100 வயதை எட்டும் எழுத்தாளர்!

மொழி பெயர்ப்பாளர், முற்போக்கு எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர். நூறாவது வயதை எட்டும் தருணத்திலும், இளமையின் வேகம், பேச்சில் ஆற்றல், புத்தகத்தின் மீது நாட்டம், காலை எழுந்தவுடன்

மொழி பெயர்ப்பாளர், முற்போக்கு எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர். நூறாவது வயதை எட்டும் தருணத்திலும், இளமையின் வேகம், பேச்சில் ஆற்றல், புத்தகத்தின் மீது நாட்டம், காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி, தன் பணியை தானே செய்து கொள்ளும் ஆர்வம் ஆகியவற்றுடன் இருக்கிறார் நாமக்கல் சந்தைப்பேட்டைப் புதூரில் தனது மகன்களுடன் வசிக்கும் கா.பழனிசாமி. நாமக்கல்லுக்கான அடையாளங்கள் பல. அவற்றுள் இவரும் ஒருவர்.
 "1921, ஆகஸ்ட் 21-ஆம் தேதி, நாமக்கல்லில் நான் பிறந்தேன். 1932-இல் தற்போதைய நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலத்தை முதன்மையாக எடுத்துப் படித்தேன். பின்னர் அங்கு தலைமை ஆசிரியருக்கு உதவியாகப் பள்ளியிலேயே பணியாற்றி வந்தேன். இந்த சூழலில், மதுரையில் இருந்து என் பெயர் கொண்ட பழனிசாமி என்பவர் வந்தார். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்திருந்த காலம். அவர் என்னைக் கட்சியில் இணைத்தார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு பகத்சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன் ?' என்ற புத்தகத்தைப் படித்தேன். அது எனக்கு கம்யூனிஸம் மீது ஆர்வத்தை அதிகரித்தது. 1952-இல் கட்சியின் சேலம் மாவட்ட பொறுப்பில் அங்கம் வகித்தேன்.
 ஆங்கிலப் புலமை இருந்ததால் நூல்களை மொழிபெயர்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1970 காலகட்டங்களில், கென்யா நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராடிய போராளி கூகி வா தியாங்கோ பற்றி அறிந்தேன். அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால், அவர் எழுதிய புத்தகத்தை தமிழ் மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மொழிபெயர்க்க முடிவு செய்தேன். "யுத்தகாலத்தில் எழுந்த எனது கனவுகள்' என்ற தலைப்பிலான அந்த புத்தகம் தமிழாக்கம் செய்யப்பட்டு பலரின் வரவேற்பைப் பெற்றது. இவை தவிர, "தி சிமென்ட்', "தவணை முறையில் ஒரு நட்பு' என்ற இந்திய மொழிகளில் உள்ள சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்தேன். ஐந்து புத்தகங்கள் மட்டுமே மொழி பெயர்த்துள்ளேன். அதில் இரண்டு மட்டுமே நினைவில் உள்ளன. அதிக அளவில் மொழி பெயர்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
 மூன்று ஆண்டுகளுக்கு முன், "சில நிகழ்வுகள்; சில நினைவுகள்' என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டேன். எழுத்தாளரான கு.சின்னப்பபாரதி அதற்கு அணிந்துரை எழுதினார். சிலம்பொலி சு.செல்லப்பன், ரங்கசாமி உள்ளிட்டோர் அந்தப் புத்தகத்தை வாழ்த்தி எழுதினர். அதில், கேரள முன்னாள் முதல்வர் நம்பூதிரிபாத் -உடன் நட்பு ஏற்பட்ட விதம், சோவியத் ரஷ்யாவுக்கு சென்றது, எனது இளமைக்காலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எழுதியுள்ளேன். நான் படித்து ரசித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை புதுக்கோட்டையில் உள்ள நூலகத்துக்கு கொடுத்துவிட்டேன்.
 1979-இல் மனைவி காளியம்மாள் காலமானார். மோகன்ராஜ், பால்ராஜ் என்ற இரு மகன்கள், பார்வதி என்ற ஒரு மகள். பேரன், பேத்திகள் உள்ளனர். மகன்கள் வீட்டில் மாறி மாறி இருந்து வருகிறேன். வயது 99 பிறந்து விட்டது. இன்றளவும் என்னுடைய அன்றாடப் பணிகளை நானே செய்து கொள்கிறேன். புத்தகம் படிக்கிறேன், தொலைக்காட்சி பார்க்கிறேன். சளி, இருமல், காய்ச்சல் என எந்த தொந்தரவும் இல்லாமல் எனது உடலைப் பராமரித்துக் கொள்கிறேன். காது மட்டும் சற்று கேட்பதில்லை. காலை எழுந்தவுடன் என்னால் முடிந்த உடற்பயிற்சிகளைச் செய்கிறேன். தினமும் நாளிதழ் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். யாருடைய உதவியுமின்றி வீட்டிற்குள்ளேயே நடந்து செல்கிறேன். நூறு வயதை எட்டும் வேளையில், எனது உடல் மட்டுமல்ல, மனமும் இளமையாகவே இருக்கிறது'' என்கிறார் பூரிப்புடன் பழனிசாமி.


 - எம்.மாரியப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com