Enable Javscript for better performance
சேவை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  சேவை

  By அல்லி உதயன்  |   Published On : 02nd February 2020 10:37 PM  |   Last Updated : 02nd February 2020 10:37 PM  |  அ+அ அ-  |  

  kadhir5

  ""அஞ்சு பவுன அம்பதாப் பெருக்குவாங்கன்னு கண்டோம்... இங்க என்னடான்னா அஞ்சாக் கரைக்கிற கொடும நடந்திருக்கு... கேட்டா ஊர்ல நாந்தே பெரியாள்ங்கிறது... கொஞ்சமாச்சும் நெஞ்சுல   ஈரம் தட்டுதான்னு பாரு...'' அவள் காளி கோலம் பூணும் நேரம். ருத்ரதாண்டவக் காட்சிகள் இனி'' 
  அரங்கேறும்.

  மழைநீர் வேகம் குறைந்து இறங்கியது. அஸ்பெட்டாஸ் ஒழுகலில் பொட்டுப்பொடுசுகள் நிறைந்தன. அறவே நின்று கொள்ளாத சாரலென அவள் தொண தொணக்கிறாள். கையகல அறையில் முகத்தில் முகம் விழாமல் தீராது.
  ஒரு ஃபோன் வந்தால் அதுவே சாக்கென இறங்கிக் கொள்ளலாம். ரகசியமாய் ஒரு மிஸ்டுகால் விட்டும் அழைக்கச் செய்யலாம்.

  பிள்ளைகள் ஆளாகி அவரவர் பாடு பார்க்கப் போனார்கள். பள்ளி, கல்லூரி, வேலை, கல்யாணம் என அத்தனையிலும் அவளது தீவிரம் இருந்தது. பேரப் பிள்ளைகள் தோள் தொத்தி இறங்கினார்கள். தழுவிக் கொள்ள மட்டுமே இவன் இருந்தான்.
  ""ஊருக்கு மணக்குமாம் தாழம் பூன்னு சொலவட சொன்ன மாதிரி... மஞ்சக் கவுத்தக் கட்டிட்டா எங்கயும் போக மாட்டாங்கிற தைரியந்தா இம்புட்டயும் செய்யச் சொல்லுது.  ஆனமானதப் பாக்க வேணாமா? ஆம்பள சிங்கமா நடக்க வேணாமா?''” பேச்சுக்களின் பேரரசியாய் இருந்தாள் அவள்.
  அடை தட்டிப் போட்டிருக்கிறாள். இன்னொன்றுக்காக நா கூவியது. மழை ஈரத்திற்கு இதம் தரும். கொஞ்சம் டீயும் இருந்தால் கேட்கவே வேண்டாம். ஒரு கடி ஒரு குடி என்று போகும். ஒழிவாக கிச்சனைத் தேடத் துணிவில்லை. "வைத்துத்தா' என அதிகாரக் குரல் எழுப்பவும் முடியாது.  அதுவெல்லாம் முடிந்து ஆண்டுகள் பல ஓடி விட்டன. “
  ""அந்த அளவுல ஓம் புருஷம் பரவால்ல... இந்த வயசுலயும் எம்புட்டு வேல.. செம்புத் தண்ணிய தூக்கித் தர எங்க வீட்ல ஆள் இல்ல...''” பொருமாதவர்கள் ஊரில் குறைவு.
  வெளியில் தெருவில் தூத்தித் தெளிப்பது; தொட்டிகளில் நீர் நிரப்புவது ; சாக்கடை அடைப்பு
  களைச் சரி செய்வது ; பழுதாகும் தெரு விளக்குகளைப் போடச் செய்வது... ஒன்று என்றால் ஊராட்சி அலுவலகம் ஓடுவது ; ஊர்வலம் போவது ; ஓட்டுக்கு நிற்பது... எல்லாம் பார்த்ததில் பாஸ் மார்க் போட்டது ஊர் ; ஃபெயில் மார்க் போட்டாள் அவள்.
  தெருவில் புருஷன்மார்கள் சம்பாத்தியத்தில் "நான் முந்தி; நீ முந்தி' என்றிருந்தார்கள். கூரைகள் காரைகள்
  ஆகின. கட்டடங்கள் மாடிகளைக் கண்டன. வீடுகளில் வாகனங்கள் பெருகின. போர்டிக்கோ இல்லாதவர்கள் முக்காடிட்டு வீதியில் காரை நிறுத்தினார்கள். செல் இல்லாதவர்கள் சொல் இல்லாதவர்கள் ஆனார்கள்.
  மழை தீர்ந்தது போலிருந்தது. பெய்த அளவில் அரை முக்கால் என நிரம்பியிருந்தன. தூக்கி வடித்து கொல்லையில் ஊற்றினான். ஒரு நாள் புழக்கத்திற்கு வரும். மழை நீர் சேகரிப்பது இதுதான்.
  பேசப் பேச கூடப் பேசினால் குற்றம். மழை போல் மெளனிக்க வேண்டும். முழுதும் ஓய்ந்து விடுவதில்லை. பிறகொரு நாள் கொட்டித் தீர்க்கும். நிரந்தர ஓய்வு மழைக்கும் இல்லை ; அவளுக்கும் இல்லை.
  தாழ்வாரத்திற்கு வெளியே குழந்தையாய் கை நீட்டினான். பூந்தூறலும் பொசிந்திருந்தது. ஐந்து மணி மாலையில் பூந்தூறல் நன்று. பெருப்பதுமில்லை ; சொட்டுக்களை விடுவதுமில்லை. சட்டென வெளிவாங்கவும் செய்யும்.
  அவள் தீவிரமாய்ப் பார்த்தாள். ஏறெடுத்தால், "என்ன?' வென அதிர்வாள். வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை. நிச்சயம் ஆற்றுப் பாலத்தைச் செல்வம் அடைந்திருப்பான். மழையோ குளிரோ ஒரு நடை வேண்டும். நாலு வார்த்தைகள் வேண்டும்.
  ""செத்த கோயில் வரைக்கும் போயிட்டு வந்திர்றே... ஏதாச்சும் வேணுமா?'' வேலியில் போகும் ஓணானைத் தோளில் போடும் வேலை இது. 
