Enable Javscript for better performance
ஒரே ஒரு மசால் தோசை!- Dinamani

சுடச்சுட

  

  ஒரே ஒரு மசால் தோசை!

  By எஸ்.ஸ்ரீதுரை  |   Published on : 22nd September 2019 05:05 PM  |   அ+அ அ-   |    |  

  MASAL_DOSAI

  மாலை விடைபெறும் நேரம். தெருவிளக்குகள் ஒவ்வொன்றாக "உள்ளேன் ஐயா' சொல்ல ஆரம்பித்தன. வெளியே டிரங்க் ரோட்டில் இருந்த நெரிசல், ராயர் ஓட்டலின் உள்ளும் மிதிபட்டது. 

  அதிலும் இந்தப் பார்சல் பிரிவு இறுக்கிக் கட்டப்பட்ட சாம்பார் பாக்கெட் போலப் பிதுங்கியது. ஒரே கூட்டம். வீட்டில் சாயங்கால டிபன் செய்வதையே ஜனங்கள் மறந்துவிட்டர்களோ என்று தோன்றியது. 
  சீட்டை வாங்கிய ஆள், "ஒரு இடியாப்பம்" என்று சரக்குமாஸ்டருக்குத் தகவல் சொல்லிவிட்டு, "கொஞ்சம் உக்காருங்க பெரியவரே''" என்றான்.
  காலியாய் இருந்த நாற்காலியில் ராமசாமி
  தாத்தா அமர்ந்த மறுகணமே உள்ளிருந்து வந்த மசால்தோசையின் வாசம் அவரை என்னவோ செய்யத் தொடங்கியது. தெரிந்த விலைதான். எதற்கும் இருக்கட்டும் என்று நீலநிறத்துக்குப் பொருந்தாமல் சிவப்புவண்ணத்தில் ஷேடு கொடுத்து எழுதப்பட்டிருந்த விலைப் பட்டியலைப் பார்த்தார் ராமசாமி தாத்தா.
  மசால் தோசை ரூ. 50/-
  "வேலைக்காகாது' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு இடியாப்பம் பார்சல் ரெடியாகக் காத்திருந்தார். 
  சதி போல, மேஜையில் அவருக்கு எதிர்நாற்காலிக் காரனுக்குத்தான் அந்த மசால்தோசை வந்தது. சுமார் நாற்பது வயசு சொல்லலாம். உழைப்பாளி என்று தோன்றியது. மடித்துவைக்கப்பட்டிருந்த அந்தப் பொன்னிற தோசையின் வயிற்றுக்குள் தாராளமாக வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மசாலா, அந்த எதிர்நாற்காலிக்காரன் ஒவ்வொரு துண்டாய் தோசையைப் பிய்க்கப் பிய்க்க மெதுவாகத் தன் முகம் காட்டியது. வெங்காய வாசனை ஓட்டலுக்கு வெளியேயும் போகும் போலிருந்தது. 
  சரக்குமாஸ்டர் தனது கைவண்ணத்தையெல்லாம் காட்டி "மொறுமொறு'வென்று தயாரித்திருந்த அந்த தோசை, சட்னி சாம்பாரில் நனைந்துகொண்டும், மசாலாவை அள்ளிஅணைத்துக் கொண்டும் அந்த ஆளின் அகன்ற வாய்க்குள் தஞ்சமடைந்தது.
  மனிதவாழ்வின் மகத்தான கண்டுபிடிப்பான அந்த அழகிய மசால்தோசையை, இனி வாழ்க்கையில் மறுபடியும் தோசையே சாப்பிடப் போவதில்லை போல சற்றும் ரசனையின்றி அள்ளிவிழுங்கியவன், அதை அவமானப்படுத்துவது போல ஒரு ஜக்கு நிறையத் தண்ணீரையும் தன் வாயில் கவிழ்த்துக் கொண்டான். 
  அதற்குப் பின்னர் ரிக்டர் அளவுகோலில் அவன் வெளியேற்றிய ஏப்பச் சப்தம், அவனைப் பொறுத்தமட்டில் மசால்தோசையும் மண்ணாங்கட்டியும் ஒன்றேதான் என்று சொல்லாமல் சொன்னது. ஒன்றுமே நடக்காதது போல எழுந்து கைகழுவப் போனான் அவன்.
  ராமசாமி தாத்தாவுக்கு மனசு பொறுக்கவில்லை. சட்டையின் உள் பாக்கெட்டில் உள்ள ரூபாய்த்தாளை ஒருதரம் எடுத்துப் பார்த்துவிட்டு உள்ளே வைத்தார். 
  இடியாப்பம் கட்டித்தரும் உத்தேசமே இல்லை எனத் தோன்றியது.
  எழுந்து பார்சல் கவுண்ட்டர் முன்பு நின்றார்.
  "கொஞ்சம் இருங்கப்பா, இருந்த இடியாப்பம்லாம் டேபிளுக்குப் போயிடுச்சு. உங்களுக்குப் புதுசா போட்டுத் தர்றேம்ப்பா...'' 
  "அப்பா' என்று விளிப்பது இந்த ஊரில் மரியாதை. 
  மரியாதை காட்டிய பார்சல் பொறுப்பாளனிடம் அதற்குமேல் சண்டையா போட முடியும்?
  உள்பாக்கெட்டில் இருந்ததை மறுபடியும் ஒருதரம் வெளியே எடுத்துப் பார்த்துவிட்டுத் திரும்பவும் உள்ளே வைத்தார். எட்டாய் மடித்த பழைய ஐம்பது ரூபாய் நோட்டு. 
  "செலவுக்கு வெச்சிக்கப்பா''
  மகன் கொடுத்துவிட்டுப் போனது. கம்பெனி முதலாளி ஏதோ வேலையாக அவனைச் சென்னைக்கு அனுப்பியிருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை மகன் ஊர்திரும்பி வரும் வரை வேறு ஐவேஜு கிடையாது.
  வெள்ளிக்கிழமைக்கு இன்னும் நாலு நாள் இருக்கிறது.
  அதற்குள் மூச்சிழுப்புக்கு செட்டித்தெரு அப்பாராவ் டாக்டர் கொடுத்த மாத்திரை தீர்ந்துவிடும். நாளையோ நாளை மறுநாளோ டாக்டரைப் பார்க்க வேண்டும் அவரிடம் கடன் சொல்ல முடியாது. 
  அப்பாராவ் டாக்டர் ஊசி போட்டு நாலு நாளைக்கு மாத்திரையும் கொடுத்து, "ட்வென்டிஃபைவ் கொடுங்க''’ என்பார். எப்போதும் இடிந்துவிழக் காத்திருக்கும் எட்டுக்கு எட்டு ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைதான் கிளினிக். ஒருமூலையில், துவைத்துப் பலஜென்மம் ஆகிய ஒரு பச்சைநிற ஸ்கிரீன் துணிக்கு அந்தப் பக்கம்தான் திரும்பி நின்று வேட்டியை விலக்கச்சொல்லி பின்பக்கத்தில் ஊசி சொருகுவது. 
  எய்ட்ஸ், கேன்சர் எல்லாவற்றுக்கும் அதே ட்வென்டிஃபைவ்தான். இந்த லட்சணத்தில் அவருக்கு ஒரு நர்சு வேறு. அந்தம்மாவுக்கு எப்படி சம்பளம் தருகிறாரோ? யாருக்குத் தெரியும். அவரிடம் வந்து கடன்சொல்லிப் போன யாரையும் இதுவரை ராமசாமி தாத்தா பார்த்ததில்லை.
  வீட்டில் மருமகள் எப்படியும் சப்பாத்தி சுடுவாள். என்ன, கொஞ்சம் மெலிசான வரட்டி மாதிரி இருக்கும். இஷ்டமிருந்தால் சட்டினியோ, பருப்புக் கடைசலோ செய்வாள். இல்லையெனில் வெறும் வரட்டி மட்டும்தான். 
  மருமகள் மட்டுமென்ன, வீட்டில் வைத்துக் கொண்டா கஞ்சத்தனம் செய்கிறாள்?அவர் மகன் சிறிய கம்பெனி ஒன்றில் பியூன் வேலை பார்த்துக் கொண்டு வந்து கொடுப்பதில் ஏதோ சமாளிக்கிறாள். 
  பேரப்பயல் நாகேஷுக்கு நாலு வயசு. எப்போ பார்த்தாலும் சளித்தொந்தரவு. நேற்று கூட சளியுடன் ஜுரமும் ஜாஸ்தியாகி டாக்டரிடம் காண்பித்துவிட்டு வந்தாள். 
  "நம்ம ட்வென்டிஃபைவ் சார்வாள்தான். ரெண்டு நாளில் சரியாகிவிடும்'' என்றிருக்கிறார். 
  பயலுக்குத் தொண்டையில் சோறு இறங்கவில்லை. வாயெல்லாம் புண் வைத்திருக்கிறது. வீட்டில் இட்லி மாவும் இல்லை.
  "நாகேசுக்கு இடியாப்பம் வாங்கிட்டு வாங்க மாமா...''" என்று இருபது ரூபாயையும் ஒரு துணிப்பையையும் கொடுத்து இவரை அனுப்பியிருக்கிறாள். இடியாப்பம் கைக்கு வருவதற்குள் மசால்தோசைச் சபலம் இவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருக்கிறது. காத்திருக்கிறார். 
  கையில் காசில்லாக் கொடுமை.
  கண்டுகொள்ளாத மகன், கொடுமைக்கார மருமகள் என்ற கதையெல்லாம் கிடையாது. 
  அழையாவிருந்தாளியாய் வந்து அப்படியே ஒட்டிக்கொண்ட வறுமை. மகனின் சம்பாத்தியம் போதவில்லை. அவ்வளவே.
  நாலு வருஷம் முன்பு வரை மார்க்கெட்டில் பரபரப்பான காமதேனு டெக்ஸ்டைல்ஸில் வேலை பார்த்தவர்தான் ராமசாமி தாத்தா. சளைக்காமல் கஸ்டமர்களுக்குத் துணிகளைப் பிரித்துக்காட்டுவதும், வேண்டாம் என்று சொல்லுவதை நொடியில் பழையபடி மடிப்புக் கலையாமல் அந்தந்த அலமாரிகளில் அடுக்கியதும், கால்குலேட்டர் இல்லாமல் மனக்கணக்காவே கணக்கிட்டுத் துணிகளின் விலையைத் துண்டுச்சீட்டில் பென்சிலால் எழுதி கல்லாவுக்கு அனுப்பியதும், "அம்மா உங்களுக்கு அந்த வாடாமல்லிக் கலர் எடுப்பா இருக்கும்மா''" என்று சொல்லி செலக்ஷன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதுமாக நாற்பது வருடம் ஓடிவிட்டது.
  ஸ்டாக் டேக்கிங், விசேஷ நாள் விற்பனை போன்ற சந்தர்ப்பங்களில் துணிக்கடை முதலாளி நிஜமான அக்கறையுடன் எல்லோருக்கும் டிபன், சாப்பாடு வரவழைக்கும் போது, "ஐயா, எனக்கு ஒரே ஒரு மசால் தோசை மட்டும் போதுங்கய்யா''" என்பார் ராமசாமி.
  அது என்னவோ சின்னவயதிலிருந்தே ஒரு மசால்தோசைப் பித்து. எப்போது முதல் என்றெல்லாம் நினைவில்லை. எந்த ஊரில், எந்த ஓட்டலில் நுழைந்தாலும், " மசால் தோசை இருக்கா?'' என்று கேட்டுவிட்டு, "இல்லை' என்ற பதில் கிடைத்தால் அப்படியே நடையைக் கட்டுவது வழக்கம். 
  வீட்டில் வாரம் இரண்டு நாட்களாவது மசால் தோசை போட்டாக வேண்டும்.
  அப்படியே அந்த உருளைக்கிழங்கு மசாலாவும் மொறுமொறுதோசையும், அந்தக்கால பத்மினி - சிவாஜி ஜோடி போல அத்தனைப் பிரியம் ராமசாமிக்கு. சட்டினி, சாம்பார் பற்றிக் கவலையில்லை.
  கண்ணம்மாவைக் கல்யாணம் பண்ணி வீட்டுக்கு அழைத்து வந்ததும் கேட்ட முதல் கேள்வியே, "ஒனக்கு மசால்தோசை சுடத் தெரியுமா?''
  சுட்டுக் கொண்டுதான் இருந்தாள் கண்ணம்மா, மசால்தோசையை, சளைக்காமல்... பத்து வருஷம் முன்பு ஒருநாள் தான் சுமங்கலியாகப் போய்ச் சேரும் வரையில். பெரியவெங்காயத்துக்கு பதில் சாம்பார் வெங்காயம் சேர்த்துக் கண்ணம்மா செய்யும் மசாலா அலாதி டேஸ்ட்டு. கண்ணம்மாவின் மறைவுக்குப் பிறகு, ஓட்டல்களில் தொடர்ந்து கிடைத்தது மசால் தோசை. ஆனால், கண்ணம்மாவின் கைப்பக்குவம் போலன்றி. 
  ஐந்துவருடம் முன்பு வந்த மருமகளை ஒரேஒருதரம் மசால் தோசை செய்யச் சொல்லிக்கேட்டு, மறுபடி அவளிடம் கேட்கும் ஆசையைக் கைவிட்டுவிட்டார். தினமும் களி கிண்டி, வாரம் ஒரு நாள் புழுங்கலரிசிச் சோறும் மொச்சக்கொட்டை புளிக்குழம்பும் மட்டுமே செய்யத்தெரிந்த கிராமத்துப்பொண்ணு. இட்லி சுட்டாலே அன்றையதினம் மழை பெய்யும். 
  "தானும் ஒரு நாள் துணிக்கடையை விட்டு நிற்கவேண்டியிருக்கும்' என்று ஒரு போதும் ராமசாமி தாத்தா யோசித்துப் பார்த்தது கூடக் கிடையாது.
  நாலாயிரத்துச் சொச்சம் சம்பளமும், சூப்பரேசர் அப்பா என்று கடைப் பொடிசுகள் காட்டும் மரியாதை கொடுத்த மெல்லிய திமிரும் சடக்கென்று ஒருநாள் விலகிக் கொண்டன.
  ராமசாமி தாத்தாவுக்குக் கண்பார்வை மங்கத் தொடங்கியது. கேட்ட கலரும் எடுத்துப்போடும் கலரும் வேறு வேறாயின. திரும்பி வைக்கும் போது புடவை வேஷ்டி அலமாரிக்கும், நைட்டி பெட்டிகோட் பகுதிக்கும் இடம்மாறுவது சகஜமாயிற்று.
  முதலாளி பழங்காலத்து ஆசாமி. பையன் அப்படியா?
  "வேணாம்டா, பழைய விசுவாசி... இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும்டா...''" என்ற முதலாளியின் விண்ணப்பம் அவர் பையனுடைய மறுபக்கக் காது வழியே பயணித்துக் காற்றோடு கலந்தது. 
  ரெண்டு மாச சம்பளமும், நாலுசெட்டு வேட்டி டவலும் கொடுத்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.
  வாட்சுமேன் பையன். நோயாளிப்பேரன். ரெண்டுமாசச் சம்பளப் பணம் ரெண்டே வாரத்தில் கரைந்தது. ஆனால் மசால்தோசை ஆசை மட்டும் அப்படியே அவரோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. மாசத்துக்கொருமுறை சம்பள தினத்தன்று பையனின் ஆஃபீஸ் வாசலில் போய் நின்றால், அவர்கள் ஆபீஸ் கேண்டீனில் மசால்தோசை வாங்கித் தருவான். 
  கண்ணம்மா செய்யும் மசால்தோசையின் கால் தூசுக்கு வராது. தோசை ஊத்தப்பம்போல தடியாக இருக்கும். மொறுமொறுவென்று இருக்காது. மசாலாவும் சகிக்காது. அதையும் அரை கரண்டிதான் வைப்பார்கள். பையன் மனசு கோணக்கூடாதென்று சாப்பிட்டுவிடுவார். மருமகள் ஒரேயோரு முறை செய்ததை விட எவ்வளவோ பரவாயில்லை என்பதைச் சொல்லியே தீரவேண்டும்.
  "உம்பொண்டாட்டிக்கும் எதுனா பார்சல் வாங்கிட்டுவா. பாவம் அதுமட்டும் என்னா தின்பண்டத்தக் கண்டது. அப்படியே எம் பேரனுக்கும் சாக்லேட்டு'' என்று சொல்லிவிட்டு, ஒரு டீ வாங்கித்தரச் சொல்லிக் குடித்துவிட்டு வீடு திரும்புவார். 
  கண்ணம்மா ஒரே ஒரு தரம் உயிரோடு மீண்டு வந்து மசால்தோசை சுட்டுக்கொடுத்துவிட்டு மறுபடியும் இறந்துபோனால் கூடப் பரவாயில்லை என்று அவ்வப்போது யோசனை வரும்.. 
  இன்று தன் எதிரில் இந்த ஓட்டலின் அருமையான மசால்தோசையை மகா அலங்கோலமாகத் தின்றுவிட்டுப் போனவனை என் பையன் ஆபீஸ் கேண்டீனுக்கு வரவழைத்துப் பத்துமசால்தோசையை ஒரே நேரத்தில் தின்னச் சொல்ல வேண்டும். அல்லது மருமகளைச் செய்யச் சொல்லி ஒரேயொரு மசால்தோசையை தின்னச் செய்தால் கூடப் போதும்.
  நினைத்த மாத்திரத்தில் சிரிப்புவந்தது.
  "அஞ்சாம் நம்பர் டேபிளுக்கு ஒரு மசால்தோசேய்''"
  "விடமாட்டேங்கிறானுங்களே'
  எழுந்து கொண்டார். 
  "இடியாப்பம் எப்பொதான் ரெடி ஆவும்?''" பெருத்த சலிப்பின் கனத்துடன் கேட்டதற்கு -
  "இதோ ரெடியாய்டுச்சுப்பா. தொட்டுக்க குருமாவா, சாம்பார் சட்னியாப்பா?'' என்று உருவத்திற்குப் பொருந்தாத சமாதானத்துடன் கேட்டான் பார்சல் கவுண்ட்டர் இளைஞன்.
  "எதையாச்சும் வெச்சுக் கட்டுப்பா, ஜல்தி''
  குருமாபோலத்தான் இருந்தது.
  பார்சலை இவரிடம் கொடுத்துவிட்டு, "சாரிப்பா... ரொம்ப லேட்டயிர்ச்சி''" என்றான்.
  உலக மகா சமாதானம். ஐ நா சபைக்குத்தான் இவனை அனுப்ப வேண்டும்.
  பார்சலுடன் திரும்பி நடக்கையில், ஐந்தாம் நம்பர் டேபிளுக்கான மசால்தோசை பொன்னிற மேனியாய், சாம்பார், சட்னி பரிவாரங்கள் புடைசூழ,வெங்காய வாசனை கிறங்கடிக்க ராமசாமி தாத்தாவைக் கடந்து சென்றது. 
  அவருக்குள் சட்டென்று சுவை நரம்புகள் சிலிர்த்தெழுந்தன.
  "காத்தவராயா... பொறுத்தது போதும்... பொங்கி எழு...'
  பழைய மேசைக்கே திரும்பினார். இடியாப்பப் பார்சலைப் பக்கத்து நாற்காலியில் வைத்துவிட்டு, டேபிளை சர்வர் நெருங்குமுன்னே -
  "ஒரு மசால்தோசை கொண்டாப்பா...சாப்பிடத்தான்'' என்று கர்வமாகக் கூறிவிட்டு இன்னொருதரம் சட்டையின் உள்பாக்கெட்டைத் துழாவினார். 
  இளைத்த சுண்டெலி போல அந்த ஐம்பது ரூபாய் நோட்டு அங்கேயே இருந்தது.
  நாளைக்கு அப்பாராவ் டாக்டரிடம் கடன் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டார்.

  58 வயதான எஸ்.ஸ்ரீதுரை இதுவரை சுமார் 140 சிறுகதைள், 200 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கவிதை, சிறுகதை போட்டிகளில் பரிசுகள் பல பெற்றிருக்கிறார். "கனாக்கண்ட தோழி', "மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமர்', "ஸ்ரீ திருமங்கையாழ்வார்' ஆகிய மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

  தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.5,000 பெற்ற கதை
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai