புரிதல் 

யாராவது ஒருத்தர்கிட்டயாவது நாம நம்மைப் பற்றிய விவரங்களை மறைக்காமல் சொல்ல முடிந்தாலே போதும், நமது பிரச்னைகள் பாதி தீர்ந்துவிடும்.
 புரிதல் 

யாராவது ஒருத்தர்கிட்டயாவது நாம நம்மைப் பற்றிய விவரங்களை மறைக்காமல் சொல்ல முடிந்தாலே போதும், நமது பிரச்னைகள் பாதி தீர்ந்துவிடும். அந்த ஒருத்தர் நம்ப குடும்பத்தவரா இருந்தா... இன்னும் சுலபமா நம்ப பிரச்னை தீர்வுக்கான பாதையை நோக்கிச் செல்லும். அந்த நம்பிக்கையில்தான் நான் என் அப்பாவிடம் என் ரகசியப் பிரச்னையைச் சொல்லலாம் என்று முடிவு செய்தேன். அதைக் கேட்ட பிறகு அவர் என்னை அடிக்கலாம், உதைக்கலாம், திட்டலாம் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம். ஆனால் செல்லித்தான் ஆக வேண்டும். ஏன்னா இன்னும் இரண்டு நாளில் என்னைப் பெண் பார்க்க வரப் போகிறார்கள்.
 அப்பாவிடம் எப்படிச் சொல்லலாம் என்று பலமுறை பயிற்சி செய்து பார்த்தேன். ஒன்றும் சரியாக வரவில்லை.
 "அப்பா என்னை மன்னிச்சிடுங்க நீங்க சொல்ற பையன நான் கட்டிக்க தயாராதான் இருக்கேன்... ஆனா நான் ஒருத்தன சில நாட்களுக்கு முன்னாடி விரும்பினேன். நல்லவன்னு நம்பி விரும்புனேன். ஆனா அவன் சரியில்லேன்னு புரிஞ்சி விலக நினச்சேன், அத அவன்கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கலாம்ன்னு எவ்வளவோ முயற்சி செஞ்சி பாத்துட்டேன் முடியல. "நான் கூப்படற இடத்துக்கு நீ வரணும்... இல்லைன்னா நானும் நீயும் நெருக்கமா இருக்கற புகைப்படத்த இணையத்துல வெளியிட்டுடுவேன்'னு சொல்றான். நான் செய்தது தப்புதான் என்னை மன்னிச்சிடுங்கப்பா. எனக்கு அவன எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல. அவன் கால்ல விழுந்து கூட அழுது பாத்துட்டேன். "கட்டுனா என்னக் கட்டணும் இல்லைன்னா நீ யாரையும் கட்ட நான் விட மாட்டேன்'னு சொல்றான். இந்த நிலைமைல நீங்க சொல்ற மாப்பிளைக்கு எப்படிப்பா கழுத்த நீட்றது?' இதையெல்லாம் சொல்லி அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கனும்னு தோணுது. முடியுமான்னு தெரியல. வேற வழியும் இல்ல.
 இருபத்து நாலு வயசு வரையும் ஒரு நல்ல அப்பாவா, தோழனா சுதந்திரமா வளர்த்த அப்பாவுக்கு நான் எப்படிப் புரிய வைப்பேன்?
 அப்பாவுக்குத் தெரியாம போலீஸ்கிட்ட புகார் கொடுக்கலாமான்னு தோணுச்சி. அவன் மேல நடவடிக்கை எடுக்கும் போது, கூடவே என்னோட மானமும் சேர்ந்து போயிடும். அதுக்குப் பயந்து அவன் சொல்றதையெல்லாம் கேக்கவும் முடியாது. அண்ணன் கிட்ட சொல்லலாம். அவன் அதைப் பெருசா ஆக்கி என்னையும் அடிப்பான். அவனையும் அடிப்பான். பிரச்னையப் பெருசா ஆக்கி பெரிய கலவரமா மாத்திடுவான். அம்மாகிட்ட சொன்னா அழுது ஒப்பாரி வச்சி வீட்ட சாவு வீடு மாதிரி ஆக்கிடுவாங்க. தோழி ரம்யாகிட்ட சொன்னா "இதுக்குதான் நான் முதல்லயே சொன்னேன், அவன் சரியான ஆள் இல்லேன்னு நீ கேட்டியா'ன்னு கேப்பா.
 ஒரு வழியா தைரியத்தை வரவழைச்சிகிட்டு, அலுவலகத்தில் முடிக்காத கணக்கை வீட்டிலும் தொடர்ந்து கொண்டிருந்த தந்தையின் மேஜைக்கு அருகில் சென்று அவர் தோளில் கை வைத்து அவர் கவனத்தை என் பக்கம் திருப்பினேன், என் தொடுதலை வார்த்தைகளாக பதிவு செய்து கொண்டார் என் அப்பா சத்தியமூர்த்தி.
 "அப்பா உங்ககிட்ட தனியா பேசணும் மாடிக்கு வர்றிங்களான்னு கேக்கப் போற அதான, நீ போ நான் வர்றேன்'' என்று சொல்லி விட்டு கணக்குப் புத்தங்களை எடுத்து வைத்தார். உணர்வுகளை வார்த்தைகளாகப் புரிந்து கொள்ளும் அவரது ஞானத்தை நினைத்து அவரது தோள்களில் இருந்த எனது கை விரல்களால் ஓர் அழுத்தம் கொடுத்து, தொடுதல் மூலமாகவே ஒரு நன்றியைப் பதிவு செய்து விட்டு மாடியை நோக்கிப் புறப்பட்டேன்.
 இது எதுவுமே தெரியாத அம்மா அடுப்படியில் இரவு உணவுக்கு தயாரிப்பு வேலையில் மூழ்கி இருந்தார். கைபேசி இணைய உலகில் மூழ்கிப் போயிருந்த அண்ணன் முத்துவுக்கும் எதுவும் தெரியாது. மாடிக்குச் சென்ற நான் இன்னொரு ஒத்திகை பார்த்துக் கொண்டேன். மாடியில் இருந்த திண்டில் உட்கார்ந்து முன்புறம் இருந்த மேடையில் முகம் புதைத்து கண்ணீரால் என் பிரச்னைகளை ஈரமாக்கி அதன் எடையை
 அதிகரித்துக் கொண்டிருந்தேன்.
 வெகு நேரம் கழித்து என் தோள்களில் ஆதரவாக ஒரு கை விழுந்தது. என் அப்பாவின் ஸ்பரிசம் எனக்கு ஒரு யானை பலத்தைத் தருவது எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் நான் அவரது நம்பிக்கைக்குத் தகுதியானவளா என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவைப் போல் ஒரு சதவீதம் இருந்தால் கூடப் போதும் அந்த ஆண் எனக்குத் தகுதியானவன் என்று என்னால் சொல்ல முடியும். அப்பாவின் ஸ்பரிசம் எனக்குத் தேவைப் பட்டதால் சிறிது நேரம் அப்படியே இருந்தேன்.
 ஒரு உன்னதமான நிகழ்வை நான் சொல்ல வேண்டும். நான் அன்று மொட்டை மாடியில் ஒரு வார்த்தைகூட என் அப்பாவிடம் பேசவில்லை. பிறகு என்னதான் நடந்தது.
 எப்படி அவரிடம் சொல்வது, எப்படி அழுவது, எப்படி மன்னிப்புக் கேட்பது, எப்படி புரிய வைப்பது, எப்படி ஓர் அயோக்கியனின் வலையில் விழுந்தேன் என்று சொல்லலாம் என்று இரவு முழுவதும் ஒத்திகைப் பார்த்தும் ஒரு வார்த்தைகூட நான் பேச வில்லை. என் தோளில் கை வைத்த தந்தை பேசிய வார்த்தைகள் வானத்தில் இருந்து ஒரு தேவன் எல்லாவற்றையும் பார்த்து தெரிந்து புரிந்து பேசியது போல் இருந்தது.
 "பவானி, கவலைப்படாதே எனக்கு எல்லாம் தெரியும்... நீ எதுவும் பேச வேண்டாம். நீ செஞ்சது தப்பா சரியான்னு ஆராய்ச்சி செய்யறதுக்கு இது நேரம் இல்ல... நீ நினைக்கற மாதிரி உனக்கு எந்தத் தொந்தரவும் வராது... நாளை மறுநாள் உன்னப் பெண் பார்க்க வர்றாங்க... அப்பா எல்லாத்தையும் பாத்துக்கறேன். அவனோட போன் நம்பரை மட்டும் கொடுத்துட்டு நீ நிம்மதியா இரு''" என்று சொல்லிவிட்டு என் கையில் இருந்த கைபேசியை வாங்கிக் கொண்டு வேகமாக கீழே போயிட்டார்.
 எங்கோ தூரத்தில் அந்த நேரம் "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாட்டு எனக்காகவே எழுதியது போல் இருந்தது.
 என் அப்பா பிரச்னையை எப்படித் தீர்க்கப் போகிறார். அந்த உமாசங்கரை அடிக்கப் போகிறாரா? போலீசுக்குப் போகப் போகிறாரா, பஞ்சாயத்து வைக்கப் போகிறாரா? எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் என் பாரம் முழுவதும் இறங்கிவிட்டதைப் போல் மனம் லேசாக இருந்தது. என் அப்பா பேசிய வார்த்தைகளுக்குப் பிறகு அந்த அயோக்கியனை அடித்து உதைத்து சிறையில் தள்ளியதைப் போல் உணர்வைத் தந்தது.
 அவன் சம்பந்தமான எல்லாவற்றையும் அழித்து விட்டு கை பேசியை என்னிடமே கொடுத்து விட்டார். அதற்குப் பிறகு என்னைப் பெண் பார்க்கும் வரையும் எனக்கு எந்த அழைப்பும் அவனிடமிருந்து வரவில்லை. என்னைப் பெண் பார்க்க வந்தவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. மாப்பிள்ளையிடம் தனியாகப் பேசச் சொன்னார்கள். தனியாகப் போனாலும் நான் எதுவும் பேச வில்லை. அந்த மாப்பிள்ளைதான் பேசினார்.
 "பவானி எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு. நாம நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் நல்லா வச்சிக்கறதப் பத்தி மட்டும் யோசிப்போம். வாழ்க்கைய முன்னோக்கி மட்டும் பாப்போம். உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா மட்டும் போதும். நாம வாழ்க்கைய மகிழ்ச்சியாக தொடங்கலாம்... சரியா?'' என்று கேட்ட போது, அவரிடம் என் அப்பாவின் சாயல் தெரிந்ததால் நான் வெட்கப்பட்டு தலையை மட்டும் ஆட்டி என் பதிலைப் பதிவு செய்தேன்.
 திருமணம் முடிந்து நான் என் கணவரோடு மும்பை செல்ல இருந்ததால் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருந்தேன். திருமணத்திற்கு இடையில் இருந்த அந்த ஒரு மாதமும் எனக்கு உமாசங்கரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
 என் அப்பா "கவலைப்படாத' என்று சொன்ன அந்த நிமிடத்தில் இருந்து எனக்கு பயம் என்ற சிறையில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டது. ஆனாலும் அப்பா என்ன செய்து அவனைத் தடுத்திருப்பார் என்று தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருந்தது. மாப்பிள்ளை என் கழுத்தில் தாலி கட்டும் வரை எதிரில் பார்க்கும் மனிதர்கள் எல்லாமே உமாசங்கர் கத்தியோடு நிற்பது போலவே இருந்தது.
 திருமணம் ஆன மறுநாள் மெட்டைமாடியில் வானத்தைப் பார்த்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் நடக்கப் போகும் மும்பை பயணத்தைப் பற்றியும், என் அப்பா என் பிரச்னையை எப்படித் தீர்த்திருப்பார் என்பதைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தோளில் படர்ந்தது என் அப்பாவின் விரல்கள். அவரை நான் பார்த்த போது என் கண்களில் இருந்து ஒரு தொடர் வண்டி போல் கண்ணீர் கீழே விழுந்து உருண்டு என் அப்பாவின் பாதங்களை நோக்கி பயணமானது. அந்தக் கண்ணீர் அவரைப் பிரிவதற்காகவா, பிரச்னைகளைத் தீர்த்ததற்காகவா, புரிதல் நிறைந்த புனிதராக அவர் இருந்ததாலா என்பது நானும் என் அப்பாவும் மட்டுமே உணரக் கூடிய உன்னதம்.
 என் மனதைப் படிக்கும் அவர் என்னிடம் பேசினார். "
 "பவானி ரொம்ப குழம்பிக்காத. நான் உமாசங்கரை எதுவும் செய்யல, உன் பார்வைக்குப் பிடித்தவனாக இருந்து, பழகுவதற்கு தகுதி இல்லாமல் போனவன் அவன். அவனிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசினேன். அவ்வளவுதான், அந்தப் பதிவு என் கைபேசியில் இருக்கிறது... நீயும் கேள், அப்பதான் உன் குழப்பம் தீரும் இந்தா'' என்று அந்தப் பதிவை என்னிடம் கொடுத்துக் கேட்கச் சொல்லி விட்டு கீழே போய் விட்டார்.
 நான் அந்தப் பதிவை கேட்க கேட்க என் அப்பாவின் உயரம் மேலும்மேலும் அதிகரித்தது. அது இதுதான்:
 "தம்பி உமாசங்கரா...( எதிர் முனையில் ம் என்ற பதிலுக்குப் பிறகு) நான் பவானியோட அப்பா சத்தியமூர்த்தி பேசறேன். உன்னப் பத்தி என் பொண்ணு எல்லாத்தையும் சொன்னா. நீங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருக்கற படங்களை நானும் பார்த்தேன். நீ இணையத்துல அதையெல்லாம் வெளியிடப் போறதா தகவல் அனுப்பியிருக்கிறாய். வெளியிடு பரவாயில்ல. அதுக்கு முன்னாடி முடிஞ்சா உங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் காட்டிட்டு வெளியிடு. ஏன்னா நீ வெளியிட்டதும் எப்படியும் அவங்களுக்கும் தெரியப் போகுது. அப்படி நீ வெளியிட்டேன்னு வச்சுக்கோ... என்னுட்டயும் உங்க ரெண்டு பேர் புகைப்படமும் இருக்கு! நீ வெளியிட்ட அடுத்த நிமிசமே நான் அதைப் பெரிய பேனரா ரெடி பண்ணி உங்க வீட்டு முன்னாடியே வைக்கப் போறேன். மானம் பொண்ணுக்கு தனி... ஆணுக்கு தனியா, உன் யோக்கியதையும் எல்லாருக்கும் தெரியட்டுமே. நல்லா யோசிச்கிக்கோ. உன் வாழ்க்கைய நீயே கெடுத்துக்காத. போலீஸ், பஞ்சாயத்து, போராட்டம்னு நான் போனா உன் வாழ்க்கை முடிஞ்சிடும். இவ்வளவுக்குப் பிறகும் உனக்கு நான் சலுகை தர்றதுக்குக் காரணம் என்ன தெரியுமா, எப்பவோ நீ என் மகள் விரும்பன ஒரு பொருளா இருந்திருக்க. அத நினச்சிதான் உன்ன சும்மா விடறேன். அந்தப் பொருளை சிதைக்க வேண்டாம்னு நினைக்கறேன். வச்சுரட்டுமா கண்ணு. பாத்து பதமா நடந்துக்க''" பேச்சு அத்துடன் முடிகிறது. உமா சங்கரின் பேச்சு கடைசி வரையில் அதில் பதிவாகவில்லை.
 என் அப்பாவின் கை பேசியை எடுத்துக் கொண்டு மொட்டை மாடியில் இருந்து ஒவ்வொரு படியாக இறங்கும் போது என் அப்பா கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து என் மன வானில் காற்றாக, மூச்சாக நிறைந்திருந்தார்.
 தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி - 2019: ரூ.1,250 ஆறுதல் பரிசு பெறும் கதை
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com