'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 13

​பத்து நிமிடம் கழித்துத் திரும்பிவந்த உதவியாளர் நாகராஜ் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். 
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 13


பத்து நிமிடம் கழித்துத் திரும்பிவந்த உதவியாளர் நாகராஜ் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். அடுத்த இரண்டு மணி நேரம் நான் அந்த அறையில் காத்திருந்தேன். 

இப்போது போல பொழுதைப் போக்க செல்லிடப்பேசி கிடையாது. 24 மணிநேர தொலைக்காட்சி செய்திச் சேனல்களும் கிடையாது. அறையில்  இருந்த அத்தனை ஆங்கில பத்திரிகைகளையும் வரிவிடாமல் படித்து முடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாகராஜ் வந்தார். தன்னைப் பின்தொடரும்படி என்னை அழைத்தார். மாடியிலிருந்த வரவேற்பறைக்கு என்னை அழைத்துச் சென்று அமர வைத்தார். சிறிது நேரத்தில் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே "நமஸ்காரா வைத்தியநாத்' என்றபடி உள்ளே நுழைந்தபோது, என்னைப் பெயர் சொல்லி அழைத்ததில் ஏற்பட்ட பூரிப்புடன் எழுந்து வணக்கம் சொன்னேன்.

""என்ன, பிரணாப் முகர்ஜியைப் பார்க்க வந்திருக்கிறீர்களா?'' என்று அவர் எடுத்த எடுப்பில் தொடுத்த கேள்வியில் நான் தடுமாறினேன். அதெல்லாம் இவருக்கு எப்படித் தெரியும் என்கிற திகைப்பு எனக்கு. 

""பிரணாப்தா உங்களை விசாரித்ததாகச் சொன்னார்...''

""ராஜீவ் காந்தி அவரை ஒதுக்கி வைத்திருக்கலாம். வெளியேற்றி இருக்கக் கூடாது. இதற்கு மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறார் ராஜீவ் காந்தி.''

அதற்குப் பிறகு எங்கள் உரையாடல் சென்னை நோக்கித் திரும்பியது. சோ சாரை நலம் விசாரித்தார். எம்ஜிஆர் உடல்நிலை, தமிழக அரசியல் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொண்டார். மீண்டும் பிரணாப் முகர்ஜி குறித்து அவரே பேசத் தொடங்கினார்.

""பிரணாப் முகர்ஜியால் காங்கிரûஸ விட்டு விலகி அரசியல் பண்ண முடியாது. அவர் காங்கிரஸில் இல்லாமல் இருப்பது மீனைத் தண்ணீரிலிருந்து வெளியே எடுத்துப் போடுவதுபோல. அவரால் காங்கிரஸ் சார்ந்த அரசியலில்தான் செயல்பட முடியும். எதிர்க்கட்சி அரசியலுக்கு அவர் ஏற்றவரல்ல...''

""அப்படிப் பார்த்தால், நீங்கள்கூட அடிப்படையில் காங்கிரஸ்காரர்தானே. எதிர்க்கட்சி அரசியல்வாதியாக மாறவில்லையா?''

""காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நிஜலிங்கப்பா, காமராஜ், மொரார்ஜி தேசாய் ஆகியோரின் தலைமையில் நாங்கள் வெளியே வந்தோம். இந்திரா காந்தி தலைமையில் இயங்கிய காங்கிரஸூடன் ஏற்பட்ட கொள்கைரீதியிலான பிளவின் அடிப்படையில் நான் எதிர்க்கட்சி அரசியலுக்கு வந்தது போல அல்ல, ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட விரோதத்தால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரணாப் முகர்ஜியின் அரசியல்.''

முதல்வர் ஹெக்டே அளித்த தெளிவான அந்த விளக்கம் என்னை ஆச்சரியப்படுத்தியது. 

""பிரணாப்தாவே கூட வேறு வழியில்லாமல்தான் கட்சி தொடங்க முற்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்'', என்றேன் நான்.

""தனிக் கட்சி தொடங்கும் அளவுக்கு அவருக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது. வங்காளத்திலேயே மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில், தேசிய அளவில் அவரால் என்ன செய்துவிட முடியும்? எமர்ஜென்சி காலகட்டத்தில் அவர் இந்திரா காந்தியுடன் இருந்தார். அவரால் எங்களது ஜனதா கட்சியில் சேர முடியாது. நாங்களும் சேர்த்துக் கொள்ள முடியாது.''

""நீங்கள் சொல்லும் இந்தக் காரணங்கள் எல்லாம் அவருக்கும் தெரியாமல் இருக்குமா? நிச்சயமாக யோசித்திருப்பார்...''

""ம்...ம்...ம்...'' என்றபடி, பைப்பை எடுத்துப் பற்ற வைத்தார் ஹெக்டே.

பிரணாப்தாவைப் போல, ராமகிருஷ்ண ஹெக்டேவும் பைப் புகைப்பவர். இருவருக்கும் வித்தியாசம் என்னவென்றால், ஹெக்டேவுக்கு மிகப் பெரிய மக்கள் செல்வாக்கு உண்டு. தமிழகத்தில் சி.என். அண்ணாதுரைபோல, கூட்டத்தைத் தனது பேச்சால் கட்டிப்போடும் அசாத்தியத் திறமை ஹெக்டேவுக்கு உண்டு. இங்கே தமிழக அரசியலில் அண்ணாதுரையை "அண்ணா' என்று அழைப்பதுபோல, கர்நாடக அரசியலில் அவரை "அண்ணா' என்றுதான் அழைப்பார்கள்.

""குண்டுராவ், எப்.எம். கான், ஏ.ஆர். அந்துலே போன்றவர்களை நம்பி அரசியல் கட்சி தொடங்க வேண்டாம் என்று நான் சொன்னதாகப் பிரணாப் முகர்ஜியிடம் சொல்லுங்கள். அவர்கள் பிரணாப் முகர்ஜியுடன் தொடர்பு வைத்துக் கொள்வதே, காங்கிரஸ் தலைமையிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வர வேண்டும் என்பதற்காகத்தான்.''

அவர் சிரித்தார். நான் திகைத்தேன். அரசியலில் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதை நினைத்தபோது எனக்குள் சிரிப்பு வந்தது.

இரண்டு தடவை நாகராஜ் கதவைத் திறந்து உள்ளே வந்து, கிளம்ப வேண்டும் என்பதை மறைமுகமாக நினைவுபடுத்தினார். முதல்வர் ஹெக்டேவுடன் நானும் எழுந்தேன்.

""நான் உங்களிடம் சொன்னதை பிரணாப் முகர்ஜியிடம் நீங்கள் போய்ச் சொன்னால் நன்றாக இருக்காது. நானே அவரை அழைத்துப் பேசுகிறேன். அதுதான் நாகரிகமாக இருக்கும்'' என்ற முதல்வர் ஹெக்டேயின் பண்பு அவர் மீதான எனது மரியாதையை மேலும் அதிகரித்தது. 

விடைபெற்று நான் பாலாப்ரூயி கெஸ்ட் ஹெளஸூக்கு வந்தேன். மதிய உணவை முடித்துக் கொண்டு, பிரணாப்தாவை சந்திக்கச் சென்றேன். அறைக்கு வெளியே சிலர் நின்று கொண்டிருந்தனர். உள்ளே குண்டுராவ் இருப்பதாகச் சொன்னார்கள். அன்று இரவே பிரணாப்தா விமானத்தில் கொல்கத்தா கிளம்ப இருப்பதாக அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

நான் வந்திருப்பதை எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தபோது, அறையிலிருந்து குண்டுராவை வழியனுப்ப பிரணாப்தாவே வெளியே வந்தார். குண்டுராவ் காரில் ஏறியதும், நானும் பிரணாப்தாவுடன் அறையில் நுழைந்தேன். அறையில் வேறு யாரும் இருக்கவில்லை.

