'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 15

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 15

ஜெயலலிதாவுடனான தொலைபேசி உரையாடல் முடிந்ததும் என்னைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தார் தவான்ஜி. என்ன சொல்லப் போகிறார் என்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.


ஜெயலலிதாவுடனான தொலைபேசி உரையாடல் முடிந்ததும் என்னைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தார் தவான்ஜி. என்ன சொல்லப் போகிறார் என்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நடராஜன்தான் பேச்சை எடுத்தார். 

""இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?'' என்று ம. நடராஜன் கேட்டதும், வாய்விட்டுச் சிரித்து விட்டார் ஆர்.கே. தவான். 

""பிரதமரிடம் ஒரு செய்தியையோ, பிரச்னையையோ எடுத்துச் சொல்வதற்கு முன்னர், அது குறித்த தெளிவு இருக்க வேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில் நம்மிடம் இருக்க வேண்டும். அதனால்தான், ஜெயலலிதாஜியின் ஒப்புதலை நான் வற்புறுத்தினேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்'' என்று நடராஜனிடம் தெரிவித்தார் அவர். 

சிறிது நேரம் அடுத்தகட்ட நகர்வு குறித்து நடராஜனும் தவான்ஜியும் விவாதித்தார்கள்.

அடுத்த நாள் காலையிலோ, மாலையிலோ பிரதமர் ராஜீவ் காந்தியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக நடராஜனிடம் தெரிவித்தார் ஆர்.கே. தவான். 
ம. நடராஜனும், கே.என். சிங்கும் விடைபெற்றனர். 

ஜெயலலிதா என்ன சொல்லியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆவலாக இருந்தேன் நான்.  

""ஜெயலலிதா என்ன சொன்னார்? நடராஜன் குறித்துகூட அவர் ஏதாவது தெரிவித்திருப்பாரே...''  

""ஜெயலலிதாஜியும் நடராஜனும் ஏற்கெனவே நன்றாக சிந்தித்துப் பேசி எடுத்திருக்கும் முடிவுதான் இந்த ஃபார்முலா. இந்திராஜி இருந்திருந்தால் தனக்கு முழுப் பாதுகாப்பும், ஆதரவும் தந்திருப்பார் என்பதைத் திரும்பத் திரும்ப எனக்கு நினைவுபடுத்தினார் அவர். இந்த இக்கட்டான தருணத்தில் காங்கிரஸ் தனக்கு உதவி செய்தால், ராஜீவ் காந்தியின் உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்''

""வேறு என்ன சொன்னார்?''

""அரசியலில் என்னை இழுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு இப்போது இவ்வளவு ஆர்வமாகத் துருவித் துருவி கேட்கிறாயே, இதையெல்லாம் பத்திரிகை  செய்தியாக்கி விடக்கூடாது'' என்று அவர் சொன்னதும் எனது முகம் வாடிவிட்டது. வரம்பு மீறிவிட்டோமோ என்கிற குற்ற உணர்வு மேலிட்டது. 

எனது முக வாட்டத்தைப் புரிந்து கொண்டார் தவான்ஜி. அருகில் வந்து தோளில் தட்டிக் கொடுத்தார். 

""நோ... நோ... விளையாட்டுக்குச் சொன்னேன். உன்னை நம்பாவிட்டால் வேறு யாரை நம்புவது? வெறும் பத்திரிகையாளனாகவே இருந்தால் எப்படி? கொஞ்சம் அரசியலும் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சமாதானப்படுத்தியபோதுதான் நான் சகஜநிலைக்குத் திரும்பினேன். அவர் தொடர்ந்தார். 

""நமது பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதற்கு, நாம் கூட்டணி அமைத்தால்தான் முடியும் என்று கருதுகிறார் ஜெயலலிதாஜி. அவரது பிரநிதியாக நடராஜனைக் கருதலாம் என்றும், அவரது முழு நம்பிக்கைக்கும் பாத்திரமான நடராஜனுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தையும் தான் வழங்கி இருப்பதாகவும் சொன்னார். அதே நேரத்தில், எதற்கும் தன்னிடமும் அவ்வப்போது நேரிடையாகத் தொடர்பு கொள்ளச் சொன்னார்''

தவான்ஜியின் பேச்சிலிருந்து, கூட்டணி முடிவில் ஜெயலலிதா ஆர்வமாக இருப்பது தெரிந்தது. நடராஜனை அவர் அனுப்பி இருப்பதே எப்படியும் கூட்டணி அமைத்துவிடும் முயற்சி என்பதும் புரிந்தது. தவான்ஜி எழுந்து, வீட்டிற்குள் செல்லத் தயாரானார். நானும் விடைபெற்றுக் கொள்ள எழுந்தேன். எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. தயங்கியபடியே நின்றேன். புரிந்து கொண்டார் அவர்... 

""என்ன நினைக்கிறாய்?''

""ஒன்றுமில்லை, ஒரு சின்ன சந்தேகம். இதற்கு நடராஜனை தில்லிக்கு அனுப்புவானேன் ஜெயலலிதா? சென்னையிலேயே மூப்பனார்ஜியிடம் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாமே?'' 

""மூப்பனார்ஜி இந்த ஃபார்முலாவை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று கருதுகிறார் அவர். தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற மூப்பனார்ஜியின் திட்டம் வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, திமுகவுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார் .'' 

நான் எதுவும் பேசவில்லை. மெல்ல  புன்னகைத்தேன். எனது முகபாவனையிலிருந்து நான் ஏதோ  நினைக்கிறேன் என்பதை தவான்ஜி புரிந்து கொண்டுவிட்டார். அவர் எப்போதுமே அப்படித்தான். அடுத்தவர்களின் மனதை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதில் சமர்த்தர். அதனால்தான், இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். 

""என்ன யோசிக்கிறாய்?'' 

""ஒன்றுமில்லை, மூன்று தஞ்சாவூர்க்காரர்களுக்கும் இடையேயான ராஜதந்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது...''

""புரியவில்லை...''

""காவிரித் தண்ணீர் குடித்து வளரும் தஞ்சாவூர்க்காரர்கள் புத்திசாலிகள் என்கிற பிம்பம் தமிழகத்தில் உண்டு. கருணாநிதி, மூப்பனார், நடராஜன் மூன்று பேருமே தஞ்சாவூர்க்காரர்கள். இவர்கள் மூவரில் யார் அதிபுத்திசாலி என்கிற போட்டி நடக்கிறது என்று நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது'' என்றேன்.

எனக்கு  செல்லமாக ஓர் அடி தந்துவிட்டு தவான்ஜி வீட்டிற்குள் போய்விட்டார். நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். 

அதற்குப் பிறகு அசுர வேகத்தில் அரசியல் நிகழ்வுகள் நகரத் தொடங்கின. அடுத்த நாளே பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார் ம. நடராஜன். அவர்கள் இருவர் மட்டுமே தனியாக அரைமணி நேரத்துக்கும் மேல் பேசியதாக என்னிடம் நடராஜன் மாலையில் தெரிவித்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. நடராஜன் என்னிடம் எதுவும் பகிர்ந்துகொள்ளவில்லை. 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் "சாகர் ரத்னா' என்கிற தென்னிந்திய உணவகம் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆரம்பத்தில் லோதி ஹோட்டலில் இயங்கி வந்த அந்த உணவகத்தில், தில்லியின் பிரபலங்கள் பலரையும் சந்திக்க முடியும். "சாகர் ரத்னா' மசால் தோசையும், மதிய உணவும், டிகாக்ஷன் காபியும் அவ்வளவு பிரபலம்.

லோதி ஹோட்டலில் இயங்கிவந்த "சாகர் ரத்னா', ஆர்.கே. தவானின் வீட்டிற்கு அருகிலுள்ள கான் மார்க்கெட்டில் அமைந்த அம்பாசிடர் ஹோட்டலிலும் இயங்கத் தொடங்கியது. இப்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான 24, அக்பர் ரோட்டிலுள்ள உணவகம் "சாகர் ரத்னா' உரிமையாளர்களால்தான் நடத்தப்படுகிறது.

மதிய உணவுக்கு அம்பாசிடர் ஹோட்டலில் இருந்த "சாகர் ரத்னா' உணவகத்துக்கு நான் சென்றபோது, அங்கே ம. நடராஜன் ஒரு மேஜையில் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  

தேர்தல் நெருங்குகிறது என்றும், எந்த முடிவும் எடுக்காமல் காங்கிரஸ் தலைமை இருக்கிறது என்றும் வருத்தப்பட்டார். மூப்பனாரும், திமுகவும் தங்களது திட்டத்தைக் கலைத்துவிடுவார்கள் என்கிற கவலை அவரிடம் தெரிந்தது.  

உணவு முடிந்து, அவரிடமிருந்து விடைபெற்று நான் கன்னாட் பிளேசிலுள்ள (இப்போதைய ராஜீவ் செளக்) எனது செய்தி நிறுவனமான நியூஸ் கிரைபின் அலுவலக அறைக்கு வந்துவிட்டேன். 

நான் முன்பே குறிப்பிட்டதுபோல, மூன்று தஞ்சாவூர்க்காரர்களின் ராஜதந்திர நகர்வுகள் அப்போதைய 1989 பிப்ரவரி சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறிக் கொண்டிருந்தன. சிவாஜி கணேசனையும் அவர்களில் ஒருவராகச் சேர்ந்தால் நான்கு தஞ்சாவூர்க்காரர்களுக்கு இடையே நடக்கும் அரசியல் போட்டி என்று அதைக் கூற முடியும். 

எப்படியும் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன், ஜெயலலிதாவின் சார்பில் முனைவர் ம. நடராஜன் தில்லியில் முகாமிட்டிருந்தார். அது மூப்பனாருக்கும், கருணாநிதிக்கும் தெரியாமல் இருந்திருக்காது. காங்கிரஸ் - அதிமுக (ஜெயலலிதா) இடையே கூட்டணி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எல்லோரையும்விட  கருணாநிதி முனைப்பாக இருந்ததில் வியப்பில்லை. 

கருணாநிதி மிகவும் சாதுர்யமாக, இருந்த இடத்திலிருந்து காயை நகர்த்தத் தொடங்கினார். திமுகவுடன் ஜானகி அணியினர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கசியவிட்ட தகவல்களும், சமிக்ஞைகளும் தில்லியில் பிரதிபலிக்கத் தொடங்கின. ஜெயலலிதாவும், கருணாநிதியும் முன்னெடுக்கும் நகர்வுகளால் ஜி.கே. மூப்பனாரும் சற்று கவலையில் இருந்தார் என்றுதான் நினைக்கிறேன்.  

இந்த இடத்தில் ஜி.கே. மூப்பனார் குறித்தும் சொல்லியாக வேண்டும். எம்ஜிஆர் மறைந்து அதிமுக பிளவுபட்டிருப்பதும், 13 ஆண்டுகளாகப் பதவியில் இல்லாத நிலையில் திமுக பலவீனமடைந்திருப்பதும், தமிழகத்தில் காங்கிரஸூக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க ஏற்ற தருணம் என்று அவர் கருதினார். நேரு குடும்பத்துக்கு தமிழகத்தில் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி, எப்படியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்பது அவர் வகுத்த வியூகம். 

காங்கிரஸ் - ஜெயலலிதா கூட்டணி உருவானால், திமுக - ஜானகி அணி கூட்டணியை கருணாநிதி உருவாக்கி விடுவார் என்று எதிர்பார்த்தார் மூப்பனார். அதற்கு ஏற்றாற்போல, சிவாஜி கணேசனும், ஜானகி அணியின் முக்கியத் தலைவர்களும் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர்.  

காங்கிரஸ், திமுக, ஜெயலலிதா, ஜானகி அணிகள் தனித்தனியாக போட்டியிட்டால்தான் காங்கிரஸூக்குச் சாதகமாக இருக்கும் என்று மூப்பனார் போட்ட அதே கணக்கை, திமுகவுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார் ராஜதந்திரியான கருணாநிதி. தனித்துப் போட்டி என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனார் உறுதியாக இருந்தார். 

""காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், குறைந்தது 60 முதல் 80 இடங்களில் வெற்றி பெறும்; காங்கிரஸின் ஆதரவில்லாமல் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, ஜானகியோ ஆட்சி அமைத்துவிட முடியாது; இந்தத் தருணத்தை கூட்டணி அமைத்து நழுவவிட்டால், அதன் மூலம் ஜெயலலிதாவை வளர்ப்பதாகிவிடும்; இனிமேல் ஒரு காலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முடியாது என்றும், ஒருவேளை திமுகவே ஆட்சியைக் கைப்பற்றினாலும் பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உயரும் என்றும், பிளவுபட்ட அண்ணா திமுக வலுவிழந்து முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூட ஜி.கே.  மூப்பனார் கருதியிருக்கலாம்'' என்று தவான்ஜி என்னிடம் தெரிவித்தார். 

""இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?''

""காங்கிரûஸ மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்கிற மூப்பனாரின் எண்ணத்தை நாம் குறை கூற முடியாது. அவரைவிடக் காங்கிரஸ் கட்சியை நேசிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால்...'' 

""ஆனால்.. என்ன?'' 

""பல முனைப் போட்டி ஏற்பட்டால் அது திமுகவுக்குத்தான் சாதகமாக இருக்கும். அதுமட்டுமல்ல, ஜெயலலிதா அணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால், அவர் அசைக்க முடியாத சக்தியாகி விடுவார். அப்படி ஒரு சூழ்நிலை உருவானாலும், காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை ஒருநாளும் பிடிக்க முடியாமல் போகும்.''

தவான்ஜி சிரித்தார். ""நீ நிறையவே அரசியல் கற்றுக்கொண்டு விட்டாய்'' என்று எனக்குச் சான்றிதழ் வழங்கினார். நான் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன். 

ராஜீவ் காந்தியின் முடிவுக்குக் காத்திருந்த ம. நடராஜனுக்கு ஏமாற்றம். ஜெயலலிதா அணியுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார் பிரதமர் ராஜீவ் காந்தி.  

காங்கிரஸ் முழு முனைப்புடன் தனித்துப் போட்டியிடுவது என்று தில்லியில் முடிவெடுத்த மறுகணம், ஜானகி அணியுடன் தேர்தல் உடன்படிக்கை என்கிற வாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் திமுக தலைவர் கருணாநிதி. அதன் மூலம் நான்குமுனைப் போட்டியை உறுதிப்படுத்திய திமுக தலைவர் கருணாநிதியின் ராஜதந்திரம்தான், 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. 

சென்னைக்குத் திரும்புவதற்கு முன்பு, வழக்கம்போல பிரணாப்தாவை சந்திக்கச் சென்றிருந்தேன். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பற்றியும், ராஜீவ் காந்தியின் முடிவு பற்றியும் பேச்சு எழுந்தது. தனது கருத்தை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தினார் பிரணாப் முகர்ஜி.

""பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுதான் சரியானது. எப்போது மூப்பனார்ஜியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமித்துவிட்டாரோ, அப்போது அவர் எடுக்கும் முடிவுக்கு செவிசாய்ப்பதுதான் தலைமையின் சரியான அணுகுமுறையாக இருக்கும். மூப்பனார்ஜி ஒன்றும் அரசியல் தெரியாதவரல்ல. தனித்துப் போட்டி என்கிற அவரது முடிவுக்கு ஏதாவது காரணம் நிச்சயமாக இருக்கும்'' என்று பிரணாப்தா கூறியபோது நான் எதுவும் பேசவில்லை. சற்று நேர மெளனத்துக்குப் பிறகு பிரணாப்தாவே மீண்டும் பேசினார்-

""காங்கிரஸூடனான கூட்டணி அமையாவிட்டாலும், ஜெயலலிதா ஓர் அரசியல் சக்தியாக தேர்தலுக்குப் பிறகு உருவாகப் போகிறார்...''

கருணாநிதியின் ராஜதந்திரத்தைப் போலவே, பிரணாப் முகர்ஜியின் தீர்க்கதரிசனமும் வென்றது!

(தொடரும்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com