Enable Javscript for better performance
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்- Dinamani

சுடச்சுட

  
  ayur

  நான் தினமும் மின்சார ரயிலில் வேலைக்குச் சென்று திரும்புகிறேன். ரயிலில் ஏற்பட்ட சில மனிதர்களின் பழக்கம் நட்பாக மாறி, பல கெட்ட எண்ணங்களை உருவாக்கிவிட்டன. காலப்போக்கில் இது எனக்கு அலுவலகத்திலும், வீட்டிலும் கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. மனதளவிலும் உடலளவிலும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிவிட்டேன். நான் மீண்டு வர என்ன செய்ய வேண்டும்?
  -ரகு , அரக்கோணம். 
  பொது வாழ்க்கை நெறிகள் பற்றிய விவரங்களை சரகர் ஸுச்ருதர் வாக்படர் எனும் ஆயுர்வேத மருத்துவர்களின் பல உபதேசங்கள் யுகங்கள் கடந்தும் பின்பற்றக் கூடியவையாக இருக்கின்றன. ரயில் சிநேகத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அவை உதவிடக் கூடும். அம்முனிவர்களின் உபதேசங்களிலிருந்து சில பகுதிகள் நீங்கள் அறிந்து கொண்டு செயலாற்றத்திற்கான முயற்சிகளைச் செய்யவும் - 
  உடல், மனம், ஆத்மா என்ற மூன்றும் ஆயுளாகிற முக்காலிக்கான மூன்று கால்கள். ஏதேனும் ஒரு கால் பழுதுபட்டால் உயிர் எனும் ஆயுளைத் தங்க வைக்க முடியாது. உடல்வலிவும் மனவலிவும் போல ஆத்மவலிவும் பெறத்தக்கதே. ஆத்மவலிவு என்பது உடல் - மனவலுவிற்கான முயற்சிகளால் மட்டும் பெறத் தக்கதல்ல. புண்ணியம் பாபம் எனும் செயல் பின்விளைவுகள் ஆத்மாவை பாதிப்பவை. அதற்குரிய நன்மை தரும் சில நடைமுறைகள் மனிதர்களுக்கு உற்ற துணையாக நின்று அறம் - பொருள் - இன்பம் - வீடு என்ற நான்கு உயர் விஷயங்களையும் பெற உதவிடக் கூடும். 
  உடலையோ மனதையோ உடனடியாகப் பாதிக்காத சில நடைமுறைகள் உள்ளன. இன்றளவில் அவை பாதிக்கவில்லையே என்று எண்ணி அதில் ஈடுபடுவோம். அது பிற்காலத்தில் கேடு விளைவிக்கக் கூடும். இதனை எதிர்பார்த்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். மனம் உவந்து ஏற்கும் சிலவற்றை நன்மையானவையல்ல என்று ஒதுக்க வேண்டும். மனத்திற்குப் பிடித்திருந்தால் மட்டும் போதாது. பின்னாளிலும் அது நல்ல பின்விளைவுகளைத் தருவதாக இருத்தல் வேண்டும். சமுதாயத்துடன் பொருந்தி வாழ்பவன் சமுதாய நலத்திற்கு ஒத்துவரும்படி தன் நலனை அமைத்துக்கொள்ள ஏற்ற முறைகள் சில. தான் என்ற அகங்காரத்தை விட்டொழித்து உயிரினத்திடம் கருணை என்ற உயர்ந்த நோக்கைத் திடப்படுத்துபவை சில.
  எல்லா உயிரினமும் சுகம் பெறும் பொருட்டே செயல்படுகின்றன. சுகம், தர்மமின்றி கிட்டாது. அதனால் தர்மத்தில் முக்கிய நோக்கம் இருக்க வேண்டும். 
  இவர்களுடன் கூடிப் பழகு - அறிவு, கல்வி, வயது, நற்பழக்கங்கள், மனஉறுதி, ஞாபகசக்தி, ஆழ்ந்த சிந்தனை இவற்றுடன் முதிர்ந்தவர்களும், அப்படி முதிர்ந்தவர்களுடன் பழகுபவர்களும் இயற்கை நிலை அறிந்தவர்களும், மன உறுத்தலற்றவர்களும், எல்லாரிடத்திலும் இனிதே பேசுபவர்களும், அடக்கமும் நன்னோக்கும் கொண்டவர்களும், நல்வழி கூறுபவர்களுமான நல்லோர்களுடன் பழகவேண்டும்.
  இவர்களுடன் பழகாதே - மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் தீமை புரிபவர், கோள் சொல்லி கலகத்தைத் தூண்டுபவர், ரகசியமானவற்றைப் பலரறியக் கேலிசெய்பவர், தன்னிடமிருப்பதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர், பிறரது வளர்ச்சியைக் கெடுப்பவர், போக்கிரி, பிறரைப்பற்றி அவதூறு பரப்புபவர், சபலமனமுள்ளவர் எதிரியைச் சார்ந்தவர், பரிவற்றவர், தன் கடமையைக் கைவிட்டவர் இவர்களுடன் கூடிப் பழகாமலிருத்தல் நல்லது.
  பாவம் பத்துவிதம்- பிற உயிரினங்களைத் துன்புறுத்துதல், பிறர் உடமையைப் பறித்தல், முறையின்றி உறவு கொள்ளுதல் என மூன்றும் உடலால் செய்யும் பாவச்செயல்கள். கோள் சொல்லுதல், மென்மையற்ற பேச்சு, நேர்மையற்ற பேச்சு, சம்பந்தமின்றி பேசுதல் என நான்கு வாயால் விளைவிக்கும் பாவச் செயல்கள், உயிரினத்தில் எதையும் அழிக்கும் எண்ணம், பிறர் சிறப்புகளைக் கண்டு சகிப்பின்மை, பண்பாட்டிற்கு முரனான எண்ணம் என்ற மூன்றும் மனத்தால் விளையும் பாவங்கள். இவற்றை விலக்கலாம்.
  தீய நண்பர்களின் சேர்க்கையினால் உடலும் உள்ளமும் கெட்டுப்போன தங்களுக்கு மேற்கூறிய முனிவர்களின் அறிவுரைகளை ஏற்று அதன்படி நடக்க முற்பட்டால் வாழ்வில் ஏற்பட்டுள்ள தாழ்வான நிலை மாறி உயர் நிலைக்கு வருவதற்கான வழிகளாக அமையும். 
  (தொடரும்)
  பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
  நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
  செல் : 94444 41771
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai