சொர்க்க வாசம்

சொர்க்க வாசம்

அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட தாளிக்கை மணம் வீடு முழுவதும் வந்து வியாபித்துக் கொண்டிருந்தது. 

அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட தாளிக்கை மணம் வீடு முழுவதும் வந்து வியாபித்துக் கொண்டிருந்தது.

""உன்னோட சமையல் வாசனை எல்லாரையும் அப்பாலத் தூக்கீட்டுப் போயிடும் போலிருக்கே'' என்று தன் மனைவி மங்களத்தை நகைச்சுவை செறியப் புகழ்ந்து தள்ளினான் ராஜன்.

""ஆமாம், எங்கத் தூக்கீட்டுப் போனாலும், திரும்பவும் இந்த வாடகை வீட்டுலதானே நாம வந்து விழப்போறோம்'' என்று கூறியவாறு கொஞ்ச நேரம் கடுகாய்ப் பொரிந்து தள்ளினாள் அவள்.

""ஏங்க... எத்தனை நாளைக்கு இப்படி நல்லமனை... நல்லமனைன்னு அலைவீங்க. நீங்க அலைஞ்சு நல்ல மனையாப் பாத்து வாங்குறதுக்குள்ளே நானும் கெழவியாயிடுவேன், ஒங்களுக்கும் தலை நரைச்சுப் போயிடும்'' என்று தொடர்ந்தாள் அவள்.

""எல்லாத்துக்கும் அவசரப் படுறவ நீ "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு' சொல்லுவாங்க . அதே போல, வீடுகட்டுறதுக்கு நல்ல மனையா அமையிறதும் இறைவன் கொடுத்த வரம் தானுங்கறதையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ மங்களம்'' என்று அறிவுரையால் அர்ச்சனை செய்தான் அவன்.

""ஜவுளிக் கடைக்குப் போயி ஒரு சேலை எடுக்கறதுக்குள்ள சோசியக் கிளி புரட்டுறாப் போல, அம்பது சேலைங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தப்புறம், கடைசியில"இது என்னோட மனசுக்குப் புடிக்கலே... அடுத்த வாரம் புது ஸ்டாக்கு வந்தப்பொறம், புடிச்ச டிசைனா எடுத்துக்கிறேன்னு' சேல்ஸ் மேன்கிட்டே வாய் கூசாமச் சொல்லிட்டுக் கடையை விட்டு நழுவி வெளியே வருவியே... அதை நெனச்சுப் பாரு. மனசுக்குத் திருப்தி படலேன்னு தானே நீ, அப்படிச் செய்வே'' என்று கூறி மங்களத்தைச் சிந்திக்க வைக்க முயன்றான் அவன்.

அந்தச் சிந்தனைச் சிதறல்கள் அவளது காதுகளுக்குள் நுழைவதற்குள்,""நீங்களும் தரகருமா வண்டியில நாலுமாசமா அலையா அலையிறீங்க. அதுக்காக வண்டிக்குப் பெட்ரோல் போட்டே... மனை வாங்குற காசுல பாதிக்கு மேல செலவாயிடும் போல இருக்கு. இனிமே, அது சரியில்லே... இது சரியில்லே... ன்னு ஒவ்வொன்னா கழிச்சுக் கட்டிக் கிட்டே போவாதீங்க'' என்ற கால தேச வர்த்தமானங்களை எச்சரிக்கை வலையாகப் பின்னிக் கணவன் மீது வீசினாள். அதில் சிக்காத அவன் சுமூகச் சூழலுக்கு மாற முயன்றான்.

தன் கணவர் எதிலும் நிதானம் தவறாதவர் என்பது கல்யாணமான ஒன்பது வருடமாக அவளுக்குத் தெரிந்ததுதான். ""கூட்டத்துல முண்டியடிச்சுப் புகுந்து பஸ்ஸூ{ல ஏறமாட்டீங்க... "ச்சோ' ன்னு கனத்த மழை பெய்யிறப்பக் கூட நிதானமாகத்தான் ரோட்டோரமா நடப்பீங்க. கொஞ்சம் வேகமாத்தா(ன்) வாங்களேன்னா,"ஏன் எங்கயாவது வழுக்கிச் குப்புற அடிச்சி விழச் சொல்றியா?ன்னு கேட்டுத் தத்துவம் பேசுவீங்க'' என்றெல்லாம் அவனது குணங்களைப் பலபடியெடுத்துப் பேசிக் கொண்டே போனாள் மங்களம்.