""ஹெக்டேஜி உங்களை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்.''

""அவர் என்னிடம் தொலைபேசியில் பேசிவிட்டார்.''

குண்டுராவ், எப்.என். கானை எல்லாம் நம்பாதீர்கள் என்று அவர் சொன்னாரா என்று நான் கேட்கவும் இல்லை, அவர் சொல்லவுமில்லை. இரவு ஒன்பது மணிக்கு விமானம் தாமதமாகக் கிளம்ப இருப்பதாக அவர் சொன்னார். நான் சென்னைக்குக் கிளம்புவதாகக் கூறி விடை பெற்றுக் கொண்டேன்.

""தில்லி விட்டல்பாய் படேல் ஹெளஸில் ஜனவரி மாதம் ராஷ்ட்ரீய சோஷலிஸ்ட் காங்கிரஸ் மாநாடு கூட்டுவதாகத் தீர்மானித்திருக்கிறோம். முடிந்தால் நீ வந்து கலந்துகொள். வரவில்லையென்றாலும் பரவாயில்லை. உனது வேலைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது'' என்று கூறி விடை கொடுத்தார்.

பாலாப்ரூயி கெஸ்ட் ஹெளஸில் இரவு உணவை முடித்துக் கொண்டு, நாகராஜிடம் நான் சென்னை திரும்புவதாகத் தெரிவித்தேன். என்னுடைய அதிர்ஷ்டம் மெட்ராஸ் மெயிலில் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொள்ள இடம் கிடைத்தது. இரண்டு நாள் நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டு இரவெல்லாம் கண் விழித்தபடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன்.

பிரணாப் முகர்ஜி தில்லியில் கூட்டிய மாநாட்டுக்கு நான் போகவில்லை. போக முடியவில்லை. அடுத்த இரண்டு மாதத்தில் மேற்கு வங்காள சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. 1987 மார்ச் மாதம் நடந்த அந்தத் தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் ராஷ்ட்ரீய சோஷலிஸ்ட் காங்கிரஸ் சார்பில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.  

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவிலேயே தங்கிவிட்டார். நானும் தில்லிக்குப் போகவில்லை. எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்தது.

அடுத்த சில மாதங்களில், சாவி இதழிலிருந்து விலகி "நியூஸ்கிரைப்' என்கிற ஆங்கில செய்தி நிறுவனத்தை நான் தொடங்கி இருந்தேன். எம்ஜிஆரின் மரணம் தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தின. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசமும், சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற அரசியல் கட்சியும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு வித்திட்டன.

தேசிய அளவில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. போபர்ஸ் பீரங்கி ஊழல் மிகப் பெரிய குற்றச்சாட்டாக எழுப்பப்பட்டது. ராஜீவ் காந்தியால் நம்பிக்கைக்குரியவர்கள் என்று கருதப்பட்ட வி.பி. சிங்கும், அருண் நேருவும், அவருக்கு எதிராகத் திரும்பினார்கள் என்பது எதிர்பாராத திருப்பம்.

ராமகிருஷ்ண ஹெக்டே எச்சரித்தது சரியாகிவிட்டதை நினைத்து நான் வியந்தேன். "வி.பி. சிங் வருங்காலத்தில் ராஜீவ் காந்தியின் முதுகில் குத்துவார், பார்த்துக் கொண்டே இரு' என்று 1985-இல் சந்திரசேகர் சொன்னதும்  நிஜமாகவே நடந்தது. 

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும், பிரதமர் ராஜீவ் காந்தியையும், அவரது அரசையும் ஆதரித்தும், நியாயப்படுத்தியும் ஆணித்தரமான வாதத்தை முன்வைக்க அவையில் யாருமில்லாத பரிதாப நிலைமை காணப்பட்டது. சரியான ஆலோசகர்கள் இல்லாமல் போனால் ஆட்சியாளர்கள் செல்வாக்கை இழப்பார்கள் என்பதற்கு ராஜீவ் காந்தி அரசு ஓர் எடுத்துக்காட்டு. 

பாரத யுத்தத்தில் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டதுபோல, ராஜீவ் காந்தியைச் சுற்றி எதிர்க்கட்சி வியூகம் அமைத்துவிட்டது. நிராயுதபாணி அபிமன்யு மீது கர்ணன் அம்பை எய்ததுபோல, ராஜீவ் காந்திக்கு எதிராக ஊழல் கணையைத் தொடுத்தார்  வி.பி. சிங். 

ராஜீவ் காந்தி அரசு மக்கள் செல்வாக்கை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். ராஜீவ் காந்தியிடமிருந்து இரண்டு பேருக்கு நண்பர்கள் மூலம் மீண்டும் கட்சியில் இணைய அழைப்பு விடப்பட்டது. அந்த இருவரில் ஒருவர் பிரணாப் முகர்ஜி என்றால், இன்னொருவர் ஆர்.கே. தவான்.

""உங்கள் தாயார் இந்திரா காந்தியிடம் நெருக்கமாக இருந்த பிரணாப் முகர்ஜியையும், ஆர்.கே. தவானையும் கட்சியிலிருந்து வெளியேற்றினீர்கள். இப்போது ஏன் அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று ராஜீவ் காந்தியிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

""அவர்களைப் பற்றி என்னிடம் சொல்லப்பட்டவை அனைத்தும் தவறு என்று இப்போது தெரிந்து கொண்டேன். அதனால்தான்'' என்பது பிரதமர் ராஜீவ் காந்தியின் பதில்.

பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1998-இல், அவர் மீண்டும் காங்கிரஸூக்குத் திரும்பியது குறித்து ஒருநாள் நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
""அவ்வளவு அவமானத்துக்குப் பிறகு நீங்கள் காங்கிரஸூக்குத் திரும்பியிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.''

பிரணாப்தா என்னைக் கோபமாக முறைத்துப் பார்த்தார். நான் ஒரு  விநாடி நடுங்கி விட்டேன். 

""அப்படி நான் திரும்பாமல் இருந்திருந்தால், இந்திராஜியின் ஆவி என்னை மன்னித்திருக்காது. எனது மனசாட்சியே என்னைப் பழித்திருக்கும். 

எனது உடம்பில் ஓடுவது காங்கிரஸ் ரத்தமாக இருந்திருக்காது.''

அவருக்கிருந்த காங்கிரஸ் பற்றும், இந்திரா விசுவாசமும் என்னை  ஆச்சரியப்படுத்தின.

பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஆர்.கே. தவான் என்னை உடனடியாக தில்லிக்கு வரும்படி தகவல் அனுப்பியிருந்தார். தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜி.கே. மூப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். தமிழக அரசியல் தொடர்பாகப் பேசுவதற்குதான் தவான் என்னை அழைக்கிறார் என்பதை ஊகித்தேன். 

கோல்ஃப் லிங்க்சில் உள்ள தவானின் வீட்டு வரவேற்பறையில் நுழைந்தபோது, அவருடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி. அவரை நான் அங்கே எதிர்பார்க்கவில்லை.

""வாங்க... வாங்க... உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம்'' என்று அவர் என்னைத் தமிழில் வரவேற்க, தவான் அர்த்தப் புன்னகையை உதிர்த்தார்.

தமிழகத்தில் நடந்த திரைமறைவு அரசியலுக்குச்   சாட்சியாக மட்டுமல்லாமல், மாறுபட்ட அரசியல் முகாம்களுக்கு இடையேயான இணைப்புச் சங்கிலியாகவும்  இருக்கப் போகிறேன் என்பதை நான் அப்போது உணரவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com