குளங்களின் நாயகன்!

வானொலி வழியாக "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின்பேச்சில் இடம்பெற்றதால் இந்திய மக்களால் அதிசயமாக பார்க்கப்படுபவர் காமேகெளடா. 
குளங்களின் நாயகன்!

வானொலி வழியாக "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின்பேச்சில் இடம்பெற்றதால் இந்திய மக்களால் அதிசயமாக பார்க்கப்படுபவர் காமேகெளடா. 

"தண்ணீர் வீரன்' என்று பிரதமர் மோடியால் புகழப்பட்ட காமேகெளடா, கர்நாடகமாநிலம், மண்டியா மாவட்டம், மலவள்ளி கிராமத்தின் தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்த ஆடுமேய்ப்பவர். கிராமத்திற்கு அருகேயுள்ள குந்தினிபெட்டா குன்றில் தனது சொந்த செலவில் 14 குளங்களை வெட்டி, கோடைக்காலத்தில் அப்பகுதியில் காணப்படும் விலங்குகள், பறவைகளின் தாகத்தை தீர்த்ததால் சொந்த கிராம மக்களால்  "முட்டாள் மனிதன்' என்று தூற்றப்பட்டவர்.  

 84 வயதுமுதியவரின் சாதனைகளை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொதுநல அமைப்பினர் பலர் காமேகெளடாவுக்கு விருதுகளும், அத்துடன் ரொக்கப்பரிசுகளையும் வழங்கி கெளரவித்துவருகிறார்கள். கர்நாடக அரசின் உயரிய விருந்தான  "ராஜ்யோத்சவா விருது', "பசவஸ்ரீ விருது' உள்ளிட்டபல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.  குளங்களை வெட்டி, பல்லுயிர்களின் தாகம் தீர்ப்பதை தனது வாழ்நாள் கடமையாக கருதும் காமேகெளடாவால், மலைப்பகுதியில் குளங்கள் வெட்டி சாதிக்க முடிந்தது எப்படி? அவரே விவரிக்கிறார்:

"எனது பெற்றோருக்கு 10 குழந்தைகள், அதனால் என்னை யாரும் சரியாக கவனிக்கமாட்டார்கள். 5 வயதுமுதலே என் கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள குந்தினிபெட்டா மலையில் ஆடுமேய்த்துவருகிறேன். காவிரி ஆற்றுக்கு அருகே இருந்தாலும், போதிய நீர்வளம் இல்லாததால் மலைக்காடுகள் அடர்த்தியில்லாமல் காணப்பட்டன. ஆடுமேய்ப்பதற்காக காடுகளைச் சுற்றி திரிந்தபோது, கோடைக்காலத்தில் அம்மலையின் விலங்குகள், பறவைகள் குடிக்க நீரின்றி தவிப்பதை பார்த்திருக்கிறேன். எனது ஆடுகளும் குடிக்க நீரில்லாமல் தவிக்கும். மழை பெய்தாலும், அவை வடிந்தோடிவிடும். மலையில் ஆங்காங்கே உள்ள குட்டைகளில் தேங்கும் மழைநீரும் வெயிலில் ஆவியாகிவிடும்.  

நிலத்தடிநீரும் இல்லாமல் செடிகள், மரங்கள் வாடிவிடும். இதற்கு தீர்வுகாண எண்ணியே மலைச்சரிவில் குளங்களை வெட்டும் முடிவுக்கு வந்தேன். 

40 ஆண்டுகளாகவே குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டுவருகிறேன். நான் வெட்டிய குளங்களில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இவற்றில் விலங்குகள், பறவைகள் தாகம் தீர்த்துக்கொண்டுள்ளன. எனது ஆடுகளுக்கும் தண்ணீர் கிடைத்துவருகின்றன. நிலத்தடிநீரும் உயர்ந்துள்ளதால் தாவரங்கள் செழிப்பாக உள்ளதால், மலைப்பகுதி பசுமையாக காணப்படுகின்றன. 14 குளங்களும் ஒன்றோடு ஒன்று நீரோடைகளால் இணைக்கப்பட்டுள்ளன. மலையில் இருந்து மழைநீர் வடியும் போக்கை கணக்கிட்டு தான் குளங்களை வெட்டியுள்ளேன். ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பினால், அதன் கூடுதல் தண்ணீர் வடிந்து, அடுத்த குளத்திற்கு செல்லும். அப்படியே எல்லா குளங்களும் நிறைந்துவிடும். 

ஆரம்பகாலத்தில் தினமும் காலை 5 மணி முதல் 9 மணிவரையில் நானே குளங்களை வெட்டுவேன். காலை 9மணி முதல் மாலை 7மணிவரை ஆடுமேய்ப்பேன். ஆரம்பகாலத்தில் எனது ஆடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில் தான் குளம் வெட்டுவதற்கு தேவையான மண்வாரி, மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை வாங்கினேன். தாசனதொட்டி கிராமத்திற்கு அருகில் முதல் குளத்தை வெட்டும்போது 6 மாதமானது. அது 6 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. ஆனால் இன்றைக்கும் அங்கு தண்ணீர் வற்றவில்லை. 

இன்றைக்கும் எல்லா குளங்களையும் தினமும் பார்வையிடுவேன். விருதுகளின்போது கொடுத்த பணத்தை பயன்படுத்தியும் குளங்களை வெட்டினேன். கணக்கு வைத்துக்கொள்ளவில்லை என்றாலும், 14 குளங்களை வெட்டுவதற்கு இதுவரை தோராயமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவழித்திருப்பேன். குளங்களுக்கு எனது மகள்கள் பூஜா, பூர்வி என்று பெயரிட்டுள்ளேன். ஒரு சில குளங்களுக்கு எனது பெயர்த்திகள் பெயரைச் சூட்டியுள்ளேன். 

எனக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சிறிய வீடு உள்ளது. எனக்காக நான் எதையும் சேர்த்துவைக்கவில்லை என்று குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள். என்குழந்தைகளுக்கு குளங்களைத் தான் பரிசாக அளித்திருக்கிறேன்.    

இப்போது குளங்களை வெட்ட முடியாவிட்டாலும், மண் அள்ளும் வாகனங்களின் உதவியுடன் ஒருசில குளங்களை வெட்டி வருகிறேன். எனது கடைசி மூச்சுள்ள வரை இயற்கை அன்னைக்கு ஏதாவது ஒருவகையில் பணியாற்றிக் கொண்டே இருப்பேன்''  என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com