""வீட்டு மனைன்னா... அது நல்ல நகர்ல இருக்கணும், கிரவுண்டு வாட்டர் லெவல் நல்லாருக்கணும்,"வரும்... ஆனா...வராது'ங்கறாப்புல, மனை பஸ் ஸ்டாப்புக்கு நடைதூரத்துல இருக்கணும், ஆனா, அதுக்காவ ரொம்பப் பக்கத்துலேயும் இருக்கப்புடாது. அதிக இரைச்சல் நிம்மதியக் கெடுத்துடும். மழைக்காலத்துல வீட்டச்சுத்தித் தண்ணி நிக்கக் கூடாது'' என்று அவன் கூற்றில் வைத்துக் கூறித் தன் பேச்சுக்குச் சற்று "வெயிட்டிங்' கொடுத்தாள் அவள்.

கண்ணுக்கு எட்டுற தூரத்துல கோயில் குளமுன்னு இருக்கணும். நம்மப் "பிரைவேசி' யைக் குறைக்கிற மாதிரி "பிளே கிரவுண்டு' பக்கத்துல இருக்கக் கூடாது. "நல்ல லேண்ட் மார்க்குப் பக்கத்துல இருக்கணும்' என்பன வெல்லாம் ராஜனின் நெடுநாளைய மனக் கனவு - இல்லை அவனது மனைக் கனவு. அவன் அந்தக் கனவை வலிய கலைத்துக் கொண்டு, அந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்வதாக இல்லை.

ராஜன் கொஞ்ச நாள் மனைவி, தன் பிள்ளைகள் என்று குடும்ப சகிதமாக மனை தேடிச் சென்று வந்தான். நான்கைந்து தடவைக்குப் பிறகு,""அம்மா... இனிமேல் நாங்க உங்களோட வர்றதா இல்லே... வீட்டிலேயே விளையாடிக்கிட்டு இருந்துக்குறோம்'' என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்கள் பிள்ளைகள் இருவரும்.

நோயாளி சாப்பிடும் மருந்து மாத்திரைகளைப் போல, சாப்பாட்டுக்கு முன் அல்லது சாப்பாட்டுக்குப் பின் என்கிற வகையில் மனை பார்க்கச் செல்லும் தமது பயணத் திட்டத்தை அமைத்துக் கொண்டனர் அத்தம்பதியர்.

இப்படியாக ஒரு பதினைந்து நாட்கள் ஓடியிருக்கும். ஒருநாள் தரகரிடமிருந்து ஃபோன் கால் வர, செல் போனை எடுத்துக் காதில் ஒற்றினான் அவன். சரி சரி... என்று பதில் கூறி முடித்த அடுத்த அரைமணியில் தரகர் சொன்ன மனை இருக்கும் பகுதிக்கு மனைவியுடன் சென்று சேர்ந்தான். அவன் எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் தரகர் காட்டிய அந்த மனைக்குப் பொருந்தியிருந்தது.

""ஏங்க... இது பரவாயில்லைங்க. தெற்குப் பார்த்த பாத்தமனை, பக்கத்துல கோயிலு, எதுர்க்க கட்டி முடிச்சுக் குடியேறின வீடுங்க, தண்ணீர் டேங்க்கு, பத்து வீடு தள்ளிப் பலசரக்குக்கடை... இதையெல்லாம் விட வேறென்னங்க வேணும்?'' என்ற தனது அபிப்ராயத்தை வார்த்தைகளால் உதிர்த்தாள் மங்களம்.

ஆனால் ராஜனோ,""கொஞ்சம் பொறுமையாய் இரு! என்னக் கொஞ்சம் சிந்திக்கவுடு'' என்றான். தரகர் உள்ளிட்ட மூவரும் அருகிலிருந்த வேப்ப மர நிழலில் அமர்ந்தனர்.

வெள்ளை மேக ஓட்டத்தோடு தோன்றிய நீலவண்ண வானத்தைப் பார்ப்பதும், முகத்தை மூன்று திசைகளுக்கும் திருப்புவதுமாகவுமிருந்தான் ராஜன். அப்பொழுது மங்களம் சற்று முகம் வாடியிருந்ததற்குக் காரணம், தன் கணவர் இப்படி இழுவையாய் இருக்கிறாரே என்பது தான். தரகர் அலட்டிக் கொள்ளவேயில்லை. அவருக்கென்ன... அலைய அலைய,"அலவன்ஸ்'தானே!

""ஆரு அந்த வேப்பமரத்தடியில? அது ஓங்க அப்பன் வூட்டு மரமா? மரியாதயா அங்கேருந்து ஏந்திரிச்சுப் போயிடுங்க இல்லேன்னா வகுந்துபுடுவேன்... வகுந்து'' என்று ஓங்கியொலித்தது அந்த மனையின் எதிர்வீட்டு மாடி ஜன்னலின் வழியாக வந்த நடுத்தர வயதுப் பெண்ணின் அதட்டல். மூவரும் சற்று அதிர்ந்தனர் திடீரென்று இடிசப்தம் கேட்ட குழந்தைகளைப் போல.

""நீங்க ஒன்னும் கோவிச்சுக்காதீங்க. அந்த அம்மா கொஞ்சம் ஒடம்பு சரியில்லாதவங்க... இப்படித்தா(ன்) பகல் பூராவும் கத்திக் கிட்டே இருப்பாங்க. ராத்திரியில அசந்து தூங்கிடுவாங்க. கொஞ்ச நாள்ல கொணமடஞ்சிடுவாங்கன்னு டாக்டர் சொல்லி நாலஞ்சு வருஷமாச்சு, இன்னும் விடிவுகாலம் அவங்களுக்கும் வரல, எனக்கும் வரல'' என்று, மன நலம் பாதிக்கப்பட்ட தன் மாமியாரைப் பற்றி அணுகி வந்து சொன்னாள் அந்த மாடிவீட்டு மருமகள்.

இதைக் கேட்டராஜன்,"வெள்ளத்தில் சிக்கி மீண்ட மாற்றுத் திறனாளி போலத்' தன்னை உணர்ந்தான். இந்த மனையையே பேசி முடித்துவிடலாம் என்று குதியாய்க் குதித்த மங்களமும் சற்று அசைவற்றுப் போனாள்.

ராஜனின் மனை தேடுதலிலும் "ஓர் அர்த்தம் இருக்கும் போல' என்பதை உணர்ந்து கொண்டுவிட்டார் தரகர்.""வாங்க போவலாம்; கவலப்படாதீங்க. எல்லாமே நல்லதுக்குத் தான். ஓங்க ரெண்டு பேரோட நல்ல மனசு போல நல்லதாப் பாத்து சீக்கிரம் வாங்கி முடிச்சிடுவோம்'' என்ற அவரது ஆறுதல் வார்த்தைகள் அன்றைய தின "மனைபார்க்கும் படலத்திற்கான‘ முடிவுரையாய் அமைந்தது.

எப்பொழுதும் போல் விடிந்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை.

""இன்னிக்கு நீங்க நரி மொகத்துல முழிச்சிருக்கீங்க சார்! நல்ல நகர்ல ஒங்க மனசுக்கு ஏத்த மாதிரி பக்கத்துப் பக்கத்துல ரெண்டு நல்ல மனைங்க இருக்குது. சதுர அடிக்கு ரூவா கொஞ்சங் கூடத்தா(ன்) போவும். இருந்தாலும் பரவாயில்லை. நல்ல சான்ஸ்ஸ உட்டுடக்கூடாது. உடனே வந்துடுங்க, வேற யாரும் முந்திக்காம அதுல ஒன்ன முடிச்சிருவோம்'' என்ற தரகரின் "செல்'வாக்கு ராஜனுக்கு அசரீரி போல் இருந்தது.

கலைந்து போகாத மனைக் கனவைத் தன் மனத்திலும், மனைத் தேர்வால் தளர்ந்திருந்த தன் மனைவியைத் தனது வண்டியிலும் ஏந்தியவாறு தரகர் குறிப்பிட்டிருந்த அந்தப் புதிய நகருக்குச் சென்று சேர்ந்தான் ராஜன். வண்ணங்கள் மங்காத புதிய வீடுகள். தெருவிளக்குகளும், மரங்களும் வரிசை கட்டியிருந்தன. தொண்ணூறு சதவிகித மனநிறைவால்,நூறு சதவிகித பூரிப்படைந்தான் அவன். தரகரின் சிரித்த முக வரவேற்புடன் அந்த மனைகளுக்குள்ளான பிரவேசம் நடந்தது.

அதில் மொசுமொசுவென வளர்ந்திருந்த புற்கள் நல்லதொரு கிரிக்கெட் மைதானத்தைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தின. வசதியான தம்பதியர்க்குப் பிறந்து வளரும் ரெட்டைப் பெண் குழந்தைகளைப் போல வளமையாய்த் தோன்றின, கட்டிக் குடியேறியிருந்த இரு பதிய வீடுகளுக்கு இடையே இருந்த அந்த இரட்டை மனைகள்.

""ஏங்க இந்த மனைங்க ரெண்டுமே என்னோட மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. இதுல ஒன்ன வாங்கிடலாம். ஆனா, நான் எப்போதும் போல அவசரப்பட மாட்டேங்க, ஒங்க இஷ்டம்'' என்று பவ்யமாகக் கூறினாள் மங்களம்.
அங்கு வந்த அடுத்தத் தெரு முதியவர் ஒருவர்,""இந்தத் தெரு ரொம்ப நல்ல தெருவுங்க'' என்று நற்சான்றும் அளிக்க, இந்த இரு மனைகளுள் ஒன்றுதான் தனக்கு என்று மனத்தில் முடிவு செய்துவிட்டான் ராஜன். இரண்டில் ஒன்று என்பது உறுதி. ஆனால், அவற்றுள் எந்த ஒன்று என்பதில்தான் அவனுக்குத் தெளிவு பிறக்கவில்லை.

தனது இருவிரல்களில் ஒவ்வொன்றை ஒவ்வொரு மனைக்கு மனத்தால் உரித்தாக்கிக் கொண்ட மங்களம்,""ஏங்க... இந்த ரெண்டு வெரல்கள்ல ஒன்னத் தொடுங்களேன்'' என்று கூறித் தன் கணவனெதிரே வலது கை ஆட்காட்டி மற்றும் நடுவிரல்களை நீட்டினாள். ஆனால், அந்தப் பரீட்சையை அவன் விரும்பவில்லை என்பதை மனைவிக்கு நாசூக்காக உணர்த்தினான்.

""ஏன் சார்! பூவா? தலையா? போட்டுப் பார்த்து செலக்ட் பண்ணிடுவோமா?'' எனக்கேட்டுத் தரகர் நீட்டிய இரண்டு ரூபாய் நாணயத்தை வாங்காமல் ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தான் ராஜன். இரண்டு நிமிடம் அங்கு மெளனம் நிலவியது. வெயில் நேரத்திலும் அங்கு வீசிய இதமான காற்று, அவனது சிந்தனையைச் சற்றுத் தூண்டியது. உடனே செயலிலும் இறங்கினான்.

சொற்ப அளவில் நீருடன் தன் கைவசமிகுந்த நெகிழி பாட்டில்கள் இரண்டினைக் கையில் எடுத்தான். அவற்றைக்குப்புறக் கவிழ்த்து நீர் முழுக்கக் கீழே கொட்டினான். தரையிலிருந்து இருவிரல்களளவு மணலை எடுத்து, அவ்விரண்டனுள்ளும் உட்புறமாகப் படியுமாறு தூவினான் ராஜன். வியப்புடன் இதைக் கவனித்த தன் மனைவியிடமும் தரகரிடமும் அவன் வேறொன்றும் சொல்லிக் கொள்ளவில்லை.

""தரகரே! தயவு செஞ்சு எனக்காக நீங்க போயி இந்த வலதுபுற மனைக்குப் பக்கத்துல இருக்குற வீட்டுக்காரங்கக் கிட்ட இந்த பாட்டிலில் தண்ணி வாங்கிட்டு வாங்க'' என்று சொல்லி அனுப்பினான் ராஜன்.

அதேபோல, மற்றொரு பாட்டிலை எடுத்து மனைவி மங்களத்திடம் கொடுத்து, ""இந்தா இதுல இடதுபுற மனைக்குப் பக்கத்து வீட்டுல கேட்டுத் தண்ணி வாங்கிட்டு வா'' என்று சொல்லியனுப்பினான். அவனது அன்புக் கட்டளையை ஏற்றுச் சென்றனர் அந்த இருவரும்.

தரகர் அணுகித் தன் பாட்டிலை நீட்டித் தண்ணீர் கேட்க, அந்த வீட்டுக்காரர்,""இதோ தண்ணி தர்றேன்'' என்று சொல்லி அதனை உள்ளே வாங்கிச் சென்று, சுத்தமாகக் கழுவி, நீர் நிரப்பிக்கொண்டு வந்து தந்தார். அத்துடன், ""இது போதலைன்னா இன்னும் கேளுங்க தர்றேன். மனை பாக்க வந்திருக்கீங்க போலயிருக்கு'' என்றார் புன்முறுவலுடன்."ஆமாம்' என்ற பதிலைக் கொடுத்து விட்டுத் தண்ணீரைப் பெற்று வந்தார் தரகர்.

