தேநீர் விற்கும் வழக்கறிஞர்!

கரோனா  வைரஸ் பாதிப்பு... அதனால்   வந்த தொழில் முடக்கங்கள்...   படித்தவர்கள்,   படிக்காதவர்கள், வேலை பார்ப்பவர்கள், வேலை இழந்தவர்களை பல கோணங்களில் பாதித்திருக்கிறது.
தேநீர் விற்கும் வழக்கறிஞர்!

கரோனா வைரஸ் பாதிப்பு... அதனால் வந்த தொழில் முடக்கங்கள்...

படித்தவர்கள், படிக்காதவர்கள், வேலை பார்ப்பவர்கள், வேலை இழந்தவர்களை பல கோணங்களில் பாதித்திருக்கிறது. சுய தொழில் செய்பவர்கள், அன்றாடம் கூலிக்கு வேலை செய்பவர்களை மிகவும் பாதித்திருக்கிறது.

ஈரோடு நகரின் திருநகர் காலனி, சம்பந்தம் நகர் பகுதியில் ஒரு பெரியவர் வக்கீல் கோட் அணிந்து சைக்கிளில் சென்று டீ விற்றுக் கொண்டிருந்தார். அப்படி டீ விற்றவர், உண்மையில் ஒரு வழக்கறிஞர் என்று தெரிந்ததும் ஈரோடு நகரம் ஒரு கணம் திடுக்கிட்டுத்தான் போனது. செய்தி வைரலாக சகல இந்திய ஊடகங்களையும் தாண்டி, "தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழிலும் செய்தி வெளியானது.

69 வயது வழக்கறிஞர் செய்யது ஹாரூன், 43 ஆண்டுகளாக ஈரோடு நீதி மன்றம், சென்னை உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் வரை வழக்குகள் நடத்திய அனுபவமிக்கவர். கரோனாவின் பாதிப்பால், இன்று சைக்கிளில் சென்று தேநீர் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்:

"என்னாங்க... 43 வருஷம் வக்கீலா தொழில் நடத்தியிருக்கீங்க... உங்கக் கிட்ட பணம் இல்லை... அதனால பொருளாதாரப் பிரச்னை என்றால் நம்புகிற மாதிரியில்லையே' என்று உங்களைப் போலவே பலரும் கேட்கிறாங்க. ஆனால் அதுதான் உண்மை.

சைக்கிளில் போய் தேநீர் விற்றது கரோனா காலத்தில் எனது பொருளாதார நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக மட்டுமல்ல... என்னைப் போல் சுயமாக பல தொழில் செய்துவந்த பெரும்பாலானவர்கள் வருமானமின்றித் தவிக்கிறார்கள். அதை வெளியே சொல்ல அவர்கள் தயங்குகிறார்கள். வெளியே சொன்னாலும் யார் உதவுவார்கள் என்ற சந்தேகத்தில் அவர்கள் மெளனமாக இருக்கிறார்கள். வேறு தொழில்கள் செய்ய முற்படுகிறார்கள்.

"மூடப்பட்டிருக்கும் நீதிமன்றங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் திறக்கப்பட வேண்டும்', "வருமானம் இல்லாமல் தவிக்கும் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் நான் சைக்கிளில் பொருத்தியிருக்கிறேன்.

எனது சொந்த ஊர் கோவை. 1967 -இல் ஈரோட்டில் நிரந்தரமாக குடியேறினோம். தொடக்கத்தில் ஈரோட்டில் வழக்குகள் நடத்தினேன். 2000 -இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் தொடங்கினேன். எனக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். சம்பாதித்தது எல்லாம் பிள்ளைகளை வளர்ப்பதில் படிக்க வைப்பதில் திருமணம் செய்து வைத்ததில் செலவாகிவிட்டது. சென்ற மார்ச் 22 அன்று சென்னையிலிருந்து வழக்கு நடத்த ஈரோடு வந்தேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஈரோட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. சென்னையில் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. வழக்கு தொழில் நடத்த முடியாமல் போனது. போக்குவரத்து இல்லாததால் சென்னைக்குப் போகவும் முடியாமல் போனது.

வங்கியில் என் கணக்கில் இருந்த தொகையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போனது. மினிமம் பேலன்ஸ் வங்கிக் கணக்கில் வைக்கவில்லை என்று மெúஸஜ் வந்து கொண்டிருந்தது. நான் நொந்து போனேன். இந்த சூழ்நிலைகள்தான் என்னைத் தேநீர் விற்கத் தள்ளிவிட்டன. முதலில் கோட் போட்டு தேநீர் விற்றேன். தேநீர் விற்க, சைக்கிள் மிதிக்க இடைஞ்சலாக இருந்ததால் கோட் அணிவதைக் குறைத்துக் கொண்டேன்.

முதலில் காய்கறிக் கடை தொடங்கலாம் என்று நினைத்தேன். காய்கறி விற்பவரிடம் பேசிப் பார்த்தேன். அதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தன. எனக்கு சமைக்க வரும். பிரியாணி சுவையாகச் சமைப்பேன். டீயும் அருமையாகத் தயாரிப்பேன். டீ தயாரித்து விற்பதில் நஷ்டம் இருக்காது என்று தெரிந்து கொண்டேன். முதலில் மோட்டார் சைக்கிளில் போய் விற்றேன். பெட்ரோல் விலை அதிகம் என்பதால் லாபம் கிடைக்கவில்லை. அதனால் வீட்டிலிருந்த பழைய சைக்கிளில் டீ கேனை வைத்து விற்பனையைத் தொடங்கினேன். செலவு போக 500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. விரைவில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கலாம் என்றும் முடிவு செய்திருக்கிறேன்'' என்கிறார் வழக்கறிஞர் செய்யது ஹாரூன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com