இப்படியும் சிலர்

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதைசும்மா ஐந்து நிமிட நடை தூரம் தான்.
இப்படியும் சிலர்

சென்ற இதழ் தொடர்ச்சி...
தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை

சும்மா ஐந்து நிமிட நடை தூரம் தான். சென்று பார்த்த போது அந்தம்மாவின் கடை இல்லை. பழைய பைகளைச் சரி செய்து கொடுக்கும் கடையின் வாசலில்தான் சோளக்கதிர் கடையை விரித்து வைத்திருந்தார். என் நண்பருக்கு அந்த தையலர் நன்றாகப் பழக்கமானவர் என்பதால் சிரமம் இல்லை. அவரிடம் விசாரித்தார்.
"ஆமா, யாரோ ஒரு அம்மா இந்த கடை வாசல்ல சோளக்கதிர் கடை போடுதாமே, உங்களுக்கு தெரிஞ்சவங்களா? ரொம்ப வேண்டியவங்களா?''"
"ஏங்க? சொல்லுங்க, என்ன விஷயம்?''
"ஒரு பிரச்னை விஷயமா பார்க்கணும், அதான் கேட்டேன்''"
"எனக்கு சொந்தமெல்லாம் இல்லீங்க, இந்த லைன் கடைசியில பழக்கடைங்க வச்சிருக்காங்களே சில பொம்பளைங்க, அவங்களுக்கு சொந்தம்னு நெனைக்கிறேன். கடைபோட்டுக்கட்டுமான்னு கேட்டிச்சி, சரின்னுட்டேன். ஒரு வாரமாதான் கடை போடுது. எதிர் வெயில் வர்ற வரைக்கும் கடை போடும். அப்புறம் எடுத்து வச்சிட்டுப் போயிடும். ஏங்க, என்ன பிரச்னைன்னு தெரிஞ்சுக்கலாமா?''
என்னைக் காட்டி, "இவரு என்னோட 
நண்பர். எனக்கு இருபது வருஷமா பழக்கம். ஆர்ட்டிஸ்ட். எனக்கு எப்பவுமே போர்டெல்லாம் இவர்தான் எழுதிக் கொடுப்பாரு. நீங்க பாத்திருப்பீங்க... ஆனா ஞாபகம் இருக்காது. இப்ப கம்ப்யூட்டரை வச்சிக்கிட்டு பிரிண்டிங் டிசைனிங் பண்ணிக்கிட்டு இருக்கிறாரு. நம்ம ஏரியாவுல தான் மூணு மாசமா கடை வச்சிருக்கிறாரு. இந்தம்மா இவரைப் பார்க்கிறப்ப எல்லாம் சத்தம் போடுதாமே. அதுதான் என்னன்னு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்'' என நடந்தவற்றை விளக்கமாகச் சொன்னார். 
அந்த கடைக்காரர் புதிதாகக் கேட்பது போல கேட்டுவிட்டு, "அப்படிங்களா, எனக்கு அதைப்பத்தி ஒண்ணும் தெரியாதுங்களே. அந்தம்மா தானாவே சும்மா எதையாச்சும் பேசிக்கிட்டு இருக்கும். இவரு வந்து பேசும்போது கூட தெரிஞ்சவங்களா இருக்கும்னு நான் இருந்துட்டேன். மத்தபடி இந்த விஷயம் எதுவும் தெரியாதுங்க''" என்றார்.
"அது இருக்கட்டுங்க, இவருக்கும் சோளக்கதிருக்கும் என்ன சம்பந்தம்? அந்தம்மா யாருகிட்டேயோ பணத்தைக் குடுத்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? அதை இல்லேன்னு சொல்லலை. ஆனா, ஆளு கூட யாருன்னு தெரியாம, இவருகிட்ட வந்து பணத்தைக் கேட்டு தொல்லை பண்ணிக்கிட்டிருக்குது. இது சரியா? அதனால அந்தம்மா வந்தா சொல்லி வையுங்க. மறுபடியும் இந்த மாதிரி பண்ணா, அப்புறம் கடையே போட முடியாதுன்னு. அப்புறம் என்மேல நீங்க வருத்தப்படக்கூடாது. அதையும் சொல்லிட்டேன்''" 
"சரிங்க, வந்தா சொல்றேங்க''" என்றார் கடைக்காரர். 
என் நண்பரும் என்னைச் சமாதானப்படுத்திவிட்டு, மறுபடியும் ஏதாவது பிரச்னை செய்தால் வந்து சொல்லும்படி கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது. அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் அந்தம்மா கடை போடவில்லை. எனக்கும் மனஉளைச்சல் இல்லை. மூன்றாம் நாள் கடை இருந்தது. அன்று வந்து அப்படி பேசிவிட்டு போனதை அந்த பை கடைக்காரர் அந்தம்மாவிடம் சொன்னாரா எனத் தெரியவில்லை. என்னை எதிர்ப்பது ஓர் ஆணாக இருந்திருந்தால் இன்னேரம் நடந்திருப்பதே வேறு. என்ன செய்வது? எனக்கு வெளியே சொல்ல தயக்கமாகவும், அதே நேரம் கொஞ்சம் 
பயமாகவும் இருந்தது. 
என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வார்கள், "நாய்க்கு பயந்தால் தெருவில் நடமாடவே முடியாது. பிரச்னைக்குப் பயந்தால் உலகத்தில் வாழவே முடியாது' என்று. கேட்பாரின்றி தாராளமாக தவறுகளை செய்கிறவர்களே பயமின்றி உலாவரும் உலகத்தில், தப்பே செய்யாத நான் ஏன் பயப்படணும்? கிழவி ஏதாவது வம்பு பேசட்டும். மண்டையில் ஒரே போடுதான் என்ற முடிவோடு தெருவில் இறங்கி நடந்தேன். கொஞ்சம் கூட பாதிப்பு இல்லாதவன் போல இருக்க ரொம்பவும் மெனக்கெட்டேன். நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்தேன். விட்டாளா கிழவி?
"போறான் பாரு... என் வூட்டு காசை வாயில போட்டுட்டு எப்படி போறான் பாரு... என்னைத் தெரியவே தெரியாதுங்கிறான்... என்ன ஒரு அநியாயம்... என் காசை ஏமாத்துனவன் நல்லாயிருப்பானா? அவன் குலம் விளங்காமப் போவ... பாரு, பாரு, ஒண்ணுந்தெரியாதவன் மாதிரி பாக்காமப் போறான் பாரேன். வெப்பாடா... அந்த முண்டக்கண்ணி மகமாயி உனக்கு, கண்டிப்பா வெப்பா''"என்று சத்தமாக சொன்னதால் என் காதிலும் அது விழுந்தது. 
அந்தச் சாபம் என்னை ஒன்றும் செய்யாது என்று தெரியும். ஆனால் சொன்னவிதம் தான் எனக்குள் கோபத்தைத் தூண்டியது. அங்கிருப்பவர்கள் எல்லோரும் என்னையே, என்னை மட்டுமே பார்ப்பதாகத் தோன்றியது. எல்லோருடைய கண்களுக்கும் நான் தப்பான ஆள் போல தான் தெரிவேன். தான் செய்யாத தப்புக்குத் தண்டனையாக, இதைவிட மோசமான அவதூறும், அவமானமும் ஒருவனுக்கு இருக்க முடியுமா? இந்த கிழவியை காதோடு கன்னமும் சேர்த்த மாதிரி ஓங்கி "பளார்' என அறைந்து விடலாமா என மனம் ஆத்திரத்தில் குதித்தது. "அவசரப்படாதே, பொறுமையாயிரு, பொறுத்தவரே வாழ்வார்' என்றது மனவொலி.
நான் தாமதிக்காமல் என் நண்பரை பார்க்கச் சென்றேன், நல்லவேளை அவர் இருந்தார். அவரிடம் அதன்பிறகு நடந்தவற்றையும் சொன்னேன். அவர் உடனே கிளம்பி என்னுடன் வந்தார். அந்த கடையையும் அந்தம்மாவையும் அவரிடம் காட்டினேன். அவர் அந்தம்மாவிடம் தன்மையாகவே விசாரித்தார். 
என்னிடம் பணம் கொடுத்தது உண்மைதான் என்று அந்தம்மா முண்டக்கண்ணி மகமாயி பெயரில் அடித்து சத்தியம் செய்தார். அந்த ஆவேசமான சத்தியம் எனக்கு இன்னும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. என்னைவிட, ஏன்... முண்டக்கண்ணியை விட அதிகமாய் அதிர்ந்தவர் என் நண்பர்தான். என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்தவர் என்பதால், அந்தம்மா சொன்னதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபத்தின் உச்சிக்கே சென்றார். கொஞ்ச நேரத்தில் வார்த்தைகள் சூடாகி, தீப்பிடித்து, வெடித்து, சத்தமும் பெரிதாகிவிட, ஒரு கூட்டமே கூடி நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது. 
மனிதர்களுக்கு பொது குணம் ஒன்று இருக்கிறது. அது எதையும் வேடிக்கை மட்டுமே பார்ப்பது ஆகும். ஒருவரை அவதூறாகப் பேசினால், எல்லாரும் வேலையை மறந்தும் கவனிக்கிறார்கள். அதுவே உயர்வாக பேசினால் கவனிக்க யாரும் தயாரில்லை. அடுத்தவருடைய அந்தரங்க விசயங்களிலும், குற்றச்சாட்டுகளிலும் மட்டுமே இந்த மனிதக்கூட்டம் அதிக ஆர்வம் காட்டுகிறது.
அந்தம்மா சளைக்காமல் சரிக்கு சரியாய் களத்தில் நிற்குமென நிச்சயமாக யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கைகலப்பு ஆகாத குறைதான். வேடிக்கைப் பார்த்தவர்கள் யாரும் யார் பக்கமும் பேச வரவில்லை.
நான் இதை பெரியதாக்காமல் இருந்திருக்கலாமோ என தோன்றியது. ஆனால் கலகம் பிறந்தால்தானே எதற்கும் ஒரு விடிவு கிடைக்கும் என என்னையே சமாதானம் செய்து கொண்டேன். 
அதற்குள் பழக்கடைப் பெண்கள் அந்தம்மா பக்கம் பரிந்து பேச வந்துவிட்டார்கள். என் 
நண்பரிடம் சமாதானமாய் பேசினார்கள். 
"சரி விடுங்கண்ணா, என்னமோ ஆனது ஆச்சு. வயசான பொம்பளைண்ணா... என்ன பெரிசா வியாபாரம் செஞ்சிடப் போவுது. ஒரு நாளைக்கு அம்பதோ நூறோ வரும். அதோட காசை யார் யாரோ தின்னணும்னு இருக்கு, தொலைஞ்சி போனதா நெனச்சிக்கிட வேண்டியதுதான்''" என்று சொல்லவும், என் நண்பர் இன்னும் ஆவேசமானார். 
"என்னம்மா பேசுறே நீ? இவரைப் பார்த்தா சோளக்கதிர் புரோக்கர் மாதிரியா இருக்குது? ஒரு ஆளை பார்த்தா தராதரம் தெரியாதா உங்களுக்கு? இந்தம்மா சொல்ற ஆளே இவரு இல்லைங்கறேன். திரும்பவும் பணத்தை ஏமாத்துனவன் கிட்ட பேசுற மாதிரியே பேசுறீயே. ஒழுங்கா கடைய போடுறதுன்னா போடுங்க. சும்மா எங்காளுகிட்ட பிரச்சனை பண்ற மாதிரி இருந்தா இந்த ஏரியாவுலேயே கடைய போடக் கூடாது. அப்படி மீறி போட்டா நடக்குறதே வேற. அப்புறம் என்மேல வருத்தப்படக் கூடாது சொல்லிட்டேன்''" என்றார்.
அதற்குள் இந்த செய்தி ஆட்டோ நிறுத்தம் வரை பரவி, ஓட்டுநர்கள் ஏழெட்டுப் பேர் வந்து விட்டனர். அவர்களின் அடாவடிபேச்சுக்கு பயந்துபோன பெண்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. வரும் நாட்களிலும் பிழைப்புக்காக கடை போட்டாக வேண்டும். அங்கே யாரும் பெண்கள் பக்கம் பேச வரவில்லை என்பதும் ஒரு குறை. சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அந்த பெண்கள் அப்படியே பேச்சை மாற்றினார்கள். 
"சரி, விடுங்கண்ணா. அந்த பொம்பளை கொஞ்சம் லூசு மாதிரிண்ணா... அதுபாட்டுக்கு ஏதாவது பேசி வம்பு இழுக்கும். தப்பா எடுத்துக்காதீங்கண்ணா. பிரச்னைய இதோட விடுங்க'' என்றபடி அந்தம்மாவையே திருப்பிக் கொண்டனர். 
"நீ பேசாம வியாபாரத்தைப் பாரேன். அவங்கதான் நீ சொல்ற ஆளு இவரு இல்லைன்னு அவ்வளவு தூரம் சொல்றாங்களே. போய் தொலையுதுன்னு சும்மா விட்டுட்டு போவியா, தேவையில்லாம பிரச்னையை வளர்த்துக்கிட்டிருக்கே'' என்று சத்தம் போடவும், வேண்டாவெறுப்பாக அந்தம்மா அமைதியானார். 
இருதரப்பின் எல்லாவிதமான பேச்சுகளும், சமாதானங்களும் நிறைவடைந்து அந்த இடமே கலைந்து அமைதியானது. நான் போருக்கும் போனதில்லை, போர்க்களமும் தெரியாது. இருந்தாலும் எனக்கு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்ததைப் போல இருந்தது என்றுதான் சொல்ல முடிகிறது. இனி அந்த பெண்மணியால் எந்த மனஉளைச்சலும் வராது என்ற உறுதியால் என் மனம் நிம்மதியடைந்தது. என் நண்பருக்கும், மற்றவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு என் அலுவலகத்திற்கு வந்தேன். 
நாற்காலியில் அமர்ந்து அமைதியாகக் கண்களை மூடினேன். நடந்தவை எல்லாமே ஒன்று விடாமல் நினைவுக்குள் வந்து போயின. இதெல்லாம் தேவையா? ஏன் இப்படி? யாரிந்த பெண்மணி? இவ்வளவு பெரிய கடைவீதியில் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டு, வயதான காலத்திலும் யார் கையையும் எதிர்பார்க்காமல், சின்னதாய் வியாபாரம் செய்து, கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழும் கிராமத்துப் பெண். ஏமாற்றப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற, எவ்வளவு எதிர்த்து நின்று போராடியும் முடியாமல், இயலாமையால் கூனிக்குறுகி மனதுக்குள் குமுறுவதை, அழுவதை, உணர்ந்து பார்க்கும் போது, என் மனம் கலக்கமடைந்தது. அந்த இடத்தில் என் சகோதரியோ, தாயோ இருந்திருந்தால்? என் மனதோடு கண்களும் ஈரமாயின.
என்னமோ பேசிவிட்டுப் போகட்டும் என விட்டிருக்கலாமோ? விட்டிருந்தால் வேறு வடிவத்தில் வந்து நிற்கும். இப்போது செய்ததே சரிதான். நானென்ன கொலையா செய்துவிட்டேன்? என் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழியிலிருந்து, என்னை நிரபராதி என நிரூபித்துக்கொள்ள, எனக்கு அடிப்படை உரிமை இருக்கிறது. இதில் யார் காயம் பட்டால் எனக்கென்ன? கடிக்க வரும் நாயிடம் கல்லைத்தான் வீச வேண்டும், சீவகாருணியம் பார்க்க முடியாது. எனக்காகப் போராடுவது தவறல்ல. தகுதி உள்ளதுதான் தப்பிப் பிழைக்கும். ஆக நான் செய்ததில் தப்பேயில்லை.
பேராசை உள்ள மனிதர்களைத்தான் எளிதில் ஏமாற்ற முடியும். எவனோ இந்த அம்மாவிடம் ஆசைக் காட்டி பணத்தை வாங்கிக்கொண்டு போய் விட்டான். அவனிடம் கொடுத்ததை 
என்னிடம் வந்து கேட்டால் நான் எப்படி தர முடியும்? இன்றைய சூழலில் அந்த பெண்மணிக்கு ஐநூறு ரூபாய் என்பது பெரிய தொகை தான். அவ்வளவு ஏன்... எனக்கும் அது பெரிய தொகை தான். 
மனிதத் தன்மையோடு, பாதிக்கப்பட்டவரின் நிலைக்கு என்னை இடம் மாற்றி, அந்த வலியை உணரும் போது, கழிவிரக்கமும் துக்கமுமாக என் மனம் தவித்தது. அப்படியே ஒரு யோசனையும் வந்தது. நானேகூட அந்த பணத்தைக் கொடுத்து விட்டால் என்ன? அவ்வளவுதான், யோசனையா அது? சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதா? எல்லாமே தலைகீழாகி விடாதா? பணத்தைத் திரும்ப கொடுத்ததே அந்த முண்டகண்ணி மகமாயிதான் என்ற தப்பான நம்பிக்கைக்கு அந்தம்மா வந்துவிடாதா? 
எது ஒன்றையும் அவரவருக்கு விருப்பமான கோணத்திலிருந்தே பார்த்துப் பழக்கப்பட்ட மனிதர்களால் என் மனிதாபிமானத்தை நம்பவே முடியாது. இந்த சமூகத்தின் வழக்கமான நடைமுறைகளை மீறி செய்யப்படும் எது ஒன்றையும் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. நான் மிகப்பெரிய அயோக்கியனாக பார்க்கப்படுவேன். 
கொஞ்சம் நாட்களாக அந்தம்மா கடையே போடாமல் இருந்தார். அப்புறம் சில நாட்களில் கடை இருந்தது. என்னைப் பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொள்வார். எந்த முணுமுணுப்பும் தொந்தரவும் இல்லை. நானும் பயமில்லாமல் மிடுக்காய் நடமாடிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போதெல்லாம் கடையே போடுவதில்லை. 
நானும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்வையை கடைவீதியில் அலச விட்டேன். அந்தம்மாவின் கடை மட்டும் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. ஏன் தேவையில்லாமல் அந்தம்மாவின் கடையைத் தேடுகிறேன் என எனக்கே புரியவில்லை. தேடுவது என் ஆணவமாக இருக்கலாம். மனம் தாளாமல் வந்த அக்கறையாக கூட இருக்கலாம்.
ஒரு வேளை உண்மையான, பணம் வாங்கியவன் சிக்கிக்கொண்டானா? அதனால் வேறு ஆளை தொல்லை கொடுத்து விட்டோமே என கூச்சப்பட்டு கடை போடவில்லையா? இல்லையானால், தினமும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் நடந்ததை நினைத்து கோபம் வருவதால் வேறு இடத்திற்கு கடையை மாற்றி விட்டதா? உடல் நலமில்லாமல் இருக்குமா? இந்த தொழிலே வேண்டாமென கிராமத்தில் ஆடு மேய்க்கப் போய்விட்டதா? ஆனால் ஒன்று, யாருடைய செயலோ யார் யாரையோ பாதிக்கிறது என்பதே நிதர்சனம். 
கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றால், யாரிடம் போய் கேட்பது? என் நண்பரிடம் போய் கேட்டால், பெரியதாக முறைத்து, "ஏன் இன்னும் பத்தலையா?''" என்பார். அந்த ஆட்டோ ஓட்டுநர்கள்? சுத்தபடாது. பழக்கடை பெண்கள்? சொந்தம் என்றுதானே சொன்னார்கள்? அதுதான் சரி. பழம் வாங்குகிற சாக்கில் கேட்டு விட்டால் போச்சு. 
நான் மிகவும் தயக்கத்துடன்தான் அந்த பழக்கடைக்குச் சென்றேன். பழக்கடை பெண் என்னை சாதாரணமாகவே பார்த்தாள். அதுவே என்னைத் தெம்பாக்கியது. நான்தான் மனதுக்குள் அதிகம் அலட்டிக் கொண்டேன் போலிருக்கிறது. பேரம்கூட பேசாமல் அரைக்கிலோ ஆப்பிள் பழங்களை வாங்கினேன். பணம் கொடுக்கும் போதுதான் ஆர்வம் காட்டாத குரலில், எதார்த்தமாக கேட்பது போல கேட்டேன். "என்னம்மா, அங்கே சோளக்கதிர் கடை போடறதில்லே போலிருக்கே... அந்தம்மா வர்றதில்லீயா இப்போ?''"
வந்தோமா, வாங்கினோமா, போனோமா என இல்லாமல், உனக்கு கேள்வி என்ன வேண்டி கிடக்குது? என்பது போல, அந்த பெண் என்னை அலட்சியமாகப் பார்த்து விட்டு, பதில் சொல்ல விரும்பாதவளாக முகத்தை திருப்பிக் கொண்டாள். அது எனக்கு அவமதிப்பாக இருந்தது. மதிப்பை மீண்டும் பெற அதே கேள்வியை மறுபடியும் கேட்டேன். அவளுக்கு வேறு வழியில்லாமல் பதில் சொல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது. வேண்டா வெறுப்பாகத்தான் பேசினாள்.
"எந்தம்மா? பணம் கேட்டு தொந்தரவு பண்ணுச்சே அதுவா?''" 
"ஆமா''" தலையாட்டினேன்.
"எதுக்கு கேக்குறீங்க?''"
"இல்ல, காணோமேன்னுதான் சும்மா கேட்டேன்''"
"அது இனிமே கடை போடாது, போடவும் முடியாது''" 
"ஏம்மா... உடம்புக்கு சரியில்லியா?''" 
"ம்...அது செத்துப் போச்சே, தெரியாதா?'' என்றவுடன் என் நெஞ்சில் உதை வாங்கியதைப் போல அதிர்ச்சியாக இருந்தது. அந்தம்மா இறந்தது தெரியாமல் தினம், தினம் தேடிக்கொண்டிருந்ததை நினைத்து மனம் துக்கமடைந்தது. தெரிந்து கொண்டதால் வந்த மனச்சுமை, என் நெஞ்சுப் பகுதியில் பாரமாய் அழுத்தியது. தொண்டைக்குழி அடைத்துக் கொள்ள, எனக்கு பேச்சு எழவில்லை.
பெருமூச்சு விட்டபடி அவளே தொடர்ந்தாள்..."ரெண்டு மாசமாச்சி மேல போய் சேர்ந்து. அந்தம்மா பைபாசு ரோட்ட கடக்கிறப்பகார்காரன் அடிச்சிட்டுப் போயிட்டான். ஆசுபத்திரியில நாலு நாள் ஐசியுவில வச்சிருந்தோம். எங்களால முடிஞ்ச வரைக்கும் பார்த்துட்டோம். என்ன பிரயோசனம்? வயசான கட்டை, இதெல்லாம் தாங்குமா? செலவுதான் ஆச்சு. எல்லாமே முடிஞ்சும் போச்சு. நம்ம கையில என்ன இருக்குது? அதோட விதி அவ்ளோ தான்''" எனச் சொல்லி விட்டு மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டாள். ஆறுதலாய் சொல்ல வார்த்தை எதுவும் பிடிபடாமல் நான் கனத்த மனதுடன் அமைதியாக நின்றிருந்தேன்.
இறுதியாக அவள், "கடைசி நேரத்துல அந்தம்மாவுக்கு நினைவு கொஞ்சம் திரும்புச்சி. நாங்க எல்லாரும் உள்ளே போயி பார்த்தோம். அப்போ கடைசியா ஒண்ணே ஒண்ணுதான் சொல்லிச்சி'' என சொல்ல வந்ததை நிறுத்தி விட்டு, கண்ணீருடன் என்னை நிமிர்ந்து பார்த்தாள். நான் எதிர்பார்ப்போடு அவளை நோக்கினேன். அவள் மூக்கை முந்தானையால் உறிஞ்சி விட்டு சொன்னாள்...
"சோளக்கதிர் காசு போனாப் போவுது விட்டுடுங்க, யாரும் போயி கேட்க வேணாம்னு சொல்லிச்சு''" என்றாள். அதைக் கேட்டவுடன் எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.
(நிறைவு பெற்றது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com