  "வாயப் புடுங்கி வனவாசம் போறீங்க' என்பாள்.
  ""நா என்ன புடுச்சா வச்சிருக்கே... ஓடுகாலி ஒரு எடத்துல நிய்க்குமா?''  என்றவள், “
  ""என்னத்த பெரீசா வீங்கப் போறீக... போயி அள்ள வேண்டியதுதான... வள்ளல் மாதிரி''  எளிதில் தணிவதாயில்லை. சொற்களை முற்றாக வற்றி எடுத்துக் கொண்டு வெளியேற வேண்டும்.
  படியிறங்கி தெரு முக்கில் பாதங்கள் பதிந்தன. எண்ணி ஐம்பதோ நூறோ தேர்ந்தது. வெறுங் கையோடு திரும்பக் கூடாது. முட்டாசு பிடிக்கும் அவளுக்கு. மரிக்குண்டு ராசு கடை முருக்கு இஷ்டம். இன்னும் கூட வைத்துக் கொள்ள விரும்பும் மல்லிகை. பாறையாய் இறுகிக் கிடக்கும் பீம புஷ்டி அல்வா.
  அதிசயமாய் இரு ஏக்கர் நிலம் வைத்து முல்லைப் பாசனத்தில் பிழைப்பு நடந்தது. பாதி நெல் விற்பனை. மீதி நெல்லில் சாப்பாடு. எண்ணெய் மினுக்கில் வைத்துச் செலவழிக்கிறாள். பாடு பார்த்தல் ; மகன், மகள்  வந்தால் ஆக்கிப் போடுதல்; பேரக் குழந்தைகளுக்கு துணிமணி, விளையாட்டுச் சாமான்கள்.
  பாலம் அடைவதற்கு பர்லாங்குகள் எட்டுதான். ஒரு மைல். எண்ணங்கள் ஆயிரமாய்ப் பெருகின. துளைத்தெடுக்கும் கேள்விகள்; பதில் காணப் பெருநதியில் ஆழம் கண்டது. எந்த நம்பிக்கையில் நடந்தது அது?  எதற்காகத் துணிந்தார் மாமா.
  அவரது கல்லறை தாண்டிக் கால்கள் நழுவின. ஒருவிதத் தயக்கமும் நடுக்கமும் படர்ந்தது. வண்டித்தடம்போல் குறுகிய செம்மண் பாதை வசதியாய்க் கார் ஓடும் சாலையாகி விட்டது. இருபுறமும் மண்டபங்கள் நெருக்கிப் பிடித்தன. வயல் வெளிகளை மறைத்து வானைத் தொட்டன. மாரியம்மன் ஈர்ப்பு எல்லை தாண்டி விரிந்தது. சாதிப் பிரிவுகள், தனி நபர்கள் வசதிக்கேற்ப வடிவமைத்தனர். பச்சைப் பசுமைகள் காண எடுத்தேறிப் போக நேர்ந்தது.
  அவளைக் கரம் பற்றும் நாட்களில் விரல் விட்டு எண்ணுமளவே இருந்தன. மண்டபம் கிடைக்காதவர்கள் கண்ணீசுவரமுடையார் திருத்தலத்தில் கல்யாணம். ஹோட்டல் டோக்கனில் சாப்பாடு எனத் திரிந்தனர். சற்று மாறியவர் மாமாதான். எல்லாம் கண்ணீசுவரமுடையார் என்றானது. முழுசும் பந்தி வைத்து வளாகமெங்கும் பரிமாறினார்.
  மணநாள் நிகழ்வுகளில் சேகரம் செய்த மாமா, மகாவின் கழுத்து சுமக்க நகை அணிவித்து அனுப்புவதில் கவனமாயிருந்தார்.
  ஊர் அதிசயப்பட்டு நின்றது. “
  "என்னத்தக் கண்டுட்டான் அந்தத் தொரச்சாமிப்பய... வெம்போடுக்கு அம்பது பவுன் நகயப் போட்டுக் கட்டிக் குடுத்திருக்கான்... இதத்தே காலக் கொடுமன்னு சொல்வாக... ஒத்த மகங்கிறதுக்காக இப்புடியா  பொட்டுப் பொடுசுகளக்கூட மிச்சம் வைக்யாமப் போட்டு விடுவாய்ங்க...'” பெருமாள்சாமி அண்ணா சிலைக்கு அடியில் அமர்ந்து கறுவினார். தோளுக்கும் காலுக்குமாய் உட்கார்ந்திருந்த ஐந்தாறு பெரிசுகளும் வயிற்றெரிச்சல் கதைகளில் இறங்கின.
  ""மனுசனுக்கு கெரகம் பிடிச்சு ஆட்டுனா இப்
  புடித்தாம்ப்பா.  கேணக் கிறுக்கனா அலைவாய்ங்க. தரந்தாண்டி பாக்காம தக்குறித்தனமா முடிவெடுப்பாய்ங்க.'' கீழத்தெரு கார்மேகம் மூக்கில் பட்டணம் பொடி அப்பாக ஏறியது.
  குமரிகள், கிழவிகள் குலவையிட்டு வரவேற்கவில்லை. குமைந்து போய்ப் பேசினர். “
  "இப்படியும் உண்டுமா? படிப்பும் கம்மி... பொழப்புமில்ல... ஊர்க்காரியங்களப் பாத்துக்கிட்டு திரியுறா... வச்சுக் காப்பாத்துவாங்கிறதுக்கு உத்திரவாதமுமில்ல... ஏந்தே இப்புடி மூள கெட்டுப் போறாய்ங்களோ...'” ஆத்தோரம், வயல் வரப்புகள் என வம்பளப்புகள் பெருகின. பேச்சாகவும் மூச்சாகவும் நீரில் பரவியது. நெற்பயிர்களில் அடவியது. துரைச்சாமியின் அத்தனை செல்வங்களும் தமக்கு வந்திருந்தால் ஆத்திரம் தீரும் போல் ஆவலாதி கொண்டனர்.
  இவனுக்கு அப்போது இருக்கிற இரண்டு ஏக்கர் நஞ்சை இப்போதும் இருந்தது. பாடு படுவதற்கு தந்தை, தாய், தம்பி என இருந்தனர். பார்க்க நேரமின்றி
  பஞ்சாயத்துகளில் அமர்ந்தான்.
  பதினாறில் டவுசர் மாறியது. கோயில் கடைகளை ஏலம் விடுவதில் தலையிட்டான். ஒருவரே ஐம்பது, நூறு என எடுக்கும் தடித்தனத்தைத் தட்டிக் கேட்டான். கை வைக்க ஆட்கள் வந்தனர். “"பொடிப் பயலுக்கு அம்புட்டு வீராப்பா?'” குஸ்தி பயில்வான்
  களைப் போல் முன் நின்றனர்.
  வெடிப்பான பயல். வீராவேசமாய் எழுந்தான். எம்.ஜி.ஆர் சிலம்பங்களை எடுத்துத் தந்தார். கத்திகள் வீசும் லாகவம் கண்களில் மிதந்தது. ஊரின் கதாநாயகனாய் வலம் வர அதுவே போதுமென்றிருந்தது. பகிர்ந்து கடை பெற்றவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தினர். குழந்தைகள் பெற்று கோடனு கோடி காலம் கோலேச்ச வேண்டுமென கும்பிட்டனர். 
  மாமா எதிர்ப்படும் போதெல்லாம் நிறுத்துவார்.
  ""என்னாவுலா மருமகனே... இந்த வயசுல இம்புட்டுத் தெனாவட்டு இருந்தா   இராவிரப் போறாய்ங்க''” என்று எச்சரிப்பார். என்றாலும் பிடிபடாத பெருமை இருந்தது அவருக்கு. ஆசைத் தங்கையின் ஒரே மகன். "விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது  போல் வளர்ச்சி. ரேசன் கடைகளில்  கிராம சபைக் கூட்டங்களில், போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என  இவன் கால படாத, தலையிடாத இடங்களே இல்லை என்றானது. பத்தோடு பள்ளிக்கு விடை தந்தவன் பந்தயக் குதிரை போல் முன் சென்றான். 
  குரல் மூன்று அழைப்புக்களைக் கொண்டிருந்தது. சற்று நிதானித்தான். சின்னன் தலைத் துண்டைக் 
  கக்கத்தில் இடுக்கப் போனான். பாய்ந்து சென்றவன், பதறித் தடுத்தான். “
  ""ஒங்களுக்கு எத்தன  மொற  சொல்றது... ஒன்னு துண்டு போடுங்க... இல்ல வெறும் மேலோட போங்க... இப்புடி கக்கத்துல இடுக்கிறது... கவுந்து நடக்கிறது... இதெல்லாம் என்ன பழக்கம்?''”
  ""இருந்தாலுங்கய்யா...''” சின்னன் இரண்டு எட்டுப் பின் வாங்கினான். “
  ""நீங்க இல்லேன்னா?''... இழுத்தான்.
  ""இதயே பாக்குறப்பயெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தா வாய் வலிக்காதா?... நா இல்லேன்னாலும் விடக் கூடாது. யாருக்கும் கொம்பு மொளைக்கல... கொஞ்சம் லேட்டானாலும் குட்டி குறுமானத் தூக்குவா... எதுத்துக் கேட்டா பொண்டாட்டி புள்ளைகளையும் இழுப்பேம்பா... இதையெல்லாம் பாத்துக்கிட்டு மனுஷப் பொறப்பா இருந்து என்ன 
  பிரயோஜனம்?''
  சின்னன் பின் வாங்கி, பின் வாங்கிப் போய் விட்டான்.
  சொந்தஞ் சுருத்துகள் எனப் பத்திருபது பினாமிப் பெயர்களில் கோயில் கடைகள் எடுத்து நடத்தும் குருநாதனிடம் கைநீட்டாத ஆட்கள் இல்லை. எகிடு தகிடான வட்டி. வசூலிக்க ஏழெட்டுப் பேர். எளிதான மீசை எவருக்கும் இல்லை. பி.எஸ். வீரப்பா தோற்கும் குரல்கள்.
  இவனுக்குத் தெரியாமல் அய்யாவும் வாங்கியிருந்தார். நாற்று நட, களை எடுக்க, உரம் போட என தேவைகள் தின்றன. விளைச்சல் பொய்த்த ஒரு நாளில் வட்டிக்காரன் வந்து சேர்ந்தான் .
  ""ஆள் மாத்தி ஆள் அனுப்பி வச்சாலும் ஏமாத்திக்கிட்டுத் திரியுறியாமே... எடுத்து வைய்யி ஏங் காச... இல்லேன்னா ஓம் மகள''
  எட்டி அறைந்தான். உண்மையில் பற்கள் சில பதறி ஓடின. வீங்கிய கன்னம் சிவந்து சிந்தியது. வண்டியை விட்டு இறங்கி வந்தான்.
  புரட்டி எடுத்தான். “
  "" நாய்ப் பயலே... இந்த வீடு... இந்தத் தெரு... எங்குன பாத்தாலும் ஒன்னயத் தொலிய உரிச்சிடுவே... துட்ட வாங்குனவம் பொண்டாட்டி மகள்லாம் ஒனக்கு வப்பாட்டியா?  அப்படி என்னாடா ஒன் அதிகாரம் கொடி கட்டி ஆளுது''
  அடிபட்டு அடிபட்டு ஓடி ஒளிந்தவன் அப்புறம் அந்த எல்லையை மிதிக்கவில்லை. பத்தாயிரம் காசையும் கேட்டு வரவில்லை.
  வெள்ளாமை ஜெயித்த மற்றொரு நாளில் தானாகக்
  கொண்டு போய்க் கொடுத்தான். கவுன்சிலரே வீடுதேடி வந்ததில் பெருமை அடைந்ததைப் போல் கந்துக்காரன் காட்டிக் கொண்டான்.
  ஊராட்சியின் துணைத் தலைவராகவும் வந்து சேர்ந்தான். தலைவர் உட்பட பதினைந்து பேரில் சுத்த பத்தமான ஆள் எனும் பெயர் வந்தது. மாமாவுக்கு இவன் மேல் மரியாதையும் கூடியது. சம்பாதிக்கவில்லை  என்றாலும் துளி கெட்ட சகவாசம் இல்லை எனும் சந்தோஷம் அவருக்கு. “"காசு எப்ப வேண்ணாலும் வரும்... போகும்... பேர அம்புட்டுச் சீக்கிரம் சம்பாதிக்க முடியாது'” காண்போரிடமெல்லாம் சொல்லித் திரிந்தார் மாமா.
  ஒரே மகள் என்று பத்து ஏக்கர் நஞ்சை புஞ்சை சம்பாத்தியங்களை நகைகளாகச் சேர்த்து வைத்திருந்தார் மாமா. மகன்கள் நால்வர். மூத்தவன் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினான். அடுத்தடுத்து வந்தவர்கள் அவனுக்குத் தம்பிகள் என்பதை நிரூபித்தனர்.
  மாமா பித்துப் பிடித்தவர் போல் பாலத்திலும் படித்துறையிலும் வந்து அமர்வார். அம்மன் கோவில் கூடாரத் திண்டில் அதிக நேரம் படுத்திருப்பார்.
  இவன் ஊராட்சி மன்ற வேலை நாட்களில் அவரருகில் செல்வான். அவர் சொல்லாமலேயே மச்சினன்மார் நிலை விளங்கியது.
  ""மாப்ள இது எங்கயும் நடக்காதது... அதிசயம்னு
  கூடச் சொல்லலாம்... நீ படிக்கல... அதுனால நானும் படிக்கலன்னு வீம்புக்கு புளியங்கா திய்ங்குற பயகள எங்கியாச்சும் பாக்க முடியுமா?...''”
  மாமாவுக்கு பொரி கடலை, அவல் என்று வாங்கிக் கொடுத்தான். கலந்து கொடுப்பது அவருக்குப் பிரியமானது. கூடாரம் முழுக்க ஜனக்காடு ரொம்பிக் கிடந்தது. ஒரு காலத்தில் செவ்வாய், வெள்ளி எனப் பெருகிய ஜனத்திரள் இப்போது எப்போதும் வழிந்தது.
  கேன்காரன் ஆள் ஆளாகப் பார்த்து டீ பிடித்துத் தந்தான். இவன் மாமாவுக்கு வாங்கித் தந்தான்.
  ""சுண்டலும் வடையும் இருக்கு... சேத்துத் தின்னீங்கன்னா ஜேகஜோதியா இருக்கும்'
  கேன்காரன் பேப்பரைச் சுருட்டினான்.
  மாமா ஒரேடியாக மறுத்தார்.
  கேன்காரன், “""ஒங்க வருங்கால மருமகன்ட்ட காசு வாங்க மாட்டேன்... நம்புங்க...''” என்றான்.
  மாமாவின் அந்த மனநிலையில் மென்று கொண்டிருக்க முடியாது. “
  ""இருக்கட்டும்ப்பா... இப்போதைக்கு டீ மட்டும் குடு... இன்னொரு நாள் மத்ததெல்லாம் தரலாம்...''” இவன்.
  தெருவில் திண்ணையில் நடையில் எங்கு பார்த்தாலும் சைக்கிளை நிறுத்தி வருவான். பல தடவை மகாலட்சுமியுடன் பார்த்திருக்கிறான். “""ஜோடிக்கு ஒரு டீயே போதுமா?''” என்பான். இவன் பொய்யாய் முறைப்பான்.
  ""பகுந்து குடிக்கத்தே... ஒருத்தரு மிச்சத்த ஒருத்ரு குடிக்கிறது தேவாம்ருதம் சாப்ட மாதிரி'' குரலில் கிளுகிளுப்பு சேர்ந்து கொள்ளும்.
  அவள் மரத்தோரங்களில் ஒதுங்குவாள். இன்னும் இன்னுமாய் மறைந்து கொள்ள தோது பார்ப்பாள். கேன்காரனுக்க மூக்கு வியர்த்துவிடும்.
  இவனுக்குத் தொந்தரவாய்த் தெரிவதில்லை அவன். இணைப்புப்பாலம். காசையும் கருது
  வதில்லை. கல்யாணச் சாப்பாடு போட்டால் போதும் என்கிறான். தாசில்தார் ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், பெரியாஸ்பத்திரி என அவன் அழைத்தபோதெல்லாம் சென்றிருக்கிறான்.
  மாமா டீயை உறிஞ்சிக் கொண்டே இவனிடம் கேட்டார்: 
  ""அதே மாப்ள ஒங்களுக்குக் கோயில் நிர்வாகத்துல ஆளுகளத் தெரியுமே... ரெண்டு கடைக புடிச்சிக் குடுத்தீங்கன்னா... ரெண்டு ரெண்டு பேரா ஒக்காந்து உருப்படி சேந்துருவாய்ங்க''” நா தழுதழுத்தது. பாதி டீ இறங்கவில்லை. பரிதாபமாய் இவனைப் பார்த்தார். வியர்த்துக் கொட்டியிருந்தது. தோள் துண்டால் முகம் தேயத் துடைத்துக் கொண்டார்.
  ஓடிப்பிடித்து விளையாடிய குழந்தைகளில் ஒன்று, “"தாத்தா'” என்றபடி கழுத்தை இறுக்கிக் கொண்டது. “""தாத்தாவத் தொந்தரவு பண்ணக் கூடாது''” இளம் பெண் ஒருத்தி விடுவித்து அழைத்துக் கெண்டாள்.
  துரத்தித் துரத்தி தூரந் தள்ளினாலும் கண் மறைவாய் பந்தி போடுகிறவர்கள் இருந்தார்கள். கோயில் நிர்வாகம் திண்டாடித் தெருவில் நின்றது. நெடு நீள மாற்றால் தூற்றி எடுத்து கை ஓய்ந்து போனார்கள் பணிப் பெண்கள்.
  சுத்தம் கோரும் நிர்வாகம் ஆங்காங்கே கண்படும் வகையில் குப்பைத் தெட்டிகளை வைத்திருக்கவுமில்லை. பிரம்மாண்ட ஆங்கிள்களில் வளைவு கண்டிருந்த கூடாரம் பாம்பே சர்க்கûஸ நினைவூட்டியது. ஆயிரம் பேர் படுத்தெழும் விதானத்தில் தரைத்தளம் வந்தபின், ஆற்று வெளிகளில், வயல் வரப்பு
  களில், கோயில் கடைகளில் அலைந்து திரிந்தவர்கள் கடைசிப் புகலிடமாய் வந்து சேர்ந்தார்கள். பொரி தின்று பொங்கல் தின்று அசதிக்கு உறங்கியும் எழுந்து போனார்கள்.
  அவருடன் நடந்தான். “
  ""அதுக்கென்ன மாமா பாக்கலாம்...''” என்றான்.
  பூக்கடைகள் வரிசைப்பட்டு நின்றன. பூஜைப் பொருட்கள் அடங்கிய பிரம்புத் தட்டுகளுடன் பெண்களும் ஆண்களும் வளைத்தனர். "ஹோ.. ஹோ..' என்கிற பேரோசை அற்ற ஒரு பொழுதில் மகாவுடன் வரவேண்டும். சும்மா  அழைத்தால் வரமாட்டாள். செவ்வாய், வெள்ளி ஏதுவானவை.
  அத்தனை கச்சிதத்துடன் அவள் வந்து போகும் அழகே தனிதான். அவன் பார்க்க வருவதென அவள் சமயம் பார்த்திருந்தாள். தோழிகள் சேர்ந்து கொள்ளாத தருணங்கள் அவை.
  எங்கு கூடி எந்த வழியில் ஊருக்குள் நுழைவதென மாமா தீர்மானிக்கவில்லை. நடையாய் வந்து நடையிலே திரும்பிவிட நினைத்திருப்பார் போலும். தனித்த ஒரு நிலப்பரப்பில் கோயில் இருந்தது. முழுக் கோயிலையும் சுற்றி வர அரை மணி நேரம் பிடிக்கும். சுற்றி வளைத்து டவுன் பஸ் போகிறது. மரங்
  களிடையே நடை அலாதியானது. பதினைந்து நிமிஷத்தில் பாதங்கள் ஊருக்குள் விழுந்து விடும்.
  உற்சாகத் துள்ளல் மாமாவின் இயல்பு. எப்போதும் பத்துப் பேரைக் கூட்டிக் கொள்ளும் சமர்த்தர் அவர். அன்றானால் அவருக்கு வெவ்வேறு சிந்தனைகள். மறைந்து சிரிக்க முயன்று தோற்றார்.
  ""நீங்க எத நெனச்சும் கவலப்படாதீங்க மாமா... எல்லாம் நாம் பாத்துக்கிறேன்'' எல்லாம் என்பதில் மகாலட்சுமியும் அடங்கியிருந்தாள். துவைத்துத் தொங்கப் போட்ட வெண்பட்டு போன்ற முகம். "மாமா' என்று பல்வரிசை காட்டும் போது கே.ஆர் விஜயாவின் பளீர் புன்னகை நினைவுக்கு வரும்.
  மாமா வேட்டியை ஏற்றிக் கட்டிக்கொள்ளவில்லை. தொங்கவிட்டு நடந்தே பழகியிருந்தார். இவனைப் போலவே சிவப்புக் கரை வேட்டிகள் அவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.
  கொழ கொழத்தோடும் ஆற்றின் மனம் ஈரமாய் வீசியது. ஒரு நடை அவருடன்  பாலம் சென்று  அமர்ந்து கொள்ளத் தோன்றியது. பையன்கள் குறித்த ஆற்றாமை தீர அந்த நடை அவசியமெனக் கருதினான். நண்பர்களைப்போல் கை பிடித்து அழைத்துச் செல்லவும் முடியாது. அவர் வயசென்ன? தன் வயசென்ன? அதுவும் நாளை பெண் தரப் போகிறவர்.
  அன்னதானக் கூட்டத்தை தாண்டி நடந்தார்கள். மதியமெனில் பெருங்கூட்டம் சேர்ந்திருக்கும். கோயிலின் பக்க வாட்டு வீதியை வளைத்துப் பிடித்திருந்தது கூடம். சாமியார்கள், பிச்சைக்காரர்கள், பெருந்தீனிக்காரர்கள் என வட்டமிடும் வேளை. "சொக்கனுக்குச் சட்டியளவு' என்று  நினைத்துக் கொண்டான்.
  ""ஆரப் பாப்பீக... எப்புடி நடக்கும்?''” மாமா தேங்கி, தயங்கி கேட்டார்.
  பைக் இடம் வந்தது. “ 
  ""அது நடக்கும் மாமா. வர்ற வைகாசித் திருவிழாவுக்குள்ள மாப்பிள்ளைக கட போட்டு ஒக்காந்துருவாய்ங்க...''” உறுதிபடச் சொன்னான்.
  சரேலெனப் பொங்கும் நீரூற்றைப் போல் மாமாவின் முகம் பொழிந்தது. 
  ""“வர்ற வைகாசிக்கு இன்னும் ரெண்டு மாசந்தான இருக்கு மாப்ள... அதுக்குள்ள எப்படி நடக்கும்... ஆனானப்பட்ட ஆளுங்கல்லாம் இருக்காய்ங்களே... விட்டு வைப்பாய்ங்களா?''
  ""ஒரொருத்தரப் போல அம்பது நூறுன்ன புடுச்சு கொள்ளை லாபத்துக்கு விட்டா சம்பாரிக்கப் போறோம்... நேர்மையா தொழில் நடத்துறதுக்கு ரெண்ட விடுங்கம்போம்... கெடைக்யலன்னா வேறொன்னப் பார்ப்போம்... அதுக்காக அராஜகமா எடுத்துக்கிறப் போறதில்ல''
  மாமா அழுத்தமாக அவனைப் பார்த்தார். அதில் ஆழமும் அதீத நம்பிக்கையும் இழையோடியது.
  ஒரு வாரத்திற்கு பின்னான சந்திப்பு கூடாரத்தில் நிகழ்ந்தது. எப்போதும் போல்  மாமாவுக்குப் பொரியும் கடலையும் வாங்கிக் கொடுத்தான். எடுத்துத் தின்னாமல் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
  ""வருஷத் திருவிழா மட்டுமில்ல... வருஷமெல்லாம் போட்டு ஒக்கார்ற மாதிரி ரெண்டு கடைக வருது... அதுவும் கோயில் எதுக்க மாமா. நெத்தி மாதிரி எடம். அல்லுச் சில்லு இல்லாத ஆளுகளா பாக்கச் சொன்னாக.. தேடித் திரியுற நேரம் பாத்து நாமளும் கேட்ருக்கோம்... எடுத்துக்கோன்னுட்டாக''”
  உயிர்த்தண்ணீர் விழுந்த சிலிர்ப்பு. நெக்குருகிப் பார்த்தார் மாமா. பால் வார்ப்பது;  பழம் நழுவிப் பாலில் விழுவது; சர்க்கரைப் பந்தலில் தேன் மாறிப் பொழிவது எல்லாம் நடந்தது அவருள். கட்டி அணைத்து உச்சி மோந்து கொள்வார் போல் தோன்றியது.
  கடைத்திறப்பும் வைகாசிப் பெருவிழாவிற்கு முன்பே கூடியது. மாரியம்மன் கண் பார்க்க எல்லாம் நடந்தது. பாக்கு, வெற்றிலை, பழங்கள், சூடம், கற்பூரம், கல்கண்டு, சாம்பிராணி மாலை வகைகள் என நிரம்பிய கடை பார்த்து கால்கள் பெருகின. வைகாசிப் பெருவிழா வருவதற்குள் கடைக்கு ஒருவராய் சம்பள ஆட்களும் வந்து சேர்ந்தார்கள். இவன் செல்வாக்கில் அம்மன் பூ ஆர்டரும் கிடைத்தது.  அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்போரை ஏமாற்றாமல் எல்லாம் கிடைத்தது. இண்டு இடுக்குகளில் நோட்டுகள் சிக்கி கல்லாக்களை கவனமாய்த் திறக்க வேண்டி வந்தது. 
  ஊராட்சியில் வேலை என்று கடை வழியே நடை தொடர்ந்தது. கோயிலின் ஒரு வழியாகப் புகுந்து மறுவழியாக வெளியேறுவான். தேர் மறைப்பில் மகாலட்சுமியின் முடிக்கற்றை
  தெரியும்.
  ""ஐயாவுக்கு அனுதெனமும் வேலை போல்ருக்கு. அம்மா வர்ற நேரம் பாத்து வருவீகளோ?''” சிமிட்டலாய்க் கேட்பாள்.
  ""அப்படி யெல்லாம் மகாராணிய எதிர்பார்த்து வர்ற ஆள் நானில்ல... அம்புட்டுச் சீப்பா எட போடாத... ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தெனம் ஆபீஸூக்கு வந்தாகணும்... தெரியுமா?''”
  ""ஆமாமா வந்தாலும் பெரீசாக் கிழிச்சிருவீங்க... ஒங்கள மாதிரி ஜெயிச்சு வந்தவகள்லாம் அள்ளு அள்ளுன்னு அள்றாக... நீங்க கிள்ளக்கூட மாட்டீங்கறீங்க''”
  ""ஒன்னய வேன்னா கிள்றே... கிட்டத்துல வா''”
  ""என்ன லந்தாக்கும்... அவகள விட பெரிய பொறுப்புகள்ல இருந்தும் ஆண்டியா அலையுறீங்கன்னா''”
  ""அப்ப மகாராணிக்கேத்த மகாராஜாவா மாறணும்கிறே''
  பன்னீர் மரம் பூக்களைக் கொட்டியிருந்தது. மலர்ப் பத்தையில் அணில்கள் கால் பாவிக் கடந்தன. கை தொடுகிற நெருக்கத்தில் வந்து நின்றான். இரண்டு எட்டு பின் வாங்கினாள். 
  ""“இருக்க எடங்கொடுத்தா படுக்கப் பாய் கேட்கிறீக...''” பயமாய் ஒடுங்கினாள். 
  ""ஏங் கேக்கக் கூடாதா?''” மோகமாய் நெருங்கினான்.
  ஒன்றன் பின் ஒன்றாக வந்த வேன்களில் ஆட்கள் திமிறித் தெரிந்தனர். கண்ணீசுவரமுடையார் கோயில் பக்கம் திதி கொடுக்கப் போகிறவர்களாக இருக்கலாம். தெரிந்த முகங்கள் இருக்கவே செய்யும். ஏதாவது ஒன்று கேட்கவும்கூடும்.     "கட்டிக்கப் போறவளோட நின்னா தப்பா?...'” என்றுதான் பதிலளிக்க வேண்டும்.
  ""என்ன யோசன பலமா இருக்கு... ஆராச்சும் பாத்துருவாங்கன்னு அச்சமா?''” ஒதுங்கி ஒதுங்கி நின்றவள் துணிந்து கேட்கிறாள். இவன் வாயிலிருந்து வர வேண்டிய சொற்கள். "முழுக்கக் குளிச்சா கூதல் இல்லை' என்பது இதுதான் போலும்.  
  ""அதெல்லாம் ஒன்னுமில்ல... கல்யாணத்துக்கு முந்தியே இம்புட்டு கிராஸ் கேள்வி... முடிஞ்சப்புறம்  என்னவெல்லாம் நடக்கப் போகுதோ?''” உரிமையாய் நெருங்குகிறான். இன்னும் நாலெட்டுப் போனால் தேர் முழுக்கவும் மறைத்துக் கொள்ளும். கட்டி அணைத்து உச்சி மோந்து கொள்ளலாம்.
  வயல் வெளிகள் ;  ஆற்றங் கரைகள் எங்கெங்கு வைத்தாலும் கோயில் முகப்பில் இடம் கிடைத்து பொங்கல் வைப்பது புண்ணியம்தான். இலை இலையாய் வைத்தபடி வந்தார்கள். இவனையும், அவளையும் கண்டு பிடித்து இலைகள் தந்தனர். ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் விடுவதற்கு ஆள் இல்லை. ஜோடி சேர்ந்து நாலு வார்த்தை பேசப் பொறுக்காது.
  சருவச் சட்டியை இடுக்கிக் கொண்டு வந்த ஓர் ஆள் அகப்பையில் மோந்து போட்டான். இலை தாண்டி உள்ளங்“கை பொத்துக் கொண்டு 
  ஓடியது.
  கிடா வெட்டுக்களும் அப்படித்தான். தேடிப் பிடித்து விருந்து வைப்பார்கள். சோறு ஒரு பங்கு என்றால் கறி மூன்று பங்கு இருக்கும். தின்று மாளாது. எச்சில் கையாலும் காக்கா ஓட்டாதவர்கள் அன்னதானச் செம்மல்களாய் வலம் வருவார்கள். பிரசித்தி பெற்ற கோயில்களைச் சுற்றித் திரிந்தால் பசி என்ற ஒன்றை அறியாதிருக்கக்கூடும்  என்று நினைத்துக் கொண்டான்.
  அப்பா தேடுவார் என தேர் விலகி அரை மணி நேரம் கடந்து விட்டது. இன்னும்கூட அவள் கடை நழுவி ஊர் நடக்காமல் இருக்கக்கூடும் என நினைத்துக் கொண்டான். தெரிந்து ஒன்று;  தெரியாமல் பல என்று சந்திப்புகள் மிகுந்தன. சுற்றி வளைத்து கடை பார்த்து வந்தான். புதிதாய்த் தென்படுவதைப் போல் காட்டிக் கொண்டான். மாமா மகாலட்சுமியுடன் நடக்க எத்தனித்தார்.
  ""திருவிழா நெருங்குது மாப்ள... எட்டு நா பொழுது போறது அம்புட்டு லேசில்ல... அடி வகுத்துல நெருப்பக் கட்டிக்கிட்டு அலையணும்... கோயில் முன்னாடி நெரந்தரக் கட போட்டுட்டோமுன்னு கறுவிக்கிட்டு இருப்பாய்ங்க... சூதானமாத்தே இருக்கணும்''” 
  ""தொட்டுப் பாக்குறவ சொட்ட எறக ஒடிக்கணும் மாமா''” மகாலட்சுமி கண்களில் விழுந்தாள். ""மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' நினைவுக்கு வந்தது.
  ""வேகம் விவேகமில்ல மாப்ள... மோதுறதுக்கும் ஒரு தரந் தண்டி வேணும்... கொஞ்சம் காபந்தா வந்து போங்க அவ்வளவுதே...''” மாமா முன் எப்போதுமில்லாத அந்யோந்யத்துடன் இவனைப் பார்த்தார். அனிச்சையாக அவரது கண்கள் மகாவையும் 
  இவனையும் ஒரு சேரப் பார்த்துக் கொண்டன.
  எங்கெங்கு யார் யாரை வைத்துப் பேசினார்கள் என்று தெரியவில்லை. ஒரு நாள் அம்மா கேட்டாள்:
  ""ஒனக்கு மகாவப் புடிச்சிருக்கா?''”
  கரும்பு தின்னக் கூலி வேணுமா என்று கேட்பதைப் போல்தான் இதுவும்.
  அப்பா நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “
  ""அவனுக்கப் பிடிக்காம என்ன?... மச்சினன்மார்க்க கடகண்ணி வச்சிக் குடுகிற வரைக்கும் போயாச்சி...''”
  ஐம்பது பவுன் எப்போதும் பெரிதுதான். கிராமப்புறங்களில் அதிசயம்தான். "வாங்க மாட்டேன் வரதட்சணை' என்று விரதம் பூண்டிருந்தான். அம்மா சொன்னாள்: “""நாம வாய்விட்டுக் கேக்கலயில்ல... அவக பொண்ணு அவக செய்றாக...''”
  இவன் கேட்டான்: “""அவகளே அத எடுத்துக்கிற முடியாதில்லம்மா... நம்ம வீட்டுப் பொன்னாயிடுமில்ல...''”
  அம்மா இவனது சிலேடையை ரசிக்கவில்லை. எரிச்சல் மேலிடப் பார்த்தாள் : “""அப்படீன்னா முனி மூக்குத்தி கூட இல்லாம மூளியா வந்து நிய்க்கட்டும்...''” சொந்த அண்ணன் மகள் என்று பார்க்கவில்லை அம்மா. மருமகள் வீடுகள் பணங்காய்ச்சி மரங்கள் என்று நினைக்கும் அம்மாக்கள் வரிசையில் சட்டெனச் சேர்ந்து கொண்டாள்.
  அப்பா குறுக்கே வந்தார்: “""இப்ப எதுக்க ரெண்டு பேரும் தேவையில்லாமப் பேசிட்டிருக்கீக...? பொண்ணப் பெத்தவக மனசு வாதிக்கும்... அவங்க நோக்கப்படி விட்ருங்க...''” நடுவர் போல் வந்து நப்பாசையை வெளிப்படுத்திக் கொண்டார்.
  அத்தனை பெரிய வைபோகத்தை முதலாவதாக ஊர் பார்த்தது. வெற்றிலை குதப்பிக் கொண்டும், வெறும் பாக்கை மென்று கொண்டும் ஜனக்கூட்டம் அலைந்தது. கோயில் இன்னொரு திருவிழாவைக் கண்டது. தனக்கானவன் கிடைத்ததில் மகாலட்சுமி ரொம்பவும்தான் சொக்கிப் போயிருந்தாள். காய்ந்த மாடு கம்பில் விழுந்த உணர்வில் இவனும் ததும்பி நின்றான்.
  தூரத்தில் செல்வத்தின் இருப்பு துலங்கியது. 
  இரட்டைப் பாலங்களின் முனைகளில் வரிசை கோர்த்து கார்கள் நின்றன. ஐயப்ப பக்தர்கள் கடை கண்ணிகளில், படித்துறைகளில் பெருகி வழிந்தனர். வெள்ளச் சுழிப்பில் ஆற்றில் கரைகள் அடவி நீரோடியது. அன்று அரை மனதாய் போலீஸ் குளிக்க அனுமதி வழங்கியிருந்தது.
  செல்வத்துக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. வலது கரம் போல் இருப்பவன்.  வாழ்க்கையில் முன்னேற வழிகள் கூறி அலுத்துப் போயிருந்தான். ஒரு கட்டத்தில் அதுபற்றிப் பேசினால் நட்பு பாதிக்கும் என்று விட்டுவிட்டான். அவனைப் பொருத்தவரை பத்துப் பவுனை இருபது பவுனாக்கியவன். ஆயிரத்தை லட்சமாய்ப் பெருக்கியவன். ஒரு ஏக்கரை பத்து ஏக்கராய் மாற்றியவன். ஒரே மகளை தடபுடலாய் எஞ்சினியர் ஒருவனுக்குக் கட்டிக் கொடுத்திருக்கிறான்.
  கடைசியாக அவன் சொன்னதை நினைத்தபடி நெருங்கினான் : “""பொதுக்காரியங்களப் பாக்க ஆளே இல்லைன்னு போனதெல்லாஞ் சரி... ஆனா அன்னாடச் செலவுகளுக்கு குடும்பம் என்ன செய்யும்கிற யோசனையும் கூடவே இருந்திருக்கணும்.. பொது வாழ்வ சரிபண்ற மாதிரி குடும்பத்தையும் சரி பண்ண முயற்சிக்கணும். ரெட்டமாட்டு வண்டி மாதிரிதே... பேலன்ஸ் பண்ணலைன்னா என்னாகும்?... நம்மால துரும்பக்கூட அசைக்க முடியாதுன்னு அவக சுதாரிப்பாக... அந்த சுதாரிப்பு எதுல போயி முடியும்? வெத நெல்ல வித்துத் திய்ங்குற மாதிரி  கைப் பணத்தக் கரைக்கிறதுல போயி முடியும். குந்தித் தின்றால் குன்றும் கரையும்னு சும்மாவா சொன்னாய்ங்க... அப்புறம் நக போச்சு... நட்டு போச்சுன்ன பொலம்பி என்னாகப் போகுது... தெருவுல நிய்க்கும் போதுதா தெரியும்... நம்மால ஒன்னும் நடக்கலேன்னு... கடைசீல வருத்தப்படுறதுக்குக் கூட நமக்கு உரிமை இல்லாமப் போயிடும்...''”
  செல்வம் பாலத்தை விட்டு இறங்கி வந்தான். “
  ""இப்பத்தே மகா ஒன்னயத் தேடி வந்துச்சு... நீ எந்த வழியா வந்தே...''”
  ""கோயிலுக்குத் தெக்கருந்து வாறே... என்னவாம்?...''”
  ""அதே ஒருத்தர ஒருத்தர் பாத்திருக்க மாட்டீக போல்ருக்கு... போன "சுச் ஆப்' பண்ணி வச்சிருந்தியாக்கும்...''” குரலில் கோபம் இழைந்தது.
  இருவரும் முகத்தோடு முகம் சேரும் நெருக்கத்திற்கு வந்தார்கள்.
  ""அதுக்கென்னவாம் இப்ப...''” இவனுக்கும் சுள்ளென்று வந்தது.
  ""இந்த ஜென்மத்துல ஒனக்குப் புத்தி வராதுடா... என்ன கழுதைக்கு "சுச் ஆப்' பண்ணனும்... தப்பிச்சுக்கிட்டே இருந்தம்னா வாழ்க்கையே தப்பாயிடும்... அதுவும் பொது வாழ்க்கையில இருக்கிற நீ... தெறந்த புத்தகம் மாதிரி இருக்கணும்...''”
  ரம்பத்தைத் தூக்கிக் கொண்டு விட்டான்.  அறுக்காமல் விட மாட்டான்.
  ""இப்ப எதுக்குடா இம்புட்டுப் பீடிக... ஒலகத்துல யாருமே சுச் ஆப் பண்ணாதது மாதிரி...''” சிலு சிலுப்பான காற்றிலும் எரிச்சல் மேலிட்டது. துவைத்தல், குளித்தல், கும்பிடுதல் முடிந்தவர்களின் புறப்படுதலில் களேபரம் மிகுந்தது. இவர்களை நோக்கி ஒரு வேன்காரன் இடிக்கிற நெருக்கத்தில் வந்து திரும்பிப் போனான்.
  ""என்னயப் பொறுத்த வரைக்கும் அது சரி இல்லேன்னு நெனைக்கிறே... இந்தக் காலத்துல ஒவ்வொரு நொடியிலும் ஒன்னு நடக்குது... அது நல்லதா இருக்கலாம் கெட்டதா இருக்கலாம்...''”
  இவன் அலுப்பாக அவனைப் பார்த்தான்: ""வாடா உபதேச மன்னா...'' என்றுதான் அழைப்பான். எந்தக் கட்சிக்காவது அரசியல் ஆலோசகராகப் போனால் பெரிய ஆள் ஆகி விடுவான்.
  ஒரு பக்கம் மகா அர்ச்சிக்கிறாள். மறுபக்கம் இவன் போதிக்கிறான். மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி. உயிர் நண்பனும் சரி; உடன் வந்தவளும் சரி; தன்னை ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் ஆக்கி விட்டார்கள். ஊரே கொண்டாடினாலும் இவர்களிடம் திண்டாட வேண்டும்.
  ""இப்ப என்னா போன ஆன் பண்ணிப் பேசணும்... அம்புட்டுத்தானே...''”
  லேசாக இருட்டிக் கொண்டு வந்தது. சூரியன் முழுசாக ஆற்றின் கீழ் இறங்கி விட்டான். அந்த மறைவின் இதம் தாண்டி மகாலட்சுமியின் முகத்தை உருவகித்துப் பார்த்துக் கொண்டான்.
  ""கூப்பிட்டிருந்தியாமே...''”
  ""அதுக்குள்ள என்ன அவதின்னு "சுச் ஆப்' பண்ணியிருந்தீக... "சுச் ஆப்' பண்ணிட்டா பூராம் நடந்திருமா?''”
  ""இப்ப என்ன விஷயம்?... அதே ஆன் பண்ணிட்டேல்ல...''”
  மகாலட்சுமி சொன்னாள்: “""தன்னலமற்ற சேவைக்கு விருதுன்னு பத்து லட்சம் தரப் போறாங்களாம்... ஒங்கள நேரடியாப் பாத்து பேசணும்னு நாலஞ்சு பேரு வீட்ல காத்திருக்காங்க... பெரிய பெரிய பொறுப்புகள்ல இருக்கிற ஆளுக மாதிரி தெரியுது... செத்த வாரீகளா?''” ராட்டினம், பொருட்காட்சி, சர்க்கஸ், தின்பண்டக் கடைகள் என அலைந்த வைகாசிப் பெருவிழா நாட்களின் பூரிப்பைத் தாங்கி வந்தது அவளது குரல்.
  சட்டென இவன் கேட்டான்: “ 
  ""சேவைக்கு எதுக்கு விருது?'' 
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp