Enable Javscript for better performance
அறம்- Dinamani

சுடச்சுட

  
  ARAM

  "உனக்கென்னா? விதவ பென்சனா? மூவாயிரம் ரூவா ஆகும்'' - கறாராக முனி சிபாலிடி ஆபீசின் வாசலின் நின்றபடி குமரேசன் சொன்னதும், "இதுக்குக்கூட காசு வாங்குறானுவோளா? படுபாவிங்க" என்ற குரலை சட்டை செய்யாமல், "ம்ம்... ரேஷன் கார்டு, டெத் சர்ட்டிபிகேட்டு, ஆதாரு..'' மளமளவென்று நிர்மலாவின் கையிலிருந்த காகிதங்களைக் கொத்தாக வாங்கி, எச்சில் தொட்டுத் திருப்பிக்கொண்டே வந்தவன், ஏதோ ஞாபகம் வந்தவனாகக் கண்கள் பளீரிட அவளைப் பார்த்து, "இங்க வா... ஆமா உன் புருஷனுக்கு இன்னொரு தாரம் வேற இருக்கில்ல?'' என்றான்.
  நடுவீதியில் நிற்கவைத்து இப்படித்தான், இடுப்புச் சேலையை உருவுவதைப் போல யாராவது ஒருத்தர் கேட்டுத் தொலைக்கிறார்கள். ஓராயிரம் கண்கள் அவளை உற்று ஊடுருவிப் பார்ப்பதைப் போலொரு உணர்வு; ஊறல்... கூச்சத்தில் முகம் சிவந்து இறுகி உடம்பு குன்றிப் போனது... ப்ச், அவளைக் கட்டிக்கொண்டவனுடைய அந்தரங்கம் அவளைத் தவிர, அந்த ஊரில் அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கிறது.
  "இல்ல, அந்தப் பொம்பளைக்கும் இந்த மாதிரி காசு கிடைக்கும்னு யாராவது சொல்லிவிட்டிருந்தா... அப்புறம் அதுவும் இதே ஃபோட்டோவையும் சர்ட்டிபிகேட்டையும் எங்ககிட்ட தூக்கிக்கிட்டு வரும்ல... ரெட்டைத் தலைவலி'' அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை; அவன் காகிதங்களை அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுச் சொன்னான், "எதுக்கும் தீர விசாரிச்சுப் பாரு... வில்லங்கமா ஏதாவதுன்னா அதுக்கு மேற்கொண்டு பணம் தரவேண்டியிருக்கும்''
  "என்ன பண்றதுன்னு புரியலை துர்கா''
  "உனக்கு அந்தப் பணம் வந்தா நல்லது தானே? ரெண்டு புள்ளைங்களையும் படிக்க வைக்கணும்ல? அப்ப, அதுக்குண்டான ஏற்பாடுகளைச் செய்... மூவாயிரமோ, அஞ்சாயிரமோ, ஒழியிறான்னு விட்டெறிஞ்சுடு. நான் வேணா தவணைக்கு வாங்கித் தரேன் அதுக்கு முன்னாடி "அவளை' ஒருதடவை விசாரிக்கலாமா?''" 
  "விசாரிக்கணும்னு இல்ல... ஆனா, பார்க்கணும் போல இருக்கு''
  "க்கும்'' - துர்கா அலுத்துக் கொண்டாள். 
  படலையைத் திறந்து உள்ளே நுழைந்ததும், துர்கா, லேசாக முழங்கையால் இடித்தாள். "இவதாண்டி'' வெந்தயக்கலரில் பச்சைக்கரை போட்ட புடவை, கழுத்தில் கருப்புக் கயிறில் கோர்க்கப்பட்டிருந்த சமயபுரத்தாள், தேய்ந்து நிறம் மங்கிய சற்றே பெரிய வளையல்கள்... உருவத்துக்குப் பொருத்தமில்லாத முட்டைக் கண்ணாடி... ஜீவனற்றுப் போயிருந்தவளைக் காண்பித்து, "நாலு வார்த்தை நறுக்குன்னு கேளுடீ'" - உசுப்பேற்றினாள் துர்கா. 
  "வாங்க, வாங்க; நிம்மிதானே?'' என்று பெயரைச் சுருக்கிப் பதட்டமே இல்லாமல், அவள் - அந்த மேகலா, வரவேற்ற விதம் இவர்களுக்குத் திகைப்பூட்டியது. 
  "என்னைத் தெரியுமா உங்களு..ப்சு..உனக்கு?''
  நிர்மலா இப்படிக் கேட்டதும் அவள் பளீரெனச் சிரித்தாள். வரிசையான பற்களுக்கு மேலே இளம் சிவப்பில் மெல்லிய கீற்றாக ஈறுகளும் தெரிய, கண்களைச் சுருக்கி அவள் சிரித்தபோது, அவளை விட்டுக்காணாமல் போயிருந்த ஜீவகளை சட்டென்று மீண்டும் அந்த முகத்தில் உட்கார்ந்தது... ரசனையின் ஓரத்தில், "இந்தச் சிரிப்பும் கூட ஒரு காரணமாயிருக்கும்'' என்ற எண்ணம் தோன்றிட, அந்த க்ஷணம், மேகலாவின் மேல் பெருங்கோபம் வந்தது.
  "தெரியும் எப்படித் தெரியாமப் போகும்?'' - நிர்மலாவின் கண்கள் தன்னிச்சையாக சுவரில் தொங்கிய அந்தப் ஃபோட்டோவைப் பார்த்தன. பூஞ்சையான உடல் வாகெல்லாம் இப்போது தான் என்பது போல, தேர்ந்த சித்திரம் போல அவளும் அசோக்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ சுவரில்... 
  "நல்லாதான் இருந்தோம்... தெட்சிணகாளி கோயில்ல மாலைமாத்தி, தாலிகட்டி, அங்கேயிருந்து அப்படியே வேளாங்கண்ணி போயி... அப்புறம் இங்க வீடு பார்த்து, தோட்டம் போட்டு...''
  "ஒரு கனவுச்சாயை' கண்களில் படர அவள் விவரிக்கத் துவங்கினாள்...
  அசோக் டிரைவராக வேலை பார்த்த வீட்டுக்கு எதிர்வீட்டுப் பெண் மேகலா. மத்தியானம் சாப்பிட வருகிற முதலாளி ரெண்டரை மணி வரை சின்னதாகத் தூக்கம் போடுவார். அதுவரை அவன் மேகலா வீட்டு வாசலில் அடர்ந்து செழித்து நிற்கும் அந்த மாமரத்தடியில் ஒதுங்கிக்கொள்வான். 
  அப்பாவைப் பார்த்ததே கிடையாது; ஆத்தாவும் அம்மாவும்தான் வயிற்றுப்பாடே கஷ்டம்; தெருவில் காய்க்கிற மாங்காய், கொல்லை நாரத்தை என்று ஆத்தா எதையும் விடாமல் சேகரிப்பாள். கீரைவிதை தெளித்து வைப்பாள். கோழி, ஆடு என்று வீட்டிலிருந்து படியே நாலு காசு பார்க்கிற வழிகளைத் தெரிந்து வைத்திருந்தாள். மேகலாவின் அம்மா அவ்வளவு சூட்டிகை இல்லை. ஆத்தாவின் பாஷையிலேயே சொல்வதென்றால், "வெறுமனச்சி பெருந்திராபை. அவளாட்டமே நீயும் இருந்தேன்னா, "பூண்டத்துப் போயிடும்' படிச்சு, ஒருத்தன் தயவும் இல்லாம தனியா நின்னு பேர் சொல்ற வழியைப் பாரு''" - பத்தாவதற்கப்புறம் டவுன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டாள். அதுதான் தொடக்கம். 
  அசோக் டவுனுக்குப் போய்விட்டு வெறும் வண்டியாக வரும் போது- "வெயிலா இருக்கு, வேணா வர்றியா? மழைக்கருக்கலா இருக்கு; பொஸ்தவம் நனைஞ்சு போயிடும்; ஏறுவண்டியில'' என்று பாவம் பார்த்து மேகலாவை அழைத்து வருவான். அவளுக்கு அசோக்கை விட, தரையில் மிதக்கும் ஒரு வெளிர் நீலப் படகு போல சத்தமின்றி வழுக்கி நிற்கும் அந்தக் காரைத்தான் பிடித்தது. பின்சீட்டின் இரு ஜன்னல்
  களுக்கும் அலைபாய்ந்து வேடிக்கை பார்ப்பாள். திடீரென்று நினைவு வந்தவளாக ஒருநாள் அவனிடம் எக்கிக் கேட்டாள், " நான் கார்ல வரேன்னு தெரிஞ்சா "ஐயா' திட்டுவாங்களா? மாட்டாங்களா?"
  "அதுல என்ன சந்தேகம்?" 
  "ஐயையோ.. வண்டியை நிறுத்துங்க இறங்கிக்கிறேன்''
  பதட்டமாக ஓடுகிற காரின் கதவைத் திறக்க முயன்றவளின் பின்னலைப் பிடித்திழுத்தான். தடுமாறி சீட்டில் விழுந்தவளை மிகக்கோபமாக முறைத்தான். 
  "என்ன எழவப் படிக்கிற? அறிவு வேணாம்? உழுந்து தொலைச்சேன்னா?'' 
  "ஐயா திட்டுவாங்களேன்னு தான்'' - அவளுக்குப் பயமும் அழுகையுமாக வந்தது. 
  "க்கும் ...உங்கம்மாவை விட்டுச் சொல்லச் சொல்லு... "ஐயா' மறுபேச்சு பேசமாட்டாரு" - அவன் குரலில் தெறித்த நக்கலும் பார்வையில் தெரிந்த கேலியும் அவளைச் சிலுப்பி விட்டன 
  எங்கம்மாவைப் பத்தி என்ன தெரியும் உனக்கு? கேலிபண்ற? திண்ணையில உட்கார்ந்து இந்தக் கிழவி தன் அம்மாவைத் "திராபை' என்று ஏசுவது இவனுக்கும் தெரிந்திருக்கிறதே என்ற அவமானம் .
  ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்திக் 
  கொண்டான்.
  "நல்லா படி" என்றான், கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து. அவள் இறங்கிக் கொண்டாள். 
  "நாளையிலேர்ந்து நான் நடந்தே போயிக்கிறேன்" 
  ஆனால், "அந்த நாளை' என்பது அவ்வளவு துரதிர்ஷ்டமாக விடியுமென்று யாருமே நினைக்கவில்லை. அவள் அம்மா அரளிவிதையை அரைத்துத் தின்றுவிட்டு அந்த அம்மியிலேயே தலைசாய்த்துப் படுத்திருந்தாள். வாயில் நுரை தள்ளிக் காய்ந்து போயிருக்க, கையில் சுருட்டி, பத்திரப்படுத்தியிருந்த புத்தம்புது ரெண்டாயிரம் ரூபாய் - அது வரை மேகலா அறியாத ஏதேதோ கதைகளைக் கேட்க வைத்தது. 
  "அதான? வெறும் மாங்கா நாரத்தங்காய்ல குடும்பத்தை ஓட்டிட முடியுமா என்ன?'' "வெறுமனச்சி, வெறுமனச்சி' என்று தான் நொடிக்கொருதரம் குட்டிக்கொண்டே இருந்த பெண், இத்தனை "அழுத்தக்காரி' என்பதைப் ஆத்தாவால் ஏற்கவே முடியவில்லை .
  "ஆயா''" என்று அழைத்தபடி அஞ்சாறு நாள் கழித்து வந்தான் அசோக். "வயசுக்கு வந்த பொண்ணை வெச்சிருக்க.. நீ இனிமே இங்க இருக்காத டவுனைப் பார்த்துக்கிட்டுப் போயிடு என் அறிவுக்கெட்டுனதை நான் சொல்றேன்'' - அவன் குரலில் நிஜமான அக்கறை தெரிந்தது. 
  "பொறந்து வளர்ந்த ஊர்லேயே, என் குச்சுலேர்ந்தே என்னால எம்புள்ளையக் காவந்து பண்ண முடியல... நான் அசலூர்ப் பொழைக்கவா? இத்தினி வயசுக்கப்புறம்?''"
  "உனக்குப் புரியலைத்தா... தாய்க்கோழி அடைய வந்தா பின்னாலேயே கோழிக்குஞ்சுங்களும் கண்ணை மூடிக்கிட்டு ஓடியாந்துடும்ங்கிற கணக்கு, அவனுங்களுக்கு ரகத்துக்கொரு ஃபோன்... ஹேண்டிக்கேம்னு அலையிறானுங்க பார்த்துக்க என்னைக்கிருந்தாலும் தொந்தரவுதான்'' 
  சுவரோரமாக சிவந்த கண்களும் வீங்கிய முகமுமாக உட்கார்ந்திருந்த மேகலா, வாய்பொத்தி அழ ஆரம்பித்தாள். ஆத்தா அவனை ஒருகணம் கூர்ந்து பார்த்தாள். "ஏய்யா, உனக்குக் கல்யாணம் ஆயிட்டா?''
  "ஏன் கேட்குற?" 
  "இல்லை சாமி... மனசும் உடம்பும் நொந்து தளர்ந்து கிடக்கேன் எத்தனை நாளைக்கு என் வண்டி ஓடும்? இந்தப் புள்ளைக்கொரு பாதுகாப்பா இருப்பியா? கடேசி வரைக்கும்?'' அவன்முன் முதுகு வளைத்து முகம் தரையில்படக் கவிழ்ந்து அழுதாள். கைகூப்பினாள். 
  "கல்யாணம் ஆனவர்னு எப்பதான் தெரிஞ்சுது?''" - நிர்மலா.
  "மாசமா இருக்கேன்னு ஸ்கேன் எடுத்தப்போ... புள்ளைக்கு ஏதோ கோளாறுன்னு கலைச்சுட சொன்னாங்க. புருஷன் கையெழுத்துன்னு கேட்டாங்க.. போட மாட்டேன்னுட்டாரு; வேற டாக்டரையும் பார்க்க விடல.. கோவமாயி சண்டை போட்டேன்; அன்னிக்குத்தான் தெரியும் பர்சுல இருந்த உங்க போட்டோவைக் காமிச்சாரு''
  "அடடா... குழந்தை?''
  "இருக்கு.. ரெண்டு வயசாகியும் இன்னும் தவழக்கூடத் தெரியாம.. மூளை வளர்ச்சி இல்லாம.. தூங்குது.''"
  சிறிய தடுப்புக்குப்பின் தூளிக்கயிறு தெரிந்தது. 
  "பத்துப் பதினோரு வயசு தாண்டுறதே கஷ்டம்னு காட்டுன எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. எனக்கொண்ணும் தெரியலை. தடுப்பூசி போட்ட டாக்டருதான் கண்டுபிடிச்சாரு, குறைன்னு. நான், இவரு வந்ததும் சொன்னேன்; அன்னைக்குப் போனவருதான்... அப்புறம் செத்துட்டாருன்ற சேதிதான் தெரியும்''"
  முற்றிலும் உடைந்து கதறத் துவங்கினாள். "என் தலையெழுத்தப் பத்திக்கூட எனக்குக் கவலையில்லீங்க ஆனா "வாழ வழியத்த பிள்ளைன்னு' டாக்டருங்களே கைவிரிச்சப்புறம், அத நிம்மதியாச் சாகவாவது உட்டுருக்கலாமோன்னு... நெஞ்சை அறுக்கிற இந்த ஒரு கவலைதான் எப்பவும் ஒவ்வொரு நேரம், "உன் புருஷனால தான் இவ்வளவும்'னு சொல்லி உங்க வீட்டு வாசல்ல புள்ளையக் கொண்டாந்து போட்டுட்டு, செத்துடலாம்னு கூட நினைச்சிருக்கேன்''" 
  அதிர்ந்தார்கள். 
  "இங்க உனக்குச் சவுகரியமா இருக்கா? செலவுக்கு என்ன பண்ற?'' - துர்கா. 
  "கிடைக்கிற எல்லா வேலையும் செய்யிறேன். பொய்யும் திருட்டும் புடிக்காது; வராது''" 
  "பயம் ஒண்ணும் இல்லையே?'' 
  "தனியா இருக்கேன்னு தெரிஞ்சு போச்சே... அந்தப் பயம்தான் ப்சு, ஆரம்பிச்ச இடத்துக்கே திரும்பி வந்துட்டேன்... என்ன? அப்ப ஆத்தா இருந்துச்சு; இப்ப அதுவும் இல்லே..''" 
  "பேசாமலே வர்ற; அப்படியென்ன யோசனை?" 
  "பாரேன்- யாருமே, வலியக்க கஷ்டப்படுத்தணும்னு நினக்கலை... ஆனாலும், மறைமுகமா ஒவ்வொருத்தராலயும் ஒவ்வொருத்தருக்கும் கஷ்டம் தான்''" 
  "தத்துவமா?'" - ஓரக்கண்ணால் பார்த்தாள் துர்கா. 
  "இல்ல துர்கா.. என் புருஷன் செத்துட்டார்னு கேள்விப்பட்டப்ப எனக்குப் பயங்கர அதிர்ச்சி; ஆனா அவர் "தூக்க மாத்திரையை'ப் போட்டுக்கிட்டு செத்தாருன்னதும் தான் - ஆடிப்போயிட்டேன். நான் வாழ்ந்த வாழ்க்கை மேலேயே எனக்குச் சந்தேகம் வந்திடுச்சு; ஏமாத்தமா இருந்துச்சு... அதை விட நரகம் இந்த மேகலா விஷயம் தெரிஞ்சப்போ சுத்தமாத் தோத்துப் போயிட்ட ஒரு பொண்ணாதான் நான் அவ வாசலை மிதிக்கிற வரைக்கும் என்னை நினைச்சிட்டிருந்தேன். ஆனா கதை டோட்டலா வேறயாயிருக்கு. இதுக்கு நடுவில வினோத் வேற..'' பெருமூச்சு விட்டாள். 
  ஒரு மரத்தின் கழுத்தில், "டு லெட்' போர்டு கண்ணில்பட, நம்பரைக் குறித்துக் கொண்டாள். 
  "வீடு மாறப் போறியா என்ன?'' 
  "ஆமா, இன்னும் ரெண்டு பேர் தங்கறதுக்கு இப்ப உள்ள வீடு பத்தாதுல்ல''
  "உளர்றியாடீ? ஊர் என்ன சொல்லும்?'' 
  "இளிச்சவாய்த்தனம், பரிகாரம், இரக்கம், பாசம்னு இந்த உலகம் என்னபேரு வேணாலும் வெச்சுக்கட்டும். அந்தக் குழந்தையையும் மேகலாவையும் நான் என்னோடவே வந்து இருக்கச் சொல்லப் போறேன்... அசோக்குக்காகவோ, மேகலாவுக்காகவோ இல்லைன்னாலும் என் மனசாட்சிக்காகவும் அந்தக் குழந்தைக்காகவும் கூப்பிடுவேன். ரெண்டு பொம்பளைங்க மூணு குழந்தைங்களை வளர்க்க முடியாதா என்ன? இல்ல, ஒரு பொண்ணு நினைச்சா. நாலு குழந்தைங்களையுமே நல்லபடியா ஆளாக்க முடியாதா?" எல்லாத்துக்கும் நியாயம் சொல்லியும் தீர்ப்பெழுதியும் தான் என்னத்தக் கண்டோம்?" 
  சட்டென்று துர்கா நின்று விட்டாள். தன்கூடவே நடந்து வந்து கொண்டிருக்கும் ஒருத்தி, அவள் தன் மனதால் எட்டாத உயரத்துக்கு உசந்து நிற்கும் போது, தான் என்ன செய்வதென்று தெரியாத மலைப்பு அது. 

  தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி - 2019
  ரூ.1,250 ஆறுதல் பரிசுபெறும் கதை

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai