'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 14

​பிரணாப்தாவுடன் தொடர்பில்லாதது என்றாலும்கூட, நான் சாட்சியாக இருந்த தமிழக அரசியல் குறித்த சில செய்திகளையும் சம்பவங்களையும் தவிர்க்க இயலாது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 14


பிரணாப்தாவுடன் தொடர்பில்லாதது என்றாலும்கூட, நான் சாட்சியாக இருந்த தமிழக அரசியல் குறித்த சில செய்திகளையும் சம்பவங்களையும் தவிர்க்க இயலாது. ஆர்.கே. தவானின் இல்லத்தில் அன்று நடந்த அந்த சந்திப்பு, சுழலுக்குள் இழுப்பதைப்போல என்னை தமிழகத்தில் நடந்த சில அரசியல் நகர்வுகளுக்குள் இழுத்துக்கொண்டது.

எனக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர் என்றாலும், தில்லியிலுள்ள ஆர்.கே. தவானின் கோல்ஃப் லிங்க்ஸ் இல்லத்தில் முனைவர் ம.  நடராஜனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரான ம. நட
ராஜன் தன்னை சந்திக்க வருவது தெரிந்துதான், ஆர்.கே. தவான் என்னை அந்த நேரத்தில் வரச்சொல்லியிருந்தார் என்பது எனக்குப் புரிந்தது.

பொதுவாகத் தமிழக அரசியல் நிலைமை குறித்தும், ஜெயலலிதா குறித்தும் ஆர்.கே. தவானிடம் விளக்கிக் கொண்டிருந்தார் ம. நடராஜன். அவர் கூறிய செய்திகள் சரிதானா என்பதை எனது முகக்குறிப்பிலிருந்து ஆர்.கே. தவான் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். நான் தேவையில்லாமல் இடைமறித்துப் பேசவில்லை.

இந்த இடத்தில், ம. நடராஜன் குறித்த சில செய்திகளை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லோரும் நினைப்பதுபோல, சசிகலா ஜெயலலிதாவின் தோழியானதன் பிறகு அவருக்கு அறிமுகமானவர் அல்ல ம. நடராஜன். ஜெயலலிதாவுடனான அவரது முதல் சந்திப்பு நடந்தது 

திருநெல்வேலியில் என்று பலருக்கும் தெரியாது. அப்போது அவர் நெல்லை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். 

1981 டிசம்பர் 11, 12, 13 தேதிகளில் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முதல்வராக இருந்த எம்ஜிஆர் மூன்று நாள்களும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆளுநர் சாதிக் அலி தொடங்கி வைத்த அந்த விழாவில் பஞ்சாப் முதல்வராக இருந்த தர்பாரா சிங்கும், மத்திய நிதியமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனும் முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆளுமைகள், மேடைப் பேச்சாளர்கள் என்று பலரும் அந்த நிகழ்வில் பங்கு கொண்டனர். ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகப்படுத்தலாமா என்பதற்கு, பாரதியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை உரைகல்லாகப் பயன்படுத்தினார் முதல்வர் எம்ஜிஆர். பேராசிரியர் அ.ரா. இந்திரா தலைமையில் இரண்டாவது நாள் நடந்த "மகளிர் நோக்கில் பாரதி' என்கிற அமர்வில், "பெண் விடுதலை' என்கிற தலைப்பில் ஜெயலலிதா உரையாற்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் அவர்.

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் எட்டயபுரம் பாரதி விழாவில்தான் நடந்தது. அதற்காக ஜெயலலிதா திருநெல்வேலிக்கு வந்தபோது, விழா ஏற்பாடுகளைக் கவனித்து வந்த மக்கள் தொடர்பு அதிகாரி ம. நடராஜன் அவருக்கு அறிமுகமானார்.

எம்ஜிஆரின் மறைவைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ம. நடராஜனின் பங்களிப்பு கணிசமாகவே இருந்தது. குறிப்பாக, தில்லியில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஜெயலலிதாவுக்கு ஆதரவு தேடுவதிலும், அவரது சார்பில் செயல்படுவதிலும் ம. நடராஜன் முனைப்புடன் செயல்பட்டதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இப்போது ஆர்.கே. தவானைச் சந்தித்திருப்பதும் அவரது அந்த முயற்சியின் ஒரு பாகமாகத்தான் இருந்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ம. நடராஜன் விடைபெற்றுச் சென்ற பிறகு, ஆர்.கே. தவான் என்னிடம் பேசத் தொடங்கினார்.

""தனது சார்பில் பேசுவதற்காக இவரை அனுப்புவதாக ஜெயலலிதாஜி தொலைபேசியில் என்னிடம் தெரிவித்திருந்தார். அவருடனான சந்திப்பில் நீங்களும் இருக்க வேண்டும் என்று நான் நினைத்ததற்குக் காரணம் இருக்கிறது. இவர்களுடன் நாம் கூட்டணி அமைக்கிறோமோ இல்லையோ, தொடர்பில் இருக்க வேண்டும். உங்களை அவருக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால், அதற்கு நீங்கள்தான் சரியாக இருப்பீர்கள்.''

""நான் அரசியல்ரீதியாக செயல்படுவதைத் தவிர்க்க விரும்புகிறேன். பத்திரிகையாளனாக இருக்கும் நிலையில், எனக்கு எந்தவித அரசியல் முத்திரையும் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். அதனால்...''

""நீங்கள் அரசியல் ரீதியாகச் செயல்பட வேண்டாம். அவருக்கும் எனக்கும் தொடர்பாக இருங்கள். நட்பு ரீதியாகத் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுங்கள் போதும். அரசியலை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.''

தவான்ஜியின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. 

பிரணாப்தாவைப் போலவே எனது வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டியவர் அவர். தனது நம்பிக்கைக்குரியவனாக அவர் எப்போதுமே என்னைக் கருதி வந்திருக்கிறார். 

ஜெயலலிதா - ஜானகி என்று அதிமுக  பிளவுபட்டிருந்த நிலையில், ஜெயலலிதா வகுத்த வியூகம் வித்தியாசமானது. காங்கிரஸூடன் கூட்டணி அமைத்துக் கொள்வதன் மூலம் தன்னை பலப்படுத்திக்கொள்ள நினைத்தார் அவர். தில்லியிலுள்ள முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவருடனும் ஜெயலலிதாவின்  சார்பில் ம. நடராஜன் தொடர்பில் இருந்தார். 

நான் சென்னைக்குத் திரும்பி விட்டேன். காங்கிரஸ் கட்சியின் தமிழக மேற்பார்வையாளராக பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த கேதார் நாத் சிங் என்கிற கே.என். சிங் நியமிக்கப்பட்டிருந்தார். ஆர்.கே. தவான் சொல்லி இருந்ததாலோ என்னவோ, அவர் என்னைச் சந்திக்க விரும்புவதாக வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்தார். கே.என். சிங்கும் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பதால், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சந்தித்தேன்.

""ஜெயலலிதாவின் ஆலோசகர் ம. நடராஜன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவர் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறுகிறார். நான் அவரைச் சந்தித்தால் அது அரசியல் ரீதியாகப் பல பிரச்னைகளை எழுப்பும்.''

""என்ன மாதிரிப் பிரச்னைகள் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?''

""தனித்துப் போட்டியிட விரும்புகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் மூப்பனார்ஜி. இந்த நிலையில், நான் நடராஜனைச் சந்தித்தால் அவர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதுபோல செய்தி வெளியாகும். மூப்பனார்ஜியின் மனம் கோணும் விதத்திலும், அவரது முடிவுக்கு எதிராகவும் நான் செயல்பட விரும்பவில்லை.''

""அப்படியானால் நீங்கள் சந்திப்பைத் தவிர்த்து விடுவதுதானே நல்லது?''

""அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஆனால், ஜெயலலிதாஜிவுடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்ள வேண்டாம் என்று தலைமை நினைக்கிறது, என்ன செய்ய?''

பெரியவர் ஜி.கே. மூப்பனாருக்குத் தெரிந்தால் அவருக்குக் கடும் கோபம்  வரும் என்பது எனக்குத் தெரியும். இதற்கு நான் துணைபோனால், அவருக்கு என் மீது இருக்கும் நல்ல அபிப்பிராயம் ஒரே நொடியில் தகர்ந்துவிடும். இதனால்தான் அரசியல் நிகழ்வுகளில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தேன்.

அறையிலிருந்த தொலைபேசி ஒலித்தது. எழுந்து சென்று கே.என். சிங் எடுத்தார். அவரது முகம் மாறியது. என்னை வரும்படி அழைத்து என்னிடம் தந்தார். எதிர்முனையில் முனைவர் ம. நடராஜன்.

எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் அசாதாரண திறமை ம. நடராஜனுக்கு உண்டு. தான் நினைத்ததை நடத்திக் கொள்வதற்கு எல்லாவித வழிமுறைகளையும் கையாள அவர் தயங்க மாட்டார். யாரை எப்படி தனது நட்பு  வளையத்தில்  கட்டிப் போடுவது என்கிற அசாத்தியத் திறமை படைத்த ம. நடராஜன் தோற்றுப் போனது ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான். அது, ஜெயலலிதாவிடம்!

""எப்படி என்னைச் சந்திப்பது என்று கே.என். சிங் குழம்பிக் கொண்டிருக்கிறார், அப்படித்தானே?'' - எடுத்த எடுப்பில் ம. நடராஜனிடமிருந்து எழுந்த கேள்வி இது. கலகலவென்று சிரித்துவிட்டேன்.

""நான் மாலை விமானத்தில் தில்லிக்குக் கிளம்புகிறேன். நீங்கள் இருவரும் தில்லிக்கு வந்து விடுங்கள். அங்கே சந்தித்துப் பேசிக் கொள்வோம். அவரிடம் சொல்லுங்கள்.''

ம. நடராஜன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவர் சொன்ன தகவலைக் கே.என். சிங்கிடம் தெரிவித்தேன். அவருக்கு மகிழ்ச்சி. தலையசைத்தார். அப்போதைக்குப் பிரச்னை முடிந்த ஆறுதல் அவருக்கு. எனக்குத்தான் பிரச்னை.

அரசியல்வாதிகளுக்கு நினைத்தால் விமானத்தில் பறக்க முடியும். பத்திரிகையாளர்களுக்கு அப்படியா? ரயிலில் சென்று விமானத்தில் பயணித்த இருவரையும் தில்லியில் சந்திக்க, நான்பட்ட சிரமங்களை எழுதினால் கட்டுரை இனியும் நீண்டுவிடும்.

தெளிவான திட்டமிடலுடன்தான் கே.என். சிங்கை சந்திக்க ம. நடராஜன் தில்லிக்கு வந்திருந்தார். ஜெயலலிதாவின் ஒப்புதலுடன்தான் அந்தத் திட்டத்துடன் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார். அவர் முன்வைத்த யோசனைகளைக் கேட்டுவிட்டு நான் ஒரு நிமிடம் பிரமித்தேன். 

ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் அவர் அப்போது முன்மொழிந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழக அரசின் போக்கே மாறியிருக்கக்கூடும். நான் மட்டுமல்ல, கே.என். சிங்கும் அந்த யோசனையைக் கேட்டு வியந்தார். 

தெளிவான திட்டமிடலும், சிந்தனையும் ஜெயலலிதாவுக்கு இருந்ததன் வெளிப்பாடுதான் அந்தத் திட்டம் என்று தோன்றியது. அது ம. நடராஜனின் திட்டமாகவும் இருக்கக்கூடும், தெரியாது.

""காங்கிரஸூம், அதிமுகவின் ஜெயலலிதா அணியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது; தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகளைச் சமமாகப் பங்கு போட்டு, இரண்டு கட்சிகளும் தலா 117 தொகுதிகளில் போட்டிபோட வேண்டும்; அவரவருடன் இணைந்த தோழமைக் கட்சிகளுக்கு, அந்தந்தக் கட்சிகளின் பங்கிலிருந்து இடம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்; ஜெயலலிதா தான் 

முதல்வர் வேட்பாளர்; துணை முதல்வர் என்கிற பேச்சுக்கு இடமில்லை; இரண்டு கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளின் விகிதாச்சாரப்படி அமைச்சரவையில் இடம் வழங்குவது'' - இதுதான் ஜெயலலிதாவின் சார்பில் ம. நடராஜன் முன்மொழிந்த தொகுதிப் பங்கீட்டுக்கான திட்டம்.

எங்களது அடுத்தகட்ட சந்திப்பு தவான்ஜியின் கோல்ஃப் லிங்க்ஸ் வீட்டில் நடந்தது.

""நாம் முன்மொழிந்தது போலல்லவா இருக்கிறது அவர்கள் கூறும் "ஃபார்முலா'' என்று என்னிடமும் கே.என். சிங்கிடமும் ஏற்கெனவே ஆர்.கே. தவான் கூறி, அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்.

""முதல்வர் வேட்பாளராக நாங்கள் ஜெயலலிதாஜியை ஏற்றுக் கொள்ளும் நிலையில், கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சபாநாயகர் பதவி காங்கிரஸூக்குத் தரப்பட வேண்டும்'' என்று நிபந்தனை விதித்தார் ஆர்.கே. தவான்.

""அதை நாம் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம். முதலில் கூட்டணிக்கு நீங்கள் ஒப்புதல் தந்து அறிவிக்க வேண்டும். காங்கிரஸூம், அதிமுக (ஜெ) அணியும் கூட்டணி அமைக்கிறது என்கிற அறிவிப்பு வந்தால், சட்டப்பேரவைத் தேர்தலின் போக்கே மாறிவிடும்'' என்று கூறிவிட்டு என்னைப் பார்த்து, ""நீங்கள் அவர்
களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்'' என்றார் நடராஜன்.

கே.என். சிங் என்னைப் பார்த்தார். ஆர்.கே. தவான் ஏதோ சிந்தனையில் இருந்தார். பேசவில்லை.

""கடந்த 13 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. எம்ஜிஆர் இருந்தவரை அவர்களால் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அதிமுக (ஜெ) - காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் இந்தத் தேர்தலிலும் திமுகவால் வெற்றி பெற முடியாது. எம்ஜிஆருக்குப் பிறகும் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை என்றால் அந்தக் கட்சி மேலும் பலவீனமடையும். இதையெல்லாம் கூட நீங்கள் யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள். நான் வேண்டுமானால் ராஜீவ் காந்தியிடம் நேரில் வந்து இதையெல்லாம் விளக்குகிறேன்.''

""நீங்கள் சொல்வது எல்லாமே ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருக்கின்றன. ஆனாலும், நான் ஜெயலலிதாஜியிடம் பேசி அவரது ஒப்புதலைப் பெற்ற பிறகுதான், பிரதமரிடம் இது குறித்துக் கூற முடியும்.'' - ம. நடராஜனிடம் ஆர்.கே.  தவான் சொல்லிக் கொண்டிருந்தார்.

தொலைபேசி மணி ஒலித்தது. தவான்ஜியின் உதவியாளர், "சென்னையிலிருந்து ட்ரங்க் கால்' என்றபடி "ரிமோட்' ரிசீவரை அவரிடம் கொடுத்தார். என்ன ஆச்சரியம், எதிர்முனையில் ஜெயலலிதா...

நானும், கே.என். சிங்கும், ஆர்.கே. தவானையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் தொலைபேசியில், "ஜி... ஜி... ஜி...' என்று எதிர்முனையில் பேசிக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்குத் தனது ஆமோதிப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

ம. நடராஜனின் முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com