பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்!  - 16

பத்து நிமிடம் கழித்துத் திரும்பிவந்த உதவியாளர் நாகராஜ் என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். அடுத்த இரண்டு மணி நேரம் நான் அந்த அறையில் காத்திருந்தேன். 
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்!  - 16

நான் சென்னை திரும்பியபோது, தேர்தல் அறிவிக்கப்பட்டு, எல்லா கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. வழக்கம்போல, காங்கிரஸ் கட்சியில் மட்டும் வேட்பாளர்களை முடிவு செய்வது தில்லியாக இருந்ததால், பலரும் தில்லிக்கும் சென்னைக்குமாகப் பறந்து கொண்டிருந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜி.கே. மூப்பனார் நியமிக்கப்பட்டது முதல், கட்சியின் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனிலிருந்து தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலுள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. கூப்பிடு தூரத்தில் காங்கிரஸ் தலைமை அலுவலகமும், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயமும் இருந்ததால், பத்திரிகையாளர்களுக்கு வசதியாகிவிட்டது. அங்குமிங்குமாக நாங்கள் ஓடிக்கொண்டிருந்தோம்.

வடநாட்டிலுள்ள எல்லாப் பத்திரிகைகளும் தமிழகத் தேர்தலை உன்னிப்பாகக் கவனித்து வந்தன. எனது செய்தி நிறுவனமான "நியூஸ்கிரைப்' தொடங்கி சில மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தன. சென்னையில் நிருபர்கள் இல்லாத வெளிமாநில தினசரிகளுக்கு "நியூஸ்கிரைப்' வரப்பிரசாதமாக அமைந்தது என்றுபல நாளிதழ்களின் ஆசிரியர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

அன்றைய பரபரப்பான அரசியல் சூழல், தேர்தலில் காங்கிரஸýக்கும் திமுகவுக்கும் நேரடிப் போட்டி நடைபெறுகிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதிமுக பிளவுபட்டு, ஜெயலலிதா, ஜானகி அணியினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். சிவாஜி கணேசனின் "தமிழக முற்போக்கு முன்னணி' எதிர்பார்த்த பரபரப்பை ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்தவில்லை. அவரைத் தவிர அவருக்குப் பின்னால் குறிப்பிடத்தக்க காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லாமல் இருந்ததுதான் அதற்குக் காரணம் என்பது எனது கணிப்பு.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், தேனாம்பேட்டை காங்கிரஸ் தலைமையகத்துக்கும் "ஹாட்லைன்' எனப்படும் உடனடி தொலைபேசி சேவை நிறுவப்பட்டிருந்தது. அதேபோல, சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமும், தில்லி அக்பர் சாலையிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகமும் "ஹாட்லைன்' தொடர்பில் இருந்தன. 1967-இல் இழந்த தமிழகத்தை 1989-இல் எப்படியும் கைப்பற்றியாக வேண்டும் என்கிற முனைப்பு காங்கிரஸôர் மத்தியில் காணப்பட்டதை நான் உணர்ந்தேன்.

வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்ட ஒரு சில மூப்பனார் எதிர்ப்பாளர்களைத் தவிர, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் காணப்படும் எல்லா கோஷ்டிகளும் மூப்பனார் தலைமையின்கீழ் இணைந்து பணியாற்றிய அதிசயத்தை நானும், ஏனைய பத்திரிகை நண்பர்களும் பார்த்து வியந்தோம் என்கிற உண்மையை இந்த இடத்தில் பதிவு செய்தாக வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி பல வசதிகளைச் செய்து கொடுத்தார். தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த நிருபர்கள் அறையில் ஐந்து தொலைபேசி இணைப்புகள் அவரால் நிறுவப்பட்டிருந்தன. எந்தவித இடையூறோ, கேள்வியோ இல்லாமல் நிருபர்கள் அந்தத் தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வழிகோலப்பட்டது.

தில்லியில் ஆர்.கே. தவானையும், பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தையும் அடிக்கடி தொடர்பு கொள்ளவும், தில்லி பத்திரிகை நண்பர்களுடன் அளவளாவவும் மிகவும் வசதியாக இருந்தது. மக்களவை உறுப்பினரான ரங்கராஜன் குமாரமங்கலம் எனது நண்பர் என்பதால், தில்லிக்கு "ஹாட்லைன்' மூலம் பேசுவதற்கு உதவினார்.

ஒருநாள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைச் செயலாளராக இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஏ.ஆர். மல்லுவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, பிரணாப்தா அக்பர் ரோடு அலுவலகம் வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தார். ஏதோ அறிக்கை தயாரிப்பதற்காக வந்திருப்பதாகவும், வேறோர் அறையில் இருக்கிறார் என்றும் அவர் சொன்னபோது, நான் அவரை அழைக்கலாமா என்று கேட்கச் சொன்னேன்.

தேவையில்லாமல் அழைப்பதும், வேறு வேலையில் இருக்கும்போது அவரைத் தொந்தரவு செய்வதும் பிரணாப்தாவுக்குப் பிடிக்காதுஎன்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அவரிடம் இரண்டு வார்த்தை பேசிவிட மாட்டோமா என்கிற எனது ஏக்கம்தான் நண்பர் மல்லுவை அவரிடம் கேட்கும்படி அனுப்பியது. மல்லுவின் பதிலுக்காக நான் தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலக பத்திரிகையாளர் அறையில் காத்திருந்தேன்.

சில நிமிடங்கள் கடந்தன. அந்த அறையிலிருந்த இன்னொரு தொலைபேசி ஒலித்தது. அறையில் வேறு யாரும் இல்லாததால், நான் அந்த அழைப்பை எடுத்தேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் டெலிபோன் ஆப்பரேட்டரின் குரல் எதிர்முனையில். ""வைத்தியநாதன்ஜி இருக்கிறாரா, பிரணாப் முகர்ஜி பேச விரும்புகிறார்''என்று அவர் சொன்னபோது திகைத்துவிட்டேன்.

நிஜத்தைச் சொல்கிறேன். எனக்கு அப்போது அழுகையே வந்துவிட்டது. அழைக்க விரும்புகிறேன் என்று நான் சொல்வதற்குள் என்னைத் திரும்பி அழைப்பதற்கு அப்போது நான் ஒன்றும் பெரிய பத்திரிகையாளனோ, இப்போதுபோல பிரபல நாளிதழின் ஆசிரியரோ அல்ல. சில வினாடிகளில் இணைப்பு வழங்கப்பட்டது.

""ஹலோ, எப்படி இருக்கிறாய்? என்ன, எங்கள் கட்சி அலுவலகத்தையே உனது அலுவலகமாக்கி விட்டாயா? மதராஸில் என்ன நடக்கிறது? எப்படி இருக்கிறது காங்கிரஸ் வாய்ப்பு?''- கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினார் பிரணாப்தா.
தமிழ்நாடு காங்கிரஸிலுள்ள எல்லா கோஷ்டிகளும் இணைந்து செயல்படுவது குறித்து நான் சொன்னபோது, அவர் சிரித்தார்.

""அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கோஷ்டிகள் அப்படித்தான். தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவதுவரை, கோஷ்டிகள் போட்டா போட்டி போடுவதும், அறிவிக்கப்பட்டுவிட்டால் இணைந்து செயல்படுவதும் காங்கிரஸின் கலாசாரம். உனக்குப் புதிது, அவ்வளவுதான். வாய்ப்பு எப்படி இருக்கிறது?''

""கட்சிக்காரர்களிடம் காணப்படும் உற்சாகம் மக்களிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ராஜீவ்ஜியின் பிரசாரத்தைப் பொருத்துத்தான் காங்கிரஸின் வாய்ப்பு அமையும். எனக்கென்னவோ, போட்டி கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில்தான் இருக்கப்போகிறது என்று தோன்றுகிறது...''
""காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து இப்படியெல்லாம் பேசிக் ண்டிருக்காதே... உனது சொந்தக் கருத்தைச் சொல்வதற்கான இடமல்ல அது. பத்திரிகையாளர் அறையைத் தவறாக பயன்படுத்துகிறாய் என்கிற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது. நேரில் பேசிக் கொள்ளலாம்''என்றபடி இணைப்பைத் துண்டித்து
விட்டார் பிரணாப்தா.

அவர் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களைத் தெரிந்து கொண்டுவிட்டார். எனக்குச் சொல்ல வேண்டிய அறிவுரையைத் தந்து விட்டார். "நறுக்' கென்று பேச்சை முடித்துக் கொண்டுவிட்டார். அதற்கு மேலும் அந்த அறையில் இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்து வெளியில் வந்துவிட்டேன்.

ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தலைமையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. காங்கிரஸின் மறைமுக ஆட்சி நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்ததில் வியப்பில்லை. பிரதமர் பலமுறை மாநிலத்திற்கு வருகிறார் என்றால் அப்படி ஒரு தோற்றம் ஏற்படுவது இயல்பும் கூட.

பிரதமர் ராஜீவ் காந்தி 12 முறை தமிழகத்துக்குப் பிரசாரத்திற்கு வந்தது வரலாற்று நிகழ்வு. அதற்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, எந்தவொரு பிரதமரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதுபோல பிரசாரம் மேற்கொண்டதில்லை.

ராஜீவ் காந்தியின் 12 தமிழக தேர்தல் பிரசார விஜயங்களில், ஐந்து விஜயங்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்டன. அவரது தமிழக சுற்றுப்பயணத்தில் மூன்று நான்கு சுற்றுப்பயணங்களில் நானும் நிருபர்கள் கூட்டத்துடன் கலந்து கொண்டேன் என்றாலும், முழுமையாகப் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.

தேர்தலுக்கு முந்தைய கடைசி 10 நாட்களில், ஐந்து முறை தமிழகம் வந்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. சுமார் 5,000-க்கும் அதிகமான கிலோ மீட்டர்களை சாலை வழியாகவும், ஹெலிகாப்டரிலும் பயணித்து ராஜீவ் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

""234 தொகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளுக்கு நேரில் சென்று பிரசாரம் செய்த முதலும், கடைசியுமான பிரதமர் ராஜீவ் காந்தியாகத்தான் இருக்கும். சாலைகள் வழியாகப் பயணிக்கும் போதும், சிறு நகரங்களில் வாகனத்திலிருந்து பேசும்போதும், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் என்று ஏறத்தாழ 25 லட்சம் பேரிடம் காங்கிரஸýக்காக வாக்குக் கேட்டிருப்பார் அவர்''என்று நான் எனது டைரிக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறேன்.

1989 ஜனவரி 16-ஆம் தேதி மூன்று பொதுக்கூட்டங்கள், 17-ஆம் தேதி ஏழு பொதுக்கூட்டங்கள், 19-ஆம் தேதி வன்னியர்கள் அதிகமுள்ள வட தமிழகத்தில் ஏழு கூட்டங்கள் என்று மூன்று நாட்களில் 17 கூட்டங்களில் அவர் பேசி இருக்கிறார். அவருடன் சோனியா காந்தியும் பெரும்பாலான தேர்தல் சுற்றுப்பயணத்தில் கூடவே வந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பூட்டா சிங், ஃபோட்டேதார், ஷீலா தீட்சித், ஜெகதீஷ் டைட்லர், அஜித் பாஞ்சா, ராஜேந்திரகுமாரி பாஜ்பாய், மார்கரெட் ஆல்வா, ஜனார்தன் பூஜாரி என்று பல அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தவண்ணம் இருந்தனர். அவர்களில் பலர் எனக்கு தில்லியில் அறிமுகமானவர்கள்.

பிரதமர் ராஜீவ் காந்தி பிரசாரத்துக்காக அடிக்கடி தமிழகம் வருவது குறித்து - ஒருநாள் நிருபர்களுடன் பேசும்போது, திமுக தலைவர் கருணாநிதி கிண்டலாகத் தெரிவித்த கருத்தை, நான் டைரியில் குறித்து வைத்திருக்கிறேன்.
""பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்திலுள்ள எல்லா மசூதிகள், மாதா கோயில்கள், ஆலயங்கள், மதத் தலைவர்கள் என்று எங்கெல்லாம் வாக்குகள் கிடைக்குமோ அங்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறார். இதனாலெல்லாம் அவருக்குப் புண்ணியம் கிடைக்குமோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக வாக்குகள் கிடைக்கப் போவதில்லை.''

மேலே குறிப்பிட்ட திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடனான ராஜீவ் காந்தியின் சந்திப்பு குறித்தது என்று நான் நினைக்கிறேன். குறித்து வைக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியாகின. திமுக தலைவர் கருணாநிதி திட்டமிட்டதுபோல நான்கு முனைப்போட்டி அவருக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துவிட்டது. 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 150 இடங்களில் திமுகவும், 27 இடங்களில் ஜெயலலிதாஅதிமுகவும், 26 இடங்களில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸýம் வென்றன.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவும், காங்கிரஸýடன் கூட்டணி அமைக்காததும்தான் திமுகவின் வெற்றிக்குக் காரணம் என்பதை வாக்கு விகிதம் வெளிச்சம் போட்டுக்காட்டிய அதிமுக (ஜெ) 22.37%, காங்கிரஸ் 19.83%, அதிமுக (ஜா) 9.19% ஆகியவற்றைச் சேர்த்தால், அந்த அணிக்கு 51.39% வாக்குகள் கிடைத்திருக்கும். வெற்றி பெற்ற திமுக பெற்றது 37.89% வாக்குகள் மட்டும்தான்.

முடிவுகள் வெளியான அடுத்த வாரமே நான் தில்லிக்கு ரயிலேறிவிட்டேன். முக்கியமான காங்கிரஸ் தலைவர்களையும், சந்திரசேகர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்தேன்.

ஆர்.கே. தவானை சந்திக்கப் பிரதமர் அலுவலகம் சென்றிருந்தபோது, அவர் பிரதமரின் அறைக்கு என்னையும் அழைத்துச் சென்றார். தமிழகத் தேர்தல் முடிவுகுறித்து என்னிடம் கருத்து கேட்டார்கள். சொன்னேன். பிரதமர் ராஜீவ் காந்தி புன்னகையுடன் நான் பேசுவதைக் கேட்டார். ஐந்தாறு நிமிடங்கள்தாம். கைகுலுக்கி விடைபெற்று வெளியே வந்துவிட்டேன்.

மீண்டும், பிரதமர் அலுவலகத்திலிருந்த ஆர்.கே. தவானின் அறைக்கு வந்தேன். நாற்காலியில் அமர்ந்தேன். சஞ்சய் காந்திக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையேயான வித்தியாசத்தை நான் அப்போது உணர்ந்தேன். அது என்னவென்று பிறகு தெரிவிக்கிறேன்.

சற்று நேரம் கழித்து அறைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்த தவான்ஜி, என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு உத்தரவு பிறப்பிக்கும் தோரணையில் எனக்கொரு வேண்டுகோளை விடுத்தார். ராஜீவ் காந்தி தயாரோ இல்லையோ, தவான்ஜி அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்குத் தயாராகி விட்டார் என்பதை அவரது அந்த வேண்டுகோள் உணர்த்தியது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com