மங்களம் அணுகிய மற்றொரு வீட்டின் உரிமையாளர், அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு, அவள் தண்ணீர் கேட்டு நீட்டிய பாட்டிலைத் தன் கையில் வாங்காமலேயே உள்ளே சென்று, ஒரு சொம்பில் கொண்டு வந்த தண்ணீரை, பாட்டிலை நீட்டச் சொல்லி, மேலும் கீழும் வழியுமாறு வேண்டா வெறுப்பாக "எவன் வீட்டு இழவோ பாய்போட்டு அழு' என்றாற் போல, அதில் ஊற்றினார். வேறு எந்தப் பேச்சுக்கும் இடம் தராமல் உள்ளே சென்று மறைந்தார்.

இந்த இருவேறுபட்ட செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்த ராஜன், இவற்றுள் எந்த மனை தனக்கேற்ற "நல்ல மனை' என்று முடிவு செய்து விட்டான் இப்பொழுது.

தண்ணீர் பாட்டில்களுடன் திரும்பிய அந்த இருவரிடமும் சொன்னான், "வலதுபுறமுள்ள இந்த மனையைத்தான் நான் வாங்கப் போகிறேன்' என்று.

தன்னை வியந்து பார்த்த தன்மனைவியிடமும் தரகரிடமும்,""மனைக்குப் பக்கத்துல இருக்கிற ரெண்டு வீட்டுக்காரங்களின் மனநிலையைச் சோதித்துப் பார்க்கத்தான் ஒவ்வொரு அழுக்குப் பாட்டிலையும் ஒங்க ஒவ்வொருத்தரு கிட்டேயும் கொடுத்து அந்த வீடுகள்லேயிருந்து தண்ணீர் வாங்கி வர அனுப்பினேன்'' என்றான் ராஜன். அவன் மேலும் தந்த விளக்கம் சுவாரசியமானது.

""பாட்டிலைத் தன் கையில் வாங்குவதே ஒரு தேவையில்லாத விஷயம்னு நெனைச்சு தண்டத்துக்குத் தண்ணி ஊத்துன இடதுபுற வீட்டுக்காரன் நிச்சயம் ஒரு சுயநலவாதியாகத் தான் இருப்பான். அப்படிப்பட்ட சுயநலவாதியின் அருகில் வீடுகட்டி வாழறது என்பது நரகத்துல இருக்கறதுக்குச் சமம்.

ஆனால், பாட்டில் அழுக்கா இருக்குன்னு தெரிஞ்சிருந்தும் அதைத் தன் வீட்டுக்குள்ளே எடுத்துட்டுப்போயி, கழுவி, அதுல தண்ணீர் நிரப்பிக்கிட்டுத் தந்தவரு... நிச்சயம் பிறரது இன்ப துன்பத்துல பங்கெடுத்துக்குற நல்ல மனுஷனாத்தான் இருக்க முடியும்.

சுயநலமில்லாத அந்த வீட்டுக்காரருக்குப் பக்கத்துல நாம மனை வாங்கி வீடுகட்டி, வாழ்நாள் முழுக்கக் குடியிருக்கப் போவது, "சொர்க்கவாசத்துக்குச்'சமம்'' என்றான் ராஜன். இதைக் கேட்ட தரகர் அசந்து போனார் என்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. மனநிறைவு தரும் மனையை வாங்குவதில் தன் கணவருக்கு இருந்த தெளிந்த சிந்தனையை எண்ணிய மங்களம் முகம் மலர்ந்தாள்.

மனைக்கான விலை கணக்கிடப்பட்டு,"அச்சாரத்தொகை' தரகரின் கையில் உடனேயே திணிக்கப்பட்டது. "எஞ்சியிருக்கிற மனையை வாங்கப் போகிறவனும் ஒரு நல்ல மனுஷனாக இருக்க வேண்டும்' என்று தன் குலதெய்வத்திடம் மனத்தில் வேண்டிக் கொண்டான் ராஜன்.

தன் கண்களிலிருந்து பெருகிய இன்பக் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட தனது புடவை முந்தானையாலேயே கணவன் ராஜனின் நெற்றி வியர்வையையும் மெல்லத் துடைத்துவிட்டாள் மங்களம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com