Enable Javscript for better performance
பால் தாத்தா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  பால் தாத்தா

  By உஷாதீபன்  |   Published On : 19th April 2020 07:20 PM  |   Last Updated : 19th April 2020 07:20 PM  |  அ+அ அ-  |  

  kadhir3


  இன்றோடு நான்கு முறை ஆகி விட்டது. ரமணனுக்கு மனதை உறுத்தியது. இப்பொழுது ஆனதைச் சொன்னால் உமா என்ன சொல்வாளோ? இதற்கும் வழக்கமாய்த் தான் சொல்லும் பதில்களைச் சொல்லி சமாளிக்க முடியுமா தெரியவில்லை.
  மீறினால், தானே போக வேண்டியிருக்கும் என்கிற சங்கடத்தில்தான் அவள் இத்தனை நாள் அமைதி காத்தது. இருக்கிற வேலை போதாதா? இன்னும் அதுக்கு வேறே அலையணுமா? பொறுமிக் கொண்டிருந்தாள் என்று வேண்டுமானால் சொல்லலாம். "இப்டி பொறுப்பத்தவனா இருக்கானே' என்று கூட நினைத்திருக்கலாம்.
  அதற்குள் இன்றும் இப்படியாகும் என்று இவன் எதிர்பார்க்கவேயில்லை. தண்ணீர் கலப்பதற்கு முன் ஒரு விநாடி யோசிக்கத்தான் செய்தான். இந்தத் தண்ணீரை விடுவமா அல்லது அந்தத் தண்ணீரையா? என்று. பாலில் கொஞ்சமாச்சும் தண்ணீர் கலக்கலைன்னா கட்டுபடியாகுமா நடுத்தரக் குடும்பத்துக்கு?
  மணியைப் பார்த்தான். விடிகாலை 4.05 - இன்னும் ஒரு வாகனம் கூடக் கண்ணில் படவில்லை. ஏதேனும் ஒன்று தள்ளியிருக்கும் படுக்கை வசச் சாலையில் குறுக்கே செல்வது இவன் வீட்டு மாடி பால்கனியிலிருந்து தெரியும். அது பெரும்பாலும் பால் வண்டியாகத்தான் இருக்கும். அல்லது மெட்ரோ தண்ணீர் லாரி. அந்த நேரத்துக்கே தண்ணீர் விநியோகம் ஆரம்பித்து விடுகிறது என்று நினைப்பதற்கில்லை. இரவு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்பும். முன்னூறு வீடு, நானூறு வீடு என்று இருக்கும் பெரிய பெரிய அபார்ட்மென்ட்டுகளுக்கு நாளுக்கு பத்துப் பன்னிரண்டு லாரி விட்டால்தான் கதை ஆகும்.
  அசுரத்தனமாய் லாரிகள் ஓடிக்கொண்டேயிருப்பது... அடேயப்பா பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது... எமன் வருவது போல்?
  எவனாவது அகஸ்மாத்தாய் அடி பட்டால் சட்னிதான். "கீகீகீ....கீகீகீ...கீகீகீகீகீ.....' என்று காதைக் கிழித்துக் கொண்டு அலறும் ஏர் உறாரன் அந்தப் பிராந்தியத்தையே உலுக்கி எடுக்கும்.
  ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பொழுதில் இப்படி உறாரனை அலற விடத்தான் வேண்டுமா? ஒரு காலத்தில் நகர்ப் பகுதிக்குள், ஏர் உறாரன் உபயோகிக்கக் கூடாது என்றிருந்தது. இப்போது அந்தக் கண்டிஷனெல்லாம் காற்றில் பறக்க விட்டாச்சு போலும்! தண்ணி லாரி வருவதற்கு அடையாளமாய் ஓரிரு முறை அடித்தால் போதாதா? அந்த ஓரிரு முறை கூட சகிக்க முடியாதுதான். மென்னியைப் பிடிப்பது போலான அலறல்.
  நாங்கள்லாம் ராவுமில்ல... பகலுமில்லன்னு பாடாப் படுறோம்... உங்களுக்கெல்லாம் இன்னமும் தூக்கம் கேட்குதா? என்பது போல் குரூரமாய்த் தன் பிளிறலை வெளிப்படுத்துவதாய்த் தோன்றும். அந்த லாரி ஓட்டுநர்களின் தீராக் கோபத்தின் அடையாளமோ அது?
  எப்பொழுதும் வீதி கார்ப்பரேஷன் தொட்டியிலிருந்து குடத்தில் பிடித்து வரும் தண்ணீரைத்தான் கலப்பான். இருபத்தைந்து ரூபாய்க்கு குடிப்பதற்காக வாங்கும் மினரல் வாட்டர் கேன் தண்ணீரைக் கலப்பதில்லை. அதைவிட்டுக் கலந்துதான் ஓரிரு முறை திரிந்தது. பிறகு கார்ப்பரேஷன் தண்ணியையும் விட்டு ஒரு முறை திரிந்துதான் போனது. அப்படித்தான் இன்றும் நடந்து விட்டதோ? பால் திரிந்த பின்னால்தான் ரமணனுக்கு புத்தியில் உறைத்தது. எந்தப் பாத்திரத்தில் பால் காய்ச்சு
  கிறோமோ அதைக் கூட ஒரு முறை தண்ணீர் விட்டு கையால் தேய்த்து அலசி ஊற்றி விட்டுத்தான் எப்போதும் பாக்கெட்டை உடைத்து பாலை அதில் ஊற்றுவான். அப்படிச் செய்யாவிட்டால் அதனால் கூட பால் திரியக் கூடும். க்ளீனிங் பவுடர், அலம்பிய பாத்திரத்தில் படிந்திருக்க வாய்ப்புண்டு. அதில் கொண்டு போய் பாலை அப்படியே ஊற்றிக் காய வைத்தால் பால் திரியாமல் என்ன செய்யும்?
  அனுபவம் இவ்வேலையில் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதே சமயம் நஷ்டமும் அவனால்தான் ஏற்படுகிறது. உமா அப்படித்தான் சொல்கிறாள். அவனது கவனக் குறைவு என்று மட்டையடியாய் அடிக்கிறாள். என்றுமே அவள் தண்ணீரைக் குறை சொன்னதேயில்லை. பால்தான் கோளாறு என்பாள். வாங்கும் இடம் பிடிக்கவில்லையோ? அதையாவது வெளிப்படையாய்ச் சொல்லித் தொலைக்கிறாளா? தனக்குள்ளேயே முக்கி முனகினால் எதிராளிக்கு எப்படித் தெரியும்? என்றாவது அபூர்வமாய் அவள் பால் காய்ச்ச நேர்ந்த சமயங்களில் அது திரிந்ததேயில்லை. அவள் கைராசியோ என்னவோ? அல்லது அவள் கணக்குப்படி அன்று நல்ல பால் வந்துவிட்டதோ என்னவோ?
  நல்ல பால்... கெட்ட பால்... தன் கைக்கு மட்டும் ஏன் சமயங்களில் திரிந்து போகிறது? புரியாத ரகசியம்!
  ஒரு வழியாய் இன்று வாயைத் திறந்தாள்.
  ""ஊர் உலகத்துல வேறே கடையே இல்லையா? அந்த ஒரு இடத்துலயேவா போய் நிக்கணும்? உங்களுக்குன்னு பாக்கெட்டுக்கு ஒரு ரூபா குறைச்சுத் தரானா? எல்லாருக்கும்
  ஒரே ரேட்தானே? இந்த ஏரியாவுலயே பத்துக் கடைக்கும் மேலே இருக்கு... கொஞ்சம் தள்ளிப் போனா டெப்போவே இருக்கு... அங்க போய் வாங்கினா இந்த வம்பே இல்ல... ஆனா நீங்க போக மாட்டீங்க... சோம்பேறித்தனம்... காலை வீசி நடந்து போயிட்டு வந்தா நல்லதுதானே? தெனமும் வாக்கிங் போன மாதிரியும் ஆச்சு... விடிகாலைல பிரம்ம முகூர்த்த வேளைல எழுந்திரிச்சு நடந்தா, சுத்தமான காற்றை வாங்கினா உடம்புக்கு அவ்வளவு நல்ல ஆரோக்யம், மனசுக்கும் இதம்... யார் சொல்லி யார் கேட்டிருக்கா இந்த உலகத்துல... அவாவாளுக்கு அனுபவ யோகம்னு ஒண்ணு இருக்கோல்லியோ... அது பிரகாரம்தான் எல்லாமும் நடக்கும்... என்னவோ பண்ணுங்கோ... நான் சொல்லியா நீங்க கேட்கப் போறேள்... தலை வெடிச்சிடாதா?''
  ""இப்ப என்ன நடந்து போச்சுன்னு இம்புட்டுப் பேச்சு, அட்வைஸ்? பால்ங்கிறது ஒவ்வொரு இடத்திலயும் ஒவ்வொரு மாதிரியா இருக்கும்? எல்லா எடத்துலயும் அதுக்கு ஒரே ரூபம்தான். சும்மாகெட... என்னவோ இன்னைக்கு இப்டி ஆயிடுத்து... தெனமுமா ஆகுது... சரின்னு விடுவியா ?''
  ""இதோட நாலு பாக்கெட் திரிஞ்சி போயாச்சு... ஒரு பாக்கெட் இருபத்தஞ்சு ரூபா... காசென்ன சும்மாவா வருது? இந்தத் திரிஞ்ச பாலை அப்டியே எடுத்திட்டுப் போயி நீட்டி, பதிலுக்கு புதுப் பாக்கெட் வாங்கிட்டு வர முடியுமா? தருவானா? அவனுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?''
  ""ஏன்டீ... அன்றாடம் வேன்ல வந்து இறங்குற பாலைத்தான் எல்லாருக்கும் குடுக்குறான்... அதுல நேத்துப் பால், முந்தா நாள் பால்னு இருக்குமா? பழைய பாலை எவனாச்சும் தருவானா? கேள்வி கேட்டாலும் ஏதாச்சும் அர்த்தம் பொருத்தத்தோட இருக்கணும்... குறை சொல்லணுமேன்னுட்டு கன்னா பின்னான்னு பேசப்படாது...''
  ""அப்புறம் ஏன் இப்டித் திரியுது? கடையை மாத்துங்கன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க எவ்வளவுதான் நஷ்டப்படுறதாம்?''
  அவள் அலுப்பு தாங்க முடியாததாயிருந்தது. அவள் அப்படி அழுத்தி அழுத்திச் சொல்லும்போதெல்லாம் அந்தக் கிழவர் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கிறது இவனுக்கு. அவர் முகம் மனதில் நிழலாடியது.
  ""ஒண்ணு செய்யேன்... இப்டித் திரியறன்னிக்கெல்லாம் திரிஞ்ச பாலை பேசாமத் திரட்டுப்பாலாப் பண்ணிடேன்... வீட்டுக்கும் ஸ்வீட் ஆச்சு... ஆளுக வந்தா உபசரிக்கிறதுக்கும் ஏதுவா இருக்கும்''
  ""உங்களுக்கு எல்லாமும் விளையாட்டா இருக்கு... வேறென்ன...? மாடா உழைக்கிறாளேங்கிற இரக்கம் இருந்தாத்தானே? இன்னும் திரட்டுப்பால் வேறே
  பண்ணணுமாக்கும் அய்யாவுக்கு.... நாக்கு இழுக்குதோ?'' - அவளின் கோபம் ரமணனுக்கு சிரிப்பைத்தான் உண்டாக்கியது. சமயங்களில் அவளைச் சீண்டுவதில் ஒரு குஷி.
  ""நான் நொட்டாப் போட்டுட்டு வழிச்சுத் திங்கிறதுக்கா கேட்கிறேன்? வீட்டுக்கு வர்ற விருந்தினர்களுக்கு ஆகுமேன்னு சொன்னேன்... இஷ்டம்னா செய்யி... இல்லன்னா விடு... அவ்வளவுதானே... அதுக்கு எதுக்கு இத்தனை ஆக்ரோஷம்? கோபம்?''
  பேச்சு அத்தோடு நின்று போனது. அவளுக்குத் தெரியும்... தாத்தா கடையில் போய்த்தான் பால் வாங்குகிறான் என்று. என்ன சொன்னாலும் அதை மாற்றப் போவதில்லை. மானசீகத் தந்தைக்கான ஆதரவை அத்தனை சுலபமாய் விலக்கிக் கொள்ள முடியுமா? நெஞ்சில் ஈரத்தோடா பேசுகிறாள் இவள்?
  "சக்கு....சக்கு....சக்கு...' வெளியே செருப்புத் தேயும் சத்தம். சின்னச் சின்னத் தப்படிகள் வைத்தால்தான் அதுவும் பாதத்தை எடுத்து எடுத்து வைக்காமல், இழுத்து இழுத்துப் பதித் தால்தான் அந்த ரப்பர் செருப்பு நடையில் அப்படிச் சத்தம் வரும். துல்லியமாய் அந்த ஒலி. அவனை ஈர்த்த ஒலி. அவன் தந்தையை நினைவுபடுத்திய ஆதர்ச ஒலி. ஆனால் காலம் பூராவும் செருப்பின்றி நடந்த காலுக்குச் சொந்தக்காரர் அந்தத் தியாகி.
  ஆர்வத்தோடு மீண்டும் பால்கனிப் பக்கம் போய் தலையை வெளியே நீட்டிப் பார்த்தான். அவர்தான். அவரேதான். தினமும் அந்த நேரத்தில், ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் நாலரை மணி விடி காலைப் பொழுதில் கருமமே கண்ணாயினார் என்று போய்க் கொண்டிருப்பார். எண்பதைத் தாண்டிய வயது.
  ""எனக்கு என்னா வயசாகும்னு நினைக்கிறீங்க? எண்பத்தியேழாக்கும்''- என்ன ஓர் உற்சாகம் அந்தக் குரலில்? மடித்துக் கட்டிய வேட்டி... குளிருக்கு மறைத்த தலைப்பாகை... கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு... சட்டை கூடப் போடாத தளர்ந்து தொய்ந்த வெற்றுடம்பு. அடிக்கும் குளிருக்கு ஒரு பனியன் கூடவா போடலை? காதை மறைத்தால் போதுமா? பனி இறங்காதா? நாள் தவறினாலும், ஆள் தவறாமல், நேரம் தவறாமல் இரண்டு ப்ளாஸ்டிக் டப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாகக் கேரியரில் வைத்துக் கட்டி அது நிறையப் பால் பாக்கெட்டுகளோடு அந்தப் பழைய சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீடு வீடாகச் சென்று பால் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் சோர்வடையாத மனசு. கடை வைத்திருக்கும் மகனுக்குச் செய்யும் உதவி. நாம செய்யாம வேறே யாரு செய்றது? சம்பளத்துக்கு ஆளா போட முடியும்? கட்டுபடியாக வேணாம்?
  எதிர் அபார்ட்மென்டில் மாடியிலிருந்து தொங்கிய கயிற்றில் ஒரு மஞ்சள் பை கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கிறது. அதில் சென்று ரெண்டு பாக்கெட்டுகளைப் போடுகிறார். வாசலில் வீதியில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைத்திருக்கும் அந்த சைக்கிள். இவர் உள்ளே போகும் நேரத்தில் எவனாவது அதைத் தள்ளிக்கொண்டு போய்விட்டால்? அல்லது நாலு பால் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு நழுவி விட்டால்? மனம் துணுக்குறுகிறது.
  அந்த நேரத்தில் எவன் எழுகிறான். அவர் சைக்கிளைத் தள்ளும்போது கூடவே அந்தத் தெரு நாய்கள் தினமும் தவறாமல் அவர் பின்னே அமைதியாய்ப் பின் தொடர்கின்றன. அவருக்குக் காவலாய், பாதுகாப்பாய்! ஒரு வேளை அவற்றிற்கு இருக்கும் அறிவு கூட நம் மனிதர்களுக்கு இல்லாமற் போயிற்றோ? இல்லையென்றால் மனசு ஏன் இப்படியெல்லாம் நினைக்க வேண்டும்?
  ஐந்து மணிக்கு மேல் ஒரு பங்களாக்காரர் தன் உயர் ஜாதி நாயைச் சங்கிலியிட்டு நடத்திக் கூட்டி வருவாரே... அப்பொழுது இவை அதைப் பார்த்துக் குலைத்துத் தள்ளுமே. அந்தத் தெரு கடக்கும்வரை விடவே விடாதே... எங்கள் தெருவுக்கு எப்படி நீ வரப்போச்சு? அதே நாய்கள்தானே இப்போது இந்தத் தாத்தாவுக்குத் துணையாய்ச் செல்கின்றன? பிராணிகளுக்கு ஐந்தறிவு என்று எவன் சொன்னான்? சளைக்காமல் வீடு வீடாய் உருட்டி நகர்ந்து... நாள் தவறாமல், வாரம் தவறாமல், மாதம் தவறாமல், வருடம் தவறாமல்... அந்தப் பால் தாத்தா போய்க் கொண்டேயிருக்கிறார். என்னே சளைக்காத உழைப்பு இந்த வயதிலும்? என் கடன் பணி செய்து கிடப்பதே!
  அவரைப் பார்க்கும்போதெல்லாம், ஏன்... பார்த்த நாளிலிருந்தே இவனுக்குத் தன் தந்தையின் நினைவு வந்து கொண்டேயிருக்கிறது. அவரும் இப்படித்தானே? ஐம்பதாண்டுகளுக்கும் குறையாமல் இந்த விடிகாலை நாலு மணிக்கு எழுந்தவர்தானே... அவரும்? எழுபத்தைந்து வயதுக்கும் மேல் உழைத்து உழைத்து ஓடாய்ப் போனவர்தானே? பக்கவாதம் வந்ததால்தானே படுத்தார்... இல்லையெனில் ஆளை இருத்த முடியுமா?
  திண்ணையில், வாசலில், கட்டில்போட்டு என்று தெரு வழியெல்லாம் மனித ஜீவன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் லயித்திருக்கும்போது, எதையும் மனதில் கொள்ளாமல், எந்த ஏக்கத்திற்கும் ஆளாகாமல், எந்த மனச் சோர்வுக்கும், சலிப்புக்கும் ஆட்படாமல், ஒரே சித்தமாய், "" கதவச் சாத்திக்கிறியா... நான் கிளம்பறேன்'' - என்று அம்மாவிடம் சொல்லி விட்டு, நேரே ஆற்றங்கரைக்குச் சென்று காலைக் கடன்களைக் கழித்து விட்டு, ஓடுகால் நடுவில் கிழக்கே பார்த்து நின்று சூரிய நமஸ்காரம் செய்து கும்பிட்டு விட்டு, விடுவிடுவென்று நடையை எட்டிப் போட்டு ஓட்டலுக்குள் சென்று முதல் ஆளாய் தபதபவென்று எரியும் அந்த பகாசுர அடுப்பைப் பற்ற வைப்பாரே!
  எத்தனை ஆண்டுகள் அந்தப் பெரு நெருப்பின் முன் நின்று வெந்தார்? ஏழு குழந்தைகளை ஊனை உருக்கி எவ்வளவு கஷ்டப்பட்டு ஆளாக்கினார்? தன் கரண்டி பிடிக்கும் உத்தியோகம் தன் பிள்ளைகளுக்கும் வாய்த்து விடக் கூடாது என்று எத்தனை மன உறுதியோடு நின்றார்? மறக்க முடியுமா, மறக்க இயலுமா அந்தத் தியாகத்தை? மறந்தால் அடுக்குமா?
  அதோ பால் தாத்தா போய்க் கொண்டிருக்கிறார். இந்த உலகம் இன்னும் இம்மாதிரித் தியாக சீலர்களால்தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.
  ""தாத்தா...நாளைலேர்ந்து எனக்கும் வீட்டு வாசல்லயே கொடுத்திடுங்க... பாக்கெட்டுக்கு இருபது ரூபாதானே... வீடு கொண்டு வந்து போட... ரெண்டுக்கு நாற்பது ரூபா நான் கொடுத்திடுறேன்... சரியா?... நீங்க வர்றபோது நானும் எழுந்திரிச்சிருப்பேன். நானே கீழே வந்து வாங்கிக்கிடுறேன்... ஓ.கே.யா?'' அவர் முகத்தில் மகிழ்ச்சி. அந்தப் பொக்கை வாய்ச் சிரிப்பு இவனை ஆட்கொள்கிறது.
  மறுநாள் காலை நாலரை... மணி நெருங்கும் நேரம்...
  ""என்ன... தாத்தாட்ட ஏற்பாடு பண்ணிட்டீங்களாக்கும்? நீங்க கீழே விடுவிடுன்னு ஓடின போதே நானும் முழிச்சிட்டேன்... தூக்கம் கலைஞ்சு போச்சு... போகட்டும் பாவம்... இந்த வயசுலயும் இப்டி கர்ம சிரத்தையாய் உழைக்கிறாரே... யார் இருக்கா இப்டி இந்தக் காலத்துலே? அதுக்கே எவ்வளவு வேணாலும் கொடுக்கலாம். சொல்லப்போனா இந்த ஏரியா ஜனங்கள் பூராவும் அவரை ஆதரிக்கணும். அதுதான் அவர் உழைப்பை மதிக்கிற தன்மை. அப்பத்தான் நல்ல ஜனங்கள்னு அர்த்தம். பத்து ரூபா சேர்த்தே ஐம்பதாக் கொடுத்திடுங்க... தப்பில்லே...
  ""முதல்லயே சொல்லியிருக்கலாம் இவர்ட்ட... பரவால்ல...இப்பவாவது தோணிச்சே மனசுல''-
  கூறிக் கொண்டே நான் கொடுத்த பால் பாக்கெட்டை வாங்கி ஃப்ரிட்ஜில் வைக்கப் போன உமாவை வியப்பு தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
  அவளின் விடிகாலைப் பேச்சு என்னைக் குளிர்
  வித்தது.
  அது நாள் வரை அவருடைய கடைக்குச் சென்று வாங்கிக் கொண்டிருந்த பால் சமயங்களில் திரிந்ததைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையே! அது எல்லார்க்கும் சகஜம்தான் என்று விட்டு விட்டாளோ?
  ""கரன்ட் ஃப்ளக்சுவேஷன் இருக்கு மாமி இந்த ஏரியாவுல... ஃபிரிட்ஜ் சரியா கூல் ஆகுறதில்லை... கவனிச்சிருக்க மாட்டேள்... அதனால கூட இருக்கலாம்... எனக்கும் ரெண்டு பாக்கெட் அப்டி ஆகியிருக்காக்கும்... உங்க ஆத்துக்காரரைக் குறை சொல்லாதீங்கோ... பாவம்...எத்தனைவாட்டி சலிக்காம கடை கண்ணிக்குன்னு அலையறார்... எங்காத்து மாமா கூட இத்தனை உதவியாயிருக்கிறதில்லை...'' என்றாள் பக்கத்து ஆத்து மாமி உமாவிடம் நேத்து மாலை.
  அந்தத் தெளிவோ? மூணாமத்த ஆள் சொன்னாத்தான் நம்ப அருமை தெரியும் போல்ருக்கு.... கிரகம்டா சாமி!
  கற்பூர புத்தி... பக்கத்தாத்து மாமி சொன்னதும் கப்பென்று பிடித்துக் கொண்டுவிட்டாளே... திரியாத தெளிந்த மனசு என் அன்பு மனைவி உமாவுக்கு... அதற்குப் பின் வாயே திறக்கவேயில்லையே... சார்?


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp