ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முதுமையில் பசியின்மை!

என் வயது 83. இரண்டு வாரங்களுக்கு முன்பாக சளித் தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளேன்.  தற்சமயம் பசி மிகக் குறைவாக உள்ளது. நன்கு பசி ஏற்பட மருந்து உள்ளதா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முதுமையில் பசியின்மை!

என் வயது 83. இரண்டு வாரங்களுக்கு முன்பாக சளித் தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளேன். தற்சமயம் பசி மிகக் குறைவாக உள்ளது. நன்கு பசி ஏற்பட மருந்து உள்ளதா?

கே.வி.எஸ்.பாண்டியன், பரமக்குடி.

கெட்டுள்ள கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பும், மந்தமும், குளிர்ச்சியும் சளியாக வெளியேறினாலும், உணவுப் பையின் உட்புறம் பொதிந்துள்ள பசி தூண்டும் திரவங்களின் சுரப்பிகளில் இந்த குணங்களின் பிரதிபலிப்பானது வெளிப்படுவதால், பசி மந்தமான நிலைக்குச் சென்றுவிடுகிறது. இந்த குணங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டு செயல்படும் மருந்துகளைச் சாப்பிடும்போது, நிலைமையானது சீராகிவிடும்.

சீரகம் 20 கிராம், ஓமம் 30கிராம், திப்பிலி 40 கிராம் இம்மூன்றையும் எடுத்து லேசாக வறுத்துக் கொள்ளவும். கடுக்காய் 150 கிராம் எடுத்து அதைத் தட்டி உள்விதையை நீக்கித் தோலையும்அத்துடன் ஒட்டியுள்ள சதையையும் எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு இடித்துச் சூரணமாக்கி, மெல்லிய கண்ணுள்ள சல்லடையில் சலித்து எடுத்துப் பத்திரப்படுத்தவும். சுக்கு 50 கிராம் பொடித்துச் சலித்து இந்த சூரணத்துடன் கலக்கவும். இந்துப்பு 10 கிராம் பொடித்து கடைசியில் கலக்கவும். இந்த சூரணத்தில் உப்பு கலப்பதால், காற்றுப் படாதவாறு இறுக மூடி வைக்க வேண்டும்.

1- 3 கிராம் (1 - 1 1/2 டீ ஸ்பூன்) அளவு தினம் 2 முதல் 4 வேளை வரை உணவிற்கு அரை மணி நேரம் முன் வெந்நீர், தேன், மோர் இவற்றுடன் சாப்பிடலாம். இந்த சூரணத்தில் கடுக்காய்த் தூள் பாதி அளவு கலந்துள்ளது.

வைச்வாநரம் (எல்லாவற்றையும் எரிக்கக் கூடிய நெருப்பு) என்ற பெயருக்கேற்றபடி உணவை நன்கு ஜீரணமாக்கி, உடலில் சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும், வெளியேற்ற வேண்டியவற்றை வெளியேற்றியும் உதவக் கூடிய நல்ல ஜீரண மருந்து. துவர்ப்பும், காரமும், உப்பும் கணிசமாக இருப்பதால், நாக்கு மற்றும் வயிற்றின் கெடுதிகளால் ஏற்படும் உணவு வெறுப்பு, உமிழ்நீர்ப் பெருக்கம், உமட்டல், எதுக்களித்தல் முதலியவற்றைப் போக்கும். தொடர்ந்து மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தேங்கியுள்ள பழைய மலம் வெளியாக உதவும். அவ்விதமே உணவு செரியாமல் மலமிளகி வெளியேறும்போதும், உணவைச் செரிக்கச் செய்து, மலம் இறுகி, எளிதாக வெளியேறச் செய்யும். வயிற்றுப் பொறுமல், வயிற்றில் வாயு தங்கல், கொழுப்புப் பதார்த்தம் செரிக்காதிருத்தல், அஜீரணம், செரிமானக் கோளாறால் குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் ஏற்படும் இருமல், சளி முதலிய உபத்திரவங்கள் இதனால் குணப்படும். வயதான காலத்தில் ஜீரண சக்தி குன்றியவர்கள் இரவில் தினமும் ஒருவேளை சாப்பிட்டு வர, ஜீரண சக்தி சீராகி, இரைப்பை, கல்லீரல், குடல் முதலியவை சுறுசுறுப்புடன் இயங்கும்.

தீவிரமாக பசி எடுக்கச் செய்யவும், உடல் கனம் குறைந்து லேசாகச் செய்யவும், பஞ்சகோலக்கஞ்சி ஏற்றது. திப்பிலி, கண்டந்திப்பிலி, செவ்வியம், கொடிவேலி வேர்ப்பட்டை, சுக்கு என்ற ஐந்து மருந்து சரக்குகள் கடைகளில் கிடைப்பவை. பஞ்சகோலம் என்று பெயர் (ஐந்து உரைப்புள்ள பொருள்கள்). ஐந்து பொருள்களையும் வகைக்கு ஆறு கிராம் எடுத்து, பொடித்து, இரண்டு லிட்டர் தண்ணீருடன் காய்ச்சி, ஒரு லிட்டர் மீதமாக ஆனதும் வடிகட்டவும். வறுத்த முழு அரிசி ஒரு பங்கு, தண்ணீர் 20 பங்கு சேர்த்துக் கொதிக்கவிட்டு, கால் பங்காகச் சுண்டும் வரை கொதிக்கவிட்டு, பருக்கையை நீக்கி, சிறிது உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கும்போது, இடைஇடையே மேற்குறிப்பிட்ட பஞ்சகோலக் கஷாயத்தைச் சூடாக ஓர் அவுன்ஸ் (30 மி.லி.) அருந்தவும். காலையில் இது போல மூன்று நாட்கள் சாப்பிட்டால் உடல் வலி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், உமட்டல் முதலியவையும் நீங்கிவிடும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com