முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
கரோனா: தாக்குதலும் வேறு... பாதிப்புகளும் வேறு!
By ந.ஜீவா | Published On : 19th April 2020 05:32 PM | Last Updated : 19th April 2020 05:32 PM | அ+அ அ- |

உலகம் முழுக்க கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி எல்லாரையும் இந்த வைரஸ் தாக்குகிறது; இதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவோ வேறாகத்தான் இருக்கிறது.
கரோனா வைரஸ் தாக்குதலில் ஆண் - பெண் வேறுபாடு இருக்கிறது. வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் பாதிப்புகள் பல்வேறுவிதமான மக்கள் பிரிவினரிடம் பல்வேறுவிதமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
கரோனா வைரஸ் தொற்று தாக்குதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக நடப்பதில்லை என்று லண்டனில் உள்ள "யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டன்' என்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு ஆராய்ச்சி செய்து கண்டறிந்திருக்கிறது.
உடல்ரீதியாக பெண்களை விட ஆண்கள்தாம் கரோனா வைரஸ் தொற்றால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்; அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
""ஆண்களுக்கு ஒரே ஓர் எக்ஸ் குரோமோசோம்தான் உள்ளது. பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. வைரஸ் தொற்று நிகழாமல் தடுப்பதில் இந்த எக்ஸ் குரோமோசோம்களுக்குப் பங்கிருக்கிறது. வைரஸ் தொற்று நிகழும்போது பெண்களின் உடலில் அதற்கெதிரான நோய்த் தடுப்புத் திறன் ஆண்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆண் - பெண்களுக்கு இடையே உள்ள இந்தப் பாகுபாடோடுதான் இந்த கரோனா வைரஸ் தொற்று நிகழ்கிறது'' என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைமைப் பொறுப்பில் உள்ள அன்னா பர்டீ.
அதுமட்டுமல்ல, ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்க்கை முறையில் மாறுதல்கள் இருக்கின்றன. உலக அளவில் பெண்களை விட அதிகம் புகைபிடிப்பது ஆண்களே. நமது நாட்டில் பெண்கள் புகைபிடிப்பது மிகவும் குறைவு.
புகைபிடிக்கும் பழக்கத்தால் இதய நோய்கள், புற்றுநோய் ஆகியவை ஏற்படுகின்றன; நுரையீரல் பாதிப்படைகிறது. கரோனா வைரஸ் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல்தான். கரோனா வைரஸ் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள ஒருவரின் நுரையீரலை எளிதில் பாதிப்படையச் செய்கிறது.
கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாமும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக இல்லை.
குறிப்பாக மகப்பேறு மருத்துவ மையங்கள் கரோனா வைரஸ் தாக்குதலினால் ஏற்கெனவே இருந்ததைவிட குறைந்த அளவிலேயே செயல்படும் நிலை உலகம் முழுக்க ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலைக்காக வெளியே செல்லாமல் வீட்டிலேயே ஆண்களும் பெண்களும் இருப்பதால், பெண்களின் மீதான வீட்டு வன்முறை அதிகமாகியிருக்கிறது. பெண்கள் மீது நடத்தப்பட்ட வீட்டு வன்முறை ஆஸ்திரேலியாவில் 75 சதவீதமும், லெபனானிலும் அமெரிக்காவிலும் இரண்டு மடங்கும் அதிகரித்திருப்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அன்ட் பொலிடிகல் சயின்ஸ் கல்விநிறுவனத்தில் குளோபல் ஹெல்த் பாலிசி பிரிவில் துணை பேராசிரியையாகப் பணிபுரியும் கிளேர் வென்ஹாம் கூறியிருக்கிறார்.
உலக அளவில் சுகாதாரப் பணியாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாக இருப்பதால், இந்தத் துறையில் பணிபுரியும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்திக் கொள்ளுதலால், ஓரளவு வசதி உள்ளவர்கள் குறைந்தது நான்கு, ஐந்து மாதங்கள் உணவுக்கோ தங்குமிடத்துக்கோ கவலையில்லாமல் வீட்டிலேயே இருக்க முடியும்.
தெருவோரங்களில் தங்கியிருப்பவர்கள், அடுத்த வேளை உணவுக்குக் கூட வேலை செய்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் கரோனா வைரஸ் தாக்குதல் இல்லாவிட்டாலும் கூட உயிர் வாழ்வதே சிரமமாகி இருக்கிறது.