முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெற்றிலை, பாக்கு!
By பேராசிரியர் எஸ். சுவாமிநாதன் | Published On : 19th April 2020 05:26 PM | Last Updated : 19th April 2020 05:26 PM | அ+அ அ- |

நான் சமீபத்தில் திருமணமாகி என் கணவர் வீட்டிற்கு வந்து விட்டேன். என் மாமனார் காலை, மதியம் உணவு சாப்பிட்ட பிறகு, குறைந்தது ஆறு வெற்றிலைகளையாவது சுண்ணாம்பு தடவி பாக்குடன் சாப்பிடுகிறார். அவருக்கு வயது 61. இப்படி சாப்பிடுவதால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
-லக்ஷ்மி, கும்பகோணம்.
அவர் இரவிலும் வெற்றிலையை உணவிற்குப் பிறகு சாப்பிடாமல் இருக்கிறாரே? என்று நீங்கள் வருந்த வேண்டும்! காரணம் வெற்றிலை - பாக்கு - சுண்ணாம்பின் சேர்க்கை ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். அதுவும் எங்கு? வாய், தொண்டை - நுரையீரல் பகுதிகளில் ஏற்படும் வைரஸ் தொற்றுகளையும், கிருமிகளையும் அழிக்கக் கூடியது.
அறுசுவை அன்னமும் வயிற்றில் செரிமானம் தொடங்கும் நிலையில் இனிப்பாக, நுரைத்துக் கொண்டு, கபத்தினுடைய ஆதிக்கத்தால் அரவையில் ஈடுபடும். அந்த நேரத்தில், உண்ணப்பட்டு உட்செலுத்தப்பட்ட வெற்றிலையின் சாறு என்ன செய்கிறது?
வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும் அதன் சாறு, உமிழ்நீர் சுரப்பையும் கட்டுப்படுத்தும். கும்பகோணம் பகுதியில் கிடைக்கும் வெற்றிலை நல்ல தளிராகவும், ருசியாகவும் இருக்கும். கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதா வெற்றிலை என பல வகைகள் உண்டு. சுவையில் காரம், கசப்பு, துவர்ப்பு, சூடான வீரியம் ஆகியவற்றைப் பெற சிறந்த வழி - சுண்ணாம்பு தடவாத வெற்றிலையை முதலில் மென்று உடனே, சுண்ணாம்பு தடவிய வெற்றிலையை பாக்குடன் மெல்ல வேண்டும். மூன்றையும் ஒன்றாக மெல்லும் போது உமிழ்நீர் கலந்து முதலில் வரும் கடும் சுவையுள்ள சாற்றைத் துப்பி விட்டுப் பின்னர் ஊறும் நீரைச் சுவைத்தல் நல்லது. முதல் நீர் நஞ்சு, இரண்டாவது பித்த சூட்டை அதிகமாக்கும், மூன்றாவது அமுதம், நான்காவது மிகவும் இனிக்கும், நல்லதே என சூட்சுமமறிந்தவர் கூறுவர். சிட்டிகை வால் மிளகு, சுக்குத்தூள் கிராம்பு, ஏலம், ஜாதிக்காய் சேர்த்துச் சாப்பிட, நறுமணம் மட்டுமல்ல, வைரஸ்களையும், கிருமிகளையும் எதிர்த்துப் போராடும். ஆனால் வெற்றிலையை எப்போதும் காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிய பின் பயன்படுத்த வேண்டும். 2 முதல் 4 வெற்றிலை சாப்பிட்டால் போதும்.
வெற்றிலை போடுபவர்கள் பல நல்லவிஷயங்களைப் பெறுகிறார்கள் அவை -
கடு- காரம், திக்தம் - கசப்பு, உஷ்ணம் - சூடு, மதுரம் - இனிப்பு, க்ஷôரம் - துவர்ப்பு, வாதக்னம் - வாயு சீற்றம் அடங்குதல், கபநாசனம் - சளியை அகற்றி குணப்படுத்துவது, கிருமிஹரம் - கிருமிநாசினி, துர்கந்த நிர்ணாசனம் - வாய் துர்நாற்றம் நீக்குதல், வக்த்ரஸ்ய ஆபரணம் - வாய்க்கு அலங்காரம் (சிவப்புநிறம்), விசுத்திகரணம் - புலன்களைத் தூய்மையாக்குதல்.
மெய்மறந்து தாம்பூலம் ஒன்று கூடி வாயில் நிறைந்து நிற்கும் நிலையில் அனுபவிக்கும் சுகத்திற்கு இணை சுவர்கத்திலும் இல்லையாம்!
சில விஷயங்கள் அவருக்கு மேலும் நன்மை தரலாம். விடியற்காலையில் மலமிளகி வெளியாவதை விரும்பினால் பாக்கை அதிகமாகச் சேர்த்து மெல்லலாம். பகலில் சுண்ணாம்பு சிறிது கூடச் சேர்த்தால், பசி, ஜீரணசக்தி, சுறு சுறுப்பிற்கு நல்லது . இரவில் வெற்றிலை அதிகமாவது ஜீரணத்திற்கு நல்லது. நரம்பு சுறு சுறுப்பிற்கும் ஏற்றது. வாய்மணம் கெடாது. அழுகல் அமில நாற்றம் ஏற்படாது. வயிற்றுப் பிரட்டல் நீங்க சோம்பு சேர்ப்பதும், நரம்பு பலம் பெருக குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி சேர்ப்பதும் நல்லதே.
இத்தனை சிறப்பு தாம்பூலத்திற்கு இருந்தாலும் நல்ல பசி உள்ளபோதும், பால் சாப்பிட்ட பிறகும் காய்ச்சல், நீரிழிவு, விக்கல், இதய நோய், ஆஸ்துமா, பேதி, காக்காய் வலிப்பு போன்ற உபாதைகளின் போதும் தாம்பூலம் நல்லதல்ல.
தாம்பூல ரசாயனம் எனும் ஆயுர்வேத மருந்தை டீ - ணீ ஸ்பூன் சாப்பிட, தொற்று உபாதைகளிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
(தொடரும்)