்க்க விஷயமாகியது.

அமேஸான் காடுகளின் தீக்குளிப்பு ஃபிரான்ஸ் பிரேசில் நாடுகளின் அதிபர்களிடையே சொல் போரைத் தொடங்கிவிட்டிருக்கிறது. அது "உங்கள் மனைவி அழகானவர் கிடையாது.. என் மனைவி அழகு..' என்று பிரேசில் அதிபர் பால்சனாரோ, ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரானைத் திட்டித் தீர்க்கும் அளவுக்குப் போயிருக்கிறது.

ஃபிரான்ஸ், அயர்லாந்து நாடுகள் உள்பட பல நாடுகள், " தீயைக் கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையெனில் பிரேசிலின் மேல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும்'' என்று எச்சரித்த பிறகு தீயை கட்டுப்படுத்த நாற்பதாயிரம் பேர்கள் ஈடுபடுத்தப்பட்டாலும், தீ என்னவோ கொழுந்துவிட்டுத்தான் எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைக்க வெளி உதவிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பிரேசில் அதிபர் அறிவித்தும்விட்டார்.

அதேசமயம், நாஸா துணைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படம் ஆப்பிரிக்கா கண்டத்தின் காங்கோ மழைக் காடுகளில் பற்றி எரியும் தீ அமேஸான் காட்டுத் தீயை விட மூன்று மடங்கு அதிகம் என்று சொல்கிறது. காங்கோ காடுகள் பூமியின் "இரண்டாவது நுரையீரல்'. ஆப்பிரிக்காவிற்கு பக்கத்தில் இருக்கும் மடகாஸ்கர் தீவின் வடக்கு பாகத்திலும் தீ எரிகிறது. ஃபிரான்ஸ் நாட்டு அதிபர், ஆப்பிரிக்கா தீயை அணைப்பது குறித்தும் அக்கறை காட்டி வருகிறார். அமேஸான் காடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது காடாக இருக்கும் காங்கோவும் பற்றி எரிவதால் இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்காவை "தீ கண்டம்' என்று நாஸா அழைக்கத் தொடங்கியுள்ளது.

உலக மக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அமேஸான், காங்கோ காடுகள் தீக்கு இரையாகி வருவதை முழுவதுமாகத் தடுக்க முடியாவிட்டாலும் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால், காடுகளை தீக்குளிக்கச் செய்வது கொள்ளிக்கட்டையை எடுத்து தலைச் சொறிந்து கொள்வது போலாகிவிடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com