கிராமத்தான்

''வீடு நல்லாத்தானே இருக்கு... இப்போ எதுக்கு லோன் கேட்குறீங்க? லோன் வாங்கிட்டு வேற செலவு செய்யப் போறீங்களா?'' மாட்டுக் கொட்டகை போல் இருந்த வீட்டை தாஜ்மகால் போல் சித்திரித்து அவர் சுற்றி சுற்றிப் 
கிராமத்தான்

சென்ற இதழ் தொடர்ச்சி...
 

''வீடு நல்லாத்தானே இருக்கு... இப்போ எதுக்கு லோன் கேட்குறீங்க? லோன் வாங்கிட்டு வேற செலவு செய்யப் போறீங்களா?'' மாட்டுக் கொட்டகை போல் இருந்த வீட்டை தாஜ்மகால் போல் சித்திரித்து அவர் சுற்றி சுற்றிப் பார்த்தது ஆறுமுகத்துக்கு அத்தனை வேதனையாக இருந்தது.

"" என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க... "புள்ளை குட்டி இல்லாதவன் பஞ்சத்துல ராஜா, மாடு கன்னு இல்லாதவன் மழைக்கு ராஜா'ன்னு சும்மாவா சொன்னாங்க... மழைக்காலத்துல மறைய இடமில்லை அத்தனை ஒழுகுது. ஓட்டை பிரிச்சு மாத்தினா, பொம்பளைப் புள்ளைக்கு கல்யாணம் பேசலாம்னு பார்க்கிறேன்'' வாழ்க்கையின் வலிகளைச் சொன்னார்.

"" ஓடு மாத்தவா ஐம்பதாயிரம் கேட்டு இருக்கீங்க?''

""என்னங்க இப்படி கேட்குறீங்க? பெரிய பெரிய இடங்கள்ல சின்ன மீட்டிங் போட்டா அதுக்கு காப்பி பலகாரம் பண்ண செலவுன்னு பல ஆயிரம் கணக்கு காட்டுறாங்க. அதுல்லாம் சரியா தப்பான்னா யாரும் கணக்கு கேட்குறதில்ல... ஓட்டு வீடுங்க... கிழிஞ்ச கோவணம் மாதிரி ஒருபக்கம் தொட்டா ஒரு பக்கம்
இழுத்துக்கும். இதை மராமத்து செய்றதே உம்பாடு எம்பாடு ஆயிடும். இதுல செய்கூலி சேதாரத்துக்கெல்லாம் கணக்கு காட்டச் சொல்றீங்களே?'' கிழவனின் ஆணித்தரமான கேள்வியில் கொஞ்சம் அசந்து போனாலும், அவர்கள் அதை அங்கீகரிக்கத் தயாராகயில்லை.
இன்ஸ்பெக்ஷன் செய்த எட்டு நாள் கழித்துத்தான் லோன் ஆர்டரில் கையெழுத்துப் போட்டார்கள். அதன் பிறகு ஆதார் சரி பார்ப்பு முடிந்தது. அதற்கு ஒரு முழு நாள் இழுத்து கல் வைத்தது.
ஒரு வழியாக எல்லாம் முடிந்தது என்று இவர் காத்திருக்க, பத்திரத்தில் இருந்த பேருக்கும் ஆதாரில் இருந்த பேருக்கும் வித்தியாசமாக இருக்கிறது என்று அனுப்பி வைத்தார்கள்.
இ - சேவை மையத்திற்கு வந்து அங்கேயும் தவழ்ந்த அலட்சியப் பார்வைகளை தன்னக்கட்டி தன்னுடைய பேரில் விட்டுப் போன எழுத்தைத் திருத்தி ஆதார் கார்டை எடுத்து வந்தார்.
வாழ்க்கை மீதான பிடிப்பு அற்றுப் போனது
ஆறுமுகத்துக்கு. மனைவி தனலட்சுமி கூட அவர் படுகின்ற அவஸ்தையைப் பார்த்து வலியாகச் சொன்னாள்:
"" எதுக்குங்க இத்தனை அலைச்சல்? ரெண்டு சவரன் சங்கிலி கிடக்கு என்கிட்ட போடாம. அதை செட்டியாரம்மாகிட்ட தந்துட்டு அஞ்சு வட்டிக்கு வாங்கினா நாளைக்கு காசைக் கண்ணுல பார்க்கலாம். இப்படி ஒத்தை பனமரம், காத்துல அல்லாடுற மாதிரி அலையுறீகளே... மனசு அத்தனை வலிக்குது'' என்ற மனைவியை அன்பாய்ப்
பார்த்தார்.
"" பாதி கிணறு தாண்டியாச்சு தனம். இப்ப விட்டுட்டு வந்தா நஷ்டம் அவுகளுக்கு இல்ல. நமக்குத்தேன். இன்னும் கொஞ்சம் தூரம்தான்'' என்றார் களைப்பாக.
இதோ இன்று அவரை வரச் சொல்லி அவருடைய
மகனின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதற்காகத்தான் இத்தனை தூரம் வந்திருக்கிறார் வெயிலில் போராடி.
ஏ.சி காற்று சில்லென்று இருந்தது. அறையை நறு
மணம் நிரப்பி இருந்தது. பணப்புழக்கம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பணம் புழங்கும் இடங்களில் மனிதர்களுக்கு வேலை இருக்கிறது.
மடக்க முடியாத இரும்பு நாற்காலியில் சரிந்து அமர்ந்தார். இவரைப் போலவே ஏகப்பட்ட பேர்கள் அங்கே இருந்தார்கள். பணம் எடுக்கவும், கணக்கு சரிபார்க்கவும், வங்கிகள் மும்மரமாகவே இருக்கின்றன எப்போதும்.
இவரை அமரச் சொல்லி இருந்தார்கள். சின்ன முள்ளும் பெரிய முள்ளும் துரத்தி பிடித்து விளையாடிக் கொண்டே இருந்தன. விநாடி முள் மட்டும் மௌனச்சாட்சியாய் கண்காணித்துக் கொண்டு இருந்தது
இயக்கங்களை.
சரியாய் ஒரு மணிக்கெல்லாம் பரிவர்த்தனைக் கவுண்டர்கள் மூடப்பட, சாப்பாட்டு நேரம் என்று புரிந்தது. பெருமூச்சு வந்தது. கூட்டம் நிறையவே கரைந்து இருந்தது. ஆறுமுகத்தைப் போல ஓரிருவர் மட்டும் அவர்கள் உணவு முடித்து வர காத்திருந்தார்கள்.
கேபின்களுக்குள் சத்தம். சிரிப்பு, உணவின் நறுமண பசியாறல்கள். ஆறுமுகத்திற்கும் பசித்தது. காலையில் சீக்கிரமாய் கிளம்ப வேண்டிய கவனத்தில் கொஞ்சமாய் நீராகாரம் சாப்பிட்டு வந்தவர் தான். வரும் வழியில் இளநீர் குடித்தார்.
எதுவுமே திட ஆகாரம் இல்லை. ஐம்பதைக் கடந்த தேகத்துக்கு கொஞ்சம் அயர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் சாப்பிட வெளியில் கிளம்பிய நேரம் அந்த
செக்ஷன் ஆபிசர் எங்கும் போய் தொலைத்தால் என்ன செய்வது என்றுதான் அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்தார்.
இரண்டு மணிக்கு கவுண்டர் திறந்தார்கள். ஏப்ப எக்காளமும், சிரிப்பும் அவர்களின் உணவின் பகுமானத்தை சொன்னது. இவருடைய பசி அதைப் பார்த்து ஏங்கி ஒரு நொடி வயிற்றில் ஏறி இறங்கியது.
சரியாய் இரண்டு நாற்பதுக்கு உள்ளே அழைக்கப்பட்டார். மேனேஜரின் ரூமில் கூடுதல் ஏ.சி. காற்று இன்னும் வீரியமான நறுமணத்துடன் வீசியது.
அவர் இப்போதுதான் பார்ப்பதைப் போல் எல்லாவற்றையும் திருப்பி பார்த்துக் கொண்டு இருந்தார். அந்தப் பார்வையே ஆறுமுகத்துக்கு அடிவயிற்றைப் புரட்டியது.
"" பேப்பர்ஸ் எல்லாம் சரியாத்தான் இருக்கு... ஆனால் இப்போ எல்லாம் எண்ட்ரி போட்டுட்டு உங்களுக்கு சைன் பண்ண சிஸ்டம் ஓர்க் ஆகல, காலையில இருந்து. நீங்க இப்போ கிளம்புங்க. மன் டே வந்து பாருங்க'' நாற்காலியில் தன்னைச் சரியாக பொருத்திக் கொண்டு
சொன்னார்.
தன்னுடைய சின்னக் கண்ணை குறுக்கி அவரைப் பார்த்தார் ஆறுமுகம். அந்த பார்வை கருப்பணசாமி கோயில் குங்குமம் போல் தீம்பிழம்பாக இருந்தது.
"" சிஸ்டம்னா என்னங்க?'' என்றார் தீர்க்கமாய்ப் பார்த்து.
"" கம்ப்யூட்டர்ல ஏதோ டெக்னிக்கல் டீபால்ட்... ஐ மின் திடீர் கோளாறு.''
"" ஓஹோ... காலையில இருந்தே வேலை செய்யலயா?''
"" ஆமாம்''
"" அது செய்யாட்டிக் கிடக்குது. நீங்க எல்லாரும் இங்கதான் இருக்கீங்க? உங்களை விடவா அந்த சின்னப் பொட்டி பெரிய ஆபிசர்? உங்களை விடவா அதுக்கு அதிகாரம் இருக்கு? நீங்க கையெழுத்து போட்டு தந்திடுங்க'' ஆறுமுகம் லேசாய் குரலை உசத்த கண்ணாடித் தடுப்பிற்கு பின்னால் இருந்த ஊழியர்கள் கவனம் மேனேஜரின் அறையை நோக்கித் திரும்பியது.
"" அதெல்லாம் நான் செய்ய முடியாது. ப்ராபரா சிஸ்டத்துல ஏத்துன பிறகுதான் எதுவுமே செய்ய முடியும்? யூ கேன் கோ நவ்''
"" ஓ ஹோ... என்னய்யா சொல்றீங்க? மூணு மாசம் இந்த காசுக்காக அலையோ அலைன்னு அலைஞ்சாச்சு... வெயில்லுன்னு பார்க்காம நீங்க சொன்னதெல்லாம் ரெடி பண்ணியும் தந்தாச்சு. இன்னும்கூட பொறுமையாத் தான் நிக்கிறேன். ''
"" நின்னுதான் ஆகணும் பெரியவரே... இதொன்னும் உங்க அப்பா வீட்டு சொத்தோ, என் அப்பா வீட்டு சொத்தோ இல்ல. நீங்க வந்து கேட்டதும் தூக்கி கொடுக்க.''
"" வாஸ்தவம் தான். அது எங்கள மாதிரி பொதுஜனத்தோட உரிமை. ஆனா எங்க உரிமையை நாங்க அடைய எத்தனைதான் அலைக்கழிப்பீங்க?'' குரல் உயர, ஊழியர்கள் உள்ளே வந்தார்கள்.
ஆவேசமாய் இவரை அப்புறப்படுத்த முயல, அந்த கிராமத்து தேகம் தளராமல் அப்படியே நின்றது.
"" எதுக்கு என்னை வெளியில இழுத்து விடறீங்க? நான் கேட்கறதுக்கு பதில் வராட்டி நான் இம்மியும் அசைய மாட்டேன் இங்கே இருந்து. நேரா வக்கீல்ட்ட தான் போய் நிப்பேன். எனக்கு உங்களால மன உளைச்சல்னு சொல்லி மானநஷ்ட வழக்கு போடுவேன்'' அவர் கத்த அங்கே ஓர் அதிகாரச் சிரிப்பு எழுந்தது பேரிரைச்சலாய்.
"" போயா போய்க்க... இத்தனைக்கும் பின்னாடி நீ தம்படி காசு வாங்கிட மாட்ட இங்கே இருந்து. என்ன நாங்க உன் வீட்டு வேலைக்காரன்னு நினைச்சியா? போய் நிரூபி... நாங்க உன்னை அலைகழிச்சோம்னு'' கேசியர் சிரிக்க, மற்றவர்களின் முகத்தில் அதே ஆணவப் புன்னகை இந்த பாமரனைப் பார்த்து.
அவர் கண்கள் சிவக்க ஒருமுறை அவர்களை ஏறிட்டார். இகழ்வாய் சிரித்தார்.
"" சார்... நான் படிக்காதவன் தான். ஆனா புத்தி கெட்டவன் இல்லை. நீங்க நினைக்கிற மாதிரி நான் மூணு மாசக் கதைய பேசினத்தானே என்னை பைத்தியக்காரன்னு சொல்லுவீங்க? நான் பேசப் போறது இன்னைக்கு ஒருநாளையக் கதையைத் தான். இங்கே காலையில இருந்து மிசின் வேலை செய்யலைன்னு மேனேஜர் சொல்றாரு. அப்போ என்னை எதுக்கு இங்கே நாலு மணி
நேரமா உட்கார்த்தி வச்சீங்கன்னு கேட்பேன். இங்கே இருக்கிற படம்பிடிக்கிற கருவிகள்ல நான் இம்புட்டு நேரமா உட்கார்ந்து கிடக்கிறது பதிஞ்சுதானே இருக்கும். எல்லாம் தெரிஞ்சவன் தான்யா கிராமத்தான். ஆனா சத்தம் செய்யாத சாமானியன் அவன். இங்கே மிசினுக்குத் தான் அதிகாரம்னா எந்த அதிகாரியும் சம்பளம் கேட்டு போராட்டம் நடத்த என்னய்யா உரிமை இருக்கு உங்களுக்கு? நான் மனசார சொல்லட்டா? நீங்கயெல்லாம் எங்களை மாதிரி இல்லாத,பட்டம் படிக்காதவங்களுக்கு உதவி செய்யாததால தான் எங்க சனங்க எல்லாம் வட்டிக்கடைகள்ல தங்களோட வாழ்க்கையை அடகு வச்சிட்டு கிடக்காங்க... கோடி கோடியா வாங்கிட்டு ஓடிப்போற பெரிய மனுசனுங்களுக்கு தர்ற மரியாதையை நேர்மையான கிராமத்துகாரனுக்கும் குடுங்க...'' சட்டென்று அவர் உடைந்து போய் குரல் கமற, அங்கே ஒரு நீண்ட மௌனம் வியாபித்தது.
அந்த சிறு தொகைக்காக அவர் அலைந்து திரிந்த வலி இப்போது அவர்களுக்கும் உரைத்தது.
மேனேஜர் ஏதோ சொல்ல ஆறுமுகத்தை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு பேப்பர்களைத் தயார் செய்து எடுத்து வந்தார்கள்.
"" இந்தாங்க பெரியவரே இங்கே வாங்க... இதுல குறிச்சிருக்கிற இடத்துல எல்லாம் கையெழுத்து போடுங்க... குறிப்பா மேலே எழுதி இருக்கிற விதிமுறைகளை படிச்சுக்கங்க... தமிழ்லயும் இருக்கு பாருங்க'' கேசியர் நீட்டினார்.
வாங்கிக் கொண்டார். தாள்களைப் புரட்டி நடுக்கமாய் கையெழுத்துப் போட ஆரம்பித்தார்.
"" விதிமுறைகளை ஒரு தடவை வாசிக்க வேண்டியது தானே? இல்லாட்டி நாளைக்கு வந்து இது தெரியாது... அது தெரியாதுன்னு சொல்ல வேண்டியது'' என்றார் கேசியர்.
ஆறுமுகத்தின் முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது.
"" எதுக்கு அதெல்லாம்? நல்லவனுக்கு சட்டம் எதுக்கு? அவனுக்கு அவன் மனசாட்சி தான் சட்டம்... காசு வாங்குனா திருப்பிக் கட்டணும். இவ்வளவு தெரிஞ்சா போதும் எனக்கு. அதுல என்ன எழுதி இருந்தா எனக்கு என்னய்யா?'' அவர் வெள்ளந்தியாய் சொல்ல, காசோலையை அவரை நோக்கி நீட்டினார் கேசியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com