காந்திஜி -150: சில நினைவுகள்!

சத்தியாகிரகப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம். காந்திஜி காரடி என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். ஒருநாள் காலை பெரும் வாத்திய சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தார்.
காந்திஜி -150: சில நினைவுகள்!

சத்தியாகிரகப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம். காந்திஜி காரடி என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். ஒருநாள் காலை பெரும் வாத்திய சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தார். என்ன சத்தம்? என்று தெரிந்து கொள்ள குடிசையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். ஆண்களும் பெண்களுமாக கைகளில் கொடிகளை ஏந்தியபடி கூட்டமாக வந்து கொண்டிருந்ததால், சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருப்பார்களோ என்று நினைத்தார். தொடர்ந்து பார்த்தபோது ஆண்களின் கைகளில் இருந்த தட்டுகளில் பணம், பழங்கள், மலர்கள் போன்றவை நிறைந்திருந்தன. ஒன்றும் புரியாமல் காந்திஜி குடிசைக்கு வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் மக்கள் ஆரவாரத்துடன் பரவசமடைந்து, கொண்டு வந்த தட்டுகளை அவரது காலடியில் வைத்து வணங்கினர்.
 காந்திஜி மேலும் குழப்பமடைந்தார். "அளவுக்கு மீறிய வாத்திய சத்தத்துடன் எதற்காக இங்கு வந்தீர்கள்?'' என்று கேட்டார் காந்திஜி.
 அந்த கூட்டத்தின் தலைவன் கூறினான்: "மகாத்மாஜி, எங்கள் கிராமத்தில் வழக்கமாக கோடை காலத்தில் ஏரிகள், கிணறுகள் வற்றிப் போவது மட்டுமின்றி, மற்ற பருவங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்போது நீங்கள் இந்த கிராமத்தில் காலடி வைத்தீர்களோ அப்போது முதல் கிணறுகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதுகுறித்து நாங்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தவே உங்களை சந்தித்து எங்களால் முடிந்தவற்றைக் காணிக்கையாகச் செலுத்த வந்துள்ளோம்'' என்றார்.
 இதைக் கேட்டதும் காந்திஜியின் முகம் கடுமையாக மாறியது. "உங்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. நான் இங்கு வந்ததற்கும் உங்கள் ஊரிலுள்ள கிணறுகளில் தண்ணீர் நிரம்புவதற்கும் என்ன சம்பந்தம் ? நான் என்ன கடவுளா? நீங்கள் செய்த பிரார்த்தனையின் பலன் இது. ஒரு காக்கை பறந்து வந்து மரத்தின் மீது அமரும்போது கிளை ஒன்று முறிந்து விழுந்தால் அதற்கு காக்கையைக் காரணம் சொல்வீர்களா? உங்கள் ஊர்க் கிணறுகளில் தண்ணீர் வற்றுவதற்கும், நிரம்புவதற்கும் காரணம் நிலத்தடி நீர் பிரச்னையாக இருக்கலாம். சிறுபிள்ளைத்தனமாக என்னை இதில் சம்பந்தப்படுத்தி பேசாதீர்கள். இதெல்லாம் அர்த்தமற்ற நம்பிக்கை'' என்று கூறி கடிந்து கொண்டாராம்.
 இதே போன்று மற்றுமொரு சம்பவம். ஒருமுறை பீகாரில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள நிலைமையைக் கேட்டறிந்தார். அவருடன் மனு பென்னும் சென்றிருந்தார். காந்திஜியைக் கவனித்துக் கொள்வதோடு, அவரை ஆர்வத்துடன் சந்திக்க வரும் மக்களின் குறைகளை மனுபென் தானும் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார்.
 ஒரு நாள் பகல் பொழுது 3 மணியளவில் புதிதாகத் திருமணமான மணமக்கள் காந்திஜியைச் சந்தித்து ஆசி பெற வந்திருந்தனர். டாக்டர் சையத் முகமதுவின் மகன் மெகபூபாவும், அவரது மனைவியும் அங்கு வந்தவுடன், காந்திஜியின் பாதங்களைத் தொட்டு வணங்கினர். பின்பு மணமகள், காந்திஜியிடம் நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தார்.
 இதைக் கவனித்துக் கொண்டிருந்த மனுபென், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் காந்திஜி அருகில் சென்று, ""பாபுஜி, இதெல்லாம் அவர்களுடைய சம்பிரதாயம். பெரியவர்களிடம் ஆசி பெற்றவுடன், மணமகள் வீட்டு வழக்கப்படி பணம் கொடுப்பதுண்டு'' என்றார்.
 இதைக் கேட்ட காந்திஜி, "நம்முடைய சம்பிரதாயம் பழக்க வழக்கங்களை விட, பிள்ளைகள் பெற்றோருக்கு தங்கள் கடமைகளைச் செய்து காப்பாற்றுவது முக்கியம்'' என்று கூறி அனுப்பி வைத்தாராம்.
 8 ஆஸ்கர் விருது பெற்ற "காந்தி' திரைப்படம்!
 மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, பிரிட்டிஷ் தயாரிப்பாளர் இயக்குநருமான ரிச்சர்ட் ஆட்டன் பரோவால், "காந்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, 1982-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி இந்தியாவில் திரையிடப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான இந்தப் படம் ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டது. இதில் காந்தியாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் பென்கிங்ஸ்லியின் மூதாதையர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், குஜராத்தை சேர்ந்த பலர் காந்திஜியைப் போல் நடிக்க பயிற்சி அளித்தார்களாம்.
 டெல்லியில் காந்தியின் இறுதி யாத்திரையைப் படமாக்கிய போது அந்த ஒரு காட்சிக்காக 4 லட்சம் பேர் துணை நடிகர்களாக அமர்த்தப்பட்டனர். "காந்தி' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டபோது, சிறந்த நடிகர் விருது உள்பட 8 விருதுகள் கிடைத்தன. இப்படத்தில் சிறந்த ஆடைவடிவமைப்பாளர் என்ற பிரிவில் இந்திய டிசைனர் பானு அத்தையாவுக்கும் விருது கிடைத்தது.
 
 - அ.குமார்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com