Enable Javscript for better performance
புதிய அனுபவத்தைத் தரும் மரப்பாவைக் கூத்து!- Dinamani

சுடச்சுட

  
  PAAVAI_KOOTHU

  முகநூல், சுட்டுரை, கட்செவிஅஞ்சல் என டிஜிட்டல் யுகமாக மாறி வந்தாலும், தமிழர்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றான மரப்பாவைக் கூத்து இன்றும் பல கிராமங்களில் அதன் பழைமை மாறாமல் உயிர்ப்புடனேயே இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூத்துக் கலை தோன்றி இருந்தாலும் கூத்துகளின் கதையம்சமும், அதில் கூறப்படும் கருத்துகளும் இன்றைய இளம்தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  மரப்பாவைக் கூத்து தொடங்கும்போதே கூத்துக்கே உரிய கம்பீரக் குரலில் இசையுடன் சேர்ந்து கூத்துக் கலைஞரின் பாட்டு ஒலிக்கும்; அந்த நிமிடம் பார்வையாளர்களை அது புல்லரிக்க வைத்துவிடுகிறது. பாடல், நடனம், நகைச்சுவையுடன் கலந்து நல்ல பல சிந்தனைகளையும் விதைக்கிறது இக்கூத்து.
  இந்த மரப்பாவைக் கூத்தை மீட்டெடுக்கும் பணியிலும், கூத்துக் கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கூத்தின் பழைமை மாறாமல், தமிழர்களின் அடையாளத்தை வளர் தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது "களரி தொல்கலை மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்'.
  இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், "மணல்வீடு' நவீன கலை இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியருமான மு.ஹரிகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்ததாவது:
  "பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்தாடுவதுதான் என்னுடைய குடும்பத் தொழில். தலைமுறை தலைமுறையாகக் கூத்தாடி வருகிறோம். தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாகவும் பணியாற்றி வருகிறேன். 20 ஆண்டுகளாக இந்தக் கலையைச் செய்து வருகிறேன். 12 கலைஞர்களைக் கொண்டு இந்தக் கூத்தை நடத்தி வருகிறோம். இராமாயணம், மகாபாரதம், அதன் கிளைக் கதைகள், பிரதானக் கதைகள், அரிச்சந்திரா, நல்லதங்காள் கதைகள் என 100 - க்கும் மேற்பட்ட கதைகளைக் கொண்டு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
  கூத்தைப் பொருத்தமட்டில் பார்வையாளர்களுக்கும், இந்தக் கலைக்கும் ஓர் உயிர்த் தொடர்பும், உறவுத் தொடர்பும் இருக்கும். 
  ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கலை வடிவம் இருக்கிறது. கொங்கு பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கான கலை வடிவம்தான் மரப்பாவைக் கூத்து. நகர்ப்புறம் சார்ந்த மக்களுக்கு இந்தக் கூத்துப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், கிராமப்புறத்திலும், உழைக்கும் வர்க்கத்தினரிடமும், மண் சார்ந்த உழைப்பாளர்களின் மத்தியிலும் இந்தக் கூத்துக்கான ஆதரவு இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
  திரைப்படங்கள், நாடகங்கள் போன்ற காணொளி கதைகளில் பார்வையாளர்களின் பங்கு இருப்பதில்லை. அதில் என்ன நடக்கின்றதோ, அதை அசைவின்றிப் பார்க்கத்தான் முடியும். ஆனால், கூத்தில் வரும் ராமன் கதாபாத்திரமோ, சீதை கதாபாத்திரமோ அப்படியில்லை. நேரடியாகப் பார்வையாளர்களிடம் பேசும். அதுதான் கூத்தின் சிறப்பு. நேரடியாகக் கலைஞர்களிடம் பார்வையாளர்களைப் பங்கெடுக்க வைக்கும் தன்மை நிகழ்த்து கலைகளிடம் மட்டுமே இருக்கின்றன. நாட்டார் கலைகளின் சிறப்பே பார்வையாளனையும், கலைஞர்களையும் ஒன்றிணைப்பதுதான். இந்தக் கலைகள் நேரடியாக நடப்பதினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப்படும் கலைகளாக இன்றும் இருக்கின்றன. அதனால், எவ்வளவு கலைகள் வந்தாலும் பார்வையாளர்களைத் தொடர்புபடுத்தும் கூத்துக் கலை என்றுமே அழியாது.
  நிறையப் பேர் இந்தக் கூத்தைப் பார்த்துவிட்டு கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினாலும், அதை குறைந்த நாள்களில் கற்றுக் கொள்ள நினைக்கின்றனர். அதுதான் இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல். இந்தக் கலையை உடனடியாகக் கற்றுக் கொள்ள முடியாது. அடிப்படையில் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும். கலைநிகழ்ச்சி நடக்கிறபோதெல்லாம் அதில் பங்கேற்றுதான் கற்றுக் கொள்ள முடியும். எனவே, கலைஞர்களின் வாரிசுகள் மட்டுமே இந்தக் கலையை தற்போது ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர்.
  "களரி தொல்கலை மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்துடன்' இணைந்து பள்ளியும் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் மாணவர்களுக்கு மரப்பாவைக் கூத்துப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
  இந்தக் கலையை விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக நாங்கள் பயன்படுத்துவதில்லை. இது பாரம்பரியக் கலை. அந்தப் பாரம்பரிய கலைக்கு உரிய இதிகாசங்கள், புராணக் கதைகளை மட்டுமே நடத்தி வருகிறோம். இது நாம் படிக்கும் புத்தகத்தில் இருக்கும் கதைகளோ, அல்லது தொலைக்காட்சிகளில் வரும் கதைகளோ அல்ல. முழுக்க முழுக்க மக்களால் நடத்தப்படும் மக்களுக்கான கதைகள். பார்ப்பவர்களுக்கு ஓர் புதிய அனுபவத்தைக் கொடுக்கக் கூடியவை.
  கவிஞருக்கோ, எழுத்தாளருக்கோ, மற்ற கலைத் துறையினருக்கோ கிடைக்கும் அங்கீகாரமும், பிரதிநிதித்துவமும் கூத்துக்கும், கூத்துக் கலைஞர்களுக்கும் கிடைப்பதில்லை. அந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும், கூத்துக் கலைஞர்களின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் நடத்துவதுதான் மரப்பாவைக் கூத்து நிகழ்ச்சி'' என்றார்.

  -ம.பவித்ரா 
  படங்கள்: உ.ச.சாய் வெங்கடேஷ